(சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெல்பார்ன், ஆஸ்திரேலியா)
வழக்கம் போல நாண்கு வயது குமுதா வந்தாள். வினிதா அவளைப் பிடித்து தலையில் முத்தமிட்டாள். குழந்தை கேள்விகளுக்கெல்லாம் வினிதா சலிக்காமல் பதில் சொல்வாள்; எல்லா பதிலிலும் ஒரு அக்கரை இருக்கும். திடீரென குமுதாவின் கேள்வியால் வினிதா நிலை குலைந்தாள்; அவள் கணவன் சசியும் அதிர்ந்து போனான்.
” அம்மா அப்பா இல்லாத என்னை ஒரு மாமி(aunty) அனாதைன்னு திட்டினாங்க. அப்ப குழந்தை இல்லாத அம்மா அப்பாவை என்னான்னு சொல்றது”. குழந்தை குமுதாவின் இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது.
அனாதை என்ற சொல் குழந்தையை எந்தளவு பாதித்திருக்கிறது. வார்த்தையை வீசிவிட்டு சென்றவர்க்கு தெரியுமா அந்த பிஞ்சு நெஞ்சு படும் வேதனை?
சாமர்த்தியமாக பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் வினிதா. அவர்களோடு அவள் கணவன் சசியும் சேர்ந்து கொண்டதால் பேச்சை மாற்றுவது சுலபமானது.
சசி சிறு வயது முதல் ஒரு காப்பகத்தில் வளர்ந்தவன்; படிப்பில் படு சுட்டி; இப்போது வங்கி அதிகாரி. கல்லூரியிலிருந்தே தொடங்கிய வினிதாவின் நட்பு பின் காதலாக மாறித் தொடர்ந்தது. ஐந்து ஆண்டுகள் ஆனது வினிதாவின் பெற்றோர் சம்மதம் வாங்கிட. கொரோணாவினால் அரசு அனுமதித்த நபர்களுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டு ஆறுமாதம் ஆகிறது.
காப்பகத்திலும்,பள்ளி, கல்லூரியிலும் தான் அனாதை யென்பதால் பட்ட அவமானங்களை அவ்வப்போது வினிதாவிடம் சொல்லி ஆறுதல் தேடிக் கொள்வான் சசி. வினிதாவின் ஆறுதல் மொழிதான் அவன் மனக்காயங்களை ஆற்றும் மருந்தாக இருந்தது.
வினிதாவின் சொல் எதையும் அவன் தட்டியதில்லை ; தட்டும்படியான எதையும் அவள் பேசியதும் இ்லை.
விளையாடிவிட்டு குமுதா சென்றதும் வினிதா கணவனிடம் பேச்சை ஆரம்பித்தாள்.
“எனக்கு ஒரு யோசனை, சசி”
“என்ன யோசனை, வினி”
“குமுதாவை நாம் தத்து எடுத்துக் கொள்வோமா”
ஒருகணம் அதிர்ந்து வினிதாவையே உற்றுப் பார்த்தான் சசி.
“நமக்கு மணமாகி ஆறுமாதம்தானே ஆகிறது. அதற்குள் என்ன அவசரம் . இனி பிறக்காதென முடிவு செய்து விட்டாயா வினி”
“ஐயோ சசி அப்படியில்லை; எப்போது வேண்டுமானாலும் பிறக்கட்டும் அவசரமில்லை. இப்போதைக்கு குமுதாவை நாம் வளர்க்க வேண்டும்”
“நல்லா யோசித்து முடிவு செய்யலாம்”
“நான் நல்லா யோசித்து விட்டேன்; நாமிருவரும் முடிவுதான் செய்ய வேண்டும்”
வினிதாவின் முடிவுக்கு கட்டுப்பட்டே பழகியவன் மறுக்கவா போகிறான்.
குமுதாவின் பெற்றோர் மாரச் 2020 இல் கொராணா நோய் கண்டு இறந்து போனார்கள். அதன்பின் அவளின் அம்மாவழிப் பாட்டிதான் வளர்த்து வருகிறாள். தன் காலத்துக்குப் பிறகு பேத்திக்கு யார் துணையிருப்பார்கள் என்ற கவலையே பாட்டியை வாட்டிக் கொண்டிருந்தது. பாட்டியைப் போய்ப் பார்த்து பேசினார்கள் இருவரும்.
“அம்மா வினிதா உனக்கு புண்ணியம்தான். அவள் கல்யாணத்துக்கு அரசு தரும் பணம் வருமாம்; அதற்குண்டான ஆணையெல்லாம் கொடுத்திருக்கிறார்கள். இவள் வளர்ந்து கல்யாண வயதாகையில நானிருப்பேனா தெரியாது. ஏராளமான வியாதிங்க ஒடம்புல இருக்குது”
” நீங்களும் எங்ககூட வந்திடுங்க. தத்து எடுப்பதற்கான நடைமுறைகள் எல்லாம் பூர்த்தி செய்து விடுகிறோம்.”
“நான் வேண்டாம் வினிதா, குமுதாவை கருணை இல்லம், காப்பகம் என்று விட மனமில்லை; அப்போதும் அவள் அநாதை, யாருமற்றவள் என்ற பட்டம் அவளோடு ஒட்டிக் கொண்டிருக்குமே என கவலைப்பட்டேன், நீ அந்த அவமானத்தை துடைத்து விட்டாய்”
குமுதாவை தத்து எடுக்கும் காரணத்தை சசியிடம் கூட வினிதா கூறவில்லை. அனாதை என்பதால் தன் கணவன் பட்ட வேதனைகள்தான் அவளை இப்படி ஒரு செயல் செய்ய வைத்தது. குமுதா அவமானம் படாதவாறு துடைத்த வினிதா தன் கணவனின் அவமானத்தையும் சேர்த்தே துடைத்து விட்டதாக எண்ணினாள்.
அவள் மனம் இப்போது தாய்மை நிலையை அடைந்ததால், தன் கணவனை சேய் போல் அணைத்து உச்சி முகர்ந்தாள்.
Leave a Reply