முடியாட்சி அகன்று குடியாட்சி நிலவும் நாட்டில் நாமிருக்கின்றோம். எனினும் நம் மொழி, நாகரிகம், பண்பாடு எல்லாம் பற்றி பேசுகிறபோது நம்மையறியாமல் நாம் முடியுடை வேந்தர்கள் பற்றிதான் பேசுகிறோம். வீரம்,கொடை, நீதி என்கிறபோது மன்னர்கள் பற்றியே பேச வேண்டியுள்ளது. அப்படிப் பேசப்படும் மன்னர்களில் ஒருவர்தான் ராசேந்திர சோழன். மாபெரும் கடற்படை கொண்டு இந்துமாக்கடல், வங்கக் கடல், அரபிக்கடல் முழுமையும் கட்டியாண்டார். அந்த கடற்படைத் தளம் அமைந்திருந்த இடம் ‘தீவுக் கோட்டை’ ஆகும்.
தீவுக் கோட்டை நாகை மாவட்டம், சீர்காழி வட்டம் கொடியம்பாளையம் ஊராட்சியில் கொள்ளிடம் ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. கொடிகாத்தான் பாளையம் என்பதே கொடியம் பாளையம் ஆனதாகக் கூறுகிறார்கள். இது நாகை மாவட்டத்திலிருந்தாலும் கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது. ஒருபுறம் கொள்ளிடம் ஆறும், இதர பக்கங்களில் மாங்குரோவ் காடுகள் நிறைந்த ஆழமான நீர் நிலை சூழ்ந்திருக்கிறது. கடற் பகுதியிலிருந்தும் படகில் வரலாம். சுமார் பத்து கி.மீ சுற்றளவு உடைய இத்தீவில் முட் செடிகளே நிரம்பியுள்ளன. இதனுள் கோவில்களின் சிதைவுகள் காணப்படுகின்றன.12முதல் 18ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட செங்கற்களின் சிதறல் காண முடிகிறது. உடைந்த பீரங்கி குண்டுகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
பதினைந்து ஆண்டுக்கு முன்னர் வரை இங்கு வசித்த மக்கள் குடிநீர்ப் பஞ்சதால் ஊரை விட்டு வெளியேறி விட்னர். ஒரு காளி கோவில் உண்டு. அதனருகில் இரண்டு முதல் இரண்டரை அடி அகல கோட்டைச்சுவறின் இடிபாடுகள் கோட்டை இருந்ததற்கான ஆதாரமாக காட்சியளிக்கின்றன. தீவைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு கோட்டை வாய்க்கால் என்பது பாசன நீரளிக்கிறது. வெகு அருகிலேயே கடலும், 5கி.மீ தூரத்தில் பிச்சாவரமும் உள்ளன.
இத்தீவுக்கோட்டை எனும் தீவு தேவிக்கோட்டை, தீவுப் பட்டிணம்., ஜலக்கோட்டை என்ற பெயர்களிலும் வழங்கி வந்திருக்கிறது. மக்கள் இப்போது கோட்டை மேடு என்கிறார்கள்.
கொடியம்பாளையத்தின் வடக்கில் உள்ள வாடா குடாவு என்னுமிடத்தில்தான் போர்த்துறைமுகம் அமைக்கப் பட்டிருந்ததாக இப்பகுதி மக்கள் கருதுகிறார்கள். தீவுக்கோட்டையின் எதிர்க்கரையில் பீரங்கிமேடு என்ற இடம் உள்ளது.
பொதுவாக ஒரு ஊரில் ஒன்றிரண்டு நாவிதர் குடும்பங்களே இருக்கும். கொடியம்பாளையத்தில் ஒரு தெரு முழுவதுமாக நாவிதர்கள் பரம்பரையாக வசித்து வருகிறார்கள். தீவுக்கோட்டை மற்றும் கொடியம்பாளையம் பகுதியில் போர்வீரர்கள் பெருமளவில் இருந்ததால் அவர்களின் தேவைக்காக நாவிதர்கள் அதிக அளவில் குடியமர்த்தப் பட்டிருக்கிறார்கள்.
திரு. ஆறு.அண்ணல் அவர்கள் தீவுக்கோட்டைக்கு நேரில் சென்று ஆய்ந்து இத்தகவல்களைக் கூறுகிறார்கள்.
இன்று மனித நடமாட்டமே இல்லாத ஊர் ஒருகாலத்தில் சோழர்களின் தலைநகராக இருந்தது என்பதறிய வியப்பாக உள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழன் ஒப்பற்ற கடற்படையின் வலிமையால் தென்கிழக்கு ஆசிய நாடுகளான கடாரம், ஜவா, சுமத்ரா, இந்தோனேஷியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளை தமிழரின் வர்த்தக மேலாதிக்கதின் கீழ் கொண்டு வந்தான். தமிழ்நாட்டின் நகரத்தார்களும் மரைக்காயர்களும் இந்துமாக்கடல், அரபிக்கடல், வங்கக் கடல் பகுதியில் உள்ள நாடுகளில் அச்சமின்று வணிகம் செய்ய ஏதுவானது. அவனது பலம் வாய்ந்த கடற்படை இதை சாத்திய மாக்கியது. கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக்கியதற்குகூட தீவுக் கோட்டையை கடற்படைத்தளமாக்கியதே காரணம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். போர்க் காலங்களில் சோழ மன்னர்களும், அவர்களின் ஆதரவு பெற்ற பாண்டிய மன்னர்களும் தமது உயிருக்கு பாதுகாப்பாக பதுங்கும் இடமாகவும் தீவுக் கோட்டை இருந்துள்ளது.
மூன்றாம் ராஜேந்திரசோழன் காலத்தோடு கிபி 1279 ஆம் ஆண்டோடு சோழராட்சி முடிவுக்கு வந்ததாக பழைய வரலாற்று ஆய்வுகள் குறிப்பிட்டன. ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திலிருந்து இடம் பெயர்ந்து தீவுக் கோட்டையில் சோழராட்சி தொடர்ந்திருக்கலாம் என சில வடமொழி நூல்களும், நாயக்கர் வரலாறுகளும் கூறுவதாக அறிகிறோம். அதை நிரூபிக்கும் விதமாக அரண்மனை சிதிலங்களும், கல்வெட்டுகளும் தீவுக்கோட்டையில் காணப்படுகின்றன.
மூன்றாம் ராஜேந்திர சோழனோடு சோழ பரம்பரைமுடியவில்லை, அந்த காலத்துக்கு பிறகும் சோழர்கள் வாழ்ந்திருக் கிறார்கள் என்பதற்கு சான்றுகள் உள்ளன. இதற்கு குமாரகம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய ‘மதுரா விஜயம்'(கி.பி.1371)ஆதாரமாக விளங்குகிறது. விஜயநகர இளவரசன் மதுரை சுல்தானை வெற்றி கொண்டதை விளக்கும் கங்காதேவியின் வடமொழி மதுரா விஜயத்தின் நான்காம் காண்டத்தில் ,
“எங்கும் மங்கள ஒலி முழங்க சோழ , சேர , பாண்டிய மன்னர்கள் தங்கள் கைகளில் கொடியேந்தி குமார கம்பணனுக்கு முன் சென்றார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.
வீரசேகர சோழனுக்கும் மதுரை சந்திரசேகர பாண்டியனுக்கும் ஏற்பட்ட போரே விஸ்வநாத நாயக்கர் மதுரையை கைப்பற்ற காரணமானது. எனவே அதற்கு முன்னரே சோழர் ஆட்சி பிச்சாவரத்தில் இருந்தது உறுதியாகிறது.
பிச்சவரம் குட்டியாண்டவர் கோவிலின் 1583 ஆம் ஆண்டு கல்வெட்டு ‘விட்டலேசுவர சோழகன்’ எனும் மன்னன் பெயர் குறிக்கப்பட்டுள்ளது. இவர் செஞ்சியை ஆண்ட கிருஷ்ணப்ப நாயக்கருக்கு அடங்கிய சிற்றரசர். தேவிக்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு செஞ்சி அரசின் தென்கிழக்குப் பகுதியான சிதம்பரம், புவனகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளை ஆட்சி செய்தார். தேவிக் கோட்டை அகழியில் பழக்கப் படுத்திய முதலைகள் வளர்க்கப்பட்டதாகத் தெரிகிறது. தஞ்சையிலிருந்து ரகுநாத நாயக்கர் 1615 இல் பெரும் படை திரட்டி வந்து 80 வயது சோழகன் மீது போர் தொடுத்தார். போர்த்துக்கீசியரும், கிருஷ்ணப்ப நாயக்கரும் சோழகனுக்கு உதவியுள்ளனர். தீவுக்கோட்டையில் ஆட்சி செய்த விட்டலேசுவர சோழகனை வெற்றி பெற்று சோழகனை சிறையிலடைத்தார். உதவிய கிருஷ்ணப்ப நாயக்கர் தப்பிச் சென்றார். போர்துக்கீசிய பாதிரியார் களான பிமெண்டா மற்றும் டூ ஜெரிக் ஆகியோர் சோழகனைப் பற்றியும் கோட்டையின் அமைப்பு பற்றியும் எழுதியுள்ளார்.
தீவுக்கோட்டை தஞ்சை நாயக்கர், மராட்டியர், ஆங்கிலேயர்,பிரஞ்சுக்காரர் மீண்டும் ஆங்கிலேயர் என ஆட்சி மாறி வந்தது. பிரஞ்சுக்காரர் லாலியிடமிருந்து கைப்பற்ற நடந்த போரில் கோட்டை சிதிலமடைந்தது. தீவுக்கோட்டை இனி பயன்தராது என்று ஆங்கிலேயர் அதை தகர்த்துவிட்டனர், எஞ்சிய இடிபாடுகளே இன்று காணக் கிடைக்கின்றன. 16,17,18 மற்றும்19 ஆம் நூற்றாண்டுகளில் தீவுக் கோட்டையிலிருந்தும் பிச்சாவரத்திலிருந்தும் சோழர்கள் ஆட்சி செய்துள்ளனர். பிச்சாவரம் பாளையக்காரர்கள் என்ற அளவில் சுருங்கிவிட்டார்கள். பிச்சாவரம் பாளையக்காரர்களுக்கு சிதம்பரம் ஆலயத்தில் முடிசூட்டுவது மரபாக இருந்துள்ளது.
1908ஆம் ஆண்டு பிச்சாவரம் அரசர் சாமிதுரை சூரப்ப சோழகனாருக்கு சிதம்பரம் கோவில் பஞ்சாட்சர படியில் அமர்த்தி முடி சூட்டப்பட்டது.
தில்லைக்கண்ணு சூரப்ப சோழகனாருக்கு1911ஆம் ஆண்டும், ஆண்டியப்ப சூரப்ப சோழகனாருக்கு 1943 ஆம் ஆண்டும், சிதம்பரநாத சூரப்ப சோழகனாருக்கு1978 ஆம் ஆண்டிலும் சிதம்பரம் கோவிலில் முடி சூட்டப்பட்டுள்ளது.
இன்றைய கலகட்டத்தில் முடி மன்னர்கள் பற்றிய ஆய்வைவிடவும் , அவர்கள் ஆண்ட நிலத்தை ஆய்வது அவசியம். பிச்சாவரம் அரண்மனை மறைந்துவிட்டது. தீவுக்கோட்டை பல வரலாற்று உண்மைகளை தன்னுள்ளே கொண்டுள்ளது. அரசின் தொல்லியல் துறை இந்த தீவை ஆய்வு செய்ய வேண்டும்; வரலாற்று அறிஞர்களும் தீவில் ஆய்வை மேற்கொண்டு சரித்திர உண்மைகளை வெளிக் கொண்டு வந்து மக்களுக்கு வழங்கிடவேண்டும்.
Leave a Reply