(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
அன்புத் தோழமைகளுக்கு வணக்கம். ஒரு முகநூல் குழுமத்தில் “இதுதான் ஓலைச்சுவடியா” என்ற சொற்றொடருடன் கூடிய கதைப் போட்டிக்கு எழுதப்பட்ட கதை. இப்போது உங்களுக்காகவும்.
“இதுதான் ஓலைச்சுவடியா”
ரெண்டு ஓலைச் சுவடியையும் வாங்கிப் பார்த்தேன். ஒரு பனை ஓலையில் ஏதேதோ படமும், மத்ததில் சீனா எழுத்துகளும் இருந்திச்சு.
மந்திரவாதி, “செங்கல் மாதிரி இருக்கற படம் தங்கம், ரெண்டாவது கிரீடம், மூனாவது வட்டம் நிலா, நாலாவது முக்கோணம் மலை, ஐந்தாவது வீச்சரிவாள் ஐயனார் கோவில், ஆறாவது கடிகாரத்தின் இரண்டு முள்ளும் மணி பன்னிரண்டைக் காட்டுது, ஏழாவது மூடிபோட்ட செப்புக் குடம்”
“அந்த சீனா எழுத்துக?”
“அதுதான் விளக்கம்; இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்னாடி இருந்த தமிழ் எழுத்துக; “
“சரி, என் கதைக்கு வருவோம்”
“அதுக்குத்தான் ஒன்ன என் குடிசைக்கு தனியா கூப்புட்டுருக்கேன். இந்த ஓலையில் உள்ள முதல் சித்திரம் தங்கம், ரெண்டாவது ராஜா; அதாவது தங்க ராஜா”
எனக்கு அதிர்ச்சி; அதான் என் பேரு.
“மூனு, நாலு, ஐஞ்சுக்கு வௌக்கம் வந்து நிலா.. பவுர்ணமி, மலை.. இந்த மலை, வீச்சரிவாள்…மேலேயிருக்கும் ஐயனார் கோயில், கடிகாரம்.. ராத்திரி பன்னெண்டு மணி. இந்த தங்கராஜா , பவுர்ணமியான இன்னிக்கி ராத்திரி பன்ணென்டு மணி்க்கு மலை மேல இருக்கற கோயிலுக்கு பேய் அந்த குடத்து புதையல எடுக்கனும்.”
எனக்கு கேக்க கேக்க ஒன்னுமே புரியல. “தங்கராஜு இது ஒனக்கான உத்தரவு; அதான் ஒன்ன தனியா கூப்புட்டு சொல்றேன்; மொத்த புதையலும் ஒனக்குத்தான், உன் கவலையெல்லாம் இனிமே தீர்ந்திடுச்சு”.
தெனமும் அந்த ஐயனாரை நான் வேண்டிக்கிட்டுதான் இருக்கேன். நாலு தங்கச்சிகளையும் கரையேத்திட்டுத்தான் எனக்கான வாழ்க்கைய பத்தி யோசிக்கனும். தலைச்சன் பிள்ளைக்கு இதுதான கடமை. என் ஜாதகம் ராஜாவோட ஜதகமாம். இங்க அல்லாடுறது எனக்கில்ல தெரியும். ஊர்ல உள்ள பொண்ணுங்கள்ளாம் என் பின்னாடியே சுத்துதுங்க. என்னை ராஜராஜன், ராஜேந்திரன் அப்பிடின்னு வர்ணிக்கிறதுகள். அப்போ ஒருவேளை நான் ராஜ அம்சம்தானோ.
என்ன ஆனாலும் ராத்திரி போய் பார்த்திட வேண்டியதுதான். பதினோரு மணிக்கெல்லாம் தனியாளாக மலையேற ஆரம்பிச்சேன். மலைன்னா பெரிய மரமெல்லாம் கெடையாது; ஒரே முள்ளுச் செடியாத்தான் இருக்கும். ஒத்தயடிப்பாதைல தத்தித்த்தி மேல ஏறினேன். பவுர்ணமின்னாலும் மழைமேகத்தால அரைகுறை வெளிச்சம்தான் தெரியுது.
“ஆ”
ஏதோ ஒன்னு மூஞ்சில மோதறா மாதிரி வந்துபோச்சி. சே..டார்ச் கொண்டாந்திருக்கலாம்.
இதென்னாடா நரிங்க கூட்டமா ஊளை உடுது. ஐயோ அசட்டு துணிச்சல்ல வந்துட்டேனா? மெல்ல கோயிலுக்கு வந்திட்டேன்; பகல்லயே பயமான பிராந்தியம். புதையல் குடம் எங்கிருக்கும்னு கேட்கலையே. அங்கிருந்த மரங்கள்ள இருந்த கோட்டான்கள் சத்தம் காதப்பொளக்குது. கோட்டான் சத்தம் புதுசு இல்ல; இப்ப பயமாயிருக்கு. வேல்லயும், சூலத்லயும் தொங்குற மணிங்க காத்துல ஆடி பயத்த அதிகமாக்குது; வயித்துல புளிய கரைக்குது. திடீர்னு ஒரு உருவம் பெரிய வீச்சரிவாள பின் பக்கமிருந்து வீசுச்சு. சடக்குன்னு நான் உக்காந்து தப்பிச்சேன். நிமிர்ந்து பார்த்தா மந்திரவாதி.
“டேய், ராஜ ஜாதகக்காரா, பல வருசமா உன்னமாதிரி ஜாதகம் உள்ளவனைத்தான் தேடிக்கிட்டிருந்தேன்; வசமா சிக்கிட்ட. தலைச்சன் ஒன்ன பலி குடுத்து நான் பெரிய அட்டமா சக்தியடையத்தான் இந்த தந்திரம் செஞ்சு ஒன்ன வரவழைச்சேன்”
மீண்டும் பாய்ந்தான்; நான் விலகவே நிலைதடுமாறி குப்புற விழுந்தவன் உருண்டு மலை மேலிருந்து கீழே அதல பாதாளத்தில் விழுந்தான்; செத்திருப்பான்.
காலையில அவன் குடிசைல வாசல்ல சின்னா பின்னமான அவன் பொணத்த சுத்தி ஒரே கூட்டம். அங்க வந்த ஒரு பொம்பள சத்தம் போட்டுக்கிட்டு இருந்தாள்,” அடப்பாவி போய்ட்டியா, நெல்லு வேக வைக்கிறப்ப ரெண்டு பனை ஓலைய எங்கிட்ட குடுத்து பழசாக்க அதயும் சேர்த்து வேக வச்சி வாங்கிட்டுப் போனான்; காசு ஒன்னும் குடுக்காமவே போய்ட்டான், பிராடு பய” எனக்கு எல்லாம் இப்ப நல்லா புரிஞ்சிட்டுது.
கற்பனை பிரவாகமாகப் பொங்கிய கதை. கொடுக்கப்பட்ட வார்த்தைகளுக்காகக் கதையை வடிக்க ஒரு நெருக்குதல் இருக்கும்போது இப்படித்தான் கதையின் நோக்கும் போக்கும் வாக்கும் அமையப்பெறும் போலிருக்கு. அதாவது மெட்டுக்காகப் பாட்டு எழுதப்படுவது போல.
LikeLike
உண்மையே, மெட்டுக்குத்தான் எழுதப்பட்டது. அதிலும் 300 சொற்களுக்குள் கதையை முடிக்கவேண்டும் என்ற கட்டாயம் வேற.கருத்துக்கு நன்றி உத்தமன்.
LikeLike