(சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெல்பார்ன், ஆஸ்திரேலியா)
(ஒரு குழுமத்தில் இடம் பெற்ற போட்டிக்கதை)
சின்னத்தம்பி மாமா தோட்டத்துக்குப் போய், “மாமா,ஒரு கொய்யா குடு. மூனு பேரும் பங்கு போட்டுக்கறோம்” என்று மூர்த்தி, அரசு, அருண் முவரும் கேட்டார்கள்.
“ஆசையாயிருந்தா கடையில காசு குடுத்து வாங்கித் திண்ணுங்கடா; ஓசியில திங்க அலையாதிங்கடா” என்று என்னமா சொல்லிட்டார். சோர்ந்த முகத்தோட மூன்று பேரும் திரும்பினார்கள். மாமா சொன்னதுல தப்பில்லை என்றே கருதினார்கள். எதுவானாலும் உழைச்சி திங்கனும்; ஓசியில திங்க ஆசைப்படக் கூடாது. இது இந்த ஜென்மத்துல மறக்காது.
“டேய் , இதோ பாருங்கடா, மாமா வோட ஆடு ; என்னமா ஜோரா இருக்குன்னு” அருண் சொன்னாலும் மூர்த்தியும், அரசுவும் சிரத்தையில்லாமல் வந்தார்கள்.
மூர்த்தி,அரசு,அருண் மூவரும் ஏரித்தண்ணீர் வழிந்தோடும் கலுங்கில் சோகமாக உட்கார்ந்திருந்தார்கள். மார்க்கெட் போனால் லோடு இறக்கலாம்; காசு கிடைக்கும். வேணுங்கிற கொய்யா வாங்கித் திங்கலாம்”. மூர்த்தியின் யோசனை இது.
” நம்மால பெரிய பெரிய மூட்டையெல்லாம் தூக்கி எறக்க முடியுமா” இது அரசுவின் சந்தேகம்.
“சின்னச்சின்ன சிப்பங்களா எறக்கறோம்னு கேட்ப்போம்”. மூர்த்தி.
அருண்,” டேய் அதோ பாருங்கடா”. பார்த்த இருவரும் அதிர்ந்தார்கள். அருணை காவலுக்கு விட்டு அரசு மூர்த்தியுடன் போய் கட்டுக் கொடியுடன் வந்தான்.
கட்டுகொடியோட ஒரு முனையை ஒரு மரத்தில் பலமாக கட்டச் சொல்லி மற்றொரு முனையுடன் நீரில் நீந்திப்போன மூர்த்தி கையில் தட்டுப்பட்ட கயிற்றின் ஒரு முனையில் கட்டுக்கொடியை நன்றாகக் கட்டினான். கயிற்றின் மறுமுனையில் கட்டியிருந்த ஆடு நீரோடு அடித்தப் போவது நின்றது. ஆட்டை அரசு அனைத்து தூக்கி கரை சேர்த்தான். ஆடு தலையை சிலுப்பியது; உடம்மை குலுக்கியது. அரக்கப்பரக்க ஓடிவந்த சின்னத்தம்பி மாமா ஆடு செகப்பியைப் பார்த்ததும் நிம்மதியானார். கயிறு அறுந்ததால் கிளம்பி தண்ணீர் குடிக்க வந்து ஆழமான வாய்க்காலில் விழுந்த ஆட்டை காப்பாற்றிய மூவருக்கும் ஆளுக்கொரு கொய்யாவைக் கொடுக்க வந்தார். அரசு,
“மாமா உயிர காப்பாத்துன உதவிக்கு யாராவது கூலி வாங்குவாங்களா?” என்றான்.
“இல்லடா நீங்க கொய்யாவுக்கு ஆசைப்பட்டீங்கள்ல”
“ஆசைப்பட்டா காசு குடுத்து வாங்கி திண்ணுக்கறோம்”
மூவரும் மார்க்கெட் நோக்கி நடந்தார்கள்; சரக்கு இறக்கினால் காசு தருவார்கள்.
பாலகன் முருகன் ஓளவையாருக்கு நாவல் கனியால் தமிழை விளக்கியது போல இவர்கள் கொய்யாக் கனியால் நீதியை விளக்கி விட்டார்கள்.
Leave a Reply