தமிழக மகளிர் பலர் விடுதலைப் போரிலும், சமூக நீதிப் போரிலும், சமுதாய நற்பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு போராடி பல இன்னல்களை அனுபவித்து இருக்கிறார்கள். அன்னவர்களின் தியாக வாழ்க்கை பற்றி படிக்கும் போது கல்லும் கசிந்துருகும் எனலாம். அவர்களில் எனக்கு மிகவும் மன பாதிப்பை ஏற்படுத்திய வாழ்க்கை வரலாறு ‘ தில்லையாடி வள்ளியம்மை ‘ தியாக வரலாறுதான்.
வீர தமிழச்சி ( BRAVE THAMIZH WOMAN ) என்று தொடர் துவங்கி ‘வீர மிகு குயிலி’ பற்றி எழுதினேன். ஆனால் ‘தில்லையாடி வள்ளியம்மை’க்குத்தான் முதலிடம் தந்திருக்கவேண்டும்.
நாகை மாவட்டம், தரங்கமபாடி வட்டம், தில்லையாடி என்ற ஊரைச் சார்ந்த முனுசாமி முதலியார், பிரிட்டிஷ் ஆட்சியில் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கு ஜோகானஸ்பர்க் நகரில் ஒரு சிறிய கடை தொடங்கினார்.
முனுசாமி மங்களத்தம்மாள் ஆகியோருக்கு தில்லையாடி வள்ளியம்மை பிப்ரவரி 22, 1898 இல் பிறந்தார். தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்டு தன் பதினாறாவது வயதில் உயிர்நீத்த ஒரு. தமிழ்ப் பெண் போராளி இவர் ஆவார். காந்தியவர்களுடன் இணைந்து அறப்போராட்டங்களில் கலந்து கொண்டு அந்நாட்டின் இனவொதுக்கல் அரசுக்கு எதிராகப் போராடினார்.
சிறுமி தில்லையாடி வள்ளியம்மை தான் எனக்கு முதன்முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய பெருமைக்குரியவர் என்று காந்தியடிகள் சொன்னார்.
கிறித்தவ தேவாலயத்தில் நடைபெறும் திருமணங்கள்தான் செல்லும்; அப்படி நடைபெறாத திருமணங்கள் செல்லாதவை என்று தென்னாப்பிரிக்க ஆங்கிலேய அரசு தெரிவித்தது. அவ்வமயம் தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராகப் பணியாற்றிக் கொண்டிருந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் தலைமையில் அங்கிருந்த இந்தியர்கள் போராட்டம் நடத்தினர். மேலும் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசால் விதிக்கப்பட்ட வரியை எதிர்த்தும் போராட்டங்கள் நடந்தன.
இந்தியாவிலிருந்து சென்று அங்கு வசித்தவர்களுக்கு எதிராகச் சில சட்டங்கள் இயற்றப்பட்டன. அதை எதிர்த்து நின்ற இந்தியர்களுக்கு ஆதரவாய்க் குரல் கொடுத்துக் களத்தில் குதித்தார் காந்தி.
1913- ம் ஆண்டு, எல்லை தாண்டும் போராட்டமாக நேட்டாலிலிருந்து டிரான்ஸ்வாலுக்குள் நுழைந்தார். அது அங்கு வாழ்ந்த மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றது. காந்தியுடன் சென்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களில் 16 வயதே ஆன வள்ளியம்மையும் ஒருவர். அந்தப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். எந்தச் சூழலில் இதிலிருந்து விலகி விடக் கூடாது என்ற மனநிலையில் இருந்தார் வள்ளியம்மை.
பெண்கள், குழந்தைகள் உட்பட இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் அணிதிரண்டனர். அவர்களிடையே உறுதிமொழி ஏற்பு தாளைப் பார்த்து படிக்க ஒருவரை அழைத்தார் காந்தி. பதினைந்து வயதே ஆன சிறுமியான வள்ளியம்மைமுன்வந்து ‘‘வெள்ளை ஏகாதிபத்தியத்தின் விலங்கொடிப்போம் வாருங்கள்’’ என்று முழங்கிட அந்த பேரணி புறப்பட்டது.
இந்த நேரத்தில் அவளுடைய அப்பா முனுசாமி மருத்துவமனையில் படுத்த படுக்கையாககிடந்தார். அவரை அங்கேயே விட்டுவிட்டு, வள்ளியம்மையும் அவள் அம்மாவும் இந்தப் பேரணியில் சென்றார்கள். காந்தியைச் சுட்டுத்தள்ளத் திட்டமிட்ட தென்னாப்பிரிக்கப் போலீஸ், அதற்காகக் காத்திருந்தது. அதைக் கவனித்துவிட்ட வள்ளியம்மை, திடீரென காந்திக்கு முன் வந்து… ‘‘இப்போது என்னைச் சுடு; பின் அவரைச் சுடு பார்க்கலாம்” என்று சொல்லி அவரைக் காப்பாற்றினார்.
“வள்ளியம்மையின் நெஞ்சுரம் கண்டு என்னைச் சுடவந்த வெள்ளையனே திகைத்து, திரும்பிச் சென்றான்” என்று காந்தியே குறிப்பிட்டு இருக்கிறார்.
“இதுதான் இந்தியாவின் கொடி!’’
பேரணியின் முடிவில் எல்லாரும் கைது செய்யப்பட்டார்கள். அந்தப் போராட்டத்தில் காந்தியடிகள் மனைவி கஸ்தூரிபாயும் கலந்து கொண்டிருந்தார். இறுதியில்,அன்னை கஸ்தூரிபாயுடன் கைதாகி பீட்டர்மாரிட்ஸ்பர்க் சிறையில் கடுங்காவலில் வைக்கப்பட்டார். கைதான அனைவரும் ‘இந்தியர்கள்’ என்று பதிவு செய்வதைப் பார்த்த சிறை அதிகாரிகள், ஆப்பிரிக்கர்கள் என்று பதிவுசெய்ய வேண்டியதுதானே’என்று நக்கலாய்க் கேள்வி கேட்டார்கள். வள்ளியம்மையிடம் ஓர் அதிகாரி, ‘‘இந்தியா என்ற ஒரு நாடே இல்லையே, உங்களுக்கு ஒரு கொடியும் கிடையாதே” என்று கேட்டார். உடனே வள்ளியம்மை, தான் அப்போது உடுத்தியிருந்த துணியின் ஓரத்தைக் கிழித்து, “இதுவே இந்தியாவின் கொடி. இனி இதற்கு ஒரு நாடும் உண்டல்லவா”என்று பதிலளித்தார். அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட வள்ளியம்மைக்கு விஷக்காய்ச்சல் ஏற்பட்டு, சரியான சிகிச்சையும், நிம்மதியான தூக்கமும் இல்லாமல் அவதிப்பட்டார்.

“உரிய அபராதத் தொகை கட்டிவிட்டு சிறையிலிருந்து விடுதலை பெற்றுச் செல்” என்றார் சிறை அதிகாரி. அதற்கு வள்ளியம்மை,“அது சத்தியாக்கிரகப் போராளிக்கு இழுக்கு. செத்தாலும் சிறையிலேயேதான் சாவேன். அரசு விதித்த அபராதத் தொகையைக் கட்டமாட்டேன்” என்றார்.
சிறையில் கடும் உழைப்பும் அரை குறைச் சாப்பாடும் வள்ளியம்மையின் உடல்நிலையை பாதித்தாலும் தன் உறுதியைக் கைவிடவில்லை. இவரது போராட்ட குணத்திற்கு பணிந்து வள்ளியம்மையின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிய பிறகே விடுதலையாகி வெளியே வந்தார் தில்லையாடி வள்ளியம்மை.
சிறையில் உடல் நலம் கெட்டு மரணத்தின் விளிம்பில் கிடந்தார் வள்ளியம்மை. சிறையிலேயே இறந்துவிட்டால், பெரும் கொந்தளிப்பு ஏற்படும் என்று அஞ்சி விடுதலை செய்தது அரசு. தாய் மங்களம் சிறையிலேயே வைக்கப்பட்டார்.
எழுந்து நடக்க முடியாமல் படுக்கையில் கிடந்த வள்ளியம்மையை சிறையிலிருந்து,வீட்டுக்கு காந்தியும் அவரது யூத நண்பர் போலக்கும், தூளி போல துணியில் தொட்டில் கட்டி அதில் வள்ளியம்மையை வைத்துச் சுமந்து சென்றார்கள்.
காந்தி, வள்ளியம்மையிடம் கேட்டார், “உனக்கு இப்படி ஆனதற்கு நான்தானே காரணம்? என் அழைப்பை ஏற்று வந்து இப்படி ஆகிவிட்டதில் உனக்கு மனவருத்தம் ஏதும் உண்டா?”
வள்ளியம்மை, “நமது பெண்களை இழிவுபடுத்தும் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதில் எனக்கு என்ன ஆனாலும் துளியும் வருத்தமில்லை.” என்றார்.
“சிறைதானே உன் உடம்பை இப்படியாக்கிவிட்டது.சிறை சென்றதற்காக வருத்தப்படுகிறாயா”
‘‘எனக்கு வருத்தமா… நிச்சயமாக இல்லை. இப்போது இன்னொரு முறை கைது செய்யப்பட்டால்கூடச் சிறைக்குச் செல்ல நான் தயார்”
‘‘சிறை சென்று நீ இறந்துபோவதாக இருந்தால் என்ன செய்வாய்”
‘‘அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். தாய்நாட்டுக்காக உயிரைக் கொடுக்க விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள்”
அந்தத் தமிழ்ச் சிறுமியின் நெஞ்சுரத்தை எண்ணி வியந்தபடியே காந்தி சென்றார்.
ஆனால், வெளியான பத்தே நாட்களில் தனது பிறந்த நாளான பிப்ரவரி 22ம் நாள் உடல்நலம் மோசமான காரணத்தால் மரணம் அடைந்தார்.
வள்ளியம்மை சிறையிலிருந்து விடுதலையான சில நாட்களில் (1914 பிப்ரவரி 22) இறந்தாலும்அவர் பங்கேற்று உயிர் கொடுத்த போராட்டம் பிரமாண்டமானது.
தில்லையாடி வள்ளியம்மையின் மரணத்தை அறிந்த காந்தி மிகவும் வருத்தம் அடைந்தார். மற்றும் வள்ளியம்மை இந்தியாவின் புனித மகள் என்றும் போற்றினார்.
அவருடைய கல்லறைக்குச் சென்று இறுதியஞ்சலி செலுத்திய காந்தி, ‘‘இவர்தான் இந்தியாவின் மேன்மையான பெண் குழந்தை. ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டிய சுயநம்பிக்கை, சுயமரியாதை, நல்லொழுக்கம் ஆகிய உயர்ந்த அடையாளங்களைக் கொண்டவர் வள்ளியம்மை” என்றார்.
வள்ளியம்மையின் தியாகத்தைப் பற்றி காந்தி, தன் சத்திய சோதனை நூலில் விரிவாக எழுதியிருக்கிறார். தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் “தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்
இந்தியா வந்த போது காந்தி தில்லையாடி வள்ளியம்மை பிறந்த ஊருக்கு சென்ற போது, அந்த ஊர் மண்ணை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டார். தில்லையாடி வள்ளியம்மையின் போராட்ட குணம் மற்றும் தியாகத்தை நினைவுப்படுத்தும் வகையில் தில்லையாடி ஊரில் அவருக்கான நினைவு மண்டபத்தை உருவாக்கியது தமிழக அரசு.
காந்தியடிகளின் கருத்து:
என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.
மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார்.
அவருடைய தியாகம் வீண் போகாது.சத்தியத்திற்காக உயிர் நீத்த அவருடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. நம்பிக்கை தான் அவரது ஆயுதம்” என்று வள்ளியம்மை குறித்து “இந்தியன் ஒப்பீனியன்” இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு அரசு தில்லையாடி வள்ளியம்மையின் ஈகத்தைப் போற்றும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வட்டம் தில்லையாடியில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.

காந்தி தில்லையாடிக்கு 01/05/1915 அன்று வருகை தந்து அமர்ந்த இடத்தில் இந்த நினைவுத் தூண் கட்டப்பட்டுள்ளது. அதன் எதிரில் ‘தில்லையாடி வள்ளியம்மை நினைவுமண்டபம்’ கட்டப்பட்டுள்ளது.
இங்கு தில்லையாடி வள்ளியம்மையின் சிலை ஒன்று முன்மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு பொது நூலகத்துறை மூலம் ஒரு நூலகம் செயல்பட்டு வருகின்றது.
கோ-ஆப்டெக்ஸ் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னை எழும்பூரில் உள்ள தனது 600வது விற்பனை மையத்திற்கு “தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர் சூட்டிப் பெருமைப்படுத்தி உள்ளது.
சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பென்புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர், தில்லையாடி வள்ளியம்மை நினைவாக “வள்ளி” எனப் பெயரிட்டார் தில்லையாடி வள்ளியம்மை நினைவைப் போற்றி நடுவணரசு, அஞ்சல்தலையும் அஞ்சல் உறையும் வெளியிட்டுள்ளது.

வள்ளியம்மையின் இந்த வைராக்கியமே பின்ளாளில் காந்தி நடத்திய சத்யாகிரகப் போராட்டங்களுக்கும், உண்ணா நோன்புகளுக்கும் உந்துதலாக இருந்தது என்றால் மிகையில்லை.
Leave a Reply