(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
” மகேஷ், நான் நாளை சனிக்கிழமை காலை மந்திரகிரி செல்கிறேன். இரவு தங்கி இருள்குகை சாமியின் அருள் வாக்கு கிடைக்கும் பாக்கியம் இருக்கான்னு பார்க்கப் போறேன்”
“கிரி, அந்த சாமி எல்லாருக்கும் அருள் வாக்கு தராதா”
“அந்த பாக்கியம் இருந்தால்தான் கிடைக்கும்; அதுதான் சனி ஞாயிறுகளில் பக்தர்கள் அலை மோதுகிறார்கள். சனிக்கிழமை அருள்வாக்கு கிடைக்காதவர்கள் அன்றிரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை கிடைக்காதா என காத்திருப்பார்கள்.”
சாமியார் அருள்வாக்கிலெல்லாம் நம்பிக்கை இல்லாத மகேஷூக்கே ஆர்வம் பீரிட்டு, தானும் வருவதாக கூறினான். வனப்பகுதிக்கு செல்வதால் ஐந்து செல் வின்செஸ்டர் டார்ச் லைட்டுடன் புறப்பட்டார்கள்.
மந்திரகிரி வந்த நண்பர்கள் அணியணியாக வரும் பக்தர்களைப் பார்த்து வியந்தார்கள். பக்தர்கள் எல்லாரும் தங்களின் வேண்டுதல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டார்கள்.
மந்திரகிரி மலைமேல் அடுப்பு பற்றவைக்கக்கூடாது; அதனால் அடிவாரத்திலிருந்து பக்தர்களுக்கு தேவையான உணவு கொண்டு வந்து பணக்கார பக்தர்கள் அன்னதானம் செய்தார்கள். அதை சாப்பிட்டுவிட்டு இரவு பதினொன்றுக்கு தொடங்கும் அருள் வாக்குக்கு காத்துக் கிடந்தார்கள்.
பகலெல்லாம் சாமியின் சீடர்கள் பக்தர்களிடம் அன்பு பாராட்டி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களின் குறையை சாமி நிச்சயம் தீர்த்து வைப்பார் என்று நம்பிக்கை ஊட்டினார்கள்.
மணி பதினொன்றைத் தொட்டது; இருள்குகையிலிருந்து பூசை மணியோசை கேட்டது; சாம்பிராணியுடன் வேறுசில பச்சிலை போன்றவற்றையும் சேர்த்து புகைத்தார்கள். புகையும், நறுமணமும் மயக்கத்தைக் கொடுத்தது. அப்போது மங்கலான நெய் அகல் விளக்கு வெளிச்சத்தில் ஒரு ஆசனத்தில் இருள்குகை சாமி பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். பக்தகோடிகள், “இருள்குகை சாமியே சரணம்” என்று கோசமிட்டார்கள்.
ஊர் பெயரையும், ஆள் பெயரையும் சொல்லி சாமி கூப்பிட்டு, அவர்களின் பிரச்சினை தீர அருளாசி வழங்கியதும், பக்தர்கள் காணிக்கை செலுத்திச் சென்றார்கள். அதிகாலை மூன்று மணி வரை கூப்பிடப்படாதவர்கள் மறுநாள் வாய்ப்புக்கு காத்திருந்தார்கள். மகேஷ், கிரி இருவரும் அன்றையதினம் தங்கிப் போக முடிவெடுத்தார்கள்.
இருள்குகை பின்புறம் செல்ல யாருக்கும் அனுமதியில்லை. அங்கு சிறிய நீர் வீழ்ச்சியும், ஓடையும் இருப்பதாகக் கூறினார்கள். நீர் அருந்த வரும் காட்டு விலங்குகளால் ஆபத்து அதிகமாம். மறுநாள் அந்த அருவியைப் பார்த்து அதில் குளித்தே தீருவது என்று மகேஷ் கிளம்பினான். அரைமனதோடு கிரி அவனைப் பின்தொடர்ந்தான்.
தொலைவில் இருந்து அவர்கள் பார்த்தபோது அருவிக்கு அருகில் குளிக்க நின்று கொண்டிருந்த பத்து பேரில் இருள்குகை சாமியும் ஒருவர்; இதனால்தான் பக்தர்களுக்கு தடை போட்டிருக்கிறார்கள் போலும். அடுத்து அவர்கள் கண்டகாட்சியால் அதிர்ந்து போய் குளிக்காமலே திரும்பினார்கள்.
இரவு தங்கும் எண்ணத்தைக் கைவிட்டு உடனே ஊருக்குக் கிளம்பலாம் என துடித்த கிரியை சமாதானப்படுத்தி மகேஷ் இருக்க வைத்தான்.
இரவு வந்தது; வழக்கம் போல் மணியோசை, சாம்பிராணி புகையுடன் அகல் விளக்கொளியில் சாமி. மகேஷ் கைப்பையுடன் குகைக்குள் பாய்ந்தான்; சாமியின் சீடர்களால் தடுக்கமுடியவில்லை. ஐந்து செல் டார்ச் லைட் வெளிச்சத்தை சாமிமீது பாய்ச்சினான்.
அந்த மனிதனுக்கு பக்கத்துக்கு மூன்றாக ஆறு காதுகள் இருந்தன.”இதென்ன உனக்கு ஆறு காதுகள்”
“அடியார் குறைதீர்க்க முருகனுக்கு ஆறு முகம் போல, என் பக்தர்கள் வேண்டுதலைக் கேட்க எனக்கு ஆறு காதுகள். அவர்கள் மனதில் நினைப்பதையே இந்த காதுகள் கேட்டுவிடும் சக்தியுள்ளவை”
“ஓகோ, பக்தர்களிடம் உன் சீடர்கள் உளவறிந்து கொண்டுவரும் செய்திகளைக் கேட்பதற்கு ஆறு காதுகளா”
இப்படி சொல்லிக் கொண்டே சாமிமீது பாய்ந்து தலைமுடியைப் பிடித்து இழுத்தான். ஆறு காதுகள் வைத்து தைக்கப்பட்ட ‘விக்’ கழன்று கையோடு வந்தது. சாமி மொட்டைத் தலையோடு நின்றான்.
அருவியில் குளிக்கும் போது சாமி ‘விக்’ கழற்றி வைத்ததைப் பார்த்தவன் அதை எல்லாரும் பார்க்க வைத்து அவன் மோசடியை அம்பலப்படுத்திவிட்டான்.
சாமியின் சீடர்கள் பக்தர்களை உபசரிக்கும் சாக்கில் அவர்களின் பெயர், ஊர், பிரச்சினை முதலியவற்றை தெரிந்து சாமியிடம் சொல்வதை வைத்து அவன் அருள் வாக்கு என்று சொல்லி ஏமாற்றிக் கொண்டருந்தது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.
Leave a Reply