புத்தகம்:-இரண்டுபடி (மலையாளம்)
ஆசிரியர்:-தகழி சிவசங்கரப் பிள்ளை
தமிழில்:- டி.ராமலிங்கம் பிள்ளை
வெளியீடு:-சாகித்திய அகாடெமி
தகழி சிவசங்கரன் பிள்ளையின் எழுத்தில் ‘இரண்டுபடி ‘ நாவல்தான் எனது முதல் வாசிப்பு. கேரளத்தின் பண்ணையார்களிடம் வேலை செய்யும் விவசாயக் கூலிகள் சிருதை, கோரன், சாத்தன் வழியே அவர்களின் சமூக வாழ்க்கைப் போராட்டத்தினை அழகாக படம் பிடித்திருக்கிறார் தகழி சிவசங்கரன்பிள்ளை.
காளிசாம்பான், குஞ்ஞாளியின் மகள் சிருதை. பணமும் நெல்லும் (வரதட்சணை ) வாங்கிக்கொண்டு பெண்ணை வரனுக்கு திருமணம் செய்துகொடுப்பது அவர்கள் சமூகத்தில் வழக்கமாக இருக்கிறது. சிருதையை பெண் கேட்டு வர வர வீடு மற்றும் வயல்காடு வேலைகளில் சிறந்த தன் மகளைத் தேடி வருவதை தெரிந்து தொகையை அதிகப்படுத்துகிறான்.
கோரன் பெண் கேட்டு வரும்போதும் காளி தொகையைக் கூட்ட இருஜோடி விழிகள் ஒன்றுகூடிட கோரன் ஆறுமாதம் தவணை கேட்கிறான். காளிமேல் கோபமான குஞ்ஞாளி சாத்தன் என்பவனை மருமகனாக்க நினைக்கிறாள். தன் அப்பாவின் பண்ணையாரிடம் பணம் இல்லாததால் நண்பன் குஞ்ஞப்பியின் பண்ணையார் யோசப்பு சொல்லும் எல்லா விதிகளுக்கும் ஒப்புக்கொண்டு கடன் வாங்கி திருமணம் முடிந்தும், விடாத தூவானமாக கள்ளப்பணம் கொடுக்கவில்லை பெண்ணை அனுப்ப முடியாது என்று காளி தகராறு செய்கிறான்.
தன் பக்க உறவுகள், மற்றும் குஞ்ஞப்பியும் கோபித்துச் செல்ல, தனித்துவிடப்பட கோரன் ,சிருதை நெஞ்சம் நெகிழும்படி சாத்தன் துணையாக தோழனாக உடன் வருகிறான்.
கோரன், முதல்முறையாக பொறுப்பேற்று செய்த நெல் முதல்தர பயிராக நன்கு விளைகிறது. உழைப்பின் பயனை தெரிந்துகொள்ளும் ஆவலில் விளைச்சல் எவ்வளவு எனக்கேட்க பண்ணையார் குறைத்து சொல்வது, பசிக்கு நெல்லை கூலியாக கேட்டும் தராமல் பணம் தருவது, தான் வாங்கிய கடனை அதிகமாக்கிச் சொல்வது, பசியுடன் அலைந்து திரிந்து அதிக விலைக்கு அரிசி வாங்கி வரும்போது, உழைப்பவன் உரிமையை கேட்பற்கான சரியான தருணத்தை உணரச் செய்யும் விதமாக, இரவில் நெல் மூட்டை மூட்டை யாக தோணியில் ஏற்றி அனுப்பப்படுவதை பார்க்கும் அவன் இதையெல்லாம் வெளியுலகுக்கு தெரியப்படுத்த யோசிக்கிறான்.
இரவுச்சாப்பாட்டில் தண்ணீர் அருந்தும் மான்களாக , குறைந்த உணவை நிறைந்த அன்பினால் இருவரும் பரிமாறிக்கொள்ள முயல சண்டையாகி கோரன் வேண்டுமென்றே வேறு யாரையாவது திருமணம் செய்துகொள் என்கிறான். சிருதை சண்டையிடுகிறாள். கோரன் ,ஓட்டு கேட்க வந்தவர்கள் நமக்கான கூலி கிடைக்கும் என்றார்கள். ஆனால் நாம் தான் நம் உரிமைக்காக போராட வேண்டும். ஜெயிலுக்குப் போகலாம், செத்தும் கூட போகலாம் என்று கணவன் சொல்ல சிருதை சிந்தை நோகிறாள்.
உரிமைப்போராட்டத்தில் கலந்துகொண்டவனை போலீஸ் தேடுகிறது.ஒருமுறை இரவில் அவளைக் காணவரும் கோரனிடம் தான் தாய்மை அடைந்திருப்பதைக் கூற மகிழ்ச்சியடைந்தாலும் சாத்தன் உன்னை மணக்க நடையாய் நடந்தவன். இன்னம் மணமுடிக்காதவனாக இருக்கிறான் என்று கூற, அதற்கு?என்று சிருதை சிறுத்தையாய் சீறுகிறாள்.
உன்னையும் குழந்தையையும் நல்லவன் கையில் ஒப்பித்தால் என் பாதையில் செல்வேன் என்றுகூறிச் சென்றுவிடுகிறான். ஒருநாள் நள்ளிரவு கோரன் வரும்போது தாய்மையோடு இருப்பவளை சீரழிக்க முயல்பவனை கொன்றுவிட, சிறைப்படுகிறான். நினைவற்று கிடந்தவளை சாத்தன்தான் முழுமையாக கவனித்துக்கொள்கிறான். கோரன் கேட்டுக்கொண்டதால் வந்ததாக கூறுகிறான்.
கோபமுற்ற சிருதையிடம் உனக்கு விருப்பமில்லாத எதையும் செய்ய மாட்டேன் என்று உறுதி கூறி காவலாய் இருக்கிறான். அவளோ அவனது சேவை தன் மனதை மாற்றிடு்மோ என பயப்பட’தனக்கு சகோதரனாக குழந்தைக்கு மாமனாக சாகும்வரை இருக்கவேண்டும்’ எனக் கேட்க சம்மதிக்கிறான்.
சிறையிலிருக்கும் கோரனை காணச் சாத்தனும் சிருதையும் செல்ல அவனோ இருவரின் கைகளையும் பிடித்து இணைத்துவிடுகிறான்.
குழந்தை பிறக்கும்போது அக்கம் பக்கத்தில் யாருமில்லாததால் வலியின் உச்சத்தில் பேச்சின்றி சிருதை மயக்கமாக வெளியில் காவலிருக்கும் சாத்தன் ஒடிவந்து குழந்தை தரையில் விழாமல் தன் கைகளில் ஏந்திக்கொள்கிறான்.
இனி சிருதை வேலைக்கு சென்று தன்மகனை பார்த்துக்கொள்வாள் என ‘மாமா நானும் வருகிறேன்’ என்று அழும் குழந்தையையும் விட்டு யூனியனில் சேர சாத்தன் வர……
சிருதையும் குழந்தையும் என்ன ஆனார்கள்? மீதியை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
கோரன் வரப்பு வழி நடக்கும்போது விளைந்த நெல்மணிகள் நிறைந்த கதிர்கள் காற்றிலாடி ஒலி எழுப்பி அவனை தெரிந்துகொண்டதாக சொல்கிறதாம்.
நடவுப்பெண்களின் பாட்டோடு நாற்று நடும்போது சீர்முடியுமிடத்தில் பழுதுபார்த்து எறிகிற நாற்றுபிடிகள் ஆகாயத்தில் உயரும் = வயல்வெளிஇயல்
குட்டநாட்டில் ஊர்வலங்கள் பொதுக் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறி யூனியன் செயல்பட தீர்மானிக்கிறது=உரிமை இயல்
முதலாளிகளிடத்தில் தானாக வரும் பயத்திற்கு பாவத்தின் சுமையை
மனிதனென்று ஆசிர்வதிக்க பெற்ற பிறவிக்கு எத்தனை நாள் சுமந்து கொண்டு நடக்க இயலும்?.அவன் அதை உதறித்தள்ளிவிடுவான் = மனிதஇயல்
கம்யூனிசத்திலிருந்து உலகைக் காக்கும்படி ஹோமங்களும் பிரார்த்தனைகளும் நடைபெற்றதாம் = சமூகஇயல்
யூனியன் போராட்டம் நடத்தும் நாளில் சாத்தன் வீட்டிலிருப்பதால் சிருதை என்ன ஆண்பிள்ளை இவன்!
என்று கோபமாகி ‘நீ போகலையா?’ எனக்கேட்கிறாள்.
இல்லை ‘நா சாவப் பயப்படலே எனக்குச் செத்தால் போரும் இந்தச் சின்ன யூனியனுக்கு ஒரு சொத்திருக்கும். நான் செத்தா அதுவும் சாகும்’ = சங்கரஇயல்
கோரன் உள்ளத்தில் நினைத்ததை உண்மையாக்கி சிருதை சாத்தன் கைகளைஇணைத்து வைக்கிறான். சிருதை தனக்கும் குழந்தைக்குமாக அவன் செய்யும் சேவையை தாங்க முடியாதவளாக ‘எல்லாம் கர்மந்தான் அப்பன் கேட்ட பெண் பணம் சாத்தன் கொடுத்திருந்தானால்’
என்கிறாள். அப்போது அவளை உற்று நோக்கும் சாத்தனின் முகம் அவனறியாமலே ஆசையால் பிரகாசிக்கிறது.
தன்னை நம்பி வந்தவள் பாதுகாப்பாய் இருக்க பொறுப்பானவனாய் பெயரில் கோரனாய் உணர்வில்
உயர்ந்தவனாகி விடுகிறான்.!
கணவனுடன் வாழ்ந்தவள், கணவனி்ன் செயல், கணவனாக விரும்பியவனின் சேவை, மனதை மாற்றிக்கொள்ள முடியாமல் சிருதையின் மனப்போராட்டம்.
சி(ரு)தையாமல் வாழ்கிறாள்!! ஒருவனுக்கு ஒருத்தி ஆணுக்கும் தான், மணக்க விரும்பியவளின் தனிமை , கோரனின் ஆதரவு, மனதை சா(கா)த்திடும் சாத்தன்!!!
உணவில் உப்பு கூடினால் சகிக்காது குறைந்தால் சுகிக்காது சரியாக இருந்தால் ருசிக்கும் எல்லா இயலையும் சேர்த்து சிருதை சாத்தன் உணர்வை முகம்சுளிக்காத வகையில் ஜீ(சி)வனுடன் சிவசங்கரன் பிள்ளை கொண்டு சென்றிருக்கிறார். சிருதை கோரன் ஒருபடி சாத்தன் ஒருபடி யாக 2முதுமக்கள் தா(க)ழியாகி நெஞ்சில் புதைந்திருப்பார்கள்.
கதை விமர்சனம் அருமை…. முழு கதையையும் படிக்க தூண்டுகிறது
LikeLiked by 1 person
நன்றிகள் அண்ணே
LikeLike