( ஒரு குழுமத்தில் ஓவியத்துக்கேற்ப எழுதிய போட்டி மந்திரக்கதை )
(சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெல்பார்ன், ஆஸ்திரேலியா)
காலையிலிருந்து மதியம் வரை தோகை ஒன்றும் கிடைக்காத வெறுப்போடு பசியும் சேர்ந்து கொண்டதால் சோர்ந்து போன வீரன், சாப்பிட்டுவிட்டு, தரையில் சாய்ந்தான். வேடர் பரம்பரையில் வந்த வீரன் இப்போதெல்லாம் வேட்டையாடுவதே இல்லை. காட்டில் தேன் எடுத்தும், மயிலை வேட்டையாடி தோகையை விற்றும் வாழ்ந்தவன் இப்போது அதையும் விட்டுவிட்டான். அம்மாவின் மறைவுக்குப பின் தேவைகள் குறைந்ததால் தேன் எடுப்பதில்லை; காட்டில் கிடக்கும் மயிலிறகுகளை பொறுக்கி விற்றுதான் சாப்பிடுகிறான்.
தேனீக்கள் உணவாக சேமித்து வைத்துள்ள தேனை திருடி விற்பது பாவமாம். உறவினர்கள் தேனடையில் சர்க்ரைப் பாகு ஊற்றி, மக்கள் முன்னிலையில் தேனைப் பிழிந்து தருவதாக ஏமாற்றுவது போல அவன் ஏமாற்றிப் பிழைக்க விரும்பவில்லை. தனக்கு நிறைய தோகை கிடைக்க வேண்டுமென்றால் நிறைய மயில்கள் மரணமடைந் திருக்க வேண்டும். வரும்படி வரவேண்டும் என்பதற்காக பிணத்தை எதிர்பார்த்திருக்கும் சுடுகாட்டு வேலையாளுக்கும் தனக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றெண்ணினான்.
அவனுக்கே சாப்பாட்டு பிரச்சினை உள்ளதால் கல்யாணம் என்பதும் அவனுக்கு பகல் கனவு.
தனக்கு மட்டும் நிலபுலன் இருக்குமானால் தோட்டம் முழுக்க தேனடைகளை வைத்து தேனீக்களுக்கு உபகாரம் செய்வானாம்; அங்கு யாரும் தேன் சேகரிக்க முடியாதாம். நிறைய தானியங்களை பயிர் செய்து, மயில்களுக்கு தீனியாகப் போட்டு ஆயிரக்கணக்கில் மயில்களை பராமரிப்பேன் என்றும் எண்ணமிடுவான். அப்போதும் அப்படித்தான் கற்பனை செய்து தனக்குள்ளே மகிழ்ந்து கொண்டிருந்தான்.
தனக்கருகில் சடசடவென சத்தமும், வேகமாக விசிறியது போல காற்றும் வீசவே திடுக்கிடடுப் பார்த்தான். ஒரு மயில் அவன் பக்கத்தில்; மருட்சியுடன் பார்த்தான். என்ன ஆச்சரியம் மயில் பேசியது.
“என்ன வீரன் சௌக்கியமா? உன்னுடைய சாப்பாட்டு தேவையை தீர்க்கவே மயில் தோகையை நம்பியிருக்கும் நீ, தானியங்களை பயிரிட்டு மயிலுக்கு உணவளிக்கப் போகிறாயா”
தன் மனவோட்டம் எப்படி மயில் அறிந்தது. மயில் பேசுகிறது எனும்போது இது ஒன்றும் அதிசயமில்லை.
மயிலின் கேள்விக்கு உடனடியாக பதிலளிக்க முடியவில்லை.
“சரி, பேச நேரமி்ல்லை. வீரா என் முதுகில் ஏறிக்கொள், உன்னை சொர்கத்துக்கு கொண்டு போகிறேன்.”
அதிர்ந்து போன வீரன்,
“உன்னால் என்னைத் தாங்க முடியுமா” என்றான்
” உனக்குப் புராணம் தெரியாதா? நான் முருகனையே சுமந்து உலகைச் சுற்றிவந்த பரம்பரை; தாமதிக்காதே”
வீரன் மயிலின் மீதேறியதும் அது மேலெழும்பிப் பறந்தது. கடல் மீதெல்லாம் பறந்தபோது,
” என்னை எங்கு கடத்திப் போகிறாய்; எனக்குப் பயமாயிருக்கிறது” என்றான்.
“பயப்படாதே,கண்களை மூடிக் கொள்” என்றது மயில்.
அடுத்த சில நிமிடங்களில் சோலை போன்றிருந்த ஒரு இடத்தில் இறங்கியது. கண் விழித்த வீரன் திகைத்தான். தன்னைச் சுற்றிலும் ஆயிரக்கணக்கில் மயில்களைக் கண்டான்.
“வீரா, இங்கேயே இரு, உனக்கு ஒரு துணையுடன் வருகிறேன்” அம்மயில் மீண்டும் பறந்து போனது.
இருட்டுவதற்குள் திரும்ப வந்தது. அப்போது அதன் முதுகில் ஒரு பெண். மயில், “இந்த பெண் ஒரு மயிலைக் காப்பாற்ற தன் தசையை வேடனுக்குத் தர முன்வந்தவள்; உனக்கு சரியான ஜோடி. சுற்றி உள்ள நிலங்களில் பயிரிட்டு நீங்களும் சாப்பிட்டு எங்களையும் காப்பாற்றுங்கள்” என்றது.
தன் அடி மனதின் ஆழமான எண்ணத்தில் அமிழ்ந்து விட்டோமா அல்லது கனவு காண்கிறோமா அல்லது உண்மை நிகழ்வா எனக் குழம்பிக் கிடந்தது வீரன் மட்டுமில்லை நாமும்தான்.
Leave a Reply