ஆசிரியர்- த.ஜெயகாந்தன்
ஜெயகாந்தனின் நாவல்கள் படித்திருக்கிறேன்.அவரின் சிறுகதைகள் (கிண்டிலில்) முதல்முறையாகப் படித்தேன். இந்த தொகுப்பில் 10 சிறுகதைகள் உள்ளன. ஜெயகாந்தனின் கதைகளில் கடவுள் மறுப்பு, கம்யூனிசம், தினக்கூலிகளின் வாழ்வியல் எல்லாவற்றையும் ஒரு காம்போவாக்கி இலவச இணைப்பாக கொஞ்சம் நக்கல் சேர்த்து (இந்தா வச்சுக்கோ என்பதுபோல) இதுதான் என் பாணி என்றிருக்கும்.
பதிவிடும் கதை
இரண்டு குழந்தைகள்: –
பஞ்சம் பிழைக்க வந்த சிவப்பியும் அவளின் 4 வயது மகன் சோணையாவும் ஒய்வு பெற்ற சப்ரிஜிஸ்டர் சுப்புவின் மனைவி தயவில் அவர்களின் மாட்டுக் கொட்டகையில் தங்குகின்றனர். சுப்பு பணியிலிருந்து ஒய்வு பெற்றாலும் மனைவியின் வேலைகளை கண்காணித்து குற்றம் சொல்லும் பணியை சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி குறையின்றி செய்கிறார். சிவப்பி கடைகளிலும் வீடுகளிலும் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறாள்.
உறைவிடம் தந்த வீட்டின் வேலைக்கு வீட்டம்மா கொடுக்கும் மிச்சம் மீதியோடு சாதம் வடித்த கஞ்சியை (வீட்டு அரிசி) விரும்பி வாங்கிக்கொள்கிறாள். தினம் சிவப்பி கஞ்சி வாங்க வரும் பொழுது சுப்பு தன் மனைவியிடம் “கஞ்சியில் தான் சத்து இருக்கிறது. நாளையிலிருந்து கஞ்சியை வடிக்காதே சோற்றை பொங்கு” என்று தன் கஞ்சனத்தை வடிகட்டாத வார்தைகளால் வெளிப்படுத்துகிறார்.
தன் மனைவி அவளிடம் பிரியமாய் இருப்பது, கஞ்சியைக் குடித்துவிட்டு தெம்பாய் இருக்கிறாளே என்ற ஆதங்கம், சோணையிடம் “4 வயதாகிறது, அம்மா மேல் ஏறிக்கொண்டு வருகிறாயா? நீயும் அம்மாவுடன் விறகு தூக்கிண்டு வரதுதானே.. நாளை நடந்து வராவிட்டால் என்ன செய்கிறேன் பார்” என விளையாட்டாய் சொல்வதுபோல் கூற, சிவப்பி தன் மகனுடன் அவர் பேசிவிட்டதாய் நினைத்து சந்தோஷப்படுகிறாள்.
சுப்புவின் பிறந்தநாளுக்கு மகளும் 4 வயது பேரனும் மற்ற விருந்தினர்களும் வர, வழக்கமான கஞ்சி தாமதமாக சோணை பசியால் துடிக்கிறான். வீட்டம்மாள் தண்ணீர் நிரப்ப சிவப்பியைக் கூப்பிட சோணையை சமர்த்தாக இருக்கச் சொல்லி செல்கிறாள். மகளை சாப்பிடவிடாமல் அழுது வம்பு செய்யும் பேரனை தாத்தா சமாதானப் படுத்துவதைப் பார்த்து சோணையா சிரிக்கிறான். அதனால் அவர் ஆத்திரமாகிறார். மகள் சாப்பிட்ட இலையை ஜாங்கிரியுடன் வெளியில் போட, சுப்பு சோணையை சீண்டும் நோக்கில் இனிப்பு எடுத்துக்கொள்ளேண்டா என்று இலையைக் காட்ட, சோணை அதை எடுத்து வாயில் வைத்து சுவைக்கிறான்.
அப்போது சிவப்பி வந்து எச்சப் பொறுக்கிறியா என்று குழந்தையை அறைந்து வாயிலிருந்த ஜாங்கரியை கையைவிட்டு எடுத்துவிட்டு இனிமே இப்படி செய்யாதே எனச் சொல்ல, ஐயாதான் எடுக்கச் சொன்னார் என்கிறது குழந்தை. சிவப்பி “ஒங்க புள்ளையா இருந்தா சொல்லுவிங்களா, உங்க எச்சி ஒஸ்தின்னா ஒங்களோட…” என்று வார்த்தை சாட்டையால அடிக்கிறாள். சுப்புவோ நான் சொன்னதற்கு என்ன ஆதாரம்? என்று கேட்க “மறவனுக்கு பொறந்தவன் அவன் பொய் சொல்லமாட்டான்” என்கிறாள் ஆக்ரோஷமாக. கஞ்சி குவளையுடன் வரும் வீட்டம்மாவிடம் என் குழந்தைக்கு எச்சிலை திங்க பளக்கறாரும்மா என புகாரளிக்க, “ஒங்கொழந்தைய நீ அடிச்சிட்ட, அவர நா என்ன செய்ய” என வீட்டுக்காரம்மா. (இரண்டு குழந்தைகள்… ஹா ஹா.. இதுதான் ஜெயகாந்தன் நச் !!)
‘எங்க எச்சில் கஞ்சியை ஏன் குடிக்கிறாய்?’ அகங்காரமாய் சுப்பு கேட்க, நீங்களே குடிச்சுகுங்க என்று கஞ்சியை சடாரென சாய்த்துவிட்டு மானமங்கையாய் சிவப்பி கிளம்பிவிடுகிறாள்.
ரசித்தது :
பிள்ளையின் கையில் முறுக்கு ஒன்றைக் கொடுத்து, தன் தலையில் விறகை வைத்து செல்கிறாள். பொடியனோ அம்மாவை எதிர்பார்த்து நிற்க தாய் ஓட்டமும் நடையுமாய் திரும்புகிறாள். அன்பினால் எதிரெதிர் திசையின் சூரியகாந்திபூக்களாக இருவர் முகத்திலும் சிரிப்பு. அன்னை பிள்ளையை அள்ளிக்கொள்ள மகனோ அதுவரை சாப்பிடாத முறுக்கை தாய்க்கு ஊட்ட அவளோ அணிலாய் துளியூண்டு கடித்துக் கொண்டு நீ துன்னு ராசா என பிள்ளைக்கு ஊட்டுகிறாள். அப்படியே மனதில் காட்சியாக, கண்ணில் கண்ணீர் வரவா என அதை முந்திக்கொண்டு இதழில் புன்னகை வருகிறது.
அக்கம் பக்கத்தில், அலுவலகத்தில், அறிமுகமான இடத்தில், ஆணோ பெண்ணோ தன்னைவிட வயதில் பெரியவராக இருந்து, எல்லோரிடமும் நன்கு பேசக்கூடியவராக இருப்பவர் தன்னிடம் பேசமாட்டாரா என்ற ஏக்கத்தோடு இருக்கும்போது, அவரே வலிய வந்து (சுயநலத்தோடு) பேசுகையில், மனம் மகிழ்ந்து, புத்தி ஏன் என்ற கேள்வியை மறந்து போகிறது. அதுபோலத்தான் சிவப்பி தன் மகனுடன் சுப்பு பேசிவிட்டதாய் நினைத்து சந்தோஷப்படுகிறாள்.
தன்மானத்தை சீண்டும் போது சுப்பு போன்றவர்கள் யோசித்து (வடிகட்டி) பேசவில்லை என்றால் சிவப்பி போன்றவர்களிடம் வாங்கி கட்டிக்கொள்ள வேண்டியதுதான்!!!
உழைப்பையும் தன் மானத்தையும் சோனைக்கு சோற்றோடு ஊட்டி ம்..ஹூகும்… தட்டிவிட்டு புரிய வைத்துவிட்டாள் சிவப்பி. வாழ்க சிவப்பி.!!!
இதில் நான் ரசித்தது.
“உழைப்பையும் தன் மானத்தையும் சோனைக்கு சோற்றோடு “ஊட்டி ம்..ஹூகும்… தட்டிவிட்டு “ புரிய வைத்துவிட்டாள் சிவப்பி. வாழ்க சிவப்பி.!!”
LikeLiked by 1 person
நன்றிகள
LikeLike