சேகர் தன் நண்பன் சந்தருடன் இருசக்கர மோட்டார் வாகனத்தில் கிளம்பி தஞ்சாவூரிலிருந்து இருபத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தன் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளான். சந்தருக்கு உள்ளடங்கிய கிராமங்களைப் பார்க்க மிகவும் ஆர்வம். ஒருவழியாக அந்த புத்தூர் கிராமத்தை வந்தடைந்தார்கள். ஊர் மக்கள் அநேகர் சேகரை நாடிவந்து அவன் அப்பா, அம்மா, தங்கை பற்றி நலம் விசாரித்துப் போனார்கள். பூட்டிக்கிடக்கும் வீட்டை திறந்து அதே தெருவில் குடியிருக்கும் அம்புஜத்தை கூப்பிட்டு வீட்டை பெருக்கி கழுவிவிடச் சொன்னான்.
மண்வெட்டி, தட்டுக்கூடை, அரிவாள் சகிதம் இருவரும் கிளம்பினார்கள். நேரே நடுகல்லாகக் காட்சியளிக்கும் ஊரின் காவல் தெய்வங்கள் இருக்குமிடத்துக்கு வந்தார்கள். “கோவில் கட்டடம் இல்லாவிட்டாலும் மேற்கூறை கூடவா அமைக்கக் கூடாது, என்ன மக்கள் இவர்கள் எல்லாம் ” என்று சலித்துக் கொண்டான் சந்தர்.” நாம் கிளம்புவதற்குள் இதற்கான விளக்கம் உனக்குக் கிடைக்கும்”என்று சேகர் அவனுக்கு பதில் சொன்னான்.அந்த ஏழுசிலைகளைச்சுற்றி இருந்த புல்பூண்டுகளை மண்வெட்டியால் அகற்றினார்கள். “என்னப்பா சேகர் , என்ன விசேடம்” என்று அங்கு வந்த ஒரு பெரியவர் கேட்டார்.”
வருகிற வெள்ளிக்கிழமை வெயிலுகந்த சாமிகளுக்கு படையல்; அதான் சுத்தம் செய்து கொண்டிருக்கிறோம்”
“அப்போ வருகிற வெள்ளிக்கிழமை ஊரை அமர்க்களப் படுத்திடுவீங்கன்னு சொல்லு”
“தாத்தா, ஒரு கொட்டகை கூட இல்லாமல் சாமிகளை ஏன் வெயிலிலும் மழையிலும் பாதிக்கும்படி வைத்திருக்கிறீர்கள்னு என் நண்பன் கேட்கிறான்; நீங்கதான் அவனுக்கு விளக்கனும்”
பெரியவர்” தம்பி, இதை நீ நம்பித்தான் ஆகனும் ” பீடிகையுடன் ஆரம்பித்தார்.
“தம்பி, ஒவ்வொரு சிலைக்கும் தனித்தனி கதை இருக்கு. எங்க ஊர்ல ரொம்ப காலத்துக்கு முன்னாடி மக்களுக்காக பாடுபட்டவங்கள நாங்க தெய்வமாக் கும்பிடுறோம்.
கண்ணுக்கு கண்ணா ஒன்னா வாழ்ந்த புருசன் செத்து சிதையில எரிகிறப்ப அதுல பாய்ந்து உயிர்விட்ட தீப்பாய்ந்தம்மா ஒருசாமி,
காட்டாற்று வெள்ளத்துல இருந்து ஊர் மக்கள் பல பேரைக் காப்பாத்தி கடைசியில களைச்சுபோயி ஆத்தோட போனவள் ஒருசாமி,
அதோட எல்லாத்துக்கும் ஆதாரமா வௌங்குற பராசக்தி ஒருசாமி….
ஊருல ஒழுக்கமில்லாத பாதகன் குடுத்த புகாரை நம்பி அபராதம் போட்டதுக்கு அந்த பாதகனைக் கொன்னுட்டு தானும் செத்துப்போன பேச்சியம்மா ஒருசாமி,
ஊருக்குள்ள அடிக்கடி வந்து கொள்ளையடிச்சிட்டு, கொலையும் செஞ்சிட்டுப்போன களவாணிங்களை ஒத்த ஆளா எதிர்த்து நின்னு கொன்னு போட்டுட்டு, கடைசியா உயிரை விட்ட மருதைய்யா ஒரு சாமி,
ராத்திரி நேரத்துல வந்து தொல்லை குடுத்த புலியை தனியாளா நின்னு கொன்ன வீரைய்யா ஒரு சாமி,
திருட்டு பட்டம் கட்டி ராஜாகிட்ட இழுத்துகிட்டு போன புருசனை வாதாடி மீட்டுவந்த பூவாயி ஒருசாமி,
இதுல ஆத்தோட போனவ வமிசத்துல வந்தவங்கதான் சேகர் வம்சம். “
“அதுசரி , ஏன் ஒரு கூறை கூட இல்லாம வைச்சிரிக்கீங்க”
“ரொம்ப வருடத்துக்கு முன்னாடி மண்டபம் கட்டினோம்.ஆனா அன்னிக்கு ராத்திரியே கட்டடம் இடிஞ்சி தரைமட்டமாயிடுச்சு. மறுநாள் சாமி வரவழைச்சி கேட்டப்ப,
‘ நாங்க எல்லாரும் வெயிலுகந்தவங்க. கட்டடம் கட்டி எங்கள ஒங்ககிட்ட இருந்து பிரிச்சு தனிமையாக்கிடாதீங்க. எங்களுக்கு தனி பூசாரியும் வைக்கக் கூடாது; அவுங்க அவுங்களேதான் பூசை செஞ்சுக்கனும்’ அப்படின்னு அருள் வாக்கு வந்திச்சு. அதுக்கப்புறம் கட்டடம் கட்டவேயில்லை ; இதுதான் கதை..” என்று பெரியவர் முடித்தார்.
இதைக் கேட்ட சந்தர் நல்லோரைக் கொண்டாடினாலே நல்லது நடக்கும் என்றான்.
“இந்த கோயில்களுக்கு எந்த ஆகமும் கெடையாது; ஆனாலும் வழிபாடு குறைவில்லாம நடக்குது. இந்த தெய்வங்கள் எதுவும் கற்பனை இல்லை; கற்பிக்கப்பட்ட அபூர்வ தெய்வ சக்தி யாருக்கும் இல்லை. இந்த ஊர்ல தெய்வ நம்பிக்கை இல்லாத மக்களே கெடையாது” என்று சேகர் கோயில் நடைமுறையை சந்தருக்கு விளக்கினான்.
‘எதற்காக ஊரில் உள்ள சில பேர் ஆகமம், சம்பிரதாயம்னு கூச்சல் போடறாங்க’ன்னு சந்தர் முனுமுனுத்தான்.
Leave a Reply