வாசித்தது:- வெண்ணிற நினைவுகள்
ஆசிரியர்:- எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் :- தேசாந்திரி
விலை :- ரூபாய் 150
தீபாவளி என்றாலே பெரியவர்களுக்கு பலவிதமான பலகாரம் சிறுவர்களுக்கு பட்டாசு இளவயதினருக்கு புத்தாடை எல்லாவயதினருக்கும் எண்ணெய் குளியல். வரும் தலைமுறையில் பள்ளியில் தீபாவளி கட்டுரையில் பலகாரம், பட்டாசு, புத்தாடை, எண்ணெய் குளியலோடு, திரைப்படம் பார்ப்பது ஐதீகம் என்று சேர்த்து எழுதும் அளவுக்கு நம்மோடு ஒன்றிவிட்ட திரைப்படம் பற்றியதானது எனது இந்தப் பதிவு.
வாசித்ததில் ரசித்தது என்று இந்த பதிவை என்னால் எழுதமுடியாது. அரங்குகளில் ரசித்து பார்த்த திரைப்படங்களை, தொலைக்காட்சிகளில் போடும் ஒவ்வொருமுறையும் புதிதாக பார்க்கும் அதே உணர்வோடு ரசித்து (பிள்ளைகளின் கிண்டலைப்பற்றி கவலைப்படாமல்) ரசித்து(திரிசூலம்) பாரத்ததை, பார்த்ததில் ரசித்தது என்றுதானே சொல்ல முடியும்.
“வெண்ணிற நினைவுகள்” இந்த புத்தகத்தில் ஆரம்பமே மூன்று முடிச்சுடன் துவங்குகிறது. ராமகிருஷ்ணன் அதில்வரும் மனசாட்சியைப்பற்றி குறிப்பிட்டிருக்கிறார். கிட்டதட்ட அந்த வயதில் பார்த்த எல்லோருக்குமேஅந்த கதாபாத்திரம் வேறு ஆளா, மனசாட்சி இப்படித்தான் இருக்குமா? என்ற கேள்வி இருந்திருக்கும்.
புத்தகம் முழுக்க கறுப்பு வெள்ளைக் காலத்தில் வந்தது ,வண்ணப் படங்களாக வந்தது , பீட்சா சாப்பிட நினைக்கும் காக்கா முட்டை (கள்) வரை தேர்ந்தெடுத்த படங்களை ரசித்தவாறே அப்படியே கொடுத்திருக்கிறார். படமென்பது நடிப்பவர்கள் மட்டுமல்ல, கதை, திரைக்கதை,வசனம், நடிப்பு பாடலிசை ,பின்ணணியிசை, ஔிப்பதிவு, இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைக்கும் எல்லாவற்றுக்கும் முதன்மையான இயக்கம் என அத்தனையையும் பதிவிட்டிருக்கிறார்.
உதிரிப்பூக்கள் :- தன் அடுத்த மகளையும் தனக்குத் திருமணம் செய்து தரும்படி கேட்கும் விஜயனிடம் சாருஹாசனின் பதில் நான் என் பெண்களுக்கு அப்பாதான் ….என்பது விஜயனின்அந்த கடைசிநேரம், அந்த காட்சியமைப்பு என ஒவ்வொரு படத்திலும் ரசித்ததை மட்டுமே சொல்லியிருப்பது அழகு.
பாடல்களே இல்லாத படமான அந்த நாளில் வந்த அந்தநாள். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்தில் குகையை திறக்கச் சொல்ப்படும் வார்த்தை ‘திறந்திடுசீசேம்’ என்பதுதான் உலகின் முதல் பாஸ்வேர்டு ஆக இருக்கும் என நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நடுத்தர வர்க்கத்தின் மிகப் பெரும் கனவு (இலட்சியம்) வீடு, அதை திட்டமிட்ட (இயக்கிய) பாலுமகேந்திரா, கட்ட நினைத்த அர்ச்சனா என்றும் நம் மனவீட்டில் ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தின் சில நிகழ்வுகள் மர்மயோகியில் சேர்த்திருப்பதாக சுட்டியுள்ளார்.
கமலின் சலங்கைஒலி, மந்திரி குமாரி, கப்பலோட்டிய தமிழனாக வாழ்ந்த நடிகர் திலகம் ,பசியில்ஷோபா ,டெல்லி கணேஷ் ,பன்னீர் புஷ்பங்களான சுரேஷ், சாந்திகிருஷ்ணா, பிரதாப் என தொடர் வண்டியின் 3வது வகுப்பு பெட்டிகளின் பயணமாக பெரும்பாலும் அனைவரு(ராலு )ம் பயணிக்க (ரசிக்க) கூடியதைத் பிணைத்து நமக்கு சுகமான தொடர்வண்டிப் பயணம் செய்த நிறைவைத் தருகிறது. பதினாறு வயதினிலே, தண்ணீர் தண்ணீர், வழக்கு எண்18/9, அவள் அப்படித்தான்,பசி, பேசும்படம்(கமல்), நினைத்தாலே இனிக்கும்…ஹூம்.. நூறுபடங்களை பதிவிட எண்ணியதாகவும் அடுத்தடுத்த பதிவில் போடுவதாகவும் ராமகிருஷ்ணன் குறிப்பட்டிருக்கிறார்.
ஒவ்வொரு பெட்டியும் ஒரு திரைப்படமாக உடன் பயணிப்பவர்கள் கதாபாத்திரங்களாக நம்மோடு உரையாடுவதாக நமக்குத் தோன்ற வைத்திருக்கிறார். எல்லாவற்றையும் விட முன்னுரை மிகச் சிறப்பு. கண்டிப்பாக இந்த புத்தகத்தைப் படிக்கும் அனைவரும் நுழைவுவாயிலை-முன்னுரையை தாண்டி விடாமல் ஏறி-படித்து வந்தால் முழுமையாக ரசிக்க முடியும்.
முன்னுரையில் 40 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு செல்வது கிராமத்தில் எப்படி இருந்தது என்பதை இன்னொரு படமாக காட்டியிருப்பது அழகு!
அண்ணன்களுடன் பார்த்தபடம், அம்மா அப்பாவுடன் பார்த்தது தோழியுடன் சென்றது, பள்ளி இறுதித் தேர்வை முடித்து மொத்த வகுப்புமாக சென்ற படம் , ஏன்பாட்டியின் துணை?!யுடன் கிராமத்தில் பார்த்தபடம் என திரும்பி (நினைவுகளால்) பார்க்க வைத்த ராமகிருஷ்ணன் சாருக்கு நன்றிகள்!
அவரின் அடுத்த பதிவில் பட்டிகாடா பட்டணமா என்ற சவா(லை)லே சமாளித்து , முதல்மரியாதை …கிடைக்க இந்தியனாக சொல்லத்தான் நினைக்கிறேன்!
Leave a Reply