திகில் நாயகன் நைட் ஷியாமளன்!

படைப்பாளி: கிரிஸ்டி நல்லரத்னம், மெல்போன், ஆஸ்திரேலியா

அன்று ஃபிலடெல்பியாவில் காலை சோம்பலுடன் விடிந்தது. அவன் கண்களைக் கசக்கிக்கொண்டு ஒரு சூடான காப்பியை ஊற்றி உறிஞ்சியவாறு ஹாலில் வந்து அமர்ந்தான்.

என்னதான் செய்வதாம்?

டிவியை உயிர்ப்பித்து சேனல் வேட்டையை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

அப்போது…..தன்பின்னால் மாடிப்படிகளில் ஏதோ கிசு கிசு சப்தங்களும் மகிழ்ச்சியான ‘களுக்’ களும்…. என்னவாய் இருக்கும் என ஊகிக்கும் முன்னே மலரிலும் மென்மையான இரு கரங்கள் அவன் கண்களை பொத்திற்று. மற்றும் இரு சோடிக்கரங்கள் அவனின் தோள்களில் பரிவுடன் இறங்கி இறுகிற்று. இந்த குட்டிக் குறும்பில் அவன் திகைத்தான்.

“ஹப்பி ஃபாதேஸ் டே டாட்!”

அந்த அன்புக்கூக்குரலுக்கு சொந்தமான மூன்று பதிவயது பெண்களின் அன்பில் மூழ்கினான் அவன். ஒவ்வொருவராக தம் அன்புத் தந்தையை ஆரத்தழுவி  கன்னங்களை நனைத்தனர். கடைக்குட்டி கையில் இருந்த ‘தந்தை நாள்’ பரிசு கைமாறி அவன் கைக்கு ஊர்ந்தது.

“ப்ளீஸ்…. ஓபன் இட் டாட்!’

அவர்கள் மூவரின் அன்புக் கட்டளைக்கு அடிபணிந்து மெதுவாய் அந்த பார்சலை கட்டியிருந்த இளநீல பட்டியை  அவிழ்த்து பிரிக்கிறான். அவனுக்கு பிடித்த நான்கு புத்தகங்கள் புது மணத்துடன் காட்சியளிக்கின்றன. அத்தனையும் கிராஃபிக் நாவல் எனும் வகுப்புக்குள் அடங்கும் பெரியோர் காமிக்ஸ். கனிவுடன் தன் செல்வங்களைப் பார்க்கிறான். பார்வையே ஆயிரம் கோடி நன்றிகளை  சொல்லியது.

நம் நாயகன் வேறு யாருமல்ல. ஹாலிவுட்  கனவுலகையே தன் ‘த சிக்ஸ்த் சென்ஸ்’ The Sixth Sense படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த திகில் மன்னன் நைட் ஷியாமளன்தான்!

ஷியாமளனின் கையில் இருந்த கிராஃபிக்  நாவலில்  ஒன்றான ‘மணல் கோட்டை’ Sand castle கதைக்கருவை மையமாக வைத்து ஷியாமளன் எழுதி தயாரித்து இயக்கியது ‘ஓல்ட்’  Old  திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து  கணிசமான வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருக்கிறது.

கிராஃபிக் நாவல்கள் இன்று விஞ்ஞானம், மர்மம், த்ரில்லர், திகில், ஆரசியல், துப்பறிதல், பழிவாங்கல் போன்ற கதைக்களங்களில்  வெளிவருகின்றன.  குரூரமான இரத்தம் சொட்டும்  காட்சிகள் இதன் பக்கங்களை நிரப்புவது மரபு. கதையைப் படித்து முடித்ததும்  கையை கழுவிடத் தோன்றும்! ‘மணல் கோட்டை’ யை 2011ல் புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பியர் ஆஸ்கார் எழுத சுவிஸ் ஓவியர் ஃபிரடெரிக் பீட்டாஸ் உருவங் கொடுத்தார். இதன் ஆங்கில பதிப்பு 2013ல் வெளிவந்தது.

இந்த நாவல்தான் ஷியாமளனின் புதிய  படைப்பின் கரு. கிராஃபிக் நாவல்கள்  கமராவினுள்  நுழைந்து திரையில் விரிவது ஒன்றும் புதிதல்ல. Walking Dead, Snowpiercer, Sin City, Hell Boy, The Mask என இந்தப்பட்டியல் நீளும்.

இந்த இயல் நிலை கடந்த உளவியல் திகில்  (psychological and supernatural horror)  கதை திரையில் சியாமளனின் கைவண்ணத்தில் சில மாற்றங்களுடன்  இப்படிப் போகிறது….. சத்தியம்…. இரகசியங்களை போட்டுடைக்கமாட்டேன்! கணவன் – மனைவி இரு செல்வங்களுடன் ஒரு ரம்மியமான பிரத்தியேக கடற்கரையோரம் விடுமுறையில் வந்திறங்குகின்றனர். அவர்கள் விரைவில் விவாகரத்துக் செய்ய இருப்பதால் இதுவே  அவர்களின் கடைசி குடும்ப  விடுமுறை. அதே கடற்கரையின் வனப்பை வேறு மூன்று குடும்பங்களும் இவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.

கடலில் நீந்தி விளையாடி சிரித்து கதை பேசி நிமிடங்கள்  நகர்கின்றன.  சடுதியாக ஆரம்பிக்கிறது அனர்த்தம்…. குழுவில்  ஒருவர் இனம் தெரியாமல் மரித்து நீரில் மிதக்கிறார்…..  அடுத்து இன்னொருவர்….  அடுத்து நீரில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனும் சிறுமியும்  திடீரென  பதிவயதானவர்களாகி,  “அம்மா,  தெரியவில்லையா……நான்தான் அம்மா உன் பிள்ளை” என்கிறார்கள்!  அந்த கடற்கரையின் விசித்திர சக்திதான் என்ன?  இறந்தவர்களின் மர்மம் என்ன? சரி, ‘மிகுதியை வெண்திரையில் காண்க’ என சொல்லி நான்  விலகும் இடம் இதுதான்!

ஜூலை 23, 2021ல் யூனிவர்சல் பிக்சஸ்சினால் திரையரங்குகளில் வெளியானது இந்த $18 மில்லியன் டாலர் பட்ஜெட்டில்  ஷியாமளனின் கூட்டுத்தயாரிப்பில் உருவான Old திரைப்படம்.   இது இவரின் 14வது படம். விமர்சகர்கள் ஷியாமளனின் அண்மையில் வெளிவந்த படங்களுக்கு  அளித்த அதே  குறைந்த புள்ளிகளையே

இதற்கும் அளித்து  வார்த்தைகளால் குதறித் தள்ளினர். “தட்டையான திரைக்கதை வசனம்  பாத்திரப்  படைப்பில் ஓட்டை,  பாராட்ட ஒன்றுமில்லை”  என பல ஓலங்கள். இதற்கு ஒரு காரணமும் உண்டு. பல முன்னணி நடிகர்களுக்கு பரம ரசிகர்கள் இருப்பது போல் ஹாலிவுட்டில் மிகச் சில இயக்குனர்களுக்கே ரசிகர் கூட்டங்கள் உண்டு.  ஷியாமளனும் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து வைத்திருக்கிறார். இது ஹாலிவுட்டில் இலகு அல்ல.  அவரின் கடும் உழைப்பிற்கும்   திறமைக்கும் கிடைத்த வெகுமதி இது. ரசிகர்களில் பலர் அவரின் புகழ் பெற்ற படமான The Sixth Senseஐ பார்த்து இணைந்த விசுவாசிகள்.  எனவே அவரின் எல்லாப் படங்களையும் அதே அளவுகோல் கொண்டு  அளப்பதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

விமர்சகர்கள் கிழித்தாலும்  Old ரசிகர்கள் அவரை கைவிட வில்லை.  ரீலீஸ் ஆகி முதல் வாரத்திலேயே ‘பாக்ஸ் ஆபீஸ்’  கணிப்பில் முதலாவது இடத்தை  தனதாக்கி  தடம் பதித்து நின்றது  இப்படம். முதல் வாரத்தில் அமெரிக்காவிலும் கனடாவிலும் $18.8 மில்லியனையும் மிகுதி உலகில் $6.7 மில்லியனையும் வசூலித்து கல்லாப் பெட்டியை  நிரப்பியது. ஆகஸ்ட் 18, 2021 வரை வட அமெரிக்காவில் $43 மில்லியன்களையும் இதர உலகில் $32  மில்லியன்களையுமாக மொத்தத்தில் $75 மில்லியன்களை குவித்துள்ளது. வெளியாகிய முதல் வாரத்திலேயே மார்வல் ஸ்டூடியோஸின் மெகா பட்ஜெட் தயாரிப்பான ‘BlackWidow’ வை மூன்றாம் இடத்திற்கு  தள்ளிய பெருமை  நம் நாயகன் படத்திற்கே உரித்தானது.

தமிழிலும் கடும் விமர்சனங்களுக்குஉள்ளான பல திரைப்படங்களை ரசிகப்பெருமக்கள் தாங்கிப் பிடித்தத சரித்திரம் உண்டு. உதாரணமாக 1960ல்  வெளிவந்த AVM இன் “களத்தூர்  கண்ணம்மா”  திரைப்படம் விமர்சனத்தில் சோடை போனாலும்  வசூலை அள்ளிக் குவிக்கவில்லையா?

கொரோனாவின் நிமித்தம் இந்தியா சீனா உட்பட பல ஆசிய நாடுகளில் திரையரங்குகள்  மூடப்பட்டுள்ளமையினால் ‘கலெக்ஷன்’ இல் குறைவு கண்டது என்பதும் உண்மை.சரி, எம். நைட் ஷியாமளன்  அல்லது மனோஜ் நெல்லியாட்டு  ஷியாமளனைப் பற்றி  சிறிது  தெரிந்து கொள்வோமே.

பிறப்பு : ஆகஸ்ட் 06, 1970 மாஹே, பாண்டிச்சேரி தந்தை : டாக்டர். நெல்லியாட்டு  சிஷியாமளன், மலையாளி மருத்துவர் தாய்: டாக்டர். ஜெயலட்சுமி – தமிழ், மகப்பேறு மருத்துவர். இத்தம்பதிகள் தம் முதல் பெண் குழந்தை  பிறந்ததும் 1960களில் அமெரிக்காவிற்கு குடியேறினர்.

1970ல் நைட் ஷியாமளனை பெற்றெடுக்க சென்னை  வந்த தாய் ஆறு மாதங்களுக்குப் பின் மீண்டும் மழலை  ஷியாமளனுடன் அமெரிக்கா  திரும்பினார். ஆம், ஒரு வகையில்  நைட் நம்மூர்காரர்தான்! அவரின் முதல் மூச்சுக்காற்று made in Chennai! நியூயார்க் பல்கலைக்கழகத்தில்  1992ல் பட்டப் படிப்பை முடித்து  வெளியேறும் போதே ‘நைட்’  என்ற பெயரையும் இணைத்துக் கொண்டார். அவர் தன் எதிர்கால மனைவி  டாக்டர்.பாவனா வாஸ்வானியையும் இதயத்தில் இணைத்துக் கொண்டதும் இங்குதான். சிறு வயது முதலே மூவி கமராவும் கையுமாக திரிந்து பல குறும்படங்களை சுட்டுத் தள்ளினார். தான் வியக்கும் இயக்குனர்கள்:  ஆல்ஃபிரட் ஹிட்ச்காக், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோர் என ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் நைட். அதனால்தானோ என்னவோ ஹிட்ச்காக்போல்  தன் படங்களிலும்  ஒரு காட்சியிலாவது வந்து  போவார்.

1992ல் இவரின் முதல் திரைப்படம் Praying with Anger  வெளிவந்தாலும் 1999 ல்  வெளிவந்த The Sixth Sense  தான் நைட்டை  உலகம் புகழும் இயக்குனராக்கியது எனலாம். சாமர்த்தியமான கதையோட்டமும் கடைசி காட்சியில் ஒரு திருப்பத்தை வைத்து ரசிகர்களை திகைக்கவைக்கும் யுக்தியும் அவருக்கு  ஒரு ரசிகர்கூட்டத்தை அமைத்துக் கொடுத்தது. 55 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்டு உலகளவில் 672 மில்லியன்களை கறந்தது இப்படம்.  ஆனால் 2000ம் ஆண்டு ஆஸ்கார் விருதுகளுக்கு இப்படம் ஆறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டாலும் (சிறந்த இயக்குனர் / சிறந்த திரைக்கதை உட்பட)  அவை எல்லாம் கைநழுவிச் சென்றன.

ஹாலிவுட்டில் காலடியெடுத்து வைக்கும் அனேக புது இயக்குனர்கள் ஒரு கையில் காமிராவையும் மறு கையில் இரண்டு லிட்டர்  தக்காளி சட்னியையும் எடுத்து  வந்து ஒரு பாழடைந்த  பங்களாவில் ஒரு பேய்க் கதையை குரூரமாக  எடுத்து நம்மை நடுங்க வைப்பது மரபு. ஆனால் ஷியாமளன் இதற்கு  விதிவிலக்காக சிந்தனைக்கு  சவால் விடும் திருப்பங்கள்  நிறைந்த படங்களை எழுதி  இயக்கி வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம் தேடிக்கொண்டார். மேலும் அவர் இயக்கிய எல்லாத் திரைப்படங்களும்  அவர் வாழும் ஃபிலடெல்பியாவிலேயே படமாக்கப்பட்டன – ஹாலிவுட்டில் அல்ல! Old மட்டும் டோமினியன் குடியரசில் படமாக்கப்பட்டது. அனேகமான திரைப்படங்களை  தன்  நண்பர் அஸ்வின் ராஜனுடன் சேர்ந்து நிறுவிய தயாரிப்பு நிறுவனமான Blinding Edge Pictures  இன் பெயரில் தயாரித்து  பிரபலமான ஸ்டூடியோக்களுக்கு லாபத்தில் விற்றுவிடுவதால் நஷ்டம் இவரை நெருங்குவதில்லை.  இவர் இயக்கிய மோசமான சில  படங்கள் கூட இவரின் வங்கிக்  கணக்கை காயப்படுத்தவில்லை!

2008ல் ஷியாமளனுக்கு இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தாலும் அவ்விருதின் தாத்பரியத்தை  அவர் உணர்ந்திருக்கவில்லை என்பதே உண்மை. இந்திய சினிமாவை கண்டுகொள்ளாத ஷியாமளனை இந்திய  சினிவாவும் கொண்டாடவில்லை எனலாம். ஷியாமளனின்  திரையுலகப்  பயணம்  நிச்சயம் ஒரு மேடு பள்ளம் கண்ட பயணமே.  ஆனால் அவரை ஒரு சிறந்த கதை சொல்லியாகவும் படைப்பாளியாகவும் திரையுலகம் கணித்து பல புதிய ஆக்கங்களில்  அவரையும் இணைத்து பயணிக்கத்தொடங்கியுள்ளது.

‘ஆப்பிள் TV+’  எனும் OTT தளத்தில் ஷியாமளன் தயாரித்து இயக்கும் ‘கூலி’ (Servant) எனும் திகில் தொடர்  இரண்டாவது சீசனை தாண்டி வெற்றி நடை போடுகிறது. இதன் வசனகர்த்தா : இஷானா ஷியாமளன்…. ஆம்  அவர் மகளேதான்! இவரின் மற்ற மகளும் சளைத்தவரல்ல…… அமெரிக்காவின் பிரபல R&B பாடகரான சாலேகா ஷியாமளன் தான் அவர்!

இம்மாதம் யூனிவெர்சல் பிக்சர்ஸ்  ஷியாமளன் தமக்கு இரு படங்களை எழுதி இயக்க வேண்டும் என வேண்டி ஒப்பந்தம் செய்து கொண்டன. தன் 29வது வயதில் The Sixth Sense திரைப்படத்தின் மூலம்  புகழின் உச்சியை தொட்ட ஷியாமளனை சில விமர்சகர்கள் தம் பேனாவினால் காயப்படுத்தி  சிதைக்க முயற்சித்தார்கள்  என்பது உண்மை. இன்றும் இது தொடர்கிறது . ஆனால் ஷியாமளன் தன் படைப்புக்களின்  மேல் மிகைப் பற்றுடன் பீடமிட்டு  அமர்ந்து  தியானத்தில்  மூழ்காமல் புதிய எல்லைகளை நோக்கிப் பயணிக்கிறார்.  எதிர்மறை விமர்சனங்களைக் கண்டு மனம் தளராமலும்  எதிர்வசை பாடி தன்னை புனிதப்படுத்த முனையாமலும் தொடர்கிறது அவர் பயணம். ஒரு நல்ல படைப்பாளிக்கு உரிமையான ‘திமிர்’  அவருக்கும் உண்டு. அது அவர் வளர்ச்சியின் ஒரு பரிமாணமே. ஆனால் அதை  பலர் தலைக்கனம் என வண்ணம் பூச முனையும் போது தம் புதிய  உயர்ந்த படைப்புகளிள் மூலமே  அவற்றிற்கு  பதிலளிக்கிறார்.

இம்மாதம் 6ம் திகதி தன் 51வது வயதை எட்டிய  நைட் ஷியாமளன் எம்மை தொடர்ந்து திகில்  உலகின்  புதிய பரிமாணங்களுக்கு அழைத்துச் செல்வார் என்பதில் ஐயமில்லை!

முற்றும்

இதை படைத்தவர்

எம் கதைகளின் ஓவியர் கிரிஸ் நல்லரத்னம், மெல்போன்,ஆஸ்திரேலியா அவர்களின் சிலிர்க்கும் கட்டுரை.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: