அவிழாப் புதிர்!

படைப்பாளி: கிரிஸ்டி நல்லரத்னம், மெல்போன், ஆஸ்திரேலியா

என் கதைகளுக்கு ஒவியம் வரைந்திடும் ஆஸ்திரேலிய அன்பு நண்பர் கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் படைப்பு .

“15.8.2021 கல்கி சஞ்சிகையில் வெளிவந்தது”.

மீசையாம் மீசை…. நார் நாரா உதடுக்கு மேல ஈர்க்கில் போல … பார்க்கவே சகிக்கல… 
உற்ற்ற்… உற்ற்ற்  ன்ன எப்பவும் வயிற்றுக்குள்ள இருந்து ஒரு இரைச்சல் சத்தம் வேற. வயிறா இல்ல ஏதாவது பாக்டரியா?
வால் மட்டும் என்னவாம்?  எங்க ஜிம்மிக்கு புசு புசுண்ணு என்னமா  பஞ்சு மாதிரி  சாஃப்டான வாலு…. பாம்புக்கு ஸ்வெட்டர் போட்டாப்ல  இருக்கும்.

பூனையாம் பூனை. ஏதோ திட்டம் போட்டு ஒவ்வொரு அடியையும் அளந்து அளந்து வச்சி தலய மெதுவாகத் திருப்பிப் பார்த்துவிட்டு போகும் போது அலட்சியமாக சினிமாவில் வருவதைப்போல  ‘உன்னை அப்புறமா வந்து கவனிச்சிக்கிறேன்’னு வில்லன் சொல்வதைப்போல இருக்கும்.

என்ன ஒரே குறையாகச் சொல்கிறேன். சண்டைக்காரியா என்று நினைக்கிறீங்களா? மாமா கூட அம்மா கிட்ட இதேதான் சொன்னார்.  “கொண்டு வர்ர எல்லா வரனையும் வேணாம் வேணாம்னு உதைச்சி தள்ளுறா உன் மக. நாம பார்க்கிற பையங்க வேணாமா, இல்ல கல்யாணமே வேணமா?  அவளா பார்த்து ஒரு டாக்டரையோ, ஐ.ஏ.எஸ் பையனயோ கூட்டிக் கொண்டு வரட்டும். ஜாம் ஜாம்னு நானே முன்னால நின்னு தாலிய எடுத்து கொடுக்கிறேன்.” என்றார்.
மாமா மீது கோபம் பிய்த்துக்கொண்டு வந்தது. டாக்டர் ஐ.ஏ.ஸ் ன்னா என்ன கொம்பா? எதிர் வீட்டு கோமதியும்தான் பெரிசாக  ‘டாக்டர் மாப்பிள்ளை,  டாக்டர் மாப்பிள்ளை’ என்று’  பீற்றிக்கொண்டே  முகத்தை திருப்பிக்கொண்டு பெங்களூருக்கு குடித்தனம் போனாள். எட்டு மாசம் தாங்கவில்லை. தனியாக டாக்சியில் வந்து இறங்கினாள்.  பாவம்… அழுது அழுது முகமெல்லாம் வீங்கி…. என்ன எழவோ?
“டி..மஞ்சு… கோமதி கத தெரியுமோடி? அவ…..”. அம்மா தொடங்கும் முன்னே “ஸ்டொப் இட் மா. டோண்ட் டெல் மி”என்று சொல்லி கட் பண்ணிட்டேன். பெண்களுக்குள் இருக்திற வலியையும் வேதனையும் ஒரு வேடிக்கையாகப் பார்க்கிற சமூகம் இது. நிராகரிக்கப்பட்டவள் என்று சமூகம் முத்திரை குத்தி மூலயில் போடப்பட்ட பொம்மையைப் போல்  அவ வாழ்க்கை இப்போது.

‘கோமதி என்னமா இருந்தா? சிட்டுக்குருவியாட்டம்  துரு துருன்ணு. சைக்கிளில் லைப்ரரிக்கு போய் கட்டு கட்டாகப் புஸ்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து திண்ணையில் உட்கார்ந்து கொண்டு படிப்பாள். அவளுக்கும் அந்த கதைகளில் வருவதைப் போல் யாரோ ஒரு கற்பனைக் காதலனோடு என்னமா நேசம் இருந்திருக்கும்.பெங்களூருவில் என்னவெல்லாம் நடந்திருக்கும்?’ நான் கற்பனை செய்தேன்.
அவள் புருஷனை வேலைக்கு அனுப்பின பிறகு சாதம் செய்து, கறிகாய் நறுக்கிச் சாம்பார், பதார்த்தமெல்லாம் நெய், கடுகு போட்டுத் தாளிதம் செய்து, அவனுக்கு வாய்க்கு ருசியாகச் சமைத்து வைத்து, அப்புறமாக வீட்டை எல்லாம் பெருக்கி அவன் டிரஸ் எல்லாம் மடித்து வைத்து, அப்புறமாக வாஷிங் மெஷினில் துணியைப் போட்டு எடுத்து உலரப் போட்டு,பிறகு ஒரு புத்தகத்தை படித்துக்கொண்டே இருக்கும்போது   ஒரு குட்டி தூக்கம். ஆறு மணி….. அவன் வந்து கதவ தட்டும்போது இவள் ஓடிப் போய் கதவைத் திறக்கிறாள்.
“என்ன?.. முன் ஜன்னல் திறந்திருக்கு…? அதுவழியா முன்னாடி இருக்கிற ஜிம்முக்கு வார்ர போற பசங்கள….”
எவ்வளவு ஆசையாக அவனுக்காகவே அவள் வாழ்கிறாள். அந்த எருமைக்கு அது புரியணுமே?  கோமதி பீரிட்டு வந்த அழுகயைச் சேலை தலப்பால் மூடி அடக்கிக்கொண்டு கட்டிலில் குப்புற விழுந்து அழுதாள். அவள் உடம்பு குலுங்கி குலுங்கி அதிர்ந்தது. இந்த வேதனை எல்லாம் யாருக்கும் தெரிவதில்லை
‘ஐய… புருஷன உட்டுட்டு வாழாவெட்டியா வந்தவனு’  ஒரு வசனத்தில ஜனம் என்னமா பச்சகுத்துகிறது. கோமதி வேதனை யாருக்குப் புரியும்? அவள் சுமைகளை இறக்கி  வைக்க தோள்களில்லை.

புத்தகத்தில படித்த அந்த காதல் கதைகளில் என்னமா அவன் ஆபீஸிலிருந்து பூ வாங்கிக்கொண்டு வந்து அவள் கூந்தலில் வைத்து அப்படியே கட்டி அணைத்து….கணவனை பிரிந்து வாழனும்ணு எடுக்கிற முடிவு எவ்வளவு பெரிய முடிவு!

வாழ்க்கையின் எல்லையில் நின்று எடுக்கிற முடிவு. 

அம்மா தினமும் கல்யாண பேச்சை எடுக்கப்ப எனக்கு கோமதி ஞாபகம் வரும். பெங்களூருல நடந்த ஒண்ணும் எனக்கு தெரியாது. ஆனா என் கற்பனையே உண்மையா இருந்திடுச்சின்னா?  அம்மம்மா…..அதெல்லாம் எனக்கு முடியாதம்மா. தெரிஞ்சு, தானே பலி கொடுக்கிற வாழ்க்கை தேவைதானான்னு எனக்கு தோன்றியது.

“ஒய் டோண்ட் யூ கெட் மேரிட் “. என்னமாய் கேட்டான்  ராகவன்? அட, ராகவனைப் பற்றி சொல்லவே இல்லை இல்ல? நான் பி.ஏ முடிச்சதும்  சென்னை ரெயில்வே ஆபீஸில் அக்கவுண்டிங் செக்ஷனில்  வேலை பார்த்துக்கொண்டு இருக்கும்போது ஒரு நாள் ராமனாதன் சார்தான் ராகவனை அழைத்துக்கொண்டு வந்து எனக்கு இன்டரடியூஸ் செய்தார்.

“ஹி இஸ் ராகவன்… இண்ணையில இருந்து உங்க அண்டர் ஸ்டடி. டீச் ஹிம் ஆல்”.

நான் நிமிர்ந்து பார்த்தேன்.. ஆறடி உயரம்…. வெள்ளை ஷ

ர்ட் பாண்ட் போட்டு சூர்யாவைப்போல் அடக்கமா, சீவின முடி. எக்ஸ்ரா கிறீம் போட்டதைப்போல மினுக்குகிறது. அடர்த்தியான புருவம் , ரெண்டு புருவத்துக்கும் நடுவில் சந்திக்குது.நோ இடைவெளி. காலேஜ் பையனப் போல துரு துரு கண்கள்… அரும்பு மீசை….

பிகாம் படிப்பு …. இள வயசு.. என்ன இள வயசு?….. என்ன விட ஒன்றரை வயசு குறைவு. அதனால் சொன்னதெல்லாம் சும்மா பஞ்சுல மை கொட்டினாப்போல  மூளையில் ஊறி நின்றுவிட்டது, கற்பூர மூளை.

நான் சொல்லிக் கொடுக்கிறதையெல்லாம் கவனமாகக் கேட்டு ஸ்கூல் பையனாட்டம்  நோட்ஸ் எழுதினான்.
எழுதிக்கொள்வான் என்று சொல்ல தயக்கமாக இருக்கிறது. அட, அப்படி ஒன்றும் என் மனதில் இல்லை. மனிதர்களுக்கு ஒரு பெண் கொடுக்கிற மரியாதை என்று வச்சுக்கோங்களேன்.
ராகவனைப் பற்றி அப்படி ஒண்ணும் பெரிதாகத் தெரிஞ்சிக்க எனக்கு ஆர்வம் இல்லை. என்ன, நான் அவரைக் கட்டிக்கவா போறேன்?

அவராகச் சொல்லுவார் : ஊர் வேலூர் . சென்னையில் அத்தை வீட்டில் குடியிருப்பு. வீக்கென்ட் ஊருக்கு போயிடுவார். வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவரர் கோயில், லட்சுமி பொற்கோயில் அப்புறம் திப்பு சுல்தான் வரலாறு என்று  கதை கதையாகச் சொல்வார். ஏ குட் ஸ்டோரி டெல்லர்.
கோட்டை கோயில் பற்றி யெல்லாம் சொல்லும்போது  சட்டென்று நிறுத்தி,

” டெல் மி…. வாட் டிட் ஐ சே நவ் ? ” என்று கேள்வி கேட்பார்! அதனால் நான் ரொம்ப உன்னிப்பாக ஸ்கூல் பெண் போலக் கேட்டுக்கொண்டே இருப்பேன்

ஒரு நாள் வேல முடிந்த பிறகு ராகவனை எங்கள் வீட்டுக்குக்கு கூட்டி வந்தேன். தயங்கி தயங்கித்தான் சம்மதித்து வந்தார்.  எங்கள் வீதியில் இருக்கிற எல்லாரும் என்ன ஏதென்று பார்த்தார்கள். அம்மா பஜ்ஜியும் காபியும் கொடுத்து உபசரித்தார்.
அம்மா ரொம்ப சிரத்தையோடு துருவித் துருவி பூர்வீகம் எல்லாம் கேட்டார். எனக்கு என்னவோ போல் இருந்தது. அவர் போனதும் அம்மா, “ரொம்ப நல்ல பையன். உன்ன விட அத்தனை உசரமில்லை. நல்ல குடும்பம்.”

அம்மாவின் பேச்சு எங்கு போகிறதென்று எனக்கு தெரிந்தது. எல்லா தாய்க்கும் உள்ள அந்த ஆதங்கம் அம்மாவிற்கும். அது எனக்கும் புரிந்தது. நான் பிறந்து மூன்று வருஷத்தில அப்பா மார்பு வலி என்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு பரலோகம் போனப்பிறகு அம்மாதான் மாமாவோட துணையோடு தனிமரமாக நின்று என்னைப் படிக்கவைத்து ஆளாக்கினாள். அவளுக்கு  புரியுது தனிமையோட வலி.
ஒரு ஆண் துணை இல்லாமல் வாழ்கிற அந்த வாழ்க்கையோட  வேதனையை நானும் அம்மா முகத்தில் கண்டிருக்கிறேன். சமையற்கட்டில் முந்தானையை வாயில் வைத்து அடைத்துக்கொண்டு அவள் குலுங்கி குலுங்கி அழுவதை நான் பாத்திருக்கிறேன்.
“மா, ஆர் யு ஓகே?” என்று கேட்டால் தன் கவலை எனக்கும் தொற்றுநோய் போலப் பரவிடக் கூடாதே என்று “ஒண்ணுமில்லை. இந்த புகை” என்று ஏதோ சாக்கு சொல்லுவாள். என்னதான் காலம் மாறிக்கொண்டே வந்தாலும் ஒரு பெண்ணோட கவலை மாறாமலே இருந்துகொண்டிருக்கிறது, ஒரு சாபம்னு  எனக்கு படுகிறது. புருஷன் போன பிறகு தனிமையில் வாழ்கிற வாழ்க்கை சோப்பு கட்டி தண்ணீரில் கரைகிற மாதிரி கரைந்து போகும் . அதை வாழ்ந்துதான் கழிக்கணும்.

“ஒன் ஸ்வீட் நியுஸ்” என்று ராகவன் ஒரு திங்கள் காலையில் சொல்லும்போது எனக்கு உள்ளே என்னவோ செய்தது.
“அம்மா ஒரு மேரேஜ் அரேன்ஜ் பண்ணிட்டாங்க.” இப்படி ஒரு நியூஸ் ஒரு நாள் அவர் வாயில் இருந்து வரும் என்று நான் எதிர்பார்த்ததுதான். ஆனால் அதை உண்மையாகக் கேட்கும்போது என் காலுக்கு கீழே இருந்து யாரோ இந்த பூமியை இழுத்துவிட்ட மாதிரியும் நான் ‘அலிஸ் இன் ஒண்டர் லாண்ட்’ டில் அந்த பெண் கிடுகிடு என்று பாதாளத்தில் விழுகிற மாதிரியும் ஒரு பிரமை. என்ன சுற்றி  ஆபீஸ்ல இருக்கிற டைப்ரைட்டர், காப்பி கப், ஃபான், மேசை, நாற்காலி எல்லாம் சுத்தியது.
” ஆர் யூ ஓகே?”
“யெஸ்…. யெஸ்” என்று நான் சமாளித்தேன். கையால் மேசையை இறுகப் பிடித்துக்கொண்டு மெதுவாக முகத்தை திருப்பி இல்லாத பைலை தேடுவது மாதிரி பாசாங்கு செய்தேன். உடனே அம்மா தோளில் சாய்ந்து ‘ஓ’வென்று அழ வேண்டும் போல இருந்தது.

“ஒய் டோண்ட் யூ கெட் மேரிட் ” னு ராகவன் எப்பவோ கேட்டபோது நான் “ஏன்….. ஒரு பெண் சிங்கிளா வாழக்கூடாதோ? ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைப்பட்டு ஒரு அடிமை போல அவனைச் சந்தோஷப்படுத்தற, சயன சுகம் தரும் சரீரமா,  புள்ள பெத்துகிற யந்திரமாதான் வாழனும்னு ஒரு நியதியா என்ன?” என்று தொடங்கி இதை நியாயப்படுத்துவதைப் போல ஒரு பெரிய லெக்சரே அடித்து முடித்தேன். ராகவனுக்கு ஏன்டா கேட்டோம் என்று இருந்தது. இப்படி ஒரு கேள்வியை கேட்பதற்கு நான்தான்  அந்த உரிமையை அவருக்கு கொடுத்தேன் என்பதை ஏனோ என் மனம் ஏற்க மறுத்தது.

இப்போது மட்டும் ஏன் ராகவனின் வெட்டிங் நியூஸ் என்னை இப்படி போட்டு உடைக்கிறது என்று  புரியவில்லை.
“ஆம் ஐ இன் லவ் வித் ஹிம்?” என்று நான் என்னையே கேட்டுக் கொண்டேன். இதுதான் மனுஷன் சொல்கிற ஊமைக் காதலோ?
‘டோண்ட் பி ஸ்டுப்பிட்’ னு  மனது சொல்லியது.
மனம், இதயம், ஏக்கம், சோகம் இதெல்லாத்தையும் ஒரு ஐந்தாறு பாட்டிலில் அடைத்து , பெண்கள்  பிறக்கும்போதே ஆண்டவன் கூடவே கொடுத்து அனுப்பி வைத்தாரோ என்று  தோன்றுகிறது. அப்பப்ப தொட்டுக்கொள்ள சொட்டு கண்ணீரும் சேர்த்து வைத்துவிட்டாரோ?.

ராகவன் திருமணத்திற்கு நானும் ஆபீஸில் இருந்த எல்லாருடனும் போயிருந்தேன். பெண் வாட்டசாட்டமாக லட்சணமாகத்தான் இருந்தாள். ‘நல்லா இருங்க’ என்று வாழ்த்தி எனக்கும் ராகவனுக்கும் இருந்த ஆபீஸ் பந்தத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இனி ராகவன் அவளுக்கு சொந்தம். அவரை என்றும் என் சொந்தமாகக் கொள்ள நான் நினைத்ததே இல்லை!

நான் அவரை எப்படி பார்த்தேன் என்று இன்றைக்குக் கூட தெளிவாகத் தெரியவில்லை. ஒரு வேள அவராக வந்து ‘ஐ லவ் யூ’ என்று சொல்லியிருந்தால் ‘ஓகே’ என்று அந்த பந்தத்தில் என்னை இணைத்துக்கொண்டு நாலு புள்ளைக் குட்டியைப் பெற்றுக் கொண்டு மற்ற பெண்களைப்போல போல ஒரு லெளகீக வாழ்க்கையை அமைத்துக்கொண்டு இருந்திருப்பேனோ தெரியாது. இது ஒரு அவிழாப் புதிர்!

இப்போது நினைத்து என்ன செய்ய?

வருஷங்கள் எவ்வளவு வேகமாக உருண்டோடிவிட்டன? அம்மா இப்போது படுத்த படுக்கையாக பாரிசவாதம் வந்து இடது கையையும் காலையும் இழுத்துக்கொண்டு  ஒரு குழந்த மாதிரி  ‘மஞ்சு, அத தா, இத எடு’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள். நான் கண்ணாடியில் எம் முகத்தைப் பார்த்தேன். தலமுடியி வெள்ளைக் கீற்று பரவி காது வரைக்கும் வந்துவிட்டது. முகத்திலும் மடிப்புகள் மெதுவாய் கோழிக் கீறல்களாய், விஷேசமாக கண்ணைச் சுற்றி வரையத் தொடங்கிவிட்டது.  காலம் என்னமாய் தன் கொடிய கலப்பையால் பெண்களின்  செளந்தரியத்தை உழுது சின்னாபின்னப்படுத்தியது?

அம்மாவுக்கு முந்திரி போட்டு பால் பாயாசத்தை அடுப்பில் கிளறி மெதுவாக  இளம் சூட்டில் கரண்டியால புகட்டினேன். பாயாசமும் அவள் எச்சிலும் கலந்து ஒரு பால் ஆறாகி மெதுவாய் கடைவாயில் வடிந்து கழுத்தில் ஓடி அவளின் சுருங்கின கழுத்து மடிப்பில் தேங்கி நின்றது.
மெதுவாய் அதை துடைத்து அவள் கண்களை உற்றுப் பார்த்தேன்.  ஆண்டவன் ஏன மனிதர்களை இப்படி வதைத்து அவரவர்களுக்கென்று இருந்த அடையாளத்தை அழித்து ‘நீ வாழ்ந்தது போதும்’  என்று சொல்லாமல் சொல்கிறான்.

‘இருந்தது போதும். கிளம்பு போகலாம்’ என்று அதே செளந்தரியத்தோடு அழைத்துக்கொண்டு போனால் என்னவாம்?

மனிதர்களுக்கு ஏன் வயதாக வேண்டும் ? விஞ்ஞானம் புட்டு புட்டு வைத்தாலும் எனக்கு அதை ஏற்றுக்கொள்கிற  மனம் இல்லை.

எனக்குள் நடந்துகொண்டிருக்கிற இந்தத் தார்மீக விவாதம் எல்லாம் அம்மாவுக்கு  தெரியப் போறதில்லை. ஆனால் அவளுக்காகத்தான்  நான் எனக்குள்ளேயே ஒரு ஞான தர்க்கத்தை ஆண்டவனோட போடுகிறேன் என்று எப்படி அவளுக்கு புரியவைப்பேன் என்று தெரியாமல் மெதுவாக அவள் கழுத்தில் தேங்கி நிக்கற பாலை  அழுத்தித் துடைத்தேன்.

மனிதர்களுக்கு வருகிற சோகம், வஞ்சனை, குரோதம் இதெல்லாவற்றையும் இப்படி துடைத்து எறிய முடிந்தால் எத்தனை நல்லா இருக்கும். யோசித்து யோசித்து எனக்குள்ளேயே சிரித்தேன்.

சுவர்க் கடிகாரம் ‘டங்…. டங்… டங்’ னு பத்து அடித்து ஓய்ந்தது. வெளி முற்றத்தில் நல்ல இளம் வெயில் காய்ந்தது. அம்மாவை பன்னிரண்டு மணிக்குத்தான் குளிப்பாட்ட வேண்டும்.

அதுவரை என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு முன் முற்றத்திக்கு வந்து அப்பாடா என்று  தூணில் சாய்ந்து வானத்தை  அண்ணாந்து பார்த்தேன். வெள்ளைப் பஞ்சு பஞ்சாக  வானத்தில் மேகம் சோம்பலுடன் கும்பல் கும்பலாக நகர்ந்துகொண்டே  இருந்தது. நான் சின்னக் குழந்தையாட்டம் வானத்தில் முயலைத் தேடினேன். என்னுடைய கவனமெல்லாம் வானத்தில்.
“மியாவ்” ……..” மியாவ்”
ஏதோ கனவுல இருந்து விழித்த மாதிரி சத்தம் வந்த திசையில் கண்களை இடுக்கி பார்த்தேன்.

அடுத்த வீட்டு மங்களம் மாமி மதிலில் ஒரு பூனை. என்னை ஒரு அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு, எங்கள் தோட்டத்தில் இருந்த வைக்கோல் கட்டில் பாய்ந்து ஒரு சின்னப் புலியைப்போல நான் பதியம் போட்ட தக்காளி செடிகளுக்கிடையில் நடந்து என் முன்னால் இருந்த படியில் ஏறி என் முன்னால் வந்து முகத்தை நிமிர்த்தி என் முகத்தைப் பார்த்தது.

மெதுவா குனிந்து முன் காலால் தன்னுடைய முகத்தை நீவி விட்டுக்கொண்டது. ‘இந்தச் சனியனுக்கு என்ன திமிர்’ என்று நான் யோசித்தேன். இன்றைக்குத்தான்  நான் இதை முதலில் பார்க்கிறேன்.

மங்களம் மாமியோட வீட்டுக்காரர் போன மாசம்தான் நெஞ்சு வலியால் கண்ணை மூடினார்.

ஓ! அந்தத் தனிமையை போக்கத்தான் இந்த செருக்கு பிடித்த பூனையை அவள் வளர்க்கிறாளோ?

இப்போது நான் பூனயை அதனுடைய கண்ணுக்குள் உற்றுப்  பார்த்தேன். என்னமோ அது கண்களை  சோகமாக வைத்துக்கொண்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அந்தப் பார்வை என்னை என்னவோ செய்தது.

வாழ்க்கையில் பல சமயம் நாம் காரணம் புரியாமலே ஏதோ ஒரு மனிதர்களையோ, ரசனையையோ, வெஜிடபிளையோ வெறுகிறோமே? எல்லாவற்றுக்கும் காரணம், காரியம் பார்த்தா செய்யறோம்? ஏதோ மனதில் ‘டக்’ கென்று  அந்த வெறுப்பு அம்மியில் உளியால அடிச்ச மாதிரி பதிந்துவிடுகிறது.

நான் ஏதோ ஒரு மந்திரவாதியால மனோவசியம் செய்யப்பட்ட விக்டிம் மாதிரி எழுந்து போய் பிரிஜ்ஜை திறந்து ஒரு தட்டிலில் பாலை ஊற்றி மெது மெதுவா வந்து பூனை முன்னால் வைத்தேன்.
பூனை தட்டையும் என்னையும் மாறி மாறிப் பார்த்தது. ஒரு தயக்கம். அப்புறம் மெதுவாக இரண்டு அடி வச்சு முன்னால் வந்து தட்டை முகர்ந்து பார்த்தது. அப்புறம் அது குனிந்து பாலைத் தன் நாக்கால் சுவைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தது. அதன் பார்வையில் ஒரு நன்றி இருப்பதாக எனக்குப் பட்டது.
“என்னை வாழவைத்த தெய்வமே. என் வாழ்நாள் முழுவதும் உனக்கு கடமைப்பட்டிருக்கேன். செய்நன்றி மறவேன்”…..ஏதோ சினிமாப் பாணியில் பூனை பேசுவதாக யோசித்து நானே சிரித்தேன்.
நான் பலமாக சிரிச்திருக்க வேண்டும். அம்மா உள்ளே இருந்து “யாரும்மா வந்திருக்கா” என்று கேட்டாள்.
நான் என்ன சொல்வது? 

“அம்மா, மிஸ்டர் பூனை இஸ் ஹியர்”என்று சொன்னேன். அவள் நம்பவா போகிறாள்? இரு பரம விரோதிகளின் சந்திப்பு.

பூனை தட்டை காலி செய்து விட்ட பிறகும் விடாமல் தொடர்ந்து தட்டை நாக்கால் தடவிக் கொண்டே இருந்தது. ரோஜாப்பூ கலர் நாக்கு தட்டை தொட்டுத் தொட்டு மறைவதை நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். 
தட்டு ‘சர்ர்ர்… சர்ர்ர்’என்று   வழுக்கிக்கொண்டு மெதுவா நகர்ந்து நகர்ந்து என் காலுக்குக் கீழே வந்து நின்றது. நான் மெதுவாகக் குனிந்து பூனையின் முதுகைத் தடவினேன். ஜிம்மியோட ரோமமும் இதே மாதிரி சாஃப்டாதான் இருந்தது, இப்போது ஞாபகத்துக்கு வந்தது.

பூனை நிமிர்ந்து என்னைப் பார்த்து “மியாவ்” என்று   என் அன்பை ஆமோதித்து ஏதோ சொன்னதைப் போல இருந்தது.  என் காலில் மெதுவாகத் தன் உடலை உரசியது.  அந்த ஸ்பரிசம் என்ன என்னமோ செய்தது.

என்னை நம்பி தன்னைப் பரிபூரணமாக என் காலடியில் ஒப்படைத்து ‘நீ என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்’ என்கிற பரிசுத்தமான அன்பை நான் உணர்ந்து பூரித்தேன்.
அதன் நட்பின் அடர்த்தி எனக்கு இப்போது புரிந்தது. ‘நமக்குள் என்ன பகை?’ என்று கேட்க வேண்டும் போல் இருந்தது. ஒரு அதீத உரிமையோடு இந்த ஜீவன் என்னுள் நுழைந்து என்னை ஆட்கொள்வதை நான் உணர்ந்தேன்.

நான் குனிந்து விரலால் பூனையின் கழுத்துக்கு கீழே விரலால் கீச்சு கீச்சு மூட்டினேன். அது தன் முன் கால் இரண்டையும் தூக்கி என் கையைக் கீற முற்பட்டது. உடனே தன் கால் நகங்களை உள்ளிளுத்துக்கொண்டு ‘நான் இவளைக் காயப்படுத்தக் கூடாது’ என்று ஒரு கரிசனையோடு உற்றுப் பார்த்தது.
இந்த விளையாட்டு இருபது நிமிடம் வரை தொடர்ந்தது . பிறகு மெதுவாகச் சில அடிகள் எடுத்து வைத்து என்னைப் பிரிந்து சென்று தன் கழுத்தைத் திருப்பி என்னைக் கனிவோடு பார்த்து  பின் மதிலின் மேல்  பாய்ந்து மறைந்தது.

இப்போது நான் தினமும் காலையில் அம்மாவுக்கு  பாயாசம் கொடுத்த பிறகு ஒரு தட்டில் பால் வார்த்து என் நட்பிற்காய் காத்திருக்கிறேன்!

‘யெஸ், ஐ டூ லைக் கேட்ஸ்!’
ஆமாம் , எனக்கு இப்போது பூனைகளைப் பிடிக்கும்!

முற்றும் 

Advertisement

3 thoughts on “அவிழாப் புதிர்!

Add yours

  1. பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதற்கான வர்ணனையும் இக்காலத்துப் படித்த பெண்கள் திருமணபந்தத்தில் எதிர்நோக்கும் சிக்கல்களும் நன்கு சித்திரிக்கப்பட்டுள்ளன.

    Like

    1. ஓவிய நண்பரின் படைப்பு. அவருடைய ஃபளாஷ் பேக் என்கிற அருமையான கதையும் முன்னரே பதிவிடப்பட்டுள்ளது. கருத்துக்கு நன்றி.

      Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: