(சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெல்பார்ன், ஆஸ்திரேலியா)
(ஒரு முகநூல் குழுமத்தில் இடம் பெற்ற ‘காதல் அழிவதில்லை’ என்ற தலைப்புக்கான போட்டிக் கதை)
அம்மா, “இந்த கஞ்சிய மட்டுமாவது குடிங்க” வேலைக்கார சின்னம்மா கெஞ்சினாள்.
“வேண்டாம் சின்னம்மா. கஞ்சிய குடிச்சி உயிரைக் காப்பாத்தி என்ன பிரயோசனம்” என்று கஞ்சி கிண்ணத்தை தன்னிடமிருந்து விலக்கினாள், வசந்தகுமாரி என்று எல்லாராலும் கொண்டாடப்பட்ட திரை நட்சத்திரம். பத்து ஆண்டுகள் முன்புவரை தமிழ் சினிமாவில் கொண்டாடப் பட்டவர் இன்று சீந்துவாரில்லாமல் படுக்கையில் கிடக்கிறார். பழைய நினைவுகளிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்நாளைய முன்னனி கதாநாயகன் எம்.கே. தசரதனுடன் இணைத்துப் பேசப்பட்டவர்.
அவர்கள் இணை நடித்த படங்கள் எல்லாமும் வெள்ளிவிழாப் படங்களே. அப்படி முதன்முதலில் வெள்ளிவிழா கண்ட படத்தில் ஒரு காட்சியில் பூங்கா ஒன்றில் நாயகனும் நாயகியும் பாடல் பாடி காதலிக்கிறார்கள். புல் தரையியில் படுத்திருக்கும் நாயகன் நாயகியின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுக்கிறான். நாயகி நிலைதடுமாறி சாய்ந்து வந்து அவன்மேல் படர்கிறாள். இந்த காட்சியை துளியும் மாற்றாமல் படத்தில் அப்படியே வைத்துவிட்டார்கள். இது ரசிகர் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட காட்சியானது. படமும் அமோக வெற்றி. எதிர்பாராது நடந்த இந்த நிகழ்வு நாயகி மனதில் அலையலையாக திரும்பத்திரும்ப வந்து மோதி வேதனை செய்தது. மெல்ல மெல்ல நாயகி தன்வசம் இழந்து நாயகன் வசம் மனதை செலுத்தத் தொடங்கினாள். நடிகரோ திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தை. திருமணமான நாயகனை விரும்புவது சரியில்லை யென்று பத்தி சொன்னாலும் மனம் நாயகனையே நோக்கி ஓடியது. என்னதான் அவள் பேரழகியாக இருந்தாலும், பிறவி நடிகையாக இருந்தாலும், லட்சோப லட்சம் ரசிகர்களைக் கொண்டிருந்தாலும், அவள் மனம் என்கிற மந்தி அந்த நடிகனின் மீதே தாவத்துடித்தது.
உயரமான வானில் மேகத்தில் உருவாகும் மழை பொழிந்தால் பூமியைத்தானே வந்தடைய வேண்டும். அந்த மழை எல்லா இடத்திலும் ஆறுகளிலும், ஏரிகளிலும், குளங்களிலும் சென்று சேர்ந்து விவசாயத்துக்கும், உணவு செய்யவும் பயன்படுவதில்லை. சில இடங்களில் பெய்யும் மழை சாக்கடையில் கலந்து பயன்படுத்துவாரின்றி விணாகிப்போவதும் உண்டு.
ஒருவரை நோக்கி ஒருவர் மனம் நெருங்கியதால் சேர்ந்து வாழ விரும்பினார்கள். வெளியூர் படப்பிடிப்புக்கு சென்றிருந்த போது அந்தவூரில் இருந்த அம்மன் கோவிலில் மாலை மாற்றி, தாலி கட்டி கல்யாணமும் செய்து கொண்டார்கள். சினிமாவில் ரீல் இணையாக நடித்தவர்கள் வாழ்க்கையில் ரியல் இணையாக மாறினார்கள்.
இதற்குப்பின் திரைத்துறை அவர்கள் பின்னே ஓடியது. அவர்களின் இணைந்த நடிப்பில் வந்த படங்கள் எல்லாமும் வெற்றிதான். வெள்ளிவிழா ஜோடி என்று திரை உலகும், ரசிகர் பட்டாளமும் அவர்களைக் கொண்டாடியது.
ஆனால் காலம் சதி செய்தது. அவர்களுக்குள் ஒருவர்மீது ஒருவருக்கு ஏற்பட்ட சந்தேக நெருப்பு, சிறு பொறியாக தோன்றி மெல்ல மெல்ல பெரும் ஜுவாலையாக வளர்ந்தது. அது அவர்கள் ஒருவர்மேல் ஒருவர் கொண்டிருந்த அதீதக் காதலையும் பொசுக்கிவிட்டது. இந்த இணை எண்ணற்ற கண்கள் பட்டதால் பிரிந்தது. கோவலன் மாதவியைப் பிரிந்தது போல, நாயகன் தன் முதல் மனைவி குடும்பத்தோடு சென்று தங்கிவிட்டார். நல்ல வேளை சிலம்பு விற்கப் போகவில்லை.
‘இதோ வருவார் அதோ வருவார்’ என எதிர்பார்த்து வசந்த குமாரி ஏமார்ந்ததுதான் மிச்சம். அவள் நம்பிக்கை பொய்யான கானல் நீரானது. எம்.கே.தசரதன் வரவே இல்லை; வசந்தகுமாரிக்கு படங்களும் இல்லை. இருக்கிற சொத்து பத்துகளை ஒவ்வொன்றாக விற்று வாழ்க்கையை நடத்தினார். ஆறுதல் சொல்ல வந்தவர்களால் மெல்ல மதுவுக்கு பழக்கமானார்; பின் அதற்கு அடிமையாகவே ஆனார்.
சின்னம்மா,” அம்மா, வயித்துக்கு ஒன்னும் சாப்பிடாம குடிச்சா அது குடலை அரிச்சிடும்பாங்க. அத குடிக்கறதுக்காகவாவது இத சாப்பிடுங்கம்மா””சின்னம்மா, இந்த சின்ன லெதர் பேக் உனக்கு என் நினைவுப் பரிசு””அம்மா” என்று சின்னம்மா கட்டிப்பிடித்துக் கதறினாள்.”சின்னம்மா, ஒரு உதவி செய்வியா” “சொல்லுங்கம்மா, கேக்கனுமா வேற”
“ஒரு வேளை நான் செத்துப் போயிட்டா, பேப்பர், டீவி ன்னு யாருக்கும் தகவல் குடுத்திடாத. என் படத்தைப் போட்டு கொண்டாடினவங்க பிணத்தைப் போட்டும் காட்டுவாங்க. மக்கள் என்னை பழைய வசந்தகுமாரியாகவே கொண்டாடட்டும். கல்யாணம் ஆனவருக்கு இரண்டாம் தாரமாக யாரும் போகக்கூடாது. சரி அந்த போட்டோவை எடுத்துக் குடு” என்று அவள் மணநாள் புகைப்படத்தை வாங்கி மார்பு மீது வைத்துக் கொண்டாள். “என் காதல் உண்மையானது” என்றாள்.
அடுத்தநாள்…
“விடியாமலேயே இருந்திருக்கக் கூடாதா; என் காவிய நாயகியை படுத்த படுக்கையிலையாவது பார்த்துக் கிட்டிருப்பேனே” சின்னம்மா சத்தம் வராமல் விசித்துக் கொண்டிருந்தாள்.
தகைப்பின்னலில் ஒரு சில இடங்கள் மகாநதிதிரைப்பட நிகழ்வுகளைப் பிரதிபலிப்பது போல் உள்ளன. வேறு மாதிரி சிந்தித்திருக்கலாமோ எனக் கூறத் தோன்றுகிறது .
LikeLike
டி. ஆர் ராஜகுமாரி கதை போல எழுத ஆரம்பித்து சாவித்ரி கதையாகிப் போனது. நடிகையர்த் திலகத்தின் வாழ்க்கை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது உண்மையே♦
LikeLike