(கல்கி 01-Oct-2021 இதழில் வெளிவந்தது. இதனை இத்தளத்தின் வாசகர்களுக்காக மீண்டும் ஒருமுறை பதிவிடுகிறேன்.)
படைப்பாளி: கிரிஸ்டி நல்லரத்னம், மெல்போன், ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன் இம்மாதம் 16ம் தேதி காலை அமெரிக்காவுடனும் இங்கிலாந்துடனும் இணைந்து ஒரு அறிவிப்பை விடுத்தார். ஆஸ்திரேலியா அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் கட்டுவதற்கான முன்னெடுப்பில் ANKUS எனும் ஒப்பந்தத்தின் கீழ் இணைய இருப்பதாகவும் பிரஞ்சு நாட்டுடன் ஆஸ்திரேலியா செய்துகொண்ட சாதாரண எரிபொருளில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்பதுமே அந்த அறிவிப்பு. இச்செய்தி இடியென இறங்கியது பிரஞ்சு அரசுக்கு.

இருக்காதா பின்னே? 2016ல் வழங்கப்பட்ட 90 பில்லியன் டாலர் மதியுள்ள 12 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கட்டும் ஒப்பந்தத்தை கிழித்தெறிந்துவிட்டு `பை பை` என்று சொல்லி விலகிப்போனால் எப்படி இருக்கும்? ஆத்திரம் எல்லை மீற அமெரிக்காவிற்கும் ஆஸ்திரேலியாவிற்குமான பிரெஞ்சு தூதுவர்களை `வீட்டிற்கு வரவும்` என பிரஞ்சு நாடு மீள அழைத்துக்கொண்டது. ஸ்காட் மாரிசனுக்கு இக்கட்டான நிலைமை.
காதும் காதுமாய் வைத்தது போல் கட்டுமைத்த அணுசக்தி நீர்மூழ்கி `டீல்` மிதக்கும் முன்னரே இத்தனை இக்கட்டில் தன்னைக் கொண்டுவந்து விட்டுவிட்டதே? பிரெஞ்சு பிரதமரும் சினம் கொண்ட காதலி போல் தொலைபேசியை எடுக்க வேறு மறுக்கிறார். ஆனால் நல்ல வேளையாக இந்த அறிவிப்பை விடுக்கும் முன்னரே பாரதப் பிரதமர் மோடியுடனும் நியூசிலாந்து பிரதமருடனும் இந்தோனேசியப் பிரதமருடனும் இந்த டீல் பற்றிச் சொல்லியிருந்ததால் இப்போது `காதலியை` மட்டும் சமாளித்தால் போதும் என்ற நிலை. சரி, இவர் களிடம் சொல்லவேண்டிய அவசியம்தான் என்ன?
அணுசக்தி என்றதும் `நான் ஒரு புலியை வாங்கி வளர்க்கப் போகிறேன்` என்று நீங்கள் உங்கள் அடுத்த வீட்டு மாமிக்குச் சொல் வதைப் போல். அதே கிலிதான் பக்கத்து நாடுகளுக்கும்! மேலும் 1951ல் அமெரிக்கா-ஆஸ்திரேலியா-நியூசிலாந்து கூட்டாக கையெழுத்திட்ட ANZUS பாதுகாப்பு உடன்படிக்கையும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறது.

உலகில் ஆறு நாடுகளே (அமெரிக்கா, இந்தியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா) அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தம்வசம் வைத்திருக்கின்றன. சீனாவிடம் 6 அணுசக்தி நீர்மூழ்கிகளும், 50 எரிபொருள் நீர்மூழ்கிகளும் இருப்பதாய் ஒரு கணிப்பு சொல்கிறது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் களுக்கு டீசல் கப்பல்களைப்போல் அல்லாது நீர் மட்டத்திற்கு அடிக்கடி வந்து எரிபொருள் நிரப்பும் தேவைகள் இல்லை. மேலும் இவற்றால் எதிரிகளின் `ரேடரில்` தென்படாமலேயே பயணிக்க முடியும்.
பொத்தி வைத்ததை பொதுவில் போட்டதால் வந்த அரசியல் சிக்கல்களை எப்படி சிக்கெடுப்பது என்ற கவலையுடன் பெட்டியை அடுக்கிக்கொண்டு விமானத்தில் ஏறினார் ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மாரிசன்.
பறந்த விமானம் வாஷிங்டனில் வந்து 21ம் தேதி இறங்கியது. அவருக்கு அங்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பானிய பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோருடன் குவாட் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் கடமை. இவ்வருடம் மார்ச் மாதத்திலும் இவர்கள் மெய்நிகர் வழியே சந்தித்திருந்தனர். இன்றுதான் இந்த ஐந்து நாள் நேரடி சந்திப்பு ஆரம்பம்.
குவாட் என்ற மூன்று எழுத்துக்களில் அடங்கியுள்ள இந்த நான்கு நாடுகளின் கூட்டமைப்பு 2004 சுனாமியுடன் கரை ஒதுங்கிய ஒன்று. Quadrilateral Security Dialogue (QSD, Quad) என ஆங்கிலத்தில் இது விரியும். உலகப் படத்தில் இந்த நான்கு நாடுகளை இணைக்கும் புள்ளிகள் ஒரு சதுர வடிவில் இருப்பதாலோ என்னவோ Quadrilateral என்பது பொருத்த மானதே!

குவாட்டின் தலையாய நோக்கம் ஒரு சுதந்திரமான, திறந்த மனதுள்ள, வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்பு வதே. முதலில் சுனாமியில் பாதிக்கப்பட்ட இந்தோ-பசிபிக் பிராந்தியத் திற்கு மனிதாபிமான மற்றும் பொருளாதாரரீதியில் உதவுவதே இந்த அமைப்பின் ஒரே நோக்கமாய் இருந்தது. இதுதான் இந்த இயக்கத்தின் பிதாமகனான அப்போதைய ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேவின் கனவு. இந்நான்கு நாடுகளின் கடல் படைகள் ஒன்றிணைந்து இந்த சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு புரிந்துணர்தலுடன் செயல்பட்டன. சுனாமி பாதிப்பிற்கு ஐக்கிய நாடுகள் சபையும் சீனாவும் செய்த உதவிகள் போதாததால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே குவாட் அமைப்பு உருவானது என்ற ஒரு கருத்தும் உண்டு.
இந்த நான்கு நாடுகளின் கடல் படைகளும் தமக்குள் துளிர்த்த புரிந்துணர்தலை ஒரு படி மேலே கொண்டுசெல்லும் நோக்குடன் 2007ல் ‘மலபார் கடற்படை பயிற்சி` (Malabar Exercise) எனும் கூட்டுக் கடல் பயிற்சியை வங்காள விரிகுடாவில் நடத்தின. மீண்டும் ஒரு இயற்கை அனர்த்தம் ஏற்பட்டால் எப்படி மனிதகுலத்திற்கு உதவ முடியும் என்பதே இப்பயிற்சியின் முக்கிய நோக்கமே தவிர அண்டை நாடுகளுக்கு ‘நாங்கதான் இந்த ஏரியா தாதா` என்று காண்பிப்பதற் காக அல்ல.
இந்நான்கு நாடுகளுக்குள் பாதுகாப்பு, தொழில்நுட்பப் பரிமாற்றங்களும் சிறப்பாக நடைபெற்றன.
2008ல் இக் கூட்டுறவில் ஒரு விரிசல் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் கெவின் ரட் உருவில் வந்தது. மலபார் கடல் பயிற்சிகள் சீனாவுடனான உறவில் நெருடலை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரேலியா இப்பயிற்சிகளில் இருந்து விலகிக்கொண்டது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தக ஏற்றுமதி கஸ்டமர் சீனா என்பதாலேயே இந்த விலகல். அந்நாட்களில் சீனா தும்மினால் ஆஸ்திரேலியாவிற்கு தடிமன் பிடித்துவிடும் என்று கேலியாகச் செல்வதுண்டு.
இதனால் `மலபார் பயிற்சி` மூன்று நாடுகளுக்கிடையிலும் சில முறை அமெரிக்க – இந்தியப் படைகள் மட்டும் பங்குகெடுக்கும் நிகழ் வாகவும் உருவெடுத்தது. இப்பயிற்சிகள் வங்காள விரிகுடாவிற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் ஜப்பானிய மற்றும் பிலிப்பைன்ஸ் கடற் பரப்பிலும் நடத்தப்பட்டது. 2017ல் ஆஸ்திரேலியா மீண்டும் குவாட்டில் இணைய விருப்பம் தெரிவித்திருந்தாலும் இந்தியா முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தமையால் (சீனாவுடனான டோக்லாம் எல்லை முறுகல் காலங்கள் அவை) 2018லேயே அதனால் மீண்டும் இணைய முடிந்தது.

குவாட்டின் முன்னெடுப்புகளைப் புரிந்துகொள்ள சீனாவின் தென் சீனக்கடல் (South China sea) ஆக்கிரமிப்புகளையும் புரிந்துகொள்ள வேண்டும். 2013ல் சீனா இங்கு பல செயற்கைத் தீவுகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றியும் கண்டது. மேலும் தனக்குச் சொந்தமான இயற்கைத் தீவுகளையும் மண் நிரப்பி பெரிதாக்கும் திட்டங்களிலும் இறங்கியது மட்டுமல்லாமல் இங்கு இராணுவத் தளவாடங்களையும் குவிக்கத் தொடங்கியது. வியட்நாமும் பிலிப்பைன் ஸும் தம் கடல் எல்லைக்குள் முன்பு சிறிய தீவுகளை உருவாக்கி யிருந்தன. ஆனால் சீனாவின் முன்னெடுப்பு இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் பரிமாணத்தில் இருந்ததால் முழு உலகின் கண்டனத்திற்கும் உள்ளானது. இது மட்டுமல்லாமல் தென் சீனக்
கடலின் 90% பரப்பளவும் தனக்கே சொந்தம் எனவும் பிரகடனப்படுத்தியது. இங்குதான் வந்தது வினை!
ஆசியாவின் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிச் செல்லும் கப்பல் கள் 930 கி.மீ. நீளமுள்ள மலாக்கா நீரிணையூடாகப் பயணித்து தென் சீனக் கடல் வழியாகத்தான் தாய்வான், வியட்நாம், பிலிப்பைன்ஸ், ஹாங்காங், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்குச் செல்லவேண்டும். ஆசியாவின் சூயேஸ் கால்வாய் என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதனால் தென் சீனக்கடலின் ராணுவ மயமாக்குதல் அப்பிரதேசத்தின் அமைதிக்கு பங்கம் இழைக்கும் எனும் நியாயமான பீதி இந்நாடுகளுக்கு எழுந்தது.
பிலிப்பைன்ஸ் ஒரு படி மேலே சென்று 2016ல் ஹேக், நெதர்லாந் தில் உள்ள Permanent Court of Arbitrationல் சீனாவின் இந்த நடவடிக்கைகள் பற்றி முறையிட்டது. தீர்ப்பு சீனாவுக்கு எதிராக வழங்கப்பட்டாலும் அதை சீனா கண்மூடி முற்றாகப் புறக்கணித்தது.
குவாட் கூட்டணிக்கு சீனாவின் மேலும் சில நடவடிக்கைகளும் அரிப்பைத் தந்தன. சீனா சிறிய திக்கற்ற நாடுகளின் தலையில் முண்டாசு சைஸ் கடன் சுமையை ஏற்றி அவர்களின் தேசிய சொத்துக்களை தனதாக்கிக்கொள்ளும் சதியில் வல்லது.
பாகிஸ்தானின் குவாதர் துறைமுக அபிவிருத்தியும் அங்கு சீனாவின் ஆக்கிரமிப்பும் அதை ராணுவமயமாக்கும் அபாயமும், ஆசியான் (ASEAN) கூட்டமைப்பில் பிளவை ஏற்படுத்தும் இழுபறி என இப்பட்டியல் நீளும்.
இந்த முன்னெடுப்புகள் இந்தியா, ஜப்பானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக வளர்ந்தது மட்டுமல்லாமல், ஆசியாவில் அமெரிக்கா வின் செல்வாக்கையும் மழுங்கச் செய்தது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் ஏற்பட்ட வெற்றிடத்தை சீனா நிரப்புமோ என்ற பயம் வேறு பற்றிக்கொண்டது.
சர்வதேச அரசியலில் எத்தனை நண்பர்களைச் சம்பாதித்து வைத்துள்ளீர்கள் என்பதும் ஒரு நாட்டின் வெற்றியின் அளவுகோல். சில நாடுகள் கொரோனா தடுப்பூசி வினியோகத்தை ஒரு நட்பை சம்பாதிக்கும் ஆயுதமாகவே பாவிக்கின்றன. இதை முறியடிக்கும் வண்ணம் குவாட் அமைப்பு ஆசியா முழுவதும் 2022ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவின் கோவிட் – 19 தடுப்பூசி உற்பத்தித் திறனை ஒரு பில்லியன் டோஸாக உயர்த்துவதற்கு உறுதியளித்துள்ளது.
இக் கூட்டத்தொடரில் சீனாவின் `பட்டுச் சாலை திட்டத்திற்கு` (Belt and Road Initiative) மாற்றாக ஜப்பானின் `தரமான கட்டமைப்பிற்கான கூட்டு` (Partnership for Quality Infrastructure) மற்றும் அமெரிக்காவின் `உயர்ந்த உலகைக் கட்டெழுப்புவோம்` (Build Back Better World) எனும் முன்னெடுப்புகள் பற்றிப் பேசப்பட்டன.
அண்மைக் காலங்களில் குவாட் கூட்டமைப்பு வெளியிடும் அறிக்கைகளில் ‘ஆசியா – பசிபிக்’ என்ற சொற்றொடரை உதிர்த்து விட்டு ‘இந்தோ-பசிபிக்’ என்று மாற்றியதன் மூலம் தாம் ஒரு பரந்த பிரதேசத்தின் பாதுகாவலர்கள் என அது உலகிற்கு உணர்த்தியுள்ளது. ஆம், பசிபிக், இந்திய சமுத்திரங்களின் புதிய காவலர்கள்! இதில் இந்தியாவின் பங்களிப்பும் எதிர்பார்ப்பும் கூட்டமைப்பின் ஒற்றுமையால் அதிகரித்துள்ளது என்பது உண்மையே.
2004ல் காலத்தின் கட்டாயத்தில் உருவான இக்கூட்டணி இன்று புதிய பரிமாணங்களுடன் ஆசிய பிரதேசத்தின் மேன்மைக்காய் தன்னை புதுப்பித்துக்கொண்டு சேவையாற்ற புறப்பட்டுள்ளது. தன் ஆயுதங்களாக விதி அடிப்படையிலான ஒழுங்கு முறை (சர்வதேச சட்டங்களுக்கு கட்டுப்பட்ட நடத்தை), இடையூறில்லாத கடல் போக்குவரத்து, கடன்பளு அற்ற நிதிஉதவி கட்டமைப்பு (Non-Predatory Financing), பிராந்திய சமாதானம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏந்தி நிற்கிறது.
புதிய நிதி உதவி கட்டமைப்பின் உதாரணமாக இலங்கைக்கான 250 மில்லியன் டாலர் இந்திய-ஜப்பான் உதவியுடனான LNG முனைய திட்டத்தைச் சொல்லலாம். ஆசிய கடல் பரப்பில் குவாட் நாடுகள் படிப்படியாகத் தம் மேலாதிக்கத்தை நிலைநாட்டவேண்டும் என்பதும் ஒரு இலக்கு. இதன் பிரதிபலிப்பாக அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை பாவனையில் விடுவதை ஊக்குவிக்கும் தேவை வந்துள்ளது எனலாம்.

ஆஸ்திரேலிய பிரதமர் குவாட் கூட்டமைப்பின் அமர்விற்குச் செல்வதற்குச் சில நாட்களுக்கு முன்னால் பிரான்சுடனான 90 பில்லியன் டாலர் மதியுள்ள டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் கட்டும் ஒப்பந்தத்தை முறித்து அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் மீது மோகம் கொண்டதன் ரகசியம் உங்களுக்கு இப்போது ஏன் என்று புரிந்திருக்குமே?
குவாட் கூட்டமைப்பின் நோக்கமே சீன எதிர்ப்பு என நீங்கள் எண்ணினால் அது தவறு என்றே சொல்வேன். இந்தியா தன் அயல்நாடு களுடன் ஒரு சுமுகமான உறவையே நிலைநாட்ட முனைகிறது என்பது உண்மை. இதற்கு உதாரணமாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO – The Shanghai Cooperation Organisation) எனும் ஒரு யுரேசிய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கூட்டணியைச் சொல்ல லாம். சீனாவின் முன்னெடுப்பில் 1996ல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப் பில் இந்தியா 2017ல் இணைந்து கொண்டது. அனேக சோவியத் நாடுகளும் ரஷ்யாவும், பாகிஸ்தானும் இதில் அங்கத்தினர். இதன் வருடாந்த அமர்வுகளில் நமது பிரதமர் பல தடவை கலந்து கொண்டிருக்கிறார்.
நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியப் பிரதமர் நாடு திரும்பி பிரெஞ்சுப் பிரதமரின் தொலைபேசி அழைப்பிற் காகக் காத்திருப்பார். இவை போன்ற மனச்சுமைகள் எல்லாம் உலக அரசியலில் சகஜம் என்பது அவருக்குத் தெரியும். இதுவும் கடந்து போகும்!

பாரதப் பிரதமரும் சுமையுடனேயே வந்திறங்கினார். ஆம், அமெரிக்கா தன் வசம் இருந்த 157 இந்தியத் தொல்பொருள்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது. 11ம், 14ம் நூற்றாண்டு வரையிலான இக்கலைப் பொக்கிஷங்கள் இனி நம் அரும்பொருள்காட்சியகங்களை அலங்கரிக்கும்!
சர்வதேச அரசியலில் சதுரங்கக் காய்களாய் நகர்த்தப்படும் முன்னெடுப்புகள் மனித மேம்பாட்டிற்கு உதவுமேயானால் அதை வரவேற்பது எம் கடமையே!
Leave a Reply