(சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெல்பார்ன், ஆஸ்திரேலியா)
(பொட்டலில் தனித்து நிற்பவர் படத்தை வைத்து எழுதப்பட்ட போட்டிக் கதை)
தளர் நடை நடந்த சம்பத் மனதும், உடலும் சோர்ந்து போயிருந்தன. அப்பா உடல் ஊனமுற்றுப் போனதினால் படிப்பை கைவிட்டு காகிதம் பொறுக்கி குடும்பத்தை காப்பாற்றினான். அதோடு இரண்டு தம்பிகளையும் படிக்க வைத்தான்.
நிதானமாக, படிப்படியாக வளர்ந்து, மொத்த வியாபாரியானான். தம்பிகள் படிப்பை முடித்தாலும் வேலைக்கும் போக வில்லை, அண்ணனுக்கு துணையாகவும் வரவில்லை.
உழைக்க மனமில்லாதவர்களை என்ன செய்வது? இன்றுவரை விடை தெரியாத கேள்வி இது.
தனக்கிருந்த நற்பெயரால் அவர்களுக்கு கல்யாணமும் செய்து முடித்தான். பாவம் , சம்பத்துக்கு அது நடக்காது; தனக்குள்ளேயே பெண் தன்மை பரவுவதால் கல்யாணமே இல்லை என சொல்லிவிட்டான். இரண்டு வீடுகள் கட்டி தம்பிகளை குடிவைத்தான். பெண் வீட்டாரிடம் கொடுத்த வாக்குப்படி அவர்களின் மாதாந்திர செலவையும் அவனே ஏற்றுக் கொண்டான்.
போன வருடம் அப்பாவும், அம்மாவும் போய்ச் சேர்ந்தபின் ஆரம்பித்தது பிரச்சினை. “சொத்தைப் பிரித்துக் கொடு.”
“எந்த சொத்தைப் பிரிச்சுக் கொடுக்குறது. எல்லாமும் என் உழைப்பில் சம்பாதிச்சு வாங்கினது”
“ஆங்..எல்லாம் ஒன்னா இருக்குறப்ப பொதுவுல வாங்குனது”
“நீங்க படிச்சிகிட்டு இருந்தீங்க. நான் முன்ன நின்னு கல்யாணம் பண்ணுனதால, சம்பாதிக்காத உங்க குடும்ப செலவையும் சுமக்குறேன்”.
“பொது சொத்து, பொது வியாபாரத்துல வருகிற வருமானத்துல இருந்துதான குடுக்கற?”
கரையான் புற்றெடுக்க கருநாகம் குடி புகுந்தது போல் இவர்கள் எல்லாமும் எங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள்.
மனசாட்சி இல்லாதவர்களிடம் பேசிப் பயனில்லை. சம்பத் பீரோ சாவி, கடை சாவி ,சொத்துப் பத்திரங்கள் எல்லாத்தையும் அவர்களிடம் விட்டெறிந்தான்; வீட்டை விட்டு வெளியேறி நடந்தவன் பொட்டலுக்கு வந்து விட்டான். அந்த தரிசு நிலம் இரண்டாக வெடிப்பு விட்டுக் கிடந்தது அவன் வாழ்க்கையைப் போல. இனி தரிசான அவன் வாழ்க்கை வளம் கொழிக்கத்தான் போகிறது; அப்போது கருத்த வானில் இருந்து மழைத்துளிகள் அவன்மீதும், தரிசு நிலம் மீதும் விழுந்தன. அவன் கீழே கிடந்த ஒரு பழைய கோணியை கையில் எடுத்தான் ; மீண்டும் முதலிலிருந்து அரிச்சுவடி படித்தான்.
Leave a Reply