ஆசிரியர்:- அசோகமித்திரன்
பதிப்பகம்:- நற்றிணை
(2020) புத்தக கண்காட்சி
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் நூலகம் முடியும் நேரத்தில் சென்றதால் அவசரமாக புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு நூலகியின் மேஜை அருகே சென்றேன். இன்னும் இருவர் எனக்குமுன் காத்திருக்க, அப்போது..
முகப்பு அட்டையின்றி ஆசிரியரைப் பற்றி அறிந்து கொள்ள முடியாதபடி, சில பக்கங்கள் கிழிந்து பைண்டிங் செய்யப்பட்ட நூலில் ஊஞ்சலாடியபடி நூலகியின் கையெழுத்தில் முனீரின் ஸ்பானர்கள் (என்ன தலைப்பு இது!) என்ற புத்தகம்(?) காற்றில் படபடத்தது; நெற்றிச் சுருங்க புரட்ட ஆரம்பிக்க அசோக மித்திரனின் எழுத்துக்கு ரசிகையானேன்.
இந்த தொகுப்பில் பம்பாய் 1944, லீவுலெட்டர் என்ற 2 குறு நாவல்கள், நண்பனின் தந்தை, ஹார்மோனியம், கட்டை வண்டி என்ற 3 சிறுகதைகள் உள்ளன.
ரசித்தது:- ஹார்மோனியம் என்ற கதையின் நாயகன் நாயகியாகவும் அவர்களை நடத்திச் செல்லும் நடுநாயகமான கதையாகவும் இருப்பது ஹார்மோனியமே!
அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ராமச்சந்திரனுக்கு ஹார்மோனியத்தின் மீது தீராக் காதல். தெருவில் பாடுவது காதில் விழ கீழே இறங்கி ஓடோடி வருகிறார்.
கைரிக்ஷா போன்றிருக்கும் ஒரு வண்டியில் சாய்பாபா படத்தை வைத்து ஒருவர் தள்ளிக் கொண்டு வருகிறார். முதலில் அவருக்கு ராமச்சநிரன் ஒரு ரூபாய் கொடுக்கிறார்.
பிறகு அவரிடமுள்ள ஹார்மோனியத்தை பார்த்து வாசிக்கச்சொல்லி கேட்க, வேறு இடங்களுக்கு செல்லவேண்டுமென வண்டிக்காரர் தயங்க, 5 ரூபாய் தருகிறேன் என்று சொல்கிறார்; ஹார்மோனியத்தில் கைகள் விளையாட மனம் உருகி உடன் வந்த பெண்ணோடு பாட்டொன்றை பாடுகிறார் வண்டிக்காரர்.
ராமச்சந்திரன் தானாக 10 ரூபாயாக கொடுக்க வண்டிக்காரரும் மீண்டும் ஒருபாடலைப் பாடி நகர்கிறார். 4 1/2 பக்க கதை உண்மையில் 1/2 பக்கத்தில் முடிந்துபோகிறது, மீதி 4 பக்கம் ஹார்மோனியத்தை பற்றிய ராமச்சந்திரனின் நினைவலைகளே!
பிளாஷ் பேக்காக சிறுவயதில் ஹார்மோனியம் கற்றுக் கொண்டதாகவோ, பரிசாக கிடைத்ததாகவோ, தன் காதலுடன் சம்பந்தப்படுத்தியோ இருக்கலாம் என நாம் நினைத்தால் ஹா …..என்று சொல்லவைக்கிறார் அசோகமித்திரன்.
ஒருகாலத்தில் வடக்கு, தெற்கு, நாடக நடிகர்கள், அரிச்சந்திர மயானகாண்டம், இசையமைப்பாளர்கள் என கோலோச்சிய ஹார்மோனியம்.
முன்னொரு காலத்தில் ஆந்திரபிரதேசத்தில் ஓடும் ரயிலில் ஒருரயிலிலிருந்து மற்றோர் ரயிலுக்கு உயிரைப் பணயம் பணயம் வைத்து ஹார்மோனியத்துடன் பிச்சைக்கார்கள் தாவுவார்கள் என்றும் ஐரோப்பாவில் ஹார்மோனியத்திற்கு முந்தியதான ஹார்மோனிகா எனும் வாத்தியம் இருந்தாகவும் அதிலிருந்து வரும் இசை ஒரு இசைக்குழுவே இசைப்பது போன்றிருக்கும் அதுவும் அங்குள்ள பிச்சைக்காரர்கள் வாத்தியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இசையை மனதில் வாங்கி ஆராதித்து நேசிப்வர்களுக்கு எந்த இசையும் இசைவானதே!!!
ராமச்சந்திரனைப் போல எங்கிருந்தாலும் ஓடோடிவந்து கேட்கத் தோன்றும் இசையை சத்தமாக மட்டுமே புரிந்து கேட்பவர்களுக்கு?
நமது கருத்துக்களை தனிப்பட்ட முறையில் நம் வீட்டில் வெளிப்படுத்துவதிலோ, விமர்சனம் செய்வதிலோ, கொண்டாடுவதிலோ எந்த பாதிப்பும் இல்லை. திரைப் பிரபலங்களோ, துறைப் பிரபலங்களோ அபிமானிகள் ரசிகர்களால் உற்று கவனிக்க படுகிறார்கள்; அவர் சொல்கிறார், இவர் பேசுகிறார் என்று உடல் உறுப்பு தானம் முதல் இப்போதுள்ள கொரோனா வைரஸ் வரை எந்த ஒன்றும் மக்களை எளிதில் சென்று சேர்ந்துவிடுகிறது.
அதே பிரபலங்கள், தனிப்பட்ட முறையில் ஒரு பொருளை அல்லது நபரைப்பற்றி பதிவிடும்போது கருத்தை பொறுத்து நல்ல விளைவோ அல்லாத விளைவோ ஏற்படுவதும் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.
அப்போதிருந்த அரசியல் ஆளுமைகள், மிகப்பெரும் கவிஞர்களுக்கு ஏன் ஹார்மோனியம் பிடிக்கவில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை ராமச்சந்திரன் வாயிலாக கொட்டியிருக்கிறார். எழுத்து வாயிலாக ஹார்மோனியம் பிடிக்காது என அவர்கள் பதிவிட்டிருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அட இவருக்கா, இந்தபிரபலத்துக்கா, ஐயோ இந்தக் கவிஞர்களுக்குமா ஹார்மோனியம் பிடிக்காது?!! நீங்களும்தான் புத்தகத்தை படித்து ஆச்சரியப்படுங்களேன்!!!
Leave a Reply