வெற்றிடம்

படைப்பாளி: கிரிஸ்டி நல்லரத்னம், மெல்போன், ஆஸ்திரேலியா


“ட்றிங்”
“ட்றிங்”
“ட்றிங்”

மூன்று முறை காலிங் பெல்லை அழுத்தியாயிற்று. மார்கிரேட்  தூங்கி விட்டாரோ? மாலை மூன்று மணிதான் ஆகிறது. இப்போது என்ன தூக்கமாம்?
ஏதும் சுகயீனமோ? ஏனோ  ஞானத்திற்கு மார்கிரட்டை ‘அவள்’ என்று நினைப்பில் கூட விளிக்க மனம் இடங்கொடுக்கவில்லை.

நூறு வயதை எட்ட இன்னும் ஆறு வருடங்களே உள்ள மார்கிரேட்டை ஞானத்தின் மனம் கூட மரியாதை செய்தே அழைத்தது.

தன் வலது கரத்தில் சுமந்து கொண்டிருந்த அந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் இளம் சூட்டுடன்  வரிசை கட்டி நிற்கும்  ‘ஸ்கொண்ஸ்’ அவள் உள்ளங்கைக்கு இதமான ஒரு இளவெப்பத்தைக் கடத்தி ‘நான் புதிய வார்ப்பு’  என சொல்லாமல் சொல்லிற்று. மார்கிரேட்டுக்கு இது மிகவும் பிடித்த ஒன்று.

‘ஸ்கொண்ஸ்’ செய்வது ஒன்றும் பெரிய சிக்கலான சமையல் கலை அல்ல. மா, ஈஸ்ட், வெண்ணை, அளவுக்கு உப்பு, இரண்டு கறண்டி சீனியுடன் பாலைப் போட்டு கிளறி பினைந்து தட்டையாக்கி வட்டமாக வெட்டி ‘அவணில்’  போட்டு எடுக்க வேண்டியதுதான். நம்மூர் மெது ரொட்டியின் இரட்டைத்தட்டு. அவ்வளவே! ஆனால்,  சமையலில் சிக்கல் – இலகு என்ற வகுப்பு வாதமே இல்லையே. யாருக்கு சமைக்கிறோம் என்பதில்  ஜனனிக்கும் குதூகலமும் கொண்டாட்டமும் கைகளை இயக்கும் மாயச் சக்தியாக மாறி வேலையை முடித்துவிடும்.

மார்கிரேட்டுக்காக காத்து நின்ற அந்த சில வினாடிகள் மனம்தான் எங்கெல்லாம் அலைந்து விளையாடுகிறது என எண்ணியவாறு கையைத் திருப்பி  நேரத்தைப் பார்த்தாள் ஞானம்.  மார்கிரேட் மூன்று மணிக்கே  வரச் சொல்லியிருந்தார். …. இப்போது 3.05 தான் ஆகிறது.  மெல்பேர்னின் மாலை வெய்யில் இதமாய் காயும் நேரம் அது.

மூன்றாவது “ட்றிங்”  மார்கிரேட்டின் கவனத்தை திருப்பியிருக்க வேண்டும்.

“கம்மிங் … கம்மிங்’ என்ற குரலைத் தொடர்ந்து அவரின்  ‘வாக்கரின்’  கால்கள் நிலக்கம்பளத்தில்  மோதி எழுப்பிய  ‘தம்….. தம்’  ஒலி மெதுவாய் அதிகரித்து கதவின் பின்னே வந்து நின்றது. வாக்கரின் உதவியின்றி மார்கிரேட்டால்   நடமாட முடியாது. அவள் கால்களுக்கு வாழ்வில் ஓடி முடித்த களைப்பு.

இங்கெல்லாம் வீட்டு வாசலில் இரு வாசல் கதவுகள் வரிசை கட்டி நிற்கும். கதவுக்கு முன்னால் வெளியே ‘செக்கியூரிட்டி டோ’ என்னும்  உலோகக் காவல் கதவு. வரும் திருடனை தடுக்கத்தான் இந்த ஏற்பாடு. 

தன் தனிமை தன்னை விட்டு தப்பிச்செல்லக்கூடாதே  என்பதற்காய் மார்கிரேட் போட்ட  வேலிதான் இது என தன் கணவன் கணேசலிங்கத்திடம்  ஞானம் ஒரு முறை சொன்னதை நினைத்துக் கொண்டாள்.

கணேசலிங்கம் மத்திய கிழக்கில் பொறியியலாளர் உத்தியோகம். கொரோனாவில் அங்கு மாட்டிக்கொண்டு  பறக்க விமானமில்லாமல்  தினமும் தொலைபேசியில் அழுதுவடிவார்.

“கொஞ்சம் பொறுத்துக் கொள்ளுங்களன். இஞ்ச வந்தாலும் சிறைவாசம்தான்….. இஞ்சயும் லொக்டவுணும்  ஊரடங்கு உத்தரவும்தான்….’ என்று  புருஷனை சமாதானப்படுத்துவாள் ஞானம்.

கணவனை காசைத்துரத்த அனுப்பிவிட்டு,  கல்லாப்பெட்டிக்கு காவல் இருக்கும் வாழ்க்கை.

இலங்கையில் செய்யாததா? புருஷன் கொழும்பில் வேலை. குடும்பம் வடக்கில். யாழ்தேவிதான் இணைப்புப் பாலம். ஒரு தனியாளாக குடும்பச் சுமையை சுமப்பதில் உள்ள வேதனையை ஞானம் அறிவாள். 

 “பிள்ள, புருஷன ஊரோட  வேல ஒண்டு  பாக்கச் சொல்லலாமே?”  என்ற அறிவுரைகள்  பம்பலாக வருவதுண்டு. ஊராரின் வாய்ப்பேச்சு வயிற்றை நிரப்பாதே. இந்த முகமிழந்த மனிதர்களின் சொல்லடுக்கு மாளிகையை அவள் வாழ்ந்துதான் தகர்க்கவேண்டியிருந்தது. இந்த சமுதாய சிணுங்கல்களைப்பற்றி  ஞானம் அலட்டிக்கொள்வதில்லை.

‘ஹலோ டியர்’ என்று குதூகலத்துடன் அழைத்தவாறு மார்கிரேட்  இரு கதவுகளையும்  திறந்து ஞானத்தை வீட்டினுள் அழைத்தார்.

‘வட் ஏ பியூயூயூயூட்டிபுல் டே’ என நீட்டி நாளுக்கு ஒரு வாழ்த்துப்பா பாடி ஞானத்தின் கையிலிருந்த பிளாஸ்டிக் டப்பாவை வாங்கி மேசையில் வைத்து ஞானத்தை நோக்கி புன்முறுவல் செய்தார் மார்கிரேட்.

எதிலும் இன்பத்தை மட்டும் கிள்ளியெடுத்து வார்த்தை சோடனைகளாக்கி மகிழும் மனப்பாங்கு இவர்களுக்கு எப்படி வந்ததாம் என ஞானம் எண்ணி வியப்பதுண்டு.

சீராய் வெட்டிய முடி,  காலத்தின் மடிப்புகளாய் கண்களின் கீழ் பை போட்ட அடி இமை, சிரித்தது போதும் என கீழே இழுத்துக் கொண்ட உதடுகள், மேல் முகத்தில் இருந்து வடிந்த தொங்குதசை நாடி…. இதுவே மார்கிரேட். ஆனால் மார்கிரேட்டின் கண்களில் இருந்த கனிவை கடன் வாங்கத் தோன்றும்…. அப்படிப்பட்ட கருணைக் கண்கள் அவை!

மார்கிரேட்டால் ஞானம் என்ன கொண்டு வந்திருப்பாள் என ஊகிக்க முடிந்தது. ஒவ்வொரு மாதமும் முதலாம் ஞாயிறில் நடக்கும் இந்த சந்திப்பு ஒரு  சடங்காகவே மாறிவிட்டது.

ஞானத்தின் ‘ஸ்கொண்சும் ‘ மார்கிரேட்   கைப்பட தயாரிக்கும் ‘ஸ்டாபரி ஜாமும்’ சங்கமிக்கும் ஞாயிறு அது. தன்னிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தெம்பில் மார்கிரேட் ஊர்ந்து ஊர்ந்து அந்த சனிக்கிழமையே ஒரு கடமை போல் ஜாம் செய்து போத்தலில் அடைத்து வைப்பார். ‘ஸ்டாபெரி’ சீசன் இல்லாத நாட்களில் வேறு பழங்கள் வந்து ஜாமில் குந்திக்கொள்ளும்.

மார்கிரேட் முகத்தில் என்றுமில்லாத ஒரு ஆழ்ந்த யோசனை அன்று. அவர் கண்கள் யன்னலில் படபடக்கும் துணித்தட்டியூடாக எங்கோ … ஒரு முடிவிலியை நோக்கும்  கண்கள்.

‘வட்ஸ்  றோங்?’ என ஞானம் மெதுவாய் மார்கிரேட் கைகளை பற்றி அழுத்திக்கேட்டாள். மார்கிரேட்டின் கை மொளிகளில் கம்பளம் போர்த்தியது போல் சுருங்கி இருந்த  அவர் தோல்  ஞானத்தின் பிடியில் மேலும் சுருங்கிற்று.  அந்தப் பிடியின் அழுத்தத்தில் அவர்கள் நட்பின் அடர்த்தி தெரிந்தது. அவரை தொட்டுப் பேசும் உரிமையும்  சுதந்திரமும் அவர்கள் பல வருட  நட்பின்  பிரதிபலிப்பு. புகுந்த நாட்டில் அனைத்தையும் தள்ளி நின்று பார்க்கும் புலம்பெயர்ந்தவர்களின்  மனோநிலையில் இருந்து விலங்குடைத்து  ஞானம் சமைத்துவைத்துவிட்ட இந்த உறவு பரிசுத்தமானது.

‘நோ.,….ஐ ஆம் ஓகே….. ஐ  ஹாட் ஏ ட்றீம்’

கனவா?

என்ன கனவைத்தான் மார்கிரேட்   கண்டிருப்பார்?
மார்கிரேட்டின் கண்கள் இப்போது பனித்திருந்தன.

அந்தரங்க உணர்ச்சிகளை மற்றவர் முன் கொட்டி அழும் பழக்கம் வெளிநாட்டவர்களிடம் குறைவு . நம் ஊரில் சாவீடுகளில் தரையில் புரண்டு அழுது புலம்பும் காலாச்சாரம் இங்கில்லையே. கைலேஞ்சியால் கண்துடைப்பதோடு சரி. ஆனால்,  தேங்கிக் கிடக்கும் சோகத்தை நெஞ்சிலடைத்து அதன் ஆவியில் அவியும் ஆத்மாக்களும் இவர்களே.

ஞானத்திற்கு மார்கிரேட்டின் வலி புரிந்தது.  தோல் நிறம் கடந்த புரிதல் அது.

கடந்த வருடம்தான் மார்கிரேட் தனது  கணவர் விக்டரை இழந்தாள்.  நீறு பூத்த நெருப்பாய் அவள் மனதுள் அப்பிரிவின் வலி இன்னும் சூளை நெருப்பாய் எரிந்துகொண்டுதான் இருந்தது.  அந்த ரணம் இன்னும்  காயவில்லை.
மார்கிரேட் தன் கண்களில் துளிர்க்கும் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டார். கண்ணீர் என்ன நீரின் ஒரு வடிவமா ? இல்லை.. இல்லை. கூடித்திரிந்த பறவை தன் துணையை இழந்த வலியால் இதயத்தில் இருந்து வடிக்கும் குருதி அல்லவா? முடிவிலியில் நின்று  எதிரொலிக்காய் ஏங்கும் ஒரு தனியனின் ஏக்கம்.

“நான் விக்டரை கனவில் கண்டேன்…. என் கைகளைப் பற்றிக் கொண்டு ‘ நாம் கழித்த அந்த சந்தோஷமான நாட்களை நீ தொடரவேண்டும் மார்கிரேட்.. நான் உனக்காய் வாங்கிய jigsaw வை என் நீ தொடுவதில்லை?   ஐ வாண்ட் யூ டு பிளே தெம் .           

நீ நாம் வாங்கிய jigsaw வை விளையாட வேண்டும் மார்கிரேட் .  நானும் உன்னோடிருப்பேன்…ஐ வில் ஹெல்ப் யூ’…..”. 

Tajmahal-jigsaw

இதற்கு மேல் மார்கிரேட்டால் எதுவும் பேச முடியவில்லை. அவள் தோள்கள் சோகத்தில்  குலுங்கி அடங்கியது.

ஞானத்திற்கு புரியவில்லை…..”வாட் இஸ் திஸ்  jigsaw ஸ்ரோறி? “.  இந்தக் கதையை ஞானம் என்றும் கேட்டதில்லை.

“அது ஒரு பெரிய கதை. நாங்கள் இங்கிலாந்தில் சந்தித்து மணந்து கொண்டோமல்லவா? விக்டருக்கும் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்வதில் அலாதி பிரியம். ஹி வான்ட் டு டேக் மி டு இன்டியா. எங்கள் தேனிலவுக்கு அங்கு போயிருந்தோம். இருவருக்கும் பிடித்தது தாஜ்மகால். யமுனா நதிக்கரை… ஆக்ரா கோட்டை …. ரம்மியமான நாட்கள் அவை…..அங்கு ஒரு ஜிக்சோ பெட்டி ஒன்றை வாங்கி விக்டர் எனக்கு தேனிலவு ஞாபகார்த்த பரிசாகத் தந்தார்….. இட் ஹாட் 1000 பீசஸ்….  ஆயிரம்  துண்டுகளை இணைத்து தாஜ்மகால் படத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.  அங்கு அன்று ஒரு வாக்குறுதி செய்துகொண்டோம். ஆம், ஒவ்வொரு வருடமும் எமது திருமண நாளில்  இந்த ஜிக்சாவை விளையாடுவோம். முழுவதையும் பொருத்தி சம்பூர்ணமாக்க ஒரு வாரம்வரை செல்லும்…… ஆகா… இனிய நினைவுகள். இதோ, இந்த மேசையில் வைத்தே விளையாடுவோம்.”

இதைச் சொல்லி முடித்ததும் மார்கிரேட்டின் கண்கள் புதிய ஒளியுடன் பிரகாசித்தன. அந்த ரம்மியமான நினைவுகளுக்கு தன்னை முழுவதுமாய் ஒப்புக்கொடுத்துவிட்ட ஒரு சாந்தம் அவள் முகத்தில்  அப்போது குடிகொண்டது. விக்டரைப் பற்றிய அந்த சாசுவதமான நினைவுகள் அவளை ஆட்கொண்டன.

சுவர்க் கடிகாரத்தின் ‘டிக் …. டக்’ ஓசையைத் தவிர எங்கும் அமைதி.

வாழ்க்கைதான் எத்தனை குரூரமானது? ஒரு தனிப்பணியாக  அவரை ஆக்கி வேடிக்கை பார்க்கும் உணர்வுகள். விக்டருடனான கனவுச்சந்திப்பு அவரின் நினைவுப் பொய்கையில் கல்லொன்றை விட்டெறிந்து கடந்து போனது. அது எழுப்பிய நினைவலைகளில் ஒரு தக்கை போல் தத்தளிக்கும்  மார்கிரேட்  இங்கே.

“சோ…… டிட் யு பிளே?  ஜிக்சோவை பொருத்தி முடித்தீர்களா மார்கிறேட்?”

“யெஸ்….. இருவருமாக பொருத்தும் ஜிக்சோவை நான் தனியாக செய்யத் தொடங்கினேன்…..”

மீண்டும் ஒரு நீண்ட அமைதி. அவர் நினைவுகள் இங்கில்லை. விக்டருடன் கதை பேசி இருவரும் பொருத்தமான ஜிக்சோ துண்டுகளை தேடும் அந்த காட்சி அவர் மனக்கண் முன் தோன்றியிருக்க வேண்டும். எழுபது வருடங்கள் விக்டருடன் வாழ்ந்த இனிய நினைவுகள்….. எழுபது தடவை அதே ஜிக்சோவை வெற்றிகரமாக பொருத்தி முடித்து ” லெட் அஸ் செலிபிறேட்” என்று  விக்டர் ஒரு வைன் போத்தலைத் திறந்து மார்கிரேட்டுடன் பகிர்ந்து ”சியேர்ஸ்” சொல்லி பருகும் நினைவுகள்….. அந்த குட்டிக் கொண்டாட்டத்தின் பின் பொருத்தி முடித்த ஜிக்சோவை விக்டர் மிகக் கவனமாக கழற்றி அது வந்த பெட்டிக்குள் வைத்து  மூடி  “அண்டில் நெக்ஸ்ட் இயர்” … ‘அடுத்த வருடம் வரை’  என்று கூறி  கவனத்துடன் ஒரு சடங்கு போல் பத்திரப்படுத்துவது மார்கிரேட் மனக்கண் முன் விரிந்தது. அவர் அடைகாத்த அந்த புனித நினைவுகள் மட்டுமே இப்போது அவருக்கு  சொந்தம்.

“இருவரும் பகிர்ந்து செய்ததை ஒரு தனியனாக செய்வது வேதனை….. இட் வாஸ் சாட்…. என் தனிமை முதல் முறையாக என்னை ஆட்கொண்டது. அதில் இருந்து என்னை விடுவித்துக் கொள்ள திமிறினேன். ஒரு புதைமணலில் மாட்டிக் கொண்ட குதிரைபோல் நான் மணலில் மூழ்கிப்போனேன்.  இரு வாரங்களுக்கு இந்த மேசையிலேயே பரப்பி ஒவ்வொரு துண்டுகளாக பொருத்தினேன்.”

“சோ…. டிட் யு பினிஸ் இட்?…… செய்து முடித்தீர்களா மார்க்?”

“ஆம்….. ஆனால் 999 துண்டுகள்தான் பெட்டிக்குள் இருந்திருக்க வேண்டும். அந்த ஒரு கடைசித் துண்டு எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தாஜ்மகால் ஒரு கல்லை இழந்துவிட்டது. கட்டி முடிக்காத தாஜ்மகால்…

Tajmahal-jigsaw


அன்று முழு நாளும் வீடெல்லாம் தேடினேன். எங்குதான் போயிருக்கும்? விக்டர் ஒருபோதும் இத்துண்டை இழந்திருக்க முடியாது. எங்குதான் போயிருக்கும்?”
அந்தக் கேள்வியை ஞானத்திடம் கேட்பது போல் மார்கிரேட் கேட்டது அவரின் தேடலின்  இயலாமையின் பிரதிபலிப்பாகவே ஞானத்திற்கு பட்டது.

காணாமல் போன அந்த கடைசித் துண்டு ஒரு குறியீடா? விக்டர் விட்டுச்சென்ற வெற்றிடமா?  அந்த வெற்றிடத்தை நிரப்ப அவர் எடுத்த தேடலின் தோல்வியின் வெளிப்பாடே சற்று முன் அவர் கண்களை நனைத்த நீரா?

தனிமையில் வாடி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மார்கிரேட்  வாழ்வு ஞானத்திற்கு வேதனையளித்தது. மார்கிரேட்டின்  ஒரே மகன் குடும்பத்துடன் அன்னையர் தினத்திற்கும் நத்தாருக்கும் பூச்செண்டுடன் வந்து வாழ்த்துவதுடன் அந்த சடங்குகள் முடிந்துவிடும். வேர்கள் வெட்டப்பட்ட மரத்தின் தனிமை அவருக்கு. ஒரு புறக்கணிக்கப்பட்டவராக புளித்துப்போன வாழ்க்கையை வாழும் எத்தனை மார்கிரேட்கள் இங்கு வாழ்கிறார்கள்?

ஒரு துண்டை இழந்த அந்த ஜிக்சோவை அவர் என்னதான் செய்தாராம்?

“மார்கிரேட்  அந்த ஜிக்சோவை ‘சல்வேசன் ஆமி’ அல்லது வேறு ‘தர்ம’ கடைக்காவது தானம் செய்திருக்கலாமே?”

“நோ….நோ….. நெவர். …. டெல் மி…. நான் அனுபவித்த தவிப்பையும் வேதனையையும்  இன்னொரு உயிரும் அனுபவிக்க வேண்டுமா ஞானா?  அந்த ஒரு துண்டு விட்டுச்சென்ற வெற்றிடத்தை என்றுமே நிரப்பமுடியாது. வெற்றிடத்தை பரிசளிக்க முடியுமா என்ன?  அது என் இதய வலியோடு முடியட்டும். இன்னும் ஒரு இதயத்தை அது பிறாண்டி காயப்படுத்தி குதறியெறிவதை நான் அனுமதிக்க முடியாது ஞானா. நான் கடந்து வந்த பாதையில் இன்னொருவர், அதிலும் இன்னொரு பெண்  நடக்கவே கூடாது. இருந்த 999 துண்டுகள் தந்த மகிழ்ச்சியை விட இல்லாமல் போன அந்த ஒரு துண்டு எனக்குத் தந்த வலி பெரிது ஞானா. உங்களுக்கு புரிந்திருக்கும்…… புரிந்ததா ஞானா?”

ஞானாவின் கைகளைப்பற்றிக்கொண்டு மார்கிரேட் கேட்ட அந்த கேள்வி சுமந்து வந்த உணர்ச்சிப் பிரவாகத்தை ஒரு பெண் மனது மட்டுமே புரியும்.

வரம் கேட்டு நிற்கும் பக்தன் தெய்வத்தைப் பார்ப்பது போல் ஞானத்தின் கண்களை உடுருவியது மார்கிரேட்டின் பார்வை.   அந்தப் பார்வை ஞானத்தின் கண்களைத் தாண்டி  இதயத்தை ஊடுருவி நாளங்களைக் கடந்து ஒரு இனம்புரியாத மாற்றத்தை ஞானத்தின் எண்ணங்களில் உருவாக்கி மடிந்தது!

மார்கிரேட்டின் வீட்டு பின்கட்டில் இருந்த குப்பைக் கூடையில் அந்த 999 துண்டுகளும் குப்பையோடு குப்பையாய் சங்கமித்திருந்தன. அவற்றிற்கு வீட்டினுள் இனி இடமில்லை!

அன்று இரவு ஞானத்தின் வீட்டில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு கணவன் கணேசலிங்கத்தை சென்றடைந்தது.
“சும்மா காசு  காசு  எண்டு என்னத்துக்கு அலையிறயள். எல்லாத்தையும் மூடிவச்சிற்று  இஞ்ச வந்து என்னோட இருங்களன். இருக்கிற கொஞ்ச நஞ்ச காலத்திற்காவது நாம இரண்டு பேரும் ஒண்டா சந்தோசமா இருப்பம். விளங்குதோ நான் சொல்லுறது ? “

தலையை சொறிந்தவாறு கணேசலிங்கம் பாஸ்போட் பைலை எடுக்க லாச்சியை திறந்தார்.

Advertisement

One thought on “வெற்றிடம்

Add yours

  1. கதாசிரியர் கிறிஸ்டி நல்லரெத்தினம் அவர்கள், இருவேறு தம்பதிகளைக் கொண்டு கதைப்பின்னல்களைக் கட்டமைத்துத் தம்பதிகள் வயதான காலத்திலும் காசைத் தேடி ஓடுவதைவிடுத்து ஒருவருக்கொருவர் அனுசரணையாய் இருக்க வேண்டும் எனும் கருத்தை வலியுறுத்திகிறார்.

    Liked by 1 person

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: