(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
சென்னையில் வேலைக்கு சேர்ந்ததும் லீவு எல்லாம் எடுக்காமல் ஒரு வருடம் ஓடிவிட்டது. தற்போது ஒரு வாரம் லீவில் ஊருக்குப் போகிறேன். அம்மா, அப்பா, சொந்தங்கள், நண்பர்களோடு அந்த புளிய மரத்தையும் பார்த்து உறவாடிவிட்டு வரப்போகிறேன். நினைப்பே துள்ளிக் குதிக்கச் செய்கிறது.
வருடம் முழுவதும் பலன் கொடுக்கும் அதிசய புளிய மரம்; காய் இல்லாத நாளே கிடையாது. அந்த புளிய மரத்து புளியம் பழம் தனி ருசி; இனிக்கும். அதிலும் அந்த செங்காயை தின்பதே அலாதி இன்பம். மரம் வேலிக்கு உள்ளே இருந்தாலும் வேலிக்கு வெளியே தெருவில்தான் பாதி மரக்கிளைகளை பரப்பிக் கொண்டு நிற்கும். புளிய மரத்துக்கு இருபத்தைந்து அடி உள் பக்கம் தள்ளிதான் வீடு இருக்கும். இது ரொம்ப வசதியாப் போய்விட்டது எங்களுக்கு. ஒரு அரைக் கல் எடுத்து விட்டால் போதும், சோட்டான் சோட்டானா தொங்கும் புளியம்பழம் ‘சடசட’ன்னு கொட்டும். அதில் நிறைய தலையிலும் உடம்பிலும் ‘பொத் பொத்’ன்னு விழும். ரெண்டு கையாலயும் மூஞ்சிய மூடி குனிஞ்சி நின்னுகனும்; இல்லாட்டி மூஞ்சி மேலயே ‘சொடேர் சொடேர்’ ன்னு வந்து விழும்.
சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு அந்த வழியா வீட்டுக்குப் போற பிள்ளைகளெல்லாம் அந்த புளிய மரத்தடியில் குனிந்து ஏதாவது புளியம்பழம் விழுந்து கிடக்கிறதான்னு தேடிப்பார்க்காம போக மாட்டாங்க. எப்படியும் ஆளுக்கு ஒரு சோட்டானாவது புளியம்பழம் கிடைத்து விடும். அப்படியும் கிடைக்காத பிள்ளைகள் ஏமார்ந்திடாமல் இருக்க ஒன்றுக்கும் மேல் பழம் பொறுக்கிய பிள்ளைகள் ஒரு சோட்டனைக் கொடுத்து உதவுவார்கள். அப்பதான நாளைக்கு தனக்கும் ஒன்னு கிடைக்கும். ஒன்றிரண்டு துணிச்சலான பிள்ளைகள் ஒரு அரைக் கல்லை எடுத்து சடைசடையாக புளியம்பழம் தொங்கும் கிளைகளை குறிவைத்து எறிவார்கள். அதுதான் தாமதம் என்பது போல பிள்ளைகள் ‘ஓ’ வெனக் கத்திக் கொண்டு பழம் பொறுக்க ஓடுவார்கள். இந்த சத்தம் கேட்டு உள்ளிருந்து சௌரிராஜ ஐயங்காரோ, அல்லது அவர் மனைவியோ வெளியே வந்து, ” டேய் ஆர்டா அது , கல்லெடுத்து அடிக்கறது ? வால சுருட்டிண்டு போக மாட்டிங்களா” என்று குரல் கொடுத்ததும் பிள்ளை களெல்லாம் சத்தமில்லாமல் ஓடிடும்.
பிள்ளைகள் மாத்திரம் என்றில்லை; பெரிய பெண்களும் கூட அந்த மரத்துக் கிளைகளினடியில் கையில் கம்பு ஊன்றாத ஔவையாராக குனிந்தபடியே போவார்கள்; கீழே கிடக்கும் புளியம் பழங்களை எந்தவித கூச்சமும் தயக்கமும் இல்லாமல் குனிந்து எடுத்துக் கொண்டு போவார்கள். எடுத்த உடனேயே ஓட்டை உடைத்து ஒரு கொட்டை புளியம் பழத்தை பிய்த்து வாயில் போட்டு சப்புக் கொட்டியபடியே போவார்கள்.
எங்கள் தெரு பிள்ளைகள் எல்லாரும் பல் துலக்குவதைக் கூட விலக்கி வைத்து விடியற்காலை எழுந்ததும் நேரே புளிய மரத்தடிக்குத்தான் ஓடிவருவார்கள். அது ரொம்ப நல்ல புளிய மரம்; யாரையுமே ஏமாத்தாது. எல்லாருக்கும் புளியம்பழம் கிடைக்கும். பழம் பழுக்காத நாட்களில் கூட அதன் பிஞ்சுகள் திண்பதற்கு புளிப்பும் இனிப்பும் கலந்து இருக்கும். அவ்வளவு ஏன் பிஞ்சு விடும் முன்பே புளியம் பூ எத்தனை சுவையாக இருக்கும் தெரியுமா? அதெல்லாம் சாப்பிட்ட வாயிக்குத்தான் தெரியும். இப்போதும் கூட நாக்கில் எச்சில் ஊறுது.
இதைவிட சூப்பரான புளியமரம் எங்காவது இருக்கலாம். ஆனால் எனக்குத் தெரிந்தது இதுதானே; அனுபவித்த ஆனந்தத்தைத் தானே சொல்லமுடியும். என்னை வேண்டுமானால் சுவையான நீர் இங்குதான் இருக்குன்னு நினைக்கிற தவளைன்னு சொல்லிக்கோங்க, அதுகூட எனக்கு மகிழ்ச்சிதான்.
மரம் முழுக்க பழம் பழத்திடுச்சு, தானாகவே ஒரு சின்ன காத்து அடிச்சாலும் பழம் சொட சொடன்னு கொட்டுதுன்னு ஐயங்காரிடம் வேலை செய்யம் ஜெயராமன் சொன்ன மறுநாளே பழம் உலுக்கற வேலை நடக்கும்.
ஜெயராமன் ஒரு ஆறடி நீள கொம்பில் ஒரு சிறிய குச்சியை பெருக்கல் குறி மாதிரி இணைத்துக் கட்டிய தொரட்டியை கையோடு எடுத்து கொண்டு மரத்தின் மீது எறுவார். அந்த கொம்பை பாதுகாப்பாக மாட்டி விட்டு ஒருகிளையில் வலுவாக நின்று கொண்டு , அதற்கும் மேல் கிளையை இரண்டு கைகளாலும் பற்றிக் கொண்டு நிற்பார். பிறகு கைகளால் மேல் கிளையை கீழே தன் பக்கம் இழுப்பதுடன் கால்களையும் லேசாக மடித்து கிளைகளை குலுக்கவும் செய்வார். இதைப் பார்க்கும் போது குரங்கு மரக்கிளையில் உட்கார்ந்து குலுக்கும் காட்சிதான் ஞாபகத்துக்கு வரும். ஜெயராமனும் அதைப் பார்த்திருப்பார் என நினைக்கிறேன். அவர் உலுக்குவது அச்சு அசலா அந்த குரங்கு உலுக்குவது போவவே இருக்கும்.
கொஞ்சம் மெல்லிய கிளைகளில் ஏறி நின்று உலுக்க முடியாது. அந்த மாதிரி கிளைகளுக் காகத்தான் அந்த சின்ன தொரட்டிக் குச்சி தயார் பண்ணி கொண்டாந்திருப்பார். ஏறி நின்னு உலுக்க முடியாத கிளைகளில் அதை மாட்டி உலுக்குவார், பழம் பொல பொலன்னு கொட்டும்..
பழங்களை பொறுக்கித் தருவதுக்கு வாண்டுகள் பட்டாளம் வந்து குவிந்து விடும். அதயெல்லாம் சின்னச் சின்ன பொட்டுக் கூடைகளில் பொறுக்கி எடுத்து தனித்தனியா முட்டாக கொட்டி வைப்பார்கள். பொறுக்கும் போதே சில வாண்டுகள் புளியம் பழத்தை கூடையில் போடாமல் தன்னோட கால் சட்டைப் பைகளில் நிரப்பிக் கொள்ளும். மேலிருந்து பார்த்து ஜெயராமன் அதில் ஒரு பையனைக் கூப்பிட்டு கத்துவார்,
“டேய் பாலு, ஒழுங்கா கூடையில போடு. இல்லன்னா நா எறங்கி வந்தன்னா ஒன்னோட டவுசரோட அவுத்து எடுத்துக்குவேன், படவா”
அவ்ளோதான் அந்த பாலு அதுக்கப்புறம் தன்னோட வாயாலயே ‘ பிளைமௌத்’ காரை ‘ டுர்……’ என்று ஓட்டிக் கொண்டு சிட்டாப் பறந்திடுவான்.
கடைசியாக ஒவ்வொருத்தர் பொறுக்கியதையும் அந்த பொட்டுக் கூடைகளில் அளப்பார்கள். பத்து கூடை பொறுக்கியிருந்தால் ஒரு கூடை என்ற அளவில் சன்மானம் கொடுப்பார்கள். காசெல்லாம் கூலியாகத் தரமாட்டார்கள்.
என்னதான் உலுக்கி எடுத்தாலும் அந்த புளியமரம் தன்னோட பிள்ளைகளுக்காக கொஞ்சம் புளியங்காய்களை நிறுத்தி வைத்துக் கொள்ளும். இது எப்படின்னா சில பசு மாடுகள் பால் கறக்கும் போது மடியை எக்கி கொஞ்சம் பாலை தன் கன்றுக்காக நிறுத்தி வைத்துக் கொள்ளுவதைப் போல் இருக்கும். பிறகு பால் கறந்தவர் போனதும் அந்த பாலை கன்று சாவகாசமாக குடித்துக் கொள்ளும். அதைப்போல புளியமரம் நிறுத்தி வைத்துள்ள புளியங் காய்களை தெருப் பிள்ளைகள் சாவகாசமாக தினமும் கொஞ்சம் கொஞ்சமாக கல்லெறிந்து விழுவதைப் பொறுக்கிக் கொள்வார்கள்.
எங்கள் தெருப்பிள்ளைகள் சிலநேரம் எந்த புளியம் பழமும் கீழே கிடைக்காத போது மரத்பை்பார்த்து
“புளிய மரமே, புளிய மரமே எனக்கு ஒரு புளியம் பழம் போடு “
என்று மரத்தை அண்ணாந்து பார்த்து பாட்டாக சத்தம் போட்டு கேட்பார்கள்; என்ன ஆச்சரியம், சில புளியம் பழங்கள் விழும். அதே நேரம் ஒரு காக்காவோ, நார்த்தம்பிள்ளை குருவியோ ஒரு கிளையிலிருந்து பறந்து போகும். அல்லது வாலைத் தூக்கிக் கொண்டு ஒரு அணில் கத்தியபடியே கிளையில் ஓடும்.
மனிதர்கள் மட்டும்தான் மற்றவர் மீது அன்பு வைப்பார்களா என்ன. விலங்குகள் அன்பு வைப்ப தில்லையா? அது போல ஏன் தாவரங்களும் இதர உயிரினங்கள் மீது பாசம் வைக்காதா என்ன. வைக்கும் என்றால் எங்கள் புளிய மரமும் எங்கள்மேல் அன்பு வைக்கும் தானே?
கல்லெடுத்து எறியும் போதுகூட சில பிள்ளைகள் கூறுவார்கள்,
“டேய் பெரிய கல்லா எடுத்து எறியாதீங்க; மரத்தோட கிளையில காயம் பட்டுடும்”
சின்ன வயசில ஆரம்பிச்ச இந்த புளிய மரக் காதல் நான் ஒரு என்ஜினியர் ஆனபின்னும் கூட அப்படியே மாறாமலிருப்பது என்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கு சென்னையில் வேலை கிடைத்து போகிறேன். என் நண்பர்கள், உறவினர்கள் என எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினேன் ; முக்கியமாக ஆசைப் புளிய மரத்திடமும்தான்,
“என் இனிய புளிய மரமே போய் வருகிறேன், இந்த அடியை மறக்காதே. ஐ மிஸ் யூ “. புளிய மரத்துக்கு செல்லமாக ஒரு அடி கொடுத்துவிட்டு கிளம்பினேன்.
இப்படித்தான் சனிக்கிழமை பள்ளி முடிந்து வீட்டுக்குப் போகும் போது, மீண்டும் திங்கள் கிழமைதான் பார்ப்போம் என்பதால் நண்பர்கள் ஒருவருக் கொருவர் முதுகில் அடித்து
“இந்த அடிய மறக்கத” ன்னு அடிச்சிட்டு ஓடுவோம்.
மரத்தைவிட்டு விலகிச் செல்லும் போது ஏதோ ஒன்று வந்து கண்களில் பார்வையை மறைப்பதாக உணர்ந்தேன். கைக்குட்டையை எடுத்து கண்களில் பெரிய பனித்துளியாக அரும்பியிருந்த திவலையை துடைத்துக் கொண்டேன்.
பழைய நினைவுகளிலிருந்து விடுபடவும் ஊர் வந்து சேரவும் சரியாக இருந்தது;
வீடும் வந்து சேர்ந்தாயிற்று. அம்மா வாயெல்லாம் பல்லாக வரவேற்றார்கள். பொக்கைவாய் பாட்டி இரண்டு கைகளாலும் கன்னத்தை வழித்து கண்ணேறு கழித்தது. புளி அரிந்து கொட்டை எடுத்துக் கொண்டிருந்த அம்மா அதை ஓரமாக வைத்து விட்டு கை கால் கழுவிக் கொண்டு எனக்கு தோசை வார்க்க கிளம்பினார்கள். நான் துண்டை எடுத்துக் கொண்டு கொல்லைப்பக்கம் குளிக்கப் போனேன்.
முருகலான தோசை, தேங்காய் சட்னியுடன் அம்மா வந்தார்கள். தோசையைப் பிய்த்து சட்னியில் தோய்த்து வாயில் வைத்தபடியே அம்மாவிடம் கேட்டேன்,
“ஏம்மா, இந்த வேலை உனக்கு “
” எதைக் கேக்கிறாய் “
“ஆதான் இந்த புளியம் பழத்தை வாங்கி ஓடு உடைத்து அப்பறம் அரிவாள் மனையில் அரிந்து கொட்டை எடுக்கற வேலையைத்தான் சொல்றேன், இடுப்பு வலிக்காதா”
“அதென்ன அப்படி சொல்லிட்ட? இது நம்ம ஐயங்கார் வீட்டு புளிய மரத்தோடது. இதுதான் கடைசி; இனிமே கெடைக்காது”
“என்னா சொல்றம்மா”
“ஆமான்டா, தொரமணி செங்கல் காளவாய் போட்டிருக்கான்; அதுக்கு எரிக்கறதுக்கு கேட்டான்னு ஐயங்கார் மரத்தை வித்துட்டாரு. அதனால கடைசியா மரத்தை உலுக்கி புளியம் பழத்தை தெரிஞ்ச பத்துவீட்டுக்கும் காசு வாங்காம சும்மாவே கொடுத்துட்டார்; அதுதாண்டா இது”
அம்மா சொல்லச் சொல்ல என்னால் தோசையை மட்டும் இல்ல இந்த சேதியையும் உள் அனுப்ப முடியல. எழுந்து கையைக் கழுவிக் கொண்டு அம்மா கூப்பிடறதும் காதுல வாங்காம வேகமா நடந்தேன். போய்ப் பார்த்தால் புளிய மர அடியில் பெரிய பள்ளம் தோண்டி வேர்ப் பகுதியை வெளியில் எடுத்துக் கொண்டிருந்தார்கள். மரம் பல துண்டுகளாக வெட்டப்பட்டு இறைந்து கிடந்தது. எனக்கு பார்க்க ஒரு காவிய நாயகன் போர்க்களத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பது போலத் தெரிந்தது. அங்கே நிற்கப் பிடிக்காமல் நண்பன் வீட்டுக்குப் போனேன். நலம் விசாரித்தல் எதுவும் இல்லாமல் நேராக புளியமரத்தின் முடிவைப் பற்றிதான் பேசினேன். அடுத்து செய்ய வேண்டியது என்னவென்று முடிவெடுத்தோம்.
வீட்டுக்கு வந்து அம்மாவிடம் சொல்லி எல்லார் வீட்டிலிருந்தும் அரிந்தெடுத்த புளியங் கொட்டைகளை வாங்கித்தரக் கேட்டேன். அம்மாவுடன் வீடுவீடாகப் போய் புளியங் கொட்டைகளை சேகரித்து வந்தேன். எல்லாம் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து சிப்பம் தேறியது.
நண்பர்கள் மண்வெட்டி, கடப்பாறை, வாளி சகிதம் புளியங் கொட்டை சிப்பங்களை ஒரு வண்டியில் வைத்து காவிரி கட்டுக் கரையில் ஓட்டிக் கொண்டு போனோம். பத்தடி தூரத்துக்கு ஒரு குழி தோண்டி இரண்டிரண்டு புளியங் கொட்டைகளாகப் போட்டு மூடி கெஞ்சம் தண்ணீர் விட்டுக் கொண்டே போனோம். மொத்தம் ஒரு ஐந்து கிலோ மீட்டராவது போயிருப்போம். மறுநாள் கும்பகோணம் மெயின் ரோடில் இதே போல தொடர்ந்தோம்.
ஒரு காலத்தில் இதே சாலையில் இரண்டு புறமும் பலன் தரும் மாமரமும், புளிய மரமுமாக இருக்கும். அதை வருடாவருடம் காய் பறிக்க ஏலம் விடுவார்கள். ஏலம் எடுத்தவர் அதில் யாரும் காய் பறித்திடாமல் இருக்க காவல் காப்பார். இப்போ தெல்லாம் சாலை அகலப் படுத்த மரங்களை வெட்டுவதோடு சரி; பதிலுக்கு வேறு கன்று வைத்து வளர்ப்பதெல்லாம் கிடையாது. அதோடு நிறைய மரங்கள் பட்டுப் போய் விடுவதும் உண்டு; அதற்கும் மாற்று மரமும் நடுவது கிடையாது. இந்த காரணங்களால் நிறைய இடம் கிடைக்கவே நாங்கள் நிறைய விதைகளை ஊன்றினோம். எங்களின் இந்த முயற்சியை அறிந்து பார்க்க வந்த பக்கத்து ஊரைச் சேர்ந்த பள்ளி நண்பர்களிடமும் புளியங் கொட்டைகளைக் கொடுத்து விதைக்கச் சொன்னோம்.
நான் சென்னை திரும்பும் வரை தினமும் நண்பர்களோடு சேர்ந்து வண்டியில் பெரிய பெரிய பேரல்களில் தண்ணீர் எடுத்துப் போய் ஊற்றினோம். என்னைப் போலவே புளிய மரத்தை இழந்த வருத்தம் உள்ள நண்பர்கள் தண்ணீர் தினமும் ஊற்றுவதாக வாக்களித்தார்கள். இந்த ஒரு அறுதல் இருந்தாலும் புளியமரம் இல்லாத அந்த வெற்றிடம் என் நெஞ்சைப் பிசைந்து கொண்டுதான் இருக்கிறது.
காவிரிக்கரையில் ஊன்றிய விதைகளைப் பற்றி கவலை இல்லை; ஜுன் பன்னெண்டாம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்து விடுவார்கள்; அடுத்த ஒரு வாரத்தில் எங்களூர் காவிரியில் நுங்கும் நுறையுமாக தண்ணீர் ஓடும். கரையெல்லாம் ஈரங்காத்து விடும் ; அந்த ஈரமே அவற்றுக்குப் போதும். ஆனால் கும்பகோணம் சாலையில் தான் சில காலம் தண்ணீர் ஊற்ற வேண்டும் ; அதுவும் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் வரைதான்.
ெஎங்களின் இந்த முயற்சியால் நூற்றுக்கணக்கான இனிப்பு புளிய மரங்கள் காய்த்து தொங்குவதாக தினமும் கனவாக வருகிறது.
கதையில் பயின்றுவரும் பின் வரும் உவமைகளும் வர்ணனைகளும் மிகவும் சிறப்பு.
1.கையில் கம்பு ஊன்றாத ஔவையாராக குனிந்தபடியே போவார்கள்.
2.அந்த பாலு அதுக்கப்புறம் தன்னோட வாயாலயே ‘ பிளைமௌத்’ காரை ‘ டுர்……’ என்று ஓட்டிக் கொண்டு சிட்டாப் பறந்திடுவான்
3.சில பசு மாடுகள் பால் கறக்கும் போது மடியை எக்கி கொஞ்சம் பாலை தன் கன்றுக்காக நிறுத்தி வைத்துக் கொள்ளுவதைப் போல்
4.மரம் பல துண்டுகளாக வெட்டப்பட்டு இறைந்து கிடந்தது. எனக்கு பார்க்க ஒரு காவிய நாயகன்
போர்க்களத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பது போலத் தெரிந்தது.
*************************
கதையில் சிறுவர்களின் குறும்புகள், வளர்ந்த இளைஞர்களின் பொறுப்பான செயல்கள், புளியமரம் தொடர்பான சொற்றொடர்கள் மற்றும் மொழிநடை அபாரம். தவிர கற்பனை, எதார்த்தம், சமூகநடப்பு, மரங்களை வளர்க்க வாசகனுக்குள் எண்ண விதையை ஊன்றும் சமூகப் பார்வை எனப் பல்வேறு கோணங்களில் கதை சிறப்பாக வந்துள்ளது.
அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய செவ்வாழை சிறுகதைக்கு இணையாக வந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. டான்ஸ் மாஸ்டர் மொழியிலோ, இசையமைப்பாளர் அனிருத் மொழியிலோ சொல்வதென்றால், சும்மா கிழி.
LikeLike
அதிகமாக புழ்ந்து என்னை ஊக்கப் படுத்தியதற்கு நன்றி, உத்தமன்.
LikeLiked by 1 person
இந்த கதையில் நீங்கள் பயன்படுத்திய இனிய தொடர்களும் உண்மைகளும் என்னை மிகவும் கவர்ந்தன.குறிப்பாக ” மரம் பல துண்டுகளாக வெட்டப்பட்டு இறைந்து கிடந்தது. எனக்கு பார்க்க ஒரு காவிய நாயகன் போர்க்களத்தில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடப்பது போலத் தெரிந்தது.” என்ற வரி எனக்கு மிகவும் பிடித்திருந்தது.இந்த மாதிரி சுவாரசியமான கதையை உருவாக்கியதர்க்கு நன்றி எழுத்தாளரே!
அன்புடன்,
பிரத்தியக்ஷா
LikeLike
மரங்கள் வாய் பேசாத நம் உறவுகள். வளர்த்த மனிதனே அவற்றை வெட்டி த் துண்டாக்கினாலும் எதிர்ப்பைக் காட்டுவதில்லை; ஒருவேளை வாயிருந்தால் அழுதிடுமோ?
பிரத்தியக்ஷாவுக்கு நன்றியும், வாழ்த்தும்.
LikeLike
நம் வாழ்க்கைகளில் சோகமான நிகழ்வுகள் இடம்பெரும் போது நமது உணர்ச்சிகளில் தொலைந்து போவது எளிது. ஆனால், புளியமரம் வெட்டப்பட்டவுடன், சோகத்திலும் சுயபரிதாபத்திலும் கதாநாயகன் மூழ்காமல் புது புளிய மரங்களை நட்டு வைக்கிறார்.
வாழ்கையில் ஒரு சம்பவம் நம்மைப் பெரிதும் பாதித்தால் அதைப் பற்றி கவலைப்படாமல் சூழ்நிலையை எப்படி சரி செய்வது என்பதிலேயே நமது முழு கவனத்தைச் செலுத்த வேண்டும் எனும் கருத்தை இன்ஜினியரின் மூலம் புகுத்தியதற்கு நன்றி.
LikeLike
எந்த செயலிலும் நேர்மறை விளைவினைக் காணும் ஹாசினிக்கு மனமார்ந்த நன்றி, வாழ்த்துகள்!
LikeLike
இக்கதை, ஒரு மரம் ஒருவரின்மீது கொண்டுள்ள தாக்கத்தை வர்ணிப்பதன்மூலம், மற்ற வாயில்லா உயிரினங்களையும் மதித்து பாதுகாக்க வேண்டும், என்பதை என்னிடம் உணர்த்தியுள்ளது. சிறந்த மொழிநடைக்கு ஒரு உதாரணமாக இருப்பதோடு, இக்கதை ஒரு மிக முக்கிய கருப்பொருளையும் வாசகர்களுக்கு உணர்த்துகிறது. என் மனத்தைத் தொட்ட இக்கதையை பகிர்ந்துகொண்டதற்கு மிகவும் நன்றி!
LikeLike
வாடிய பயிரைக் கண்டபோது மனம் கலங்கினார் வள்ளலார். ஜீவகாருண்யம் என்பது அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்டுவது என்பதை இளமையிலேயே தெரிந்து கொண்ட ஸ்மிருதிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
LikeLike
கதை இன்ஜினியருக்கும் மரத்திற்கும் இருந்த பிணைப்பு பற்றி மட்டும் எழுதாமல் கிராமத்தில் உள்ள எல்லாருக்கும் மரத்திற்கும் இருந்த பிணைப்பை பற்றி அழகாக எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறப்பான கதைகளை எழுதங்கள்!
LikeLike
கிராமத்தில் பிறந்து வளர்ந்ததினால், கிராமத்து மண்மனம் இன்னமும் என்மீது ஒட்டிக் கொண்டு என்னை வாழவைத்துக் கொண்டு இருப்பதுதான் உண்மை. நன்றி; கிராமியக்கதைகள் மேலும் படைப்பேன்.
LikeLike
கதையை படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது! மொழிநடை மிகவும் அழகாகவும் இருந்தது. நன்றி ஐயா!
LikeLike
கிராமியக் கதைகள் பிடித்திருக்கிறது என்பதை அறிய மகிழ்ச்சி; உயிரோடு கலந்த அழகிய கிராமிய வாழ்க்கையை எழுதும்போது அழகாகத்தானே வெளிப்படும்; வாழ்த்துகள்.
LikeLike
அழகான கதைக்கு நன்றி. இந்தக் கதையை எழுதுவதற்கு ஏதேனும் நிஜ வாழ்க்கை நிகழ்வுகளை நீங்கள் பயன்படுத்தினீர்களா?
LikeLike
சிறு வயதில் நான் கல்லெறிந்து காயும், பழமும் பொறுக்கித் திண்ணக் கொடுத்த மரம். பல ஆண்டுகளுக்குப்பின் கிராமத்துக்கு சென்றபோது அம்மரத்தைக் காணாது கண்கலங்கியது உண்மை.
LikeLike
கதை மிகவும் சுவாரசியமாக இருந்ததுடன் மரங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இன்னும் உணர்ந்துகொண்டேன்.
LikeLike
நன்றி காயத்ரி. மரங்கள் வாழும் போதும், பின்னரும் நமக்கு நன்மைதான் புரிகின்றன. அதில் அவைவிடும் உயிர்வளி மிகவும் இன்றியமையாத ஒன்றல்லவா!
LikeLike
கதை மிகவும் அழகாக எழுதப்பட்டிருந்தது. கதை என் மனத்தை நெகிழவைத்தது.
LikeLike
மிக்க நன்றி. அனைத்துயிர்களிடமும் அன்பு கொண்டு வாழுங்கள்.
LikeLike
கதை படிப்பதற்கு மிகவும் நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது. மேலும், பயன்படுத்தப்பட்ட உவமைகளும் வருனைகளும் மொழிநடையும் சிறப்பாக இருந்தன.
LikeLike
நன்றி கீர்த்தனா. கிராமத்து வாழ்க்கைபற்றி எழுதினாலே சுவாரசியம்தான்.
LikeLike
கதை படிப்பதற்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. சில இடங்களில் மிகவும் நகைசுவையாக இருந்தது.
LikeLike
நன்றி abcd. மேலும் நிறைய படிக்கும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்
LikeLike
இக்கதை மிகவும் அழகாக எழுதப்பட்டுள்ளது. இன்ஜினியருக்கும் புளியமரத்திற்கும் இடையே இருந்த அன்பு நிறைந்த உறவை நன்றாக விவரித்துள்ளீர்கள். வேட்கை, அக்கறை, துக்கம், முதலியவற்றை சித்தரித்து இன்ஜினியர் புளியமரத்தின்மீது வைத்த்திருந்த அன்பு தெரிந்தது. மனிதர்களிடம் மட்டுமில்லாமல், செடிகளிடமும் எல்லையில்லா ஆசை வைத்திருக்கலாம் என்பதைப்பற்ற்றி நான் யோசித்ததில்லை. ஆனால், இக்கதையை படித்தப்ப்பிறகு அது இருக்கக்கூடியதான் என்பதை உணர்ந்தேன். இந்தக் கதையை எழுதியதற்கு நன்றி!
LikeLiked by 1 person
மிக்க நன்றி, செல்வி ஜனனி. வள்ளல் இராமலிங்க அடிகளார் கூறும் ஆன்மநேய ஒருமைப்பாட்டின் திறவுகோலான ஜீவகாருண்யம் என்பது உயிருள்ள அனைத்திடமும் அன்பு கொண்டு ஒழுகுவதாகும். இச்சிறிய வயதிலேயே எவ்வுயிர்க்கும் செந்தன்மை பூண்டு ஒழுக முடிவெடுக்கும் நீங்கள் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்வீராக!
LikeLike
கதை மிகச் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. மொழிநடை அற்புதமாக உள்ளது
LikeLiked by 1 person
மிகவும் நன்றி செல்வி தர்ஷனா. http://www.கதைசொல்கிறேன்.காம் எனும் எமது வலைதளத்தில் உள்ள சிறுகதைகளும், அரிய செய்திகளும் உங்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன்.
LikeLike