வாசித்தது:-வசந்தகால மேகம்
ஆசிரியர் :-லஷ்மி
பதிப்பு:- திருமகள் நிலையம்
வாசிப்பு உலகில் உள்ளவர்கள் லஷ்மியின் ஒரு நாவலையாவது வாசித்திருப்போம். பெண்களின் பிரச்சனைகள், கஷ்டங்கள், போராட்டங்கள், சாதனைகள் பற்றியதான பிரபலமானர்களின் கட்டுரைகள், வழங்கிய ஆலோசனைகள், எழுதிய நாவல்கள் எத்தனையோ இருக்கலாம். ஆனால் பெண்களின் உணர்வுகளை குடும்பசூழ்நிலையோடு சேர்த்து ஒவ்வோர் கதைகளம், ஒவ்வோர் உத்தி என்று அழகாக கொண்டு செல்வதே லஷ்மியின் தனிச்சிறப்பு. அவரின் வசந்தகால மேகம் பற்றியது எனது இந்தப் பதிவு.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த விமலாவை பணக்கார சிவநேசன் விரும்ப, மகனுக்காக ஒப்புக்கொள்வதாகச் சொல்கின்றனர். மூகூர்த்தத்திற்கு சற்று முன்பாக மொட்டைக் கடிதத்தைக் (கா)ரணமாக்கி மணமகன்வீட்டார் இந்தப் பெண் வேண்டாமென்று கிளம்பிடுகின்றனர்.
கதையில் ஆசிரியர் குறிப்பிட்டதுபோல இறக்கைக் கட்டிக்கொண்டு யாருக்கும் காத்திருக்காது காலம் ஓடிவிட 20 வருடங்கள் கழித்து சென்னையில் ஒருகம்பெனியின் முதலாளியாக விமலா தன் பணியாளரின் மகள் திருமணத்திற்கு வர அங்கு கட்டிய வீட்டை விற்று பின் அதிலேயே வாடகைக்கு இருக்ககூடியவனாக சிவநேசன் சந்திப்பு நிகழ்கிறது.
விமலாவின் திருமணம், அவர்களின் ரெடிமேட் கம்பெனி, அடையாறில் வீடு, கணவனை இழந்த பிறகு முதலாளியானது என அவளைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் சிவநேசன் தெரிந்து வீடு தேடி வருகிறான். அப்போது விமலாவின் வளர்ப்பு மகள் ஜோதிதான் வீட்டில் இருக்கிறாள். கம்பெனியிலிருந்து அம்மா வந்ததும் சிவநேசன் வந்ததைப்பற்றிச் சொல்ல.
‘இனியாரையும் வீட்டிற்குள் விடாதே’ என்று கோபமாக சொல்கிறாள் விமலா.
ஒருமுறை சிவநேசன் விமலாவிற்கு போன் செய்து முக்கியமான விஷயம் பேச வேண்டுமென்கிறான். விமலா அவனை ஞாயிற்றுக்கிழமை வரச்சொல்லி மகள் ஜோதியிடம் சமையலில் உன்திறமையைக் காட்டு என்று சிரித்தபடி சொல்கிறாள். ஜோதியோ அன்றைக்கு கோபமான அம்மா இன்று விருந்து என்கிறாள் என்ற குழப்பத்துடன் நகர்கிறாள்.
விருந்துக்கு வரும் சிவநேசனை வாசலி்ல் வந்து வரவேற்கிறாள் விமலா. சாப்பிட்டானதும், மொட்டை கடிதத்தை அப்பா அவரின் நண்பனை வைத்து எழுதியதாக உண்மையைச் சொல்லிவிட்டார் என்றும் அதற்காக மன்னிக்கும்படியும், தன்னுடைய பணக்கார மனைவி தன்னை நடத்தியது, மனைவி இறந்தபின் பிள்ளைகளின் புறக்கணிப்பு எல்லாவற்றையும் சொல்கிறான்.
இறுதியில் ஜோதியுடன் விமலாவை ஏற்றுக்கொண்டு வாழத் தயாராக இருப்பதைக் கூறுகிறான்.
வசந்தகால மேகம் மீண்டும் வந்ததால் விமலாவின் என்ன செய்தாள்?
முடிவை நாம் யூகிக்கும் விதமாக லஷ்மி கதையின் ஊடே அங்கங்கு சிலவற்றை கோடிட்டுருப்பார்.
திருமண நிகழ்வில் பிரச்சனையால் பிரிவு மற்றொரு திருமணத்தில் அடுத்த சந்திப்பு இறுதி நிகழ்வில் அதுபோன்ற சூழ்நிலைக்காக வீட்டில் வடை பாயாசத்துடன் விருந்திட்டு கதாநாயகி தன்முடிவை வெளிப்படுத்தும் விதம் அதற்கான வார்த்தைகள் லஷ்மி சபாஷ் போட வைக்கிறார்.
பிரச்சனை ஆரம்பமாகும் களமே முடிவிலும் வருவது ஒருசிலரின் எழுத்துக்களுக்கு மட்டுமே அழகாக அமையும். அந்த வகையில் இந்த கதை மிகச்சிறப்பு.
ரசித்தது:- சிவநேசனை சந்தித்த பிறகு மனம் பழைய நினைவுகளை அசைபோட சிங்கத்தின் முதுகில் அமர்ந்து அதனை அடக்கிடமுடியும் இன்னும் என்னவெல்லாமோ செய்ய முடியும். ஆனால் இந்தச் சிந்தையை அடக்கி என்று சும்மா சொல்லவில்லை என்றது பெண் பார்க்க வரும்போது சேவை செய்ய ஜீபூம்பா பூதமா இருக்கிறது?. ஓட்டுக்கூரை வீட்டை பங்களாவாக மாற்ற என்பது
பணக்கார வீட்டிலிருந்து பெண்பார்க்க வருகிறார்கள் என்று அடுத்த வீட்டுக்காரியிடம் குப்பையைக் கொண்டுபோய் குப்பைத் தொட்டியில் போடுங்கள் என அதட்டி மிரட்ட முடியுமா? என்பது
வாழ்க்கையில் நடந்து போனதை நினைத்து வேதனைப்பட வேண்டும் என்றிருந்தால் நமக்கு கண்கள் முதுகிலிருக்க வேண்டும். முகத்தில் இருக்கும் கண்கள் நடக்கப்போகும் பாதையை நன்றாகப் பார்த்து முள் கல் இவற்றால் காலுக்கு வேதனை ஏற்படுத்திக்கொள்ளாது, சுத்தமான பாதையிலே முன்னேறத்தான் என்ற வரிகள் மிகவும் ரசித்தவை.
லஷ்மியைப்பற்றி நான் என்ன சொல்ல?
ரோஜாப்பூவை பாடவந்த ஷேக்ஸ்பியர் “ரோஸ் ரோஸ்….” என்று ரோஜாவின் அழகில் மயங்கி பிரமித்துச் சொன்னது போல் லஷ்மியைப் பற்றி.
பெயரில் லஷ்மி!
எழுத்தில் சரஸ்வதி!!
மருத்துவத்தில் திரிபுர சுந்தரி !!!
பெண்சக்திகளை கொண்டாடும் நாளில் பதிவிட்டு அவரை வணங்குகிறேன்!
Leave a Reply