புறா சொல்லும் பாடம்

சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெர்ல்போர்ன், ஆஸ்திரேலியா 

அன்பான குழந்தைச் செல்வங்களே, உங்கள் ராஜூ தாத்தாவின் வாழ்த்துகள்.
நல்ல கருத்து உள்ள இக்கதையைக் கேளுங்கள்.

சில புறாக்கள் ஒரு கோயில் மாடத்துல தங்கியிருந்தன.

வயது முதிர்ந்த ஒரு புறாதான் தலைவர். தினமும் காலையில்  தலைவர் வழி காட்டி அழைச்சிகிட்டு போகுற இடத்துக்கு போய்  இரை சாப்பிட்டுட்டு மாலையில தங்களோட இடத்துக்குத் திரும்பிடும்.
இதைக் கவனித்த  வேடன் ஒருநாள் இரவு கோயில் அருகிலேயே தரையில் நிறைய தானியங்களைத் தூவி , அதன் மேலே ஒரு வலையை அமைத்து நாண்கு மூலையிலும் முளை குச்சி அடித்து வைத்துவிட்டு போனான்.


 அதிகாலையில் எல்லா புறாவும் இரைதேடி கிளம்பும் போது கீழே கொட்டிக்கிடக்கும் அந்த தானியங்களைப் பார்த்தன. ” இங்கேயே நம் தேவைக்கும் அதிகமான தானியங்கள் சிதறிக் கிடக்கின்றன; அதனால் நெடுந்தூரம் பறந்து போய் இரை தேட வேண்டாம்” என்று சில இளம் புறாக்கள் கூறின. அதற்கு தலைமைப் புறா,
” இத்தனை நாளில்லாமல் இன்றைக்கு இவ்வளவு தானியமா; எனக்கு இது சந்தேகமாக உள்ளது. மேலும் நம் முயற்சி இல்லாமல் தானே எதுவும் கிடைத்தால் அதில் ஆபத்து இருக்கலாம்; நான் போய் இரைக்கான இடத்தை தேர்வு செய்து வருகிறேன் ” என்றது.

அதற்குள் இளம் வயது புறாக்கள் ஒன்றுகூடி, “சுலபமாக கிடைப்பதை தலைவர் தடுக்கப் பார்க்கிறார்; வாருங்கள் இந்த தானியங்களை சாப்பிடுவோம் ” என்று கூறி எல்லா புறாக்களையும் தானியங்கள் மீது இறங்கச் செய்தன.

அவ்வளவுதான், அடுத்த நொடி புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன. ஆபத்தை உணர்ந்த புறாக்கள் பொறுமையிழந்து சிறகுகளை அடித்தபடி ” ஆபத்து, காப்பாற்றுங்கள்”  கதறத் தொடங்கின.

புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன
புறாக்களின் கால்கள் வலையில் சிக்கிக் கொண்டன

அப்போது தலைவர் எல்லோரையும் அமைதிப்படுத்தியது.  மேலும்
” நான் சொல்வதை இப்போதாவது கவனமாகக் கேளுங்கள், நாம் வேடன் கையில் சிக்காமல் தப்பிக்கலாம். எல்லாரும் இறந்தது போல நடியுங்கள். வேடன் வலையின் நாண்கு மூலைகளிலும் அடித்து வைத்திருக்கும் முளைக்குச்சியை எடுத்ததும் நான் வேகமாகப் பறந்துவந்து வேடன் தலையில் கொத்துவேன்;அவன் வலிதாங்காது கத்துவான். அதை உங்களுக்கான எச்சரிக்கையாக கருதிஎல்லாரும் ஒற்றுமையாக சிறகடித்து வலையுடன் வானத்தில் பறக்க வேண்டும்” என்று திட்டம் கூறியது.
       சிறிது நேரத்தில் வந்து பார்த்த வேடன் தண்ணீரில்லாமல் புறாக்கள் இறந்துவிட்டதாக எண்ணினான்.  ” அடடா, இவை உயிருடன் இருந்தால் நல்ல விலைக்கு விற்பதால் நிறைய பணம் கிடைத்திருக்கும். பரவாயிலலை இதாவது கிடைத்ததே என்று வலையின் நாண்கு மூலைகளின் முளைக்குச்சிகளை அகற்றினான். தாமதமில்லாமல்  தலைமைப்புறா  பறந்து வந்து வேடன் தலையில் கொத்தியது . வேடன் வலியில்

தலைமைப்புறா வேடன் தலையில் கொத்தியது
தலைமைப்புறா வேடன் தலையில் கொத்தியது


” ஆ..அம்மா” என்று கத்தினான். இந்த ஒலியைக்கேட்ட மற்ற புறாக்கள் படபடவென சிறகடித்து வலையுடன் வானில் பறந்தன. அதன் கீழே வேடன் சிறிது தூரம்”ஐயோ..என் வலை.” என்று  கத்திக் கொண்டே ஓடினான்.

பறந்த புறாக்கள் ஒரு மலையைக் கடந்து சென்றபோது தலைமைப்புறா கீழிறங்க ஆணையிட்டது. அந்த இடத்தில் ஒரு எலி வளை இருந்தது. வலையுடன் புறாக்கள் இறங்கிதைப் பார்த்த எலி உள்ளே ஓடி பதுங்கியது.

தலைமைப்புறா, “எலி நண்பா,நான்தான் உன் புறா நண்பன் வந்திருக்கிறேன். ஆபத்திலிருக்கும் எங்களைக் காப்பாற்று”  என்று கூறியது.  வெளிவந்த எலி , ” நண்பனான  உனக்கு ஆபத்தென்றால் காப்பாற்றலாம்;  என் சிறிய பற்களால் கடித்து எல்லாரையும் விடுவிக்க முடியாது” என்றது.

“நம் நட்புக்காக இவர்களை நீ காப்பாற்றியே ஆகவேண்டும் ” என்றது புறா.

எலி வலையைக்கடித்து எல்லாரையும் விடுவித்தது.

நண்பனின் வேண்டுதலை மறுக்க முடியாத எலி வலையைக்கடித்து எல்லாரையும் விடுவித்தது.

புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு பறந்தன

விடுதலையடைந்த புறாக்கள் எலிக்கு நன்றி கூறிவிட்டு பறந்தன.

படிப்பினை
படிப்பினை

அன்புக் குழந்தைகளே,  இக்கதை மூலம் நாம் பெறும் படிப்பினை:
உழைப்பில்லாமல் வருபவை ஆபத்து உள்ளவை
அனுபவமிக்க வீட்டில் உள்ள பெரியவர் அறிவுரையைக்  கேட்கவேண்டும்
ஒற்றுமையே பலமாகும்; அதுவே  வெற்றி தரும்.
துன்பநேரத்தில் நண்பனைக் காக்க வேண்டும்.
சிறியவர்களும் சில நேரங்களில் பெரிய உதவியைச் செய்வார்கள்

மீண்டும் ஒரு கதையுடன் சந்திப்போம். வாழ்த்துகளுடன் பை பை சொல்லி விடைபெறுவது உங்கள் ராஜூ தாத்தா.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: