வாசித்தது – மணிமொழி நீ என்னை மறந்துவிடு
ஆசிரியர் – தமிழ் வாணன்
தமிழ் வாணன் என்றதுமே நினைவில் வருவது அவரின் கல்கண்டு பத்திரிக்கைதான்.
சின்னச் சின்ன டைமணட் கற்கண்டுகளாய் புத்தகம் முழுவதும் அழகு, ஆரோக்கியம், விளையாட்டு வெளிநாட்டு, உள்நாட்டு தகவல்களாய் நிறைந்திருக்கும். அவ்வளவு செய்திகளையும் சேகரித்து படித்து ஒழுங்குபடுத்தி (வாசகர்கள் அனுப்பியதானாலும் கூட) ஒவ்வோர் வாரமும் பத்திரிக்கை முழுவதுமாக எப்படிபட்ட உழைப்பு அவருடையது. அந்நாளைய கூகுள் என்று கூட சொல்லலாம். “மணிமொழி என்னை மறந்து விடு” கிண்டிலில் படித்தேன் என்பதை விட பறந்தேன் என்றே சொல்லலாம். அத்தியாயம் ஒவ்வொன்றின் முடிவிலும் அடுத்த அத்தியாயத்தை படிப்பதற்கான தூண்டுதல்.
மும்பையில் இருக்கும் மருதநம்பி தன் ஒரே மகளான மணமொழிக்குத் தெரியாமல் கடத்தல் தொழிலின் முகவராக செயல்படுகிறார். சங்கேத குறியீடுகள் உள்ள பெட்டிகளை கொடுக்கப்பட்டிருக்கும் முகவரியில் சேர்ப்பது அவரின் வேலை.
ஒருமுறை மருதநம்பிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட மணிமொழி கேசவதாஸ் என்பவருக்கு பெட்டியைக் கொடுக்கச்செல்லும் போது அவர் இறந்து கிடப்பதைப் பார்த்து தற்கொலை என நினைத்து திரும்பிவிடுகிறாள்.
மருதநம்பி தன்மகளைக் காப்பாற்ற சென்னைக்கு கொடுக்கக்கூடிய பெட்டிகளை தந்து இனி இதுபோன்ற செயல்களோ அவர்களுடனான தொடர்புகளோ ஏதும் வைத்துக்கொள்ளாதே என்று எச்சரித்து விமானம் ஏறும்போது “மணிமொழி நீ என்னை மறந்துவிடு” என்று சொல்லி கண்ணீருடன் வழியனுப்புகிறார்.
சக பயணியாக கைக்குழந்தையுடன் இருக்கும்பெண் தன் பெயரை மணிமொழி என்று சொல்ல கதைநாயகி மணிமொழியைப் போல நாமும் விழிகள் விரிய, கோமதி என்பதுதான் என் பெயர் ஆனால் என்னை மணிமொழி என்றுதான் என்கணவர் கூப்பிடுவார் என்கிறாள். இயந்திர கோளாறால் விமானம் நடுவானில் தடுமாற விமானிகள் பாராசூட் தருகிறோம் துணிவில்லாதவர்கள் குதித்துக்கொள்ளலாம் என்கின்றனர்.
பயந்துபோன கோமதி மணிமொழியிடம் தன் கணவன் பக்ராநங்கலில் வேலை செய்தபோது வெடிவிபத்தில் இறந்துவிட்டான். காதல்திருமணம் செய்துகொண்டதை கணவன் தன் அப்பா அம்மாவிடம் கூறவில்லை. சாதியிலும் வசதியிலும் குறைந்த என்னை புகுந்த வீட்டில் ஏற்பார்களா என்றும் தெரியவில்லை. மணிமொழி என்ற பெயருள்ள இனி நீதான் குழந்தைக்குத்தாய் நான் இறக்கப்போகிறேன் என்று சொல்லிவிட்டு விமானத்திலிருந்து குதித்துவிடுகிறாள் விமானிகளின் முயற்சியால் விமானம் சீராகி சென்னைக்கு வருகிறாள். கோமதி என நினைத்து மணிமொழியை மருமகளாக ஏற்றுக்கொள்கின்றனர்.
கோமதியின் பெட்டிச்சாவி இல்லாமல் தடுமாற கொழுந்தன் முத்தழகின் நண்பன் தங்கதுரை திறந்து கொடுக்கிறான். மணிமொழி முத்தழகை விரும்புகிறாள். அத்தை மகளான சிவகாமியை முத்தழகின் அண்ணனான அரசுக்கு திருமணம் செய்ய இருந்ததை தெரிந்துகொள்கிறாள். தங்கதுரை சிவகாமியை சுற்றி சுற்றி வருகிறான். அவன் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவன் என்று மணிமொழி கண்டுகொள்கிறாள்.
கேசவதாஸ் கொலையில் மருதநாயகம் சிறைப்படுகிறார். இறந்ததாக நினைக்கும் அரசுவிடம் இருந்து வரும் கடிதத்தில் விபத்தினால் பார்வை இழந்தவனாக மீண்டு (ட) வரும் தகவலால் குடும்பத்தினர் மகிழ்ச்சியும் வேதனையும் ஒருங்கே அடைகின்றனர். மணிமொழி இனி அங்கிருந்து நடிக்க முடியாது யோசிக்கிறாள்.
அதனால் முத்தழகுக்கு ஒரு கடிதம் எழுதி அதில் தான் மணமாகத மணிமொழி என்றும் தான் அவனை விரும்புவதையும் குறிப்பிட்டு வீட்டிலிருந்து வெளியேறுகிறாள். அப்பாவை சந்திக்கும் ஆசையினால் மும்பைக்கு பயணமாகிறாள். அப்போது முன்னர் பம்பாயில் பெட்டியை கொடுக்கச்சென்ற போது சந்தித்த நாகரீக பெண்மணியான பிரபாவதி மணிமொழியிடம் வந்து உன் அப்பா சென்னையில் அல்லவா இருக்கிறார் என்று சொல்ல இருவரும் சென்னை திரும்புகின்றனர். பிரபாவதி தங்கதுரையை சந்தித்து பெரிய ஐயா மருத நம்பிக்கு அனுப்பியுள்ள பெட்டியை கொடுக்கவேண்டும் என்கிறாள். மறுபடியும் பெட்டியை என பயப்படுகிறாள்.
மருதநம்பி தன்னைப்போன்ற முகவரான பொன்மலையை சென்னையில் சந்திக்கிறார். ஒரு கைக்கடிகாரத்தை கொடுத்து பெரிய ஐயாவுக்கு நெருக்கமான கேசவதாஸ் கொலையைச் செய்தது ஒரு பெண்தான் அவள் பெயர் இதில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
எனக்கு ஏதேனும் ஆனாலும்கூட இந்த ஆதாரத்தை கொடுத்து என்மகளைக் காப்பாற்றுங்கள் என்று வேண்டிக்கொள்கிறார்.
மணிமொழியும் மருதநம்பியும் சந்தித்தார்களா?
பொன்மலை என்ன செய்தார்?
கடத்தல் கும்பலில் “பெரிய ஐயா” (தலைமை)யார்?
மணிமொழி நீ என்னை மறந்துவிடு
மறக்காமல் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
கதையைப் படித்து முடித்ததும் கல்கண்டு காலஇயந்தரமாகி, மணிமொழியை மறந்து சிறு வயதில் நானும் தம்பியுமாக ஷங்கர்லால் படித்த நினைவுகளை மீட்டெடுத்தது.
Leave a Reply