சங்க கால மகளிர் தொழில் முனைவோர்

ஒரு நாட்டில் வேளாண்மைத் துறை, தொழில் துறை மூலமே பொருளாதார வளர்ச்சி ஏற்படு்வதாகக் கூறுவர். சங்க காலத்தில் ஆடவர் மட்டுமன்றி மகளிரும் பெருமளவு தங்கள் பங்களிப்பை நல்கியிருக்கிறார்கள். இதனை முனைவர். பேராசிரியர்.ஆ.மணவழகன், அவர்களின் ‘தமிழ்ச் செவ்வியல் நூல்களில் அறம்-அறிவியல்-சமூகம்’ என்ற நூலைப் படித்தபோது அறிந்து ஆச்சரிய மடைந்தேன். அப்பேராசிரியருக்கு நன்றி கூறி, அவரின் நூல் கொண்டு சங்ககால மகளிரின் தொழில் மேலாண்மையைப் பார்ப்போம்.

வேளாண்மைத் துறையில் மகளிர் உணவு உற்பத்தி:

நாற்று நடுதல்,(பெரும் பாணா 211-12)
களை யெடுத்தல்,(பதி 19)
பயிரைக் காத்தல்,(புறம் 344)
அறுவடை செய்தல்,(அகம்116;மதுரைக்110)

தானியங்களை பதப்படுத்தல்(பட்டின22-23)
என வேளாண்மையின் முக்கிய  தொழில்களைச் செய்தார்கள்.

பயிர்ப் பாதுகாப்பு:
விளைச்சலின் முழுப் பயனையும் அடைய பயிர்களை விலங்குகள், பறவைகளிடமிருந்து காக்க வேண்டும். குறிஞ்சி நிலத்தில் மகளிர் தினைப்புனம் காப்பதன் மூலம் இதைச் செய்தனர். ‘கிளிகடி’ எனும் கருவியாகிய தட்டையைக் கொண்டு ஒலியெழுப்பியும்,தழலினை சுற்றியும் தினைப் புனம் காத்தனர்.(குறிஞ்சி41-44;அகம்118, 242;குறு217; நற்22,57,102,128; ஐங்குறு281)

உணவுத் தேட்டம்:
பாலை நிலத்தின் எயின மகளிர் உளி போன்ற வாயுடைய கருவியால் நிலத்தைக் குத்தித் தோண்டி(எறும்புப் புற்றிலிருந்து)எடுத்த புல்லரிசியை நிலவுரலில் போட்டு சிறிய உலக்கையால் குத்தி எடுப்பர். இது அவர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்தது.(பெரும்88-97)

உணவுப் பரவலாக்கம்:
பரதவ இன மகளிர் பசுமீன்,உணங்கல் மீன்(கருவாடு)போன்றவற்றை  பண்டமாற்றம் செய்வதில் முன்னின்றனர்.
ஆயர் இன மகளிர் பால்படு பொருட்களின் விற்பனையில் முன்னின்றனர்.
காசுகள் புழக்கத்தில் இருப்பினும், வணிகம் அதிகமாக பண்டமாற்று முறையிலேயே நடைபெற்றதால் உணவுப் பொருட்கள் பண்டமாற்று முறையிலேயே பரவலாக்கப்பட்டன. அனைத்து நில மக்களும் அனைத்து வகை உணவுப் பொருட்களையம் நுகர்ந்திட இம்முறை உதவியது.
பால், தயிர், மோருக்கு- தானியம் பெறப்பட்டது.(குறு221;புறம்33;பெரும்பாண்155-165)

மீனுக்கும் இறைச்சிக்கும்- வெண்நெல் பெறப்பட்டது(நற்239;அகம்60,340;புறம்33)

மான் தசைக்கு- தயிர் பெறப்பட்டது(புறம்33)

பாலுக்கு கூழ் – பெறப்பட்டது(குறுந்221)

நெய்க்கு – எருமையோடு கன்று பெறப்பட்டது(பெரும்பாண்162-165)

தேன் மற்றும் கிழங்குக்கு- மீன்,நெய் ,நறவு பெறப்பட்டது(பொருநர்215-217)

கரும்பு,அவலுக்கு – மான்தசை,கள் பெறப்பட்டது(பொருநர்214-217)

யானை வெண் கோட்டிற்கு – உணவும் நறவும் பெறப்பட்டது(அகம்61)

மீன்,கருவாடுக்கு கிழங்கு,-ஊன்,மதுவகை பெறப்பட்டது(பெருநர்215-217)

காடடில் வாழும் வேட்டுவர் கொண்டு வரும் ஊனும், முல்லை நில பெண்டிரின் தயிரும் மருதநில நெல்லுக்கு பண்டமாற்று செய்யப்பட்டன.(புறம்33)

கடல்சார் தொழில் முனைவோர்

கடல்படு பொருள்களான உப்பும்,மீனும் பரதவ மக்களின் முதன்மை வகைப் பொருள்கள்.
பரதவ மகளிர் தூண்டில் கோலாலும்  மீன் பிடித்தனர்(அகம்216)

பரதவர் பிடித்துவரும் மீனை மகளிர் ஊருக்குள் எடுத்துச் சென்று ஈடாகப் பிற பொருள்களைப் பெற்று வந்தார்கள்(அகம்320)

வாளைமீனுக்கு பழைய நெல்லை மறுத்து கழங்கு போன்ற பெரிய முத்துக்களையும், அணிகலன்களையும் பெற்றனர்.(அகம்126)

விரால் மீன் கொணர்ந்த வட்டி நிறைய பழைய நெல்,பயறு பெற்று வந்தனர்(ஐங்47)

பரதவ ஆண்கள் பிடித்து வந்த மீன்களில் விற்றது போக எஞ்சியவற்றை மகளிர் உப்பிட்டு வெண்மணலில் உலர வைத்து உணங்கல் மீன்(கருவாடு) தயாரிப்பில் ஈடு பட்டார்கள். (அகம்300)

பெரிய மீன்களை துண்டங்களாக்கி உப்பிட்டு வெண்மணல் பரப்பில் உலர்த்தி ,பறவைகள் கவர்ந்திடாமல் காவல் காத்தனர்.(நற்45, 63)

உப்பு வணிகம்

நெய்தல் நில மகளிர் உப்பு வணிகத்தில் ஈடுபட்டனர். உமணர் எனப்படும் உப்பு வணிகர் குடும்பத்துடன் வண்டிகளில் ஏற்றிச் சென்று மற்ற இடங்களில் விற்பனை செய்தனர். உமணப் பெண்களே வண்டியோட்டிச் சென்றனர். உப்புக்கு பிற பொருள்கள் பண்டமாற்று செய்யப்பட்டன.(பெரும்பாண56-65;அகம்60,140,390;நற்183; மலைபடு413;பட்டினப்28-30)

உடை உற்பத்தி

கணவனை இழந்த மகளிரும், பொருளீட்டவும்,போருக்காகவும் சென்ற கணவனைப் பிரிந்திருக்கும் மகளிரும், இல்லத்திலிருக்கும் மகளிரும் தம் குடும்ப பொருளாதாரத்தை ஈட்ட நெசவுத் தொழிலை வீட்டிலிருந்தே மேற் கொண்டனர். இவர்கள் ‘பருத்திப் பெண்டிர்’ எனப்பட்டனர். ஆடை நெய்யப் பயன் படும் பருத்தியை வில்லாலடித்து அதிலுள்ள கொட்டையையும், சொத்தைகளையும் நீக்கி சுத்தம் செய்வர்.(நற் 247,299; புறம் 326)

உடை பராமரிப்புத் தொழில்
உடைகளை பராமரிக்கும் நுட்பத்தினையும் பண்டைத்தமிழர் அறிந்திருந்தனர். ஆடை வெளுக்கும் தொழிலில் ஈடுபட்டோர்’காழிகர்’எனப்பட்டனர். (அகம்89)

இவர்கள் உவர்மண் கொண்டு உடை வெளுத்தனர். இத்தொழில் மகளிர் ‘புலத்தியர்’ எனப்பட்டனர்.(புறம்311).

உடை வெளுத்தலோடு  கஞ்சி தோய்த்து மெருகூட்டப்பட்டது.(அகம்34)
புலத்தியர் துணி வௌளுக்கி்ற இடம் ‘துறை’ எனப்பட்டது. (கலி72)

கால்நடை வளர்ப்பு

முல்லை நில ஆயர் மகளிர் இரவில் பாலுக்கு சிறிய உறையை ஊற்றி வைப்பர். அதிகாலையில் தயிரைக் கடைந்து மோராக்கி விற்கச் செல்வர். அதற்கு பிற பொருள்கபை் பெற்று தம் குடும்பத்தாரை உண்பித்தார்கள். (பெரும்பாண 229;165-166)

தாம் விற்கும் நெய்க்கு ஈடாகப் பொன்னைப் பெறாமல் பசுக்களையும், எருமைகளையும் வாங்கி ‘தம் தொழில் மூலதனத்தை’ப் பெருக்கிக் கொண்டனர்.(பெரும்169-170)

கள் உற்பத்தியும் வணிகமும்

கள்ளானது ‘அரித்து’ எடுக்கப்படுவதால் அரியல் எனப்பட்டது. அதனைக் காய்ச்சி விற்கும் மகளிர் ‘அரியல் பெண்டிர்’ எனப்பட்டனர். வணிகத்திற்காக கள் காய்ச்சிய பழந்தமிழக மகளிரை ‘கள்ளடு மகளிர்’என்றனர். (பெரும்பாண்339-40)
கடலில் அடித்து வரப்பட்ட அகில் மரத்தை விரகாக்கி பரதவ மகளிர் கள் தயாரித்ததாக கூறப்படுகிறது (சிறுபாண்154-59)
போர் வீரர்களுக்கு பானையில் கள்ளினைச் சுமந்து சென்று மகளிர் வழங்கியுள்ளனர்.(அகம்157)
பந்தமிழகத்தில் மகளிருள் ஒரு சாரர் கள் உற்பத்தியிலும், வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

பிற தொழில் முனைவோர்
கோழி வளர்ப்பு, பூ விற்றல்,பண்ணியம் விற்றல் போன்ற சிறுதொழில் முனையும் மகளிரையும் இலக்கியங்கள் காட்டுகின்றன. மருத நிலத்து மகளிர் அவ்வப் பருவ காலத்து மலர்களை விற்றனர். அகன்ற வட்டிலில் பாதிரி,குருக்கத்தி,பித்திகை போன்ற மலர்களை ஏந்திச் சென்று விற்றனர். கார் காலத்தில் மலரும் குருக்கத்தி, சிறுசண்பகம் முதலான மலர்களை கடகப் பெட்டியில் வைத்து எடுத்துச் சென்று ‘விலைக்குக் கொள்ளீரோ’ எனக் கூறி வணிகம் செய்தனர். வீதிகளில் மட்டுமன்றி வீடு தோறும் சென்றும் பூக்களை விற்றனர்.

பழந்தமிழகத்து முதுபெரும் பெண்டிரும் பல்வேறு வகையான செப்புகளில் காண்போர் விரும்பிடும் திண்பண்டங்களை(பண்ணியம்) மலர்களோடும் ஏந்திச் சென்று சிறு வணிகம் செய்தனர்.

மகளிர் பெருந் தொழில் முனைவோராக உணவு உற்பத்தி, உணவு தேட்டம், உணவுப் பரவலாக்கம், உடை உற்பத்தி, மீன் பிடித்தல், மீன் கொள்முதல், உணங்கு மீன் உற்பத்தி, உப்பு உற்பத்தி மற்றும் வணிகம், கள் உற்பத்தி மற்றும் வணிகம் போன்றவற்றில் ஈடுபட்டவை அறிகிறோம்.
சிறு தொழில் முனைவோராக கோழி வளர்ப்பு, மலர் வணிகம்,பண்ணியம் விற்றல், சுண்ணம் தயாரித்தல் மற்றும் விற்றல் போன்றவற்றிலும் ஈடுபட்டமை தெரிகிறது.

இதன்வழி பழந்தமிழக மகளிர் தொழில் முனைவோர் தங்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்து சுற்றத்தைக் காத்ததோடு , சமூகப் பொருளாதாரத்தை காப்பதிலும் முக்கியப் பங்காற்றியமை தெளிவு.

சங்ககாலத்தில் மகளிரும் ஆடவர்க்கு இணையாக பொருளீட்டியமை நண்கு அறிகிறோம். பின்னரே பெண்கள் வீட்டிற்குள் பூட்டி வைக்கப் பட்டார்கள். இன்றைய காலத்தில் மகளிர் விண்வெளிப் பயணம் வரை தீரத்துடன் செல்லத் துணிந்தவரா யிருக்கின்றனர். மகளிர் பங்கேற்காத துறைகளே இல்லை என்பதால் மீண்டும் சங்ககாலம் திரும்பியது என்று மகிழ்ச்சி அடைவோம்.

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Create a website or blog at WordPress.com

Up ↑

%d bloggers like this: