வாசித்தது:- படகோட்டியின் பயணம்(padagotiyin payanam) கட்டுரைகள்
பதிப்பகம்:- நியூ செஞ்சுரி புக்ஹவுஸ்
ஆசிரியர்:- பாவண்ணன்
“படகோட்டி ஒரு கரையிலிருந்து மறுகரைக்கு படகை காலம் முழுக்க இயக்குகிறான். அவன் விட்டுச் சென்றாலும் படகு நீரில் மிதந்து கொண்டிருக்கும். வாசகனும் இலக்கியம், கதை, கவிதை,கட்டுரை என மாறிமாறி வாசிக்கும் வாசிப்பு பயணத்தை ஒரு படகோட்டியின் பயணமாக உருவகிக்கத் தோன்றியது” என்று பாவண்ணன் தனது முன்னுரையில் கூறியுள்ளார். இந்த ஒப்புமை மிக ரசித்ததனால் அதை அப்படியே பதிவிட்டுள்ளேன். இந்த புத்தகம் ஒரு கலை(வை)களஞ்சியமாக இருக்கிறது.
சமீபத்திய வெளியீடுகளில் பாராட்ட வேண்டியதை பாராட்டி இடிக்கவேண்டியதை இடித்து பாரபட்சமின்றி நேர்த்தியாக செய்திருக்கிறார்.
முதல் தலைப்பு “அற்புத கணங்களின் தோரணம்”
குன்றிலிருந்து உருண்டுவரும் பாறை ஒன்று பாதையை அடைத்துக் கொள்ள ஊர்மக்கள் அதை அகற்றி சரி செய்யாமல் வேறொர் சுற்று வழியைப் பயன்படுத்துகின்றனர். கைவிடப்பட்ட பாதையை(!) பார்க்கும் முதியவர் ஒருவர் சம்மட்டியைக் கொண்டு பாறையை உடைக்கத் தொடங்குகிறார். ஒருநாள் முழுக்க உடைத்தும் கையளவு மட்டுமே உடைபட, ஊராரின் பைத்தியக்காரன் என்ற கேலி, வசை, (அவருக்கு ஆயிரம் கேள்விகளுடன் பாறை தன்னை உற்றுநோக்குவதாக நினைப்பு!) எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்லை உடைக்கும் கருமமே கண்ணாகிறார்.
“இக்கணத்தில் இந்த அளவு உடைக்க முடிந்ததென்று மகிழ்ச்சியாக இருக்கிறது” என சொல்லி தன் முயற்சியைத் தொடர்கிறார் முதியவர். வெற்றி தோல்வியை நினைக்காமல் செயல் ஒன்றே அடையாளமாக, வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் செயல்மூலம் வாழ்ந்து இன்பத்தில் திளைக்கிற அனுபவத்தை புரிந்துகொள்ள முடிகிறது என்கிறார் பாவண்ணன். அருமை!
மனதில் சாத்தானின் ஆலை நிரந்தரமோ பகுதி நேரமோ செயல்படாதிருக்க எந்த கணமும் செயல்… செயல்…ஒன்றே வழி!
கல்யாண்ஜியின் “நொடிநேர அரைவட்டம்” தொகுக்க தொகுக்க கோடிக்கணக்கான கணங்களாக நீள்கிறது என்கிறார். அதில் ஒரு கணம் “இன்னும் ஒருமுறை ஏறத் தொடங்கி விட்டது எறும்பு, ஒன்றுமே சொல்லவில்லை மரம்”. என்ன கற்பனை!
இது தோரணத்தில் ஒரு முனை!
“காட்சி சித்திரங்கள்” எனும் தலைப்பில்..
கலாப்பிரியாவின் முக நூல் கவிதைகள்
“பூவாடும் வரை நாரை சூடிக் கொண்டிருப்பதாய் யாரும் நினைப்பதில்லை”
பூவாடியதும் தூக்கி எறியும்போது தனிமணமற்ற நாறையும் சேர்த்துதான் வீசிவிடுகிறோம். மனித வாழ்க்கையும் இப்படித்தான் என்று யோசிக்க வைப்பதாக கூறுகிறார் பாவண்ணன். இது சித்திரத்தில் ஒரு புள்ளி!
“சுடர் மிகுந்த வரிகள்” தலைப்பில்..
“உயிரிலா செய்திகட்கு உயிர்மிகக் கொடுத்து
ஒளியிலாச் செய்திக்கு ஒளியருள்புரிந்து” எனும் பாரதி,
“அனைத்தையும் ஆங்கே அழகுறச் செய்து இலௌகிக வாழ்க்கையின்
பொருளினை இணைக்கும் சக்தி கவிதைக்குள் சுடர்விட வேண்டும்”
என்று விரும்புகிறார்.
அப்போதுதான் அது கவிதை இல்லாவிடில் அவை வெறும் வரிகளாக எஞ்சும் என்கிறார் பாவண்ணன்.
தற்கால புதிய கவிஞர்களின் வரிசையில் திலகனின் “புலனுதிர் காலம்” தொகுதியில் “சிரிப்பூட்டும் மிருகம்” கவிதையில்
“குரங்கொன்று திடுக்கிட்டு பார்ப்பதுபோல நடிக்கிறேன் நான்”
இப்படி ஆரம்பமாகும் கவிதையில் ஒருசிறுமிக்கு இளைஞன் ஒருவன் குரங்காக மாறி விளையாட்டுக்காட்ட அவள் சிரிக்க அவனோ அவளின் சிரிப்பு நீடிக்க தன்நடிப்பை கூரேற்றிக்கொண்டே செல்ல ஒருநிலையில் சலிப்பூட்டும் மனிதனாக இருப்பதைவிட சிரிப்பூட்டும் குரங்காக இருப்பது சந்தோஷமென யோசிக்கிறான்.
பாட்டுக்கு ஒரு புலவன், மகாகவி பாரதி நினைவு தினத்தையொட்டி சின்னதான ஒரு சமர்ப்பணம்.
நல்ல தொகுப்பு, வாழ்த்துக்கள்.
LikeLike