(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
(ஒரு முகநூல் குழுமத்தில் ” சின்னக்குட்டி என பெயர் சூட்டி ஆசையாக வளர்த்த அந்த பெரிய ஆட்டை களவாண்டது யார் எப்படி ” என மிகவும் குழம்பினான் என்ற இவ்வரிகள் இடம்பெறும் கதைப் போட்டியில் பங்கு பெற்ற கதை.)
சின்னக் குட்டி! மாரிமுத்துவின் ஆட்டுக்கூட்டத்தில் ஒற்றை கிடா ஆடு. ஊரில் ஆடுகள் சினை பிடிக்க சின்னக்குட்டியை ஓட்டிப் போவார்கள். சிலர் சொல்லாமலேயே சின்னக்குட்டியை ஓட்டிட்டு போய் பிறகு தகவல் சொல்வார்கள்.
‘மாரிமுத்துவின் மகனின் செல்லப் பெயர் ‘குட்டி’ அதனால் இந்த ஆட்டுக்கு பெயர் ‘சின்னக்குட்டி’ என வைத்தார்கள்
வாழ்க்கை என்ற குக்கிராமம்,சிறிய கடைகள் இரண்டுதான் இருந்தன. ஆனால் ஞாயிற்று கிழமை மட்டும் இப்ராகிம் ஊருக்குள்ளே கண்ணெதிரில் ஆட்டை அறுத்து வெட்டிக் கொடுப்பதால் பக்கத்து ஊர்க்காரர்களும் கறி வாங்க வருவார்கள். ஒருநாள் இப்ராகிம், “அண்ணே, உங்க கிடா ஆடு வெலைக்கு தாரீங்களா?. வர்ர ஞாயிற்றுக்கிழமை கறி போடலாம். உமக்கும் அரை கிலோ இலவசம்” மாரிமுத்து,” நானெப்ப விக்கிறேன்னேன்”
“ஆடு முத்திக்கிட்டே போவுதில்ல; அப்பறம் வெலை கெடைக்காது; சீக்கு வந்துட்டா அதுவும் கெடைக்காது”
“யோவ் என்னா பேசுற? வாயக்கழுவு. சீக்கு வந்து போனா வீட்டு தோட்டத்துல பொதைச்சி, மண்டபம் கட்டுவேன்” இப்ராகிம் வாயடைத்துப் போய்விட்டார்.
ஊரின் நாட்டாமைக்காரர் மருதமுத்து வீடுதேடி வந்தார்.” மாரிமுத்து, பேரனுக்கு வர்ர ஞாயிற்றுக்கெழமை காது குத்து வச்சிருக்கேன். நீ குடும்பத்தோட வரனும். அப்பறம் சாதி சனம் நெறையவே வருமுல்ல; உன்னோட சின்னக்குட்டிதான் சரியாயிருக்கும்; என்னா வெலை சொல்ற”
“வெலையா, நான் எப்ப குடுக்கறதா சொன்னேன்? கோவிச்சுக்காதிங்க, ஆடு பேச்சு வேணாம்”
கடுப்பானவர், “உன்ன பார்க்கற வழியில பார்த்துக்கறேன்” என்று வேகமாக திரும்பிப் போய் விட்டார்.
ஒரே நாளில் இரண்டு பேர் சின்னக்குட்டியை குறிவைத்து கேட்டதில் மாரிமுத்து மனமுடைந்து விட்டார். ஆடுகளை மேய விட்டு ஒரு மரத்தடியில் படுத்து விட்டார். அந்த நேரத்தில் வேறொரு கிடாவுடன் சின்னக்குட்டி சண்டைபோட்டு அதைக்குத்தி கிழித்துவிட்டது. அந்த ஆட்டுக்காரர் பஞ்சாயத்து கூட்டி இழப்பீடு கேட்டார். பஞ்சாயத்தார்,
“ஆட்டு சண்டைக்கு ஆட்டுக்காரர் பொறுப்பாக முடியாது; செத்த ஆட்டின் உரிமையாளரும் கவனக்குறைவாக இல்லாமல் இருந்திருந்தால் சண்டையை தவிர்த்திருக்கலாம்” என்று தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.
அந்த ஆட்டுக்காரர் “உன் ஆட்டை என்ன செய்கிறேன் பார்” என்று சவால் விட்டுப் போனார்.
அந்தவாரம் சனிக்கிழமையன்று மகன் குட்டிதான் ஆடுகளை மலையடிவார மேய்ச்சலுக்கு ஓட்டிப் போனான்.
மரத்தடியில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தான்; நேரம் போனதே தெரிய வில்லை. எல்லா ஆடும் இருக்கையில் இந்த சின்னக்குட்டி மட்டும் காணோம். வேறொரு ஆட்டு கூட்டத்தில் நின்ற சின்னக்குட்டியை கண்டு பிடித்து மற்ற ஆடுகளோடு சேர்த்து வீட்டுக்கு ஓட்டிக் கொண்டு வீடு வந்தான்.
மறுநாள் ஞாயிறு காலை மாரிமுத்து அரக்கப் பரக்க மகன் குட்டியை எழுப்பினார். சின்னக் குட்டியைக் காணோமென்று அழுதார்.
குட்டி, ” சின்னக்குட்டி என பெயர் சூட்டி ஆசையாக வளர்த்த அந்த பெரிய ஆட்டை களவாண்டது யார் எப்படி “என மிகவும் குழம்பினான்.
“அந்த கறிக்கடை இப்ராகிம், நாட்டாமைக் காரர், ஆடுகளின் சண்டையில் செத்த ஆட்டின் உரிமையாளர் என யார் இதை செஞ்சிருப்பாங்கன்னு தெரியலையே. ஒருவேளை சினைக்காக யாராவது ஓட்டிக்கிட்டு போயிருப்பாங்களா” மாரிமுத்துவின் புலம்பல்.
“அப்பா, நான் தேடிட்டு வர்ரேன்” குட்டி கிளம்பினான்.
அதற்குள் மேலத்தெரு கந்தசாமி ‘சின்னக்குட்டி’யை ஓட்டிக் கொண்டு வந்தார். மாரிமுத்து ஓடிப்போய் சின்னக்குட்டியை கட்டிப் பிடித்துக் கொண்டு, “எங்கேடா படவா போயிட்ட” என கேட்டுக் கொண்டிருந்தார்.
கந்தசாமி, ” மாரிமுத்தண்ணே, உம்ம ஆடு நடு சாமத்துல என் வீட்டு கொட்டடிக்கு வந்து ஆதகளம் பண்ணிடுச்சு. சரி, விடிஞ்சதும் உங்கிட்ட கொண்டாந்து விடலாம்னு இதோ இப்ப ஓட்டியாரேன்” என்றார்.
மகன் குட்டி, ” அப்பா, இன்னைக்கு மத்தியாணம் கூட இவங்க ஆட்டு மந்தையில போய், அந்த ஆடுங்க பின்னாடி சுத்திக்கிட்டு இருந்திச்சு; நான் வலுக்கட்டாயமா திருப்பி ஓட்டியாந்தேன்”
என்று அப்பாவின் சந்தேகத்தைத் தீர்த்தான்.
மாரிமுத்துவுக்கு எல்லாம் புரிந்தது.
“அதான பார்த்தேன், நம்ம சின்னக்குட்டிய அத்தனை சுளுவா யாராலயும் புடிச்சிக்கிட்டு போக முடியாதுல்ல” மாரிமுத்து சின்னக்குட்டியின் வீரப்பிரதாப புராணம் பாடினார்.
Leave a Reply