வாசித்தது:- கூரை (இலக்கிய சிந்தனை 2001 ஆம் ஆண்டின் 12 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு)
பதிப்பகம்:- வானதி
2001ல் வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த சிறுகதைகள் மாதத்திற்கு ஒன்றாகத்தேர்வு செய்யப்பட்ட 12 சிறுகதைகள் இந்த தொகுப்பில் உள்ளன. ஒவவொரு கதையின் ஆரம்பத்திலும் கதையை தேர்ந்தெடுத்தவரின் ஒரு வரி விமர்சனம். கதை முடியும் இடத்தில் எழுத்தாளரைப்பற்றிய சிறிய அறிமுகமுமாக அழகாகத் தொகுத்திருக்கிறார்கள்.
நான் ரசித்த ஒருசில கதைகளைப் பற்றியது எனது இந்த பதிவு.
ஞானவிதைகள்:- உமா கல்யாணி
எழுந்து நடமாட முடியாத நிலையில் பசியுடன் இருக்கும் எசக்கியம்மா. நேரத்திற்கு சாப்பாடு போடாத மருமகள் ஆலம்மை. பசித்த வயிறு மாமியாரக தன் உரிமையை நிலைநாட்டச் சொல்லி தூண்ட, பாசமான மனது மகனின் மருமகளின் உறவையும், குடும்ப அமைதியும் நினைக்கிறது.
பசித்த வயிறு, பாசமான மனது தத்தமது வாத பிரதி வாதங்களை மாற்றி மாற்றி எடுத்துவைக்கிறது. ஒவ்வொரு முறை சாப்பாடு கேட்க நினைக்கும்போதும் மருமகள் கோபமாகபேசிவிடுவாளோ என்றும் இரவுப்பணிமுடிந்து தூங்கும் மகனை யோசித்தும் பேசாமலிருக்கிறாள்.
மீண்டும் இடும்பை கூர் வயிறு தூண்ட ஐயோ எசக்கி கேட்டு சண்டையாகிடுமோ என நாம் பதறும் அளவுக்கு வயதானவர்களின் பசியை (தீ)ப்பற்றி எரியச் செய்திருப்பார் (அப்பப்பா )உமா கல்யாணி.
பத்தும் பறக்க வைக்கும் பசியைத்தாண்டி பதினொன்றை யோசிக்கும் எசக்கி அதை செயல் படுத்த மருமகளின் உதவியை நாட ஆடிப்போன ஆலம்மை கண்ணீரை மறைத்தபடி அடுப்பு மூட்ட சிறிது நேரத்தில் தோசை வாசனை எசக்கி மூக்கை எட்டுகிறது. அப்பாடா!
ரசித்தது:- மகன்காதுக்கு கொண்டு சென்றுவிட்டால் தனக்கு ராஜ மரியாதையுடன் சாப்பாடு கிடைக்கும். ஆனால் பாசம் உறவற்று கடனே என்றிருக்கும். தான் வாழ்ந்து வயதாகிவிட்டவள் அவர்கள் வாழவேண்டியவர்கள் என்ற எசக்கியின் நினைப்பு. தாயின் பாசத்திற்குமுன் பசித்தவயிறு தோற்றுப்போகிறது.
ஆல (எசக்கிய)ம்மை வேண்டும்!
இனி எசக்கிக்கு சாப்பாடு ராஜ மரியாதையுடன் அல்ல அவளின் ஆசைப்படி ராசியாகிவிட்ட மருமகளின் அன்பான கவனிப்புடன்!!!
பொன்னையாவின் மனைவி:- படுதலம் சுகுமாரன்
வெளியூரிலிருந்து ஒரு திருமணத்திற்காக வந்து விபத்தில் சிக்க இருந்த ஒருவனை காப்பாற்றி ஊருக்கு அனுப்பி வைக்கிறான் பொன்னையா. பிரதி உபகாரமாக பணமோ, குறைந்த பட்சம் டீ கூட வாங்கிக்கொள்ளாதவனை, தன்னைக் காப்பாற்றியவனைத் தேடி 2 வருடம் கழித்து அதே ஊருக்கு திரும்ப வருகிறான். வீட்டிலிருக்கும் பொன்னையாவின் மனவைி செல்லம்மா யார்?எனக் கேட்க விப(ர)த்தைச் சொல்கிறான்.
அவளோ கட்சித்தகறாரில் பொன்னையாவை ஒருவன் கொன்றுவிட்டதாகச் சொல்லி அழுகிறாள் உடன் மூன்று குழந்தைகள் வேறு இருக்கிறார்கள். வந்தவனோ திடுக்கிடுகிறான். ‘குழந்தைகள் இருப்பது தெரியாது ஏதாவது வாங்கிக்கொடும்மா’ என்று சொல்லி பணம் கொடுக்கிறான். அவளோ ‘இதுகளை ஒரு நிமிஷம் நினைச்சிருந்தா பாவி கொலை பண்ணியிருப்பானா ?’என மீண்டும் அழுகிறாள் .
வந்தவன் , ‘என்னம்மா சொல்ற?’ என செல்லம்மா, தன் கணவனைக் கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை கிடைத்ததால், அவன் மனைவி பைத்தியமாகிவிட்டதாகவும், கொலைகாரனின் குழந்தைகள் என்று ஊர் ஏசி விரட்டியதால், இதுகளை அம்போ என்றுவிட மனமில்ல என்று கூற வந்தவன் வார்த்தை வராதவனாக கையெடுத்துக் கும்பிட்டு நகர்கிறான்.
இதில் ஆச்சிரியப்பட என்ன இருக்கிறது .? ஏனென்றால் அவள் பொன்னையாவின் பாதி!! ஹூகும் அவள் பொன்னையாவின் செல்லம் ஆன திரு(முழு)மதி பொன்னையா!!! இப்படித்தானே இருப்பாள்!
எதையும் செய்வீர்:- பா.செயப்பிரகாசம்
இன்னொரு சினிமாவான விளம்பர உலகம். சின்னத் திரையில் அதன் ஆதிக்கம். அது மக்களை
எப்படி எப்படி மாற்றுகிறது இதுதான் கதை. வாழைப்பழத்தின் ஊசியாக நகைச்சுவை கலந்து சொல்லப்பட்டிருக்கிறது.
அன்னதானம்:- இந்திரா
வீட்டின் அடிப்படைத் தேவையைக் கூட நிறைவேற்றாமல் கட்சிவேலை என்று சுற்றிக் கொண்டிருக்கும் செல்லமுத்து. பத்துவயது பையன் சரவணனுக்கு சோறு போடமுடியாததை நினைத்து வருந்தும் சுமதி.
சரவணன் பள்ளியின் மதியஉணவை பத்திரப்படுத்தி எடுத்துவந்து சாப்பிடும்மா என்கிறான். மகன் எதிரிலேயே தாய் உடைந்துபோய் அழுதுவிடுகிறாள்.
மறுநாள் சிறுவன் பள்ளிக்கு செல்லாமல் அல்வா கடைக்கு வேலைக்குச் செல்கிறேன் என்று கூற அம்மா அதட்டி பள்ளிக்குச் செல்ல வைக்கிறாள்.
சரவணன் அல்வாகடை பசங்களுடன் சென்று தலைவரின் பிறந்தநாளில் சாப்பாடு வாங்க நிற்கிறான்.
அங்கு வரும் தலைவர் ‘படிக்கிறாயா?’ எனக்கேட்டு தன்னுடைய பேனாவைத் தருகிறார். ‘என்னிடம் இருக்கிறது ‘எனச் சொல்ல மீண்டும் வற்புறத்த ‘வேண்டாம் ‘ என்று சொல்லி’ சாப்பாடு மட்டும் போதும் ‘என்கிறான்.
அப்போது சாப்பாடு பொட்டலத்துடன் வரும் செல்லமுத்துவிடம் ‘நல்ல வளர்ப்பு இவனிடம் கொடு’ எனத் தலைவர் சொல்ல மகனும் தந்தையும் பார்த்துக்கொள்ள கையிலிருந்த பொட்டலம் நழுவுகிறது.
பையனுக்கு எது தேவை என்று தெரிந்திருக்கிறது.
வேலைக்குச் செல்லா முத்துக்கு …?!
இனி என்றென்றும் வேலைக்குச் செல்லு(வான்)ம் முத்து.
இரண்டாவது கணவன் :- திருப்பூர் கிருஷ்ணன்.
தத்தமது துணையை இழந்த இருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை துவங்க வீட்டுக்கு வரும் நாளில் ஆண் தன் முதல் மனைவியின் புகைப்படத்தை வணங்கி வாழ்க்கையைத் துவங்கலாம் என்றுகூற அவளும் தன் துணையை வழிபட்டிடலாம் எனச் சொல்ல ரத்தம் தக்காளிச் சட்னியாகிறது.
முதல் கணவன் நல்ல ஆண்மகன்! இவனோ வெறும் ஆண் மட்டுமே!! விரைவில் தான் விவாகரத்துக்கு தயராகவேண்டியிருக்கும் என்று யோசிக்கிறாள் வந்தவள்.!!!
இந்த தொகுப்பில் உள்ள மற்ற கதைகள்:- வேல .ராமமூர்த்தி- கூரை, ஜ .ரா.சுந்தரேசன் – பாவங்கள் சிறுகதையல்ல,ஷபானா- அதுவாடா உன் ஏக்கம், எஸ் .ஷங்கரநாராயணன்- பெயரே இல்லாத மனிதன் , தங்க .சிவராசன்- புயல், சந்திரஹரி-மழையே மழையே வா, ஜி. பி.சதுர்புஜனின் – குழந்தை மட்டும் ஆகிய கதைகள் உள்ளன.
Leave a Reply