கிழவனும் கடலும்

ஆசிரியர்:- எர்னஸ்டு ஹெமிங்வே
பதிப்பகம்:- காலச்சுவடு

முகநூல் குழுமத்தில் ‘கிழவனும் கடலும்’ நூலுக்கான விமர்சனம் எனது ஆர்வத்தைத் தூண்ட, படிக்க ஆரம்பித்தபோது.. கதாநாயகனான சாந்தியாகோவை (San Diego) பார்க்கும் பார்வையாளராக புறப்பட்டு, பிறகு சக பயணியாக மாறி, மெல்ல ரசிகையாகி, இறுதியில் அவரது (இடைவிடாத முயற்சி) தூண்டிலில் அவருக்கு தெரியாமல் மீனாக சிக்கிக் கொண்டேன்.

கதை என்று சொல்லவே முடியாத அளவுக்கு கடல் பயணத்தை ஹமிங் வேயாக (Humming) எர்னஸ்ட் கொண்டு சென்றிருக்கிறார். ஒவ்வொருமுறை கடலுக்கு மீன் பிடிக்க போகும் போதும் பெரிய அளவில் மீன்கிடைக்காமல் உடன் அழைத்துச் செல்லும் சிறுவயது சீடனுடன் திரும்புகிறான்.  அதனால் சாந்தியாகோவை அதிர்ஷ்டமில்லாதவன் என்றுசொல்லி சிறுவனை அவனது  பெற்றோர் வேறோர் முதலாளியிடம் கொண்டு விடுகின்றனர்.

நாம் வளர்க்கும் மாட்டை பக்கத்து ஊர்களில் விற்றுவிட்டாலும் வளர்த்த பாசத்தினால் நம்மைத் தேடி ஓடிவந்துவிடும். அதுபோல சிறுவனும் வந்துவந்து அவரை கவனித்துக்கொள்கிறான்.
சீடனா, நண்பனா, பேரனா(அவரைத் தாத்தா என்பான்) எல்லாமும் சேர்ந்ததான, எல்லாவற்றையும்
விடப் பெரிதான சாந்தியாகோவின் நம்பிக்கையின் வடிவமாக எர்னஸட் அந்த பாத்திரத்தை படைத்திருப்பதாகவே தோன்றுகிறது.

உன்னால் முடியும் தாத்தா! என்று அவருக்கு உற்சாகமூட்ட, உணவு கொடுக்க, உடம்பு பிடித்துவிட, உறங்க வைக்கவுமான ஓருயிராய் துணை நிற்கிறான். அவனது நம்பிக்கை, அன்பு, பாசம் நம்மை நெகிழச்செய்கிறது.வயதில் சிறியவனாக நம்பிக்கையில் சாந்தியாகோவையும் விடப் பெரியவனாக குருவுக்கு பாடம் சொல்லும் குருவாக நல்ல பாத்திர படைப்பு.

சாந்தியாகோ தனியே செல்லும் கடல் பயணத்தில் பல இடங்களில் அவன்  இருந்திருந்தால் என்று யோசிப்பதாக எர்னஸட் சொல்லியிருப்பார்.

மீனை பிடிப்பதற்கு காத்திருப்பதான பொறுமையும், அந்த நேரத்தில் கடலில் நிகழ்வதான மீன்களின் காதல், ஆமைகளைப் பற்றியதான சிந்தனை, நடுக் கடலில் எங்கிருந்தோ வரும் சிறிய குருவி, அதனுடன் பேசுவது, ரேடியோ இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பது, மீனவனுக்கு பயம் கிடையாது என்று  தன்னைத்தானே தேற்றிக்கொள்வது, மிகைப்படுத்தல் இல்லாத, வார்த்தை ஜாலங்களற்ற அழகிய  காட்சியமைப்புகள்.

காத்திருத்தலின் பயனாக கிடைத்த மீனுடன் பேச்சு வார்த்தை , மரத்துபோன கையுடன் பேசுவது,
பச்சை மீனை சாப்பிடுவது , கயிறை பிடித்து இழுத்து இழுத்து புண்ணான கை, தனிமை, மாட்டிக் கொண்ட மீன் சோர்ந்து போகும் வரை, தான் சோராமல் இருக்க, என்னால் முடியும் என்னால் முடியும் என்று சொல்லிக் கொள்வது, முயற்சிக்கு வயது தடையல்ல என்பதை உணரவைக்கும் தருணங்கள்.கருமமே கண்ணாயினரான சாந்தியாகோ!

தன்னுடைய தூண்டிலில் சிக்கிய மீன் எவ்வளவு பெரிது என்று பார்த்த தருணத்தில் கனவா நிஜமா என்று யோசிக்கிறார். அவரது கனவில் அடிக்கடி சிங்கங்களைக் காண்கிறார். கிளைமாக்ஸ் காட்சி அதியற்புதம். மீனைப்பிடித்ததும் எதிர்பார்த்த வண்ணம் அடுத்தடுத்த நிகழ்வுகளால் நெஞ்சம் எகிற … மீதியை பி(ப)டித்து ரசியுங்கள் கதையில் வரும் கோட்டோவியங்கள் கதைக்கு உயிருட்டுகிறது என்றால் மிகையில்லை. அவ்வளவு அருமை.

ரசித்தது பகுதி அல்ல முழுமையும். அதனால் ரசித்த புத்தகம் என்றே பதிவிட்டுள்ளேன்.

கிழவன் என்றால் தலைவன் என்றொரு அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் கடலுக்குரிய தலைவனாக சாந்தியாகோ மிகப் பொருத்தம். எல்லா பிரச்சனைகளையும் சமாளித்து மீண்டு, மீண்டும் மீண்டு வரக்கூடிய சிறந்த தலைவன். பயணிக்கும் (படிக்கும்) ஒவ்வொருவரும் முயற்சி  நம்மையறியாமலே  சாந்தியாகோ(கோ-அரசன்) னாக்கும் !

அரிசியில் நம் பெயர் எழுதியிருக்கும் என்பார்கள். இந்த  நியதி புத்தகத்திற்கும் பொருந்தும் என்று இந்த கதையைப் படித்த பிறகு தோன்றவைக்கிறது. எந்த புத்தகம் எப்போது யார் படிக்க வேண்டும் என்று புத்தகம் ஏதும் நியதி வைத்திருக்குமோ?
என் அண்ணன் முதுகலை தமிழ் படிக்கும் போது கொண்டு வந்த வி.ஸ.கண்டேகரின் கிரவுஞ்ச வதம் சில
பக்கங்களே மீதியுள்ள நிலையில் படிக்க முடியாமல் போனது. திருமணம் முடிந்து தாய்மை நிலையில் கிராமத்தில் அம்மா வீட்டிற்கு சென்றபோது லெண்டிங் லைப்ரரியில்  கிடைத்தது. மருத்துவமனை செல்வதற்கு வசதியாக அடுத்த வாரம்  நகரிலுள்ள உறவினர் வீட்டுக்குச் செல்ல இருந்த நிலையில் படித்து முடித்துவிட்டேன். புத்தகம் நியதி வைத்திருக்கிறதுதானே!!!

Advertisement

2 thoughts on “கிழவனும் கடலும்

Add yours

  1. புத்தக அறிமுகவுரையே ஒரு கதைபோல் மிகவும் ஆர்வமூட்டும் வகையிலும் தெளிந்த நீரோடையைப் போன்ற மொழிநடையோடு வாசகனை இழுத்துப் பிடிக்கும் வகையிலும் உள்ளது. அபாரம்.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: