( சித்திரத்துக்கு புனைந்த போட்டிக் கதை )
(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
நிலாவுக்கும் பானுவுக்கும் மருத்துவராகும் கனவு. பானுவிடம் கொடுத்திருந்த நீட் தேர்வுக்கான புத்தகத்தை வாங்க நிலா வந்தாள்.
“நானே கொண்டாந்து கொடுக்க இருந்தேன்; அவசரமா வெளியில் போறதால் சித்தி ஒரு அரைமணிநேரம் கடையைப் பார்த்துக்க சொல்லிச்சு; இன்னமும் காணோம். புத்தகம் வீட்டிலிருக்கு, சாரிடா”
“பழக் கடையைப் நான் பார்த்துக்கறேன் ; போய் எடுத்து வா”
“சரி” என்ற பானு ” ஆழாக்கு நாவல் பத்து ரூபாய்” சொல்லிவிட்டு ஓட்டமும் நடையுமாக போனாள்.
பானு இடத்தில் நிலா உட்கார்ந்து புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தாள். மூன்று பேர் தள்ளாடியபடி வந்தார்கள்.
“தோ பார்டா , போறப்ப இருந்த ஓனர் மாறிட்டாரு” ஒருவன்.
“இப்ப இன்னும் அழகான ஓனர்டா ” மற்றொருவன்.
“பாப்பா ஆழாக்கு பழம் எம்புட்டு ” மூன்றாமவன்.
“பத்து ரூபாய்” என்றாள்.
“பழத்தோட வெலையத்தான் கேட்டான்; ஒன்னோட வெலைய இல்லை ” முதலாமவன்.
இவர்கள் பேச்சுக்கு பதில் சொல்லாது தன் மொபைலை ஒரு கணம் பார்த்துக் கொண்டிருந்து விட்டு வாலட் உள்ளே போட்டுக் கொண்டாள். சொல்ல முடியாது இவங்க இதை ஆட்டைய போட்டாலும் போட்டுடுவாங்க. அந்த மூவரும் மீண்டும் மீண்டும் நிலாவிடம் பேச்சுக் கொடுத்தபடியே இருந்தார்கள்.
அரக்கப்பரக்க பானு ஓடிவந்தாள்.
“அண்ணா, அண்ணா தயவு செஞ்சு வம்பு பண்ணாம போங்கண்ணா ” என்று கெஞ்சினாள். “நிலா இந்தா உன் புக்ஸ்; உடனே கிளம்பு , தாமதிக்காதே” என்று அவசரப்படுத்தினாள்.
நிலாவோ, பானுவை கையமர்த்தி,”நீ அமைதியா இரு பானு ” என்றாள்.
அப்போது வேகமாக காவல் ஜீப் ஒன்று வந்து நின்றது; அதிலிருந்து குதித்த காவலர்கள், நிலாவிடம் ‘இவர்கள்தானா’ என சைகையாலேயே கேட்டார்கள்; நிலாவும் ‘ஆம்’ என்பதாக தலையாட்டினாள். அந்த மூவரையும் கைகளை வளைத்து பின் கட்டாக, அவர்களின் சட்டையாலேயே கட்டினார்கள். அதே நேரத்தில் நிலாவின் அப்பா, சித்தப்பா,அண்ணன் என மூவரும் தனித்தனியே வாகனத்தில் வந்திறங்கினார்கள்.
அதற்குள் கூட்டம் கூடிவிட்டது. இந்த வேடிக்கை பார்க்கும் மக்களுக்கு எப்படித்தான் செய்தி கிடைக்கிறது என்பது மகா ஆச்சரியம்.
காவல்துறை வண்டியில் அந்த மூவரையும் ஏற்றினார்கள். ஏறிய போதை இறங்கி விட்டதால்,
“ஐயா நாங்க ஒரு தப்பும் பண்ணலை, தயவு செஞ்சு வுட்டுடுங்க ” என்று ஒருவனும், “ஐயா இனிமே இப்படி தப்பே பண்ணமாட்டோம்” என்று அடுத்தவனும், “ஐயா இனிமே தண்ணியே அடிக்கமாட்டோம்” என்று மூன்றாமவனும் கதறிக் கொண்டிருக்கும் போதே காவலர்கள் அவர்களை ஜீப்பில் திணித்தார்கள்.
பானுவிடம் இருந்து மொபைல் போனை வாங்கினாள். அதில் ‘ப்ளே ஸ்டோரில்’ இருந்து ‘காவலன்SOS’ ஆப் டவுன்லோட் செய்தாள்” ஆபத்து நேரத்தில் அதில் உள்ள SOS என்ற பட்டனை அழுத்தினால் போதும்; லொகேஷனோடு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போகும் தகவல் அருகாமையில் உள்ள ரோந்து வாகனத்துக்கு வரும்.
அதே நேரத்தில் நாம கொடுத்துள்ள நமக்கு வேண்டிய மூன்று பேரின் எண்ணுக்கும் லொகேஷனோடு தகவல் போய்விடும். இதற்கு டேட்டா வெல்லாம் வேண்டாம். நீயும் தெரிந்த பெண்களின் மொபைலில் எல்லாம் டவுன்லோடு செய்து கொடு பானு” விளக்கத்தை கொடுத்து விட்டு அப்பாவின் வாகனத்தில் ஏறி டாட்டா காட்டியபடி நிலா சென்றாள்.
Leave a Reply