சரித்திர பின்னனியுள்ள கதைகளை இளம்வயதில் மிகவும் விரும்பிப் படித்ததுண்டு. தொடர்ச்சியாக சரித்திர பின்புலமுள்ள புதினங்களைப் படைத்த திரு. சாண்டில்யன் கதைகளே மிகவும் விருப்பமானவை. அதே போல கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படிக்கையில் ஆதித்த கரிகாலன் கொலை ஒரு மழுப்பலாகத் தோன்றியது. அன்மையில் சோழர் வரலாறு படிக்க நேர்ந்த போது இந்த ஆதித்த கரிகாலன் கொலை பற்றி மீண்டும் துப்பறியத் தோன்றியது. முன்னதாக சோழர் பரம்பரையை சற்றே தெரிந்து கொள்வது நன்று.
பிற்கால சோழர் எழுச்சி
பிற்காலச் சோழர்களின் எழுச்சி விஜயாலயன் மூலம் தொடங்கியது. முதலாம் பராந்தகன் சோழப் பேரரசுக்கு வளர்ச்சியைக் கொடுத்தான். அவனுக்கு ராஜாதித்தன், கண்டராதித்தன், அரிகுலகேசரி, உத்தமசீலி, அரிஞ்சயன் என்ற புதல்வர்கள். முதலாமவர் ராஜாதித்தன் தக்கோலப்போரில் யானை மீதிருந்தே வீரமரணம் அடைந்ததால் யானைமீது துஞ்சிய தேவர் எனும் பெயர் பெற்றார். இரண்டாமவர் சிவநேசச் செல்வரான கண்டராதித்தன் பராந்தகனுக்குப் பின் அரசரானார். மூன்றாமவர் அரிகுலகேசரி பற்றி தக்கோலப் போருக்கு பின் தகவலில்லை. நாண்காமவரான உத்தமசீலியை பாண்டிய மன்னன் வீரபாண்டியன் போரில் தலையைக் கொய்து ‘சோழன் தலைகொண்ட’ என்ற பெயரை சூட்டிக் கொண்டான் என்று கூற்று உண்டு. போர் அறத்துக்கு புறம்பான இச்செயல் பின்னர் விளைவை ஏற்படுத்தியது. கண்டராதித்தர் மகன் சிறு பிள்ளை என்பதனால் அவருக்குப்பின் அரிஞ்சயன் அரசரானார். இரண்டு ஆண்டுகளே ஆட்சி புரிந்தார். அரிஞ்சயன் மறைவுக்குப்பின் அவர் மகன் சுந்தர சோழன் பட்டத்துக்கு வந்தார். அவருக்கு ஆதித்த கரிகாலன், குந்தவை(மகள்), அருள்மொழி என மூன்று வாரிசுகள்.
அரிகுல கேசரியும், உத்தமசீலியும் அரசுசார்பான எதிலும் இல்லாமையால் சோழர் அரச பரம்பரை வரிசையில் இடம் பெறவில்லை என டாக்டர் மா. ராசமாணிக்கனார் தம் ‘சோழர் வரலாறு’ஆய்வில் கூறுகிறார்.
ஆதித்த கரிகாலனின் வீரமும், வேகமும் பிரம்மிக்க வைப்பவை. அவர் தாய் வழிப் பாட்டன் திருக்கோவலூர் மலையமான் வீரத்துடன் விவேகத்தையும் ஊட்டி வளர்த்தார்.
புதுக்கோட்டையின் தெற்கு எல்லையான சேவலி மலைகளுக்கு தென்பால் உள்ள சேவூர் என்னுமிடத்தில் வீரபாண்டியனின் பாண்டியப் படைகளும், சிறுவனான ஆதித்தன் பங்கு பெற்ற சோழப்படையும் மோதிக் கொண்டன; வீரபாண்டியன் தோல்வியடைந்தான். வீரபாண்டியன் தலையை கொய்து வந்து தஞ்சைக் கோட்டை வாயிலில் ஒரு கம்பில் சொருகி வைத்தான் ஆதித்தன். இது போரில் ஏற்கப்படாதது எனினும் தனது சிறிய பாட்டனார் உத்தமசீலியின் தலையை வீரபாண்டியன் முந்தைய போரில் வெட்டிச் சென்றதால் பழிவாங்கவே இதைச் செய்ததாக கூறுவர். ஆதித்த கரிகாலன் காஞ்சியில் தங்கி சோநாட்டின் வடவெல்லையை காத்து வந்தான். யாரும் எதிர் பாராவகையில் ஒருநாள் அவ்வீர வேந்தன் மறைந்தான்; அகாலத்தில் அந்த ஜோதி அணைந்தது. தந்திரமாக அவனைக் கொன்றுவிட்டார்கள்.
திருவாலங்காடு செப்பேடுகள்
விண்ணுலகு செல்ல வேண்டும் என்ற ஆசையால் ஆதித்தன் மறைந்தான், கலியின் வல்லமையால் ஏற்பட்ட காரிருளை போக்க, அருள்மொழிவர்மனை அரசனாகும்படி குடிமக்கள் வேண்டினர். தன்னுடைய சிற்றப்பன் அவ்வரச பதவியை விரும்புவதால் அவன் ஆசை தீருமட்டும் அரசனாக இருக்கட்டும் என்று அருள்மொழி அரசபதவியை மறுத்துவிட்டான் என்று தெரிவிக்கின்றன.
ஆதித்தன் கொலை பற்றி பலவித சர்ச்சைகள் உலவுகின்றன. கொலையாளி பற்றிய சந்தேகங்கள்:
1. அருள்மொழி பட்டமேற்பதற்காக குந்தவியும், அருள்மொழியும் சேர்ந்து சதி செய்து கொன்றார்கள்.
சோழர்கள் ஆட்சி முறைக்கும், எதிகளிடம் நடந்து கொள்ளும் முறைக்கும் மாறான குடும்பச் சூழல் உள்ளவர்கள் எனலாம். அதனால் குந்தவை ஆதித்தனை பாசமுள்ள அண்ணனாகத்தான் எண்ணியிருப்பாள். ஆதித்தனோ, அருள்மொழியோ இருவருமே அவளுக்கு ஒன்றுதான். அருள் மொழியும் அதை விரும்பியிருக்க மாட்டான். ஆதித்தன் கொலைக்குப்பின் மக்கள் ஒருமுகமாக அருள்மொழியை பட்டமேற்கச் சொல்லியபோது அதை ஏற்க மறுத்து தன் சிற்றப்பா மதுராந்தகனே முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என விட்டுக் கொடுத்தவன். அருள்மொழியும் சோழர் குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர்தான். தன் அண்ணனையே கொலை செய்யும் தம்பி இல்லை. அப்படி அரசனாக முடிசூட்டிக் கொள்ள ஆசை உள்ளவனாக இருந்திருந்தால், ஆதித்தன் மறைவுக்குப் பின் தனக்கு இளவரசு பட்டம் சூட்ட நிர்பந்திருப்பான். மதுராந்தகன் பெயரையே தன் மகனுக்கு சூட்டியிருந்தான். இதனால் குந்தவைக்கோ, அருள்மொழிக்கோ கொலையில் தொடர்பில்லை எனலாம்
2. ஆதித்தனின் பெரியபாட்டன் கண்டராதித்தனின் மகன் மதுராந்தக சோழன் தனக்கே அரசுரிமை வேண்டும் என்ற எண்ணத்தில் வேளிர்கள் அல்லது கரிகாலன் பகைவர்களுடன் சேர்ந்து ஆதித்தனைக் கொன்றிருக்கலாம்.
மதுராந்தகச் சோழன் சிவநேசச் செல்வரான கண்டராதித்தரின் மகனாவார். அவர் தாய் செம்பியன் மாதேவி ராஜமாதா என்பதாகத்தான் விளங்கினார். சிவாலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டிய அவர், தன் மகனும் அவ்வாறே இருக்க வேண்டும் என விரும்பினார். ஒருக்கால் மதுராந்தகன் பதவியாசையால் இதைச் செய்ய முயற்சித்தால் அதற்கு முதல் தடையே அவன் தாயாகத்தானிருப்பார். செம்பியன் மாதேவியே மொத்த சோழக் குடும்பத்தையும் கட்டி அரவணைத்துச் சென்றார். அருள்மொழியுடனேயே இருந்தார். கரிகாலனைக் கொன்றாலும் அருள்மொழி இருக்கையில் தனக்கு அரசபதவி கிடைப்பது சந்தேகமே என்பதால் மதுராந்தகனும் கொலையாளியாக இருக்க வாய்ப்பில்லை யென்றாகிறது.
3. வீரபாண்டியன் தலையைக் கொய்து, பாண்டிய நாட்டை நிர் மூலமாக்கியதால், பாண்டியனின் ஆபத்துதவி படையைச் சேர்ந்த விசுவாசிகள் செய்திருக்கலாம்.
வீரபாண்டியன் தலை கொண்ட கோப்பர கேசரி எனக் கொண்டாடப்பட்ட ஆதித்த கரிகாலனை பழிதீர்க்க வீரபாண்டியனின் ஆபத்துதவி படையைச் சேர்ந்த சிலர் சோழநாட்டில் ஊடுறுவி இருந்தார்கள். அவர்களில் சிலர் சோழ அரசிலும் புகுந்திருந்தார்கள். அவர்களே தக்க நேரம் பார்த்து இக்கொலையை நிகழ்த்தியிருக்க வாய்ப்பு.
வரலாற்று அறிஞர்களின் கருத்துகள்
வரலாற்று அறிஞர் கே.ஏ.நீலகண்டசாஸ்த்திரி தம் “சோழர் வரலாறு” (The Cholas) என்னும் நூலில் உடையார்குடி (கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி) கல்வெட்டு அடிப்படையில் சுந்தர சோழனின் தலைமகனும் மாமன்னன் இராஜராஜனின் அண்ணனுமாகிய ஆதித்த கரிகாலனின் கொலை நிகழ்வின் பின் புலத்தில் மதுராந்தக உத்தம சோழனின் துரோகம் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார். இது மதுராந்தக உத்தம சோழன் மீது ஏற்றப்பட்ட களங்கமாகும்.
பிற்காலச் சோழர் வரலாறு எனும் நூலினை எழுதிய வரலாற்ற ஆசிரியர் தி.வை. சதாசிவ பண்டாரத்தார் திரு. நீலகண்ட சாஸ்திரியாரின் கருத்துக்கு மாறுபட்டு ஆதித்த கரிகாலன் கொலை நிகழ்வில் உத்தமச் சோழன் பங்களிப்பு இருந்திருக்க இயலாதென்பதை வலியுறுத்துகிறார். சாஸ்திரியாரின் கருத்துக்களை மறுத்துரைப்பதற்கு தெளிவான சான்றுகள் எதனையும் அவர் முன்வைக்க வில்லை.
1971ம் ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை விவாகானந்தா கல்லூரி மலரில் இராஜராஜ சோழன் பற்றிய கட்டுரை ஒன்றினை வரைந்த ஆர்.வி.சீனிவாசன் என்பார் ஆதித்த கரிகாலன் கொலையின் பின்புலத்தில் செயல்பட்டவர்கள் அருண்மொழியும் (இராஜராஜனும்) அவனது தமக்கை குந்தவையும்தான் என்பதை வலியுறுத்துவதோடு பல கேள்விக் கணைகளையும் எழுப்பி தன் கருத்துக்களை மறுப்பவர்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். சீனிவாசன் அவர்களின் கருத்துக்களை வன்மையாக மறுக்கும் டாக்டர் க.த.திருநாவுக்கரசு அவர்கள் அருண்மொழி ஆய்வுத்தொகுதி எனும் கட்டுரைத் தொகுப்பு நூலொன்றில் உத்தம சோழனுக்கு எந்த விதத்திலும் இக்கொலையில் தொடர்பு இல்லை என்றும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு இராஜராஜனின் இரண்டாம் ஆட்சியாண்டில்தான் கண்டு பிடிக்க இயன்றது என்றும் பிராமணர்களாகிய கொலையாளிகளை மனுதரும சாத்திரத்தின் அடிப்படையில் அரசன் தண்டனை கொடுத்திருப்பானேயன்றி கொலை தண்டனை அளித்திருக்க இயலாது என்றும் தன் கருத்துக்களை பல சான்றுகளின் அடிப்படையில் கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் எழுதியிருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.
இவ்வறிஞர்களைத் தவிர மேலும் பல வரலாற்று ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் மதுராந்தக உத்தம சோழனைக் குற்றவாளி என்றும் இல்லை என்றும் தங்கள் தங்கள் கோணங்களில் எடுத்துரைத்துள்ளனர். ஆனால் இவர்கள் யாரும் தெளிந்த சான்றுகளோடு தங்கள் கருத்துக்களை மெய்ப்பிக்க இயலவில்லை.
புதின ஆசிரியர்கள் பார்வையில்…
“பொன்னியின் செல்வன்” என்ற வரலாற்றுப் புதினத்தில் திரு கல்கி அவர்கள் ஆதித்த கரிகாலன் கொலையில் உண்மையான குற்றவாளி யார் என்பதை வாசகர்களே ஊகித்து அறிவார்களாக என்கிறார். பாலகுமாரன் அவர்கள் கடிகை என்ற புதினத்தில் கொலையாளிகளான பிராமணர்களுக்கு பின்புலத்தில் செயல்பட்டவன் மதுராந்தக உத்தமச் சோழன்தான் என்று எழுதியுள்ளார். ஆதித்த கரிகாலன் கொலையைப் பொறுத்தவரை பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் முடிவால் படைப்பாளர்கள் மதுராந்தக உத்தமச்சோழனை குற்றவாளியாக்கி விட்டனர்.
உடையார்குடிக் கல்வெட்டு
“ஸ்வஸ்தி ஸ்ரீ கோ ராஜகேசரிவர்மர்க்கு யாண்டு 2 ஆவது வடகரை பிரமதேயம் ஸ்ரீ வீரநாராயண சதுர்வேதி மங்கலத்து பெருங்குறி பெருமக்களுக்கு சக்கரவர்த்தி ஸ்ரீமுகம் பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்……………………………………….. தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன்றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ……………………ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம். தாங்களும் இவர்கள் கண்காணியோடும் இவர்கள் சொன்னவாறு நம் ஆணைக்குரியவாறு குடியோடு குடிபெறும் விலைக்கு விற்றுத்தலத்திடுக இவை குருகாடிக்கிழான் எழுத்து
கொலையாளிகளும் சுற்றத்தாரும்
சோமன், அவன் தம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், அவன் தம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழப் பிரமாதிராஜன் ஆகிய மூவர் மட்டுமே ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள்.
சோமன் பெற்ற விருதுப் பெயர் கல்வெட்டில் சிதைந்துள்ளது. பஞ்சவன் பிரமாதிராஜன் என்ற விருது பஞ்சவர் என அழைக்கப்பெறும் பாண்டிய அரசர்கள் தங்கள் பிராமண அதிகாரிகளுக்கு அளிக்கும் விருதாகும். இருமுடிச் சோழ பிரமாதிராஜன் என்ற விருது சோழப் பேரரசனால் வழங்கப் பெற்றதாகும். இவ்விருவர் விருதுகளை வைத்து நோக்கும்போது முதலாமவனாகிய சோமன் நிச்சயம் பாண்டி நாட்டு பிரமாதிராஜன் விருது பெற்றவனாகவே இருந்திருத்தல் வேண்டும்.
எசாலம் (விழுப்புரம் வட்டம்) எனும் ஊரில் புதையுண்டு வெளிப்பட முதலாம் இராஜேந்திர சோழனின் செப்பேட்டுத் தொகுதியில் ஆதித்த கரிகாலன் பாண்டியனின் தலையைக் கொய்து, ஒரு கழியில் சொருகி, தஞ்சாவூர் அரண்மனை வாயிலில் நட்டு வைத்தான் என்று கூறுகிறது, போர்த் தர்மத்தையும் மீறி ஆதித்த கரிகாலன் செய்த அடாத செயலுக்குப் பழி தீர்க்கும் வகையில்தான் இக்கொலை நிகழ்ந்துள்ளது.
குறிப்புகள்
ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்கள் சோமன், இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன்ஆகிய 4 பேரும் கொலையைப் பஞ்சமா பாதகங்களில் ஒன்று என வகுத்தவர்கள், அரசில் உயர்ந்த பட்டங்கள் பெற்றவர்கள். அரசாங்கப் பணியில் இருந்த பஞ்சவன் பிரமாதிராசன் ரவிதாசன், பாண்டிய நாட்டு அரசியல் அலுவலர். கொலைக்குக் காரணம் அரசியல் !பாண்டிநாட்டு அலுவலர் பஞ்சவன் பிரமாதிராஜன் தூண்டுதலே காரணம்.
இதற்கு உரிய ஆதாரம் – உடையார்குடியில் காணப்படும் கல்வெட்டே சான்றாகும்.
எக்காரணம் பற்றியோ உட்பகை கொண்டிருந்த இரண்டு அரசியல் அதிகாரிகள், அவர்களின் உடன்பிறந்தவர் இருவரும் ஒருங்கு சேர்ந்து ஆதித்த கரிகாலனை வஞ்சகமாகக் கொன்று விட்டனர் என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். ஆயினும் உண்மைக் காரணம் ஏதும் தெரியவில்லை.
சோழர் முதலமைச்சர் அநிருத்த பிரும்மராயர் பணியிலிருந்து விலகியபின் ரவிதாசன் சோழப்பேரரசில் முக்கிய பதவியில் அமர்ந்ததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சுணக்கம் ஏற்படிருக்கலாம். ஆனால் சந்தேக வளையத்தில் தாங்கள் வருவதையறிந்த அவர்கள் அனைவரும் பாண்டிய நாட்டுக்கோ, சேரநாட்டுக்கோ தப்பியிருக்கலாம். அதனாலேயே அவர்களின் சொத்துடைமைகள் அரசால் பறிமுதல் செய்யப் பட்டன. இது சுந்தரசோழன் காலத்தில் அல்லது மதுராந்தக உத்தம சோழன் காலத்தில் நடந்திருக்கிறது. அந்த சொத்துக்களை விற்று ஊர் நல நிதியில் சேர்க்கச் சொல்லிய ஸ்ரீமுகமே உடையார்குடி கல்வெட்டு ஆகும்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்ததாலும், கண்ணால் கண்ட சாட்சி இல்லாததாலும், கிடைத்துள்ள ஆதாரங்களை வைத்து அவரவர் தம் கருத்தை கூறியுள்ளனர்.
நானும் என் கருத்தை கூறிவிட்டேன்.
‘எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் கண்பது அறிவு’ என முடிக்கிறேன்.
Leave a Reply