வாசித்தது:-ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்:-சுந்தர ராமசாமி
பதிப்பகம்:- காலச்சுவடு
படங்களில் மெதுவாக கதை தொடங்கும். நேரம் செல்லச்செல்ல கதை நம்மை முழுமையாக ஈர்த்துவிடும். படம் முடியும்போது நிச்சயம் நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதுபோலத்தான் சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’. மெல்ல தொடங்கி நகரும் கதை அடுத்தடுத்த அத்தியாங்களில் நம்மை முழுமையாக இழுத்துவிடுகிறது.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு கதையாக அதே நேரம் அடுத்த அத்தியாத்துடன் தொடர்புடையதாக தனிச்சிறப்பு. சுந்தர ராமசாமி பெயருக்கு ஏற்றாற்போல் சுந்தரதமிழில் கிராமத்தின் வட்டார வழக்கு உரையாடலில் கதை முழுமையும் அதன் சுவாரசியம் குறையாமல் கொண்டு சென்றிருப்பது மற்றோர் சிறப்பு.
கதை ஆலமரத்தின் விழுதுகள் போல சுற்றி சுற்றி புளியமரத்தை ஒட்டியே அழகாக பின்னப்பட்டிருக்கிறது. கிராமத்தில் மிகவும் பழமையான புளியமரம் அதைப்போல வயதான கிராமத்து பெருசு தாமோதர ஆசான். அந்த காலத்தில் ஊரில் புளியமரத்துடன் சேர்ந்து நடந்த நிகழ்வுகளையும் நினைவுகளையும் இளஞர்களிடம் அவ்வப்போது கதைபோல் சொல்கிறார். இதனால் கதைசொல்லி ஆசானாகிறார்.
கதை கேட்க வரும் இளைஞர்களிடம் ஆசான் தன் கையை நீட்டி முட்டியை மடக்கும்படி சொல்ல அவர்கள் ஒவ்வொருவராக முயன்று தோற்றுப் போக நமக்கு முதல்மரியாதையில் சிவாஜி ராதாவிடம் பேசும் காட்சி ஞாபகம் வருகிறது.கதை சுதந்திரத்திற்கு முன்பு தொடங்குகிறது. சுதந்திரம் பெற்று நாடு வளர்ச்சியடையும்போது அதன்தாக்கம் தேர்தல் வழியாக கிராமம் மெல்ல மெல்ல மாறுவதை அழகாக சொல்லியிருப்பார்கள். ஊரின் பெரியவர்கள் சிறியவர்கள் மூன்று சீட்டாட வும் இன்னும் பல பழக்கங்களுக்கும் அனுமதி பெறாத மனமகி்ழ் மன்றமாகவும் மாடுமேய்க்கும் சிறுவர்களுக்கு விளையாடும் இடமாகவும் இருக்கிறது காற்றாடி மாந்தோப்பு.
மாந்தோப்பு பூங்காவாக மாற்றப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியினால் நவீன பூங்காவாக மாற்றப்படுகிறது. தன்குடும்ப சூழலால் பணம் மட்டுமே இலக்கு என்னும் காதர் ஒரு ஜவுளி கடையில் சிப்பந்தியாக சேர்ந்து பின் தேர்ந்த நிர்வாகியாகிறான். அடுத்து ஜவுளி கடை அனுபவமே இல்லாத பணக்காரனோடு சேர்ந்து ஜவுளி வியாபாரம் செய்து பின் அவரை ஏமாற்றி அந்த கடைக்கே முதலாளியாகிறான்.
ஓடிப்போன அம்மாவினால் ஏற்பட்ட அவமானத்தால், செல்லப்பன், தாமு மற்றதம்பிகளுடன் ஊருக்கு வரும் லாரியில் ஏறி வருகிறார்கள். தாமு ஆகஸ்டு தியாகியாவது? படிக்க சுவாரஸ்யம். அதனால் ஊர்மக்கள் அவனது கடையில் பொருட்களின் விலை அதிகமானாலும் வாங்குகிறார்கள். மக்களிடையே பிரசித்தி பெற்றவனாகிறான்.
காலமாற்றத்தில் தாமுவுக்கும் காதருக்கும் பிரச்சனை வர தேர்தலில் காதருக்கு எதிராக குரான் பாடசாலைக்கு அருகில் பொரிகடலை விற்கும் வயோதிகர் ஒருவரை வேட்பாளராக தாமு அணியினர் நிறுத்துகிறார்கள்.
காதருக்கு கடையில், தொழிலில் ஏற்படும் பிரச்சனைக்கு எல்லாம் தாமு நேரடியாக, மறைமுகமாக காரணமாகிறான். இதனால் மேலும் பிரச்சனை தீவீரமாக மனிதர்களின் மனவேற்றுமைக்கு மரத்தின் தலையில் கை வைக்க ‘புளியமர ஜங்ஷன்’ என்றபெயர் மட்டுமே நிலைத்திருக்கிறது.
நகரமயமாக்கலுக்கு முன்பே கதை சொல்லி ஆசான் மறைந்துவிட மாற்றங்களை கவனித்துவருபவர் இந்த நேரத்தில் ஆசான் இருந்திருந்தால் என்றுயோசிப்பதாய் அங்கங்கு காட்டியிருப்பது. வாழ்க்கையின் நிதர்சனம்.
மறைந்த மரத்தைப் பற்றி அந்த தலைமுறையினர் தம்சந்ததிகளுக்கு புளியமரஜங்ஷன் என்று எதனால் பெயர் வந்தது ?என்ற கேள்விக்கு விடையாய் சொல்வார்கள்.
எப்படியும் புளியமரம் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டுதானிருக்கும்.!!!
ரசித்தவை:- பொரிகடலை தாத்தா தேர்தலில் வெற்றி பெறுகிறார். ஆனால் கடலை தாத்தா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அவர் மீண்டும் தனது பொரிகடலை வியாபாரத்தைத் தொடங்குகிறார் .மனம் ஒப்பிய செயலை மகிழ்வுடன் செய்கிறார். காதர் தன்னுடைய பண ஆசையால் வாழ்க்கையையே பணயமாக்குகிறான். அந்த நிகழ்வை கதைபின்னலில் அழகாக காட்டியிருப்பார் சுந்தரராமசாமி.
இறுதியில் மரத்தின் முடிவுக்கு காரணமான கூலி ஐயப்பன் தன் செயலுக்கு கூலியாக மரத்தின் அடியிலேயே குத்துப்பட்டு குருதியை அபிஷேகித்து ஆவியை இழக்கிறான். ஐயப்பன் ஐயமின்றி புளியமரத்து பேயாக அ(ல்ல) லைந்து கொண்டிருப்பான்.
மரம், மனிதன் மரணிக்க காரணமான தாமு காதர் சிறைப்படுகின்றனர். வினை (மரத்தை, மனிதனை) வேரறுத்தவர்கள்…
புளியமரத்தை வெட்ட நினைப்பவர்கள் ஒருபக்கம். வழக்கமான பாணியில் தடுக்க நினைப்பவர்கள் மற்றொருபுறம். இறுதியில் புளிய மரத்திற்கு நடக்கும் கொடுமையும் அதன்முடிவும் நம்மை உலுக்கிவிடுகிறது. புளியமரம் அல்லவா!? புளிக்கிறது என்று எங்கும் முகம் சுளிக்கவே முடியாத சுந்தர(ம்)சாமி.
Leave a Reply