
ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா.
கவித்திறத்தால் கவிஞர்களுக்கே உரித்தான கர்வமும் அதனால் வரும் கம்பீரமும் கொண்டவன் கதாநாயன் முத்துக்குமரன். பாய்ஸ் கம்பெனியில் நாடகம் இல்லாத நேரத்திலும், நாதா தங்கள் சித்தம் என் பாக்கியம் என்று ஸ்திரி பார்ட்டில் முத்துக் குமரனோடு நடித்த கோபால் சென்னையில் பெரிய நடிகனாக இருக்கிறான். மாதவி துணை நடிகையாக இருந்து கோபால் சாரின் பழக்கத்தால் கதாநாயகியாக வளர்ந்ததால் அவன் கண்ணசைவுக்கு கட்டுப்பட்டு நடக்கும் விசுவாசி.

கோபாலைக் காண வரும் முத்துக்குமரனை வாத்தியாரே என வாஞ்சையோடு வரவேற்கிறான். தான் புதிதாக ஆரம்பிக்கும் நாடகக் கம்பெனிக்கு நண்பனையே நாடகம் எழுதித் தரச் சொல்கிறான்; வெளிவீட்டில் (அவுட்ஹவுஸ்) நாடகாசிரியன் எழுதும் நாடகத்தை டைப்பிங் செய்யும் கதாநாயகிக்கும் ஒத்திகையே தேவைப்படாத காதல் அரங்கேறுகிறது.

வெளிநாட்டில் நாடகம் போடுவதற்காக ஹோட்டலில் தங்கியிருக்கும் மலாய் அப்துல்லா என்ற பணக்காரரை விருந்துக்கு அழைப்பதற்கு மாதவியிடம் “நீ மட்டும் தனியே சென்று அழைத்து வா” என்கிறான் கோபால். மாதவியோ காதலனை உடன் கூட்டிச் செல்கிறாள்.

அரங்கேற்றத்தன்று கூட்டத்தால் அரங்கம் நிரம்புகிறது. காட்சி, வசனம், பாடல்கள் என ஒவ்வொன்றுக்கும் ரசிகர்களின் கரவொலி,விசில் ஒலி, நாடகத்தை பாராட்டிய மந்திரியின் புகழ்மொழி எல்லாம் சேர்ந்து முத்துக்குமரனின் தலையை கனக்கவைக்கிறது; முத்துக்குமரனுக்கு அப்துல்லா மாலை போட அவனோ “மாலை வாங்கிக்கொள்வதற்காக சாதாரண மனிதர்கள் முன்பு ஒரு கணம் தலை குனிவதை விரும்பாதவன் நான்” என்று படைப்பின் செருக்கோடு கூறிவிடுகிறான்.

மலேசியாவில் அப்துல்லா மாதவியை சுற்றிவர, கோபாலும் ஒத்துபாட, மாதவி ஒதுங்க, ஒருமுறை அப்துல்லா அவளின் கையை பிடித்திழுக்க பிரச்சனை பெரிதாகிறது. நேரடியாக கோபாலிடமே மாதவி “சீ நீங்களும் ஒரு மனுசனாட்டம் ஒரு பொம்பளைகிட்ட வந்து இப்படி கேட்க வெக்கமாயில்ல” கர்வக்காரனி்ன் காதலியாக சீறிவிடுகிறாள். முத்துக்குமரன் தான் இதற்கெல்லாம் காரணம் என கோபால் கடுப்பாக எதிர்பாராத திருப்பங்கள் எதிர்பார்க்கும் விருப்பங்கள் எனகதை மெருகேறி முடிகிறது.

ரசித்தது: ஒவ்வோர் முறையும் கோபால் சொல்லும் சின்னத்தனமான விஷயங்களை பழக்கத்தின் காரணமாக செய்து காதலனின் கோபத்திற்கு ஆளாகி அவனிடம் தயங்கி, மயங்கி வந்து தண்டித்தாலும் சரி, மன்னித்தாலும் சரி என்று மாதவி தப்பு செய்த குழந்தையாய் நிற்க, முத்துக்குமரனும் அவள்மேல் கோபப்பட்டு, முடியாமல் தன் கர்வத்தை விட்டு அவளை ஏற்பதும் அழகு. கூடுவிட்டு கூடு பாய்வது போல மாதவி மெல்ல மெல்ல தன் அடிமை புத்திமாறி கர்வக்காரனின் காதலியாக முழுமையாக மாறுவது.

முத்துக்குமரனோ மலேசியாவில் அப்துல்லாவும் கோபாலும் பாராமுகமாய் நடத்துவதை பெரிதாக்காமல் தன்காதலிக்காக கர்வத்தை கட்டுப்படுத்தி நடக்கிறான். ஒருவரின் உள்ளத்து உணர்வுகளை மற்றவர் செயல்படுத்துவதுதானே உண்மைக்காதல்.! துணைநடிகையர்கள் தேர்வை ‘ஏண்டா தினமும் 10பேரை வரச்சொல்லி ரசிக்கிறாயா? என்ற கிண்டல், சரித்திர நாடகத்தில் ஹாஷ்யம் இல்லை என்பவரை கோபத்தை அடக்கிக்கொண்டு ஹாஸ்யம் எனத்திருத்துவது, வாலை சுலற்றும் என தவறாக உச்சரிக்கும் நடிகர்களைப் பார்த்து நொந்து போவது என கதையில் ரசிக்கத் தகுந்த இடங்கள் நிறைய இருக்கின்றன.
சமுதாய வீதியில் கோபால் முத்துக்குமரன் என்ற இரண்டு ஆண் குதிரைகளையும், மாதவி என்ற பெண் குதிரையையும் சேர்த்து பூட்டிய வண்டியை பார்த்த(து) சாரதி அழகாக கொண்டு செல்வதை மறுக்க இயலாது. பார்த்தசாரதியின் சமுதாய வீதியை முழுமையாகப் படித்தால் கிராமத்தில் திருவிழாநாட்களில் வீதி நாடகம் பாரத்த நிறைவு.
“சமுதாய வீதியில் கோபால் முத்துக்குமரன் என்ற இரண்டு ஆண் குதிரைகளையும், மாதவி என்ற பெண் குதிரையையும் சேர்த்து பூட்டிய வண்டியை பார்த்த(து) சாரதி அழகாக கொண்டு செல்வதை மறுக்க இயலாது.” அழகான, மிகப்பொருத்தமான உவமை. 👍👌👏
LikeLike
நன்றிகள்
LikeLike
சமுதாய வீதி நாவலின் மூலம் நாடகம் மற்றும் திரைத்துறைச் சிக்கல்கள். உதாரணமாக, வளர்ந்துவிட்ட கலைஞர்களின் எதேச்சாதிகாரப்போக்கு, பெண்களைத் தவறாகப் பயன்படுத்தப்படுத்தல் ( Me too)
தென்கிழக்காசிய நாடுகளில் தமிழ்க்கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் இருக்கும் வரவேற்பு, இதைச் சாதகப் பயன்படுத்திக்கொண்டு பணம் பண்ண ஆசைப்படும் மனிதர்களின் முகங்கள் என்று பலவற்றை மிக அழகாகப் பார்த்தசாரதி சித்திரித்திருப்பார் .
சமுதாயவீதி கதைக் கருவாலும் கதைப்பின்னல்களாலும், சித்திரிக்கப்பட்டுள்ள மனித குணவியல்புகளளாலும் உணர்வுகளாலும் இன்றைக்கும் என்றைக்கும் பொருத்தமான நாவல். எக்காலத்துக்கும் ஏற்ற திருக்குறள் போல.
LikeLike
சரியானகணிப்பு நன்றிகள்
LikeLike