புத்தகத்தின்பெயர்:- சிதைந்த கூடு
ஆசிரியர்:- ரவீந்திர நாத் தாகூர்
தமிழில் மொழி பெயர்த்தவர்:- சு.கிருஷ்ணமூர்த்தி
சாகித்ய அகாடெமி வெளியீடு
ரவீந்திரநாத் தாகூர் என்ற பெயரைப் பார்த்ததுமே புத்தக கண்காட்சியில்(2020) வாங்கிவிட்டேன். மொழிபெயர்ப்பிலேயே அருமையாக இருக்கிறது. வங்க மொழியிலேயே படித்திருந்தால் அவரின் நடையை, எழுத்தோவியத்தை நன்கு ரசித்திருக்கலாமே என்ற ஆதங்கம் மனதுக்குள் தோன்றுகிறது.
தசாவதாரமாய் 10 கதைகளிலும் 10 நாயகியர். தமிழில் கதைகளுக்கு பெயர் கொடுத்திருந்தாலும் ஒவ்வொர் கதை முடிவிலும் வங்கமொழியில் அதன் பெயரை வெளியிட்டிருப்பது தனிச்சிறப்பு.
சிதைந்த கூடு
சிதைந்த கூடு கதையில் பணக்கார குடும்பத்தின் இளவயது தம்பதியர் சாருபாலாவும் பூபதியும்.
மனைவியிடம் எப்படி நடந்து கொள்ள, நடத்த வேண்டும் என்று தெரியாத கணவன், பத்திரிக்கை நடத்துகிறான். படிப்பில் ஆர்வமுள்ள மனைவி வீட்டுக்கு வரும் பூபதியின் உறவினனும், கல்லூரி மாணவனுமான அமலுடன், வீட்டுத்தோட்டம் அமைப்பதுபற்றி செல்லச்சண்டை, கதை, கவிதை எழுதுவது என விளையாட்டாய் பழக தொடங்கி அவளைறியாமல் அவனை நேசிக்கத் தொடங்கிவிடுகிறாள். இதனை இலைமறை காயாக புரிந்துகொள்ளும் அமல், வீட்டினர் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்ய ஒப்புக்கொள்வதோடு, படிப்பதற்காக வெளிநாடு சென்றுவிடுகிறான். அதே சமயம் பூபதி பத்திரிக்கை நடத்துவதற்கு உதவியாக வரும் மைத்துனன் செய்யும் குளறுபடிகளால் பத்திரிக்கை நடத்தமுடியாமல் வீட்டில் இருக்கும் நேரத்தில், தன் மனைவி அமலை விரும்புவது தெரிய வர…மீதியை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
தண்டனை
தண்டனை கதையின் தலைப்பு மிகப் பொருத்தம். விவசாய தினக் கூலிகளான சகோதர்கள் துக்கிராம், சிதாம் இருவரும் தம் மனைவியர்களான ராதா, சந்திராவுடன் ஒரே வீட்டில் வசிக்கின்றனர். .
ஒருநாள் அண்ணன் தம்பிகள் இருவரும் மதிய உணவு கூட இன்றி வேலை செய்த களைப்புடன் இரவு வீடு திரும்புகின்றனர். துக்கிராம் தன் மனைவியிடம் சோறு கேட்க அவளோ ஏடாகூடாமாக பதலளிக்க பசி ,களைப்பு , கேட்ட வசை எல்லாம் சேர கோபத்துடன் அரிவாளால் மனைவியை தாக்க அவள் இறந்துவிடுகிறாள்.
தம்பியோ அண்ணனைக் காப்பாற்ற தன்மனைவி சந்திராவை கொலைப் பழியை ஏற்கசொல்கிறான். முதலில் தயங்கி, சற்றேகலங்கி, பின் மனம்வெறுத்து, முடிவில் உறுதியாக, ஓரகத்தியைக் கொன்றது தானேதான் என்ற வாக்குமூலத்தை விசாரணையின் எந்த நிலையிலும் மாற்றாமல் சொல்லி தூக்கு தண்டனையை ஏற்கிறாள். என்ன மனத் துணிவு! என்று சொல்லமுடியாமல் இப்படிபட்ட கணவனுடன் வாழ்வதை விட சாவதே மேல் என நினைக்கிறாள் என்றே தோன்றுகின்றது.
அண்ணன் ஆத்திரத்தில் அறியாமல் கொன்றுவிடுகிறான். தம்பியோ தெரிந்தே சட்டப்படி( ?) சந்திராவை கொன்றுவிடுகிறான். தண்டனை யாருக்கு?
மேகமும் வெயிலும்
மேகமும் வெயிலும் கதையில் ஜமீனில் குமாஸ்தா வேலை பார்க்கும் ஒருவர் தன் மகள் கிரிபாலாவை விடுத்து மகன்களை படிக்க வைக்கிறார். அந்த சிறுமியோ பக்கத்து வீட்டில் சட்டம் படித்த சசிபூஷன் என்ற இளைஞனிடம் தோட்டத்து நாவல் பழங்கள் ,வீட்டிலுள்ள திண்பண்டங்களை எல்லாம் கொடுத்து நட்புபாராட்டி கல்வியை கற்கிறாள்.
குமாஸ்தா ஜமீனில் ஏற்பட்ட பிரச்சனைக்காக சசிபூஷனின் சட்ட உதவியை நாடுகிறார். பிரச்சனைபெரிதாகிறது .அதே நேரம் கிரிபாலாவுக்கு திருமணம் நடந்து ஊருக்கு சென்றுவிடுகிறாள். இடையில் ஜமீனுடன் சமாதானமாகும் குமாஸ்தா சசிபூஷனை பலிகடா வாக்கி சிறைக்கு அனுப்பவதோடு சொத்துக்களையும் பறித்துக்கொளகிறார்.. சிறையிலிருந்து விடுதலையாகும் சசிபூஷன் போகுமிடம் தெரியாமல் தடுமாறி நிற்க ஒரு கோச் வண்டிவந்து “எஜமானர் கூட்டி வரச் சொன்னார்”. என்று நிற்கிறது. யார் அது ?
அறிமுகமாகாதவள் கல்யாணி, மனைவியின் கடிதம் மிர்ணால், அக்கா சசி, முநல்நம்பர் அனிலா, போஷ்டமி ஆனந்தி, நடுவில் இருப்பவள் ஹர சுந்தரி, ஊடல் தணிப்பு கிரிபாலா (மீண்டும் அதே பெயர்தான்) அத்தனை நாயகியரும் நமதுவாழ்க்கையில் நாமாக, நட்பாக,உறவாக , பக்கத்து வீட்டுப் பெண்ணாக இன்றும் வாழ்க்கையில் சந்தித்து கொண்டுதானே இருக்கிறோம்!
நட்சத்திரங்களின் தொலைவைப் பொறுத்து மின்னும் ஔிக்கீற்று மாறுமே தவிர மொத்தமாக பார்க்கும்போது எல்லா நட்சத்திரங்களுமே அழகுதான்!!!
தாகூரின் வரிகளும் அப்படித்தான் எந்த கதையின் எந்த வரியை அழகென்று சொல்ல!
காதல், பாசம், தியாகம், துணிவு, அலட்சியம் , கம்பீரம் எனஅத்தனை உணர்வுகளிலும் பெண்களாகவே வாழ்ந்து பெருமைபட வைத்திருக்கிறார்.
நாட்டுப் பண்ணுக்காக நாம் எழுந்து நின்று மரியாதை செய்யும் போது தாகூரின் பெயரை மனதிற்குள் சொன்னால் அதுவே அவருக்கு சரியான கீதாஞ்சலி!!!
“தம்பியோ தெரிந்தே சட்டப்படி( ?) சந்திராவை கொன்றுவிடுகிறான். தண்டனை யாருக்கு? “ இந்த வரிகளை படிக்கும் அவரை இந்த கோணத்தை யோசிக்கவே இல்லை. அருமை. நல்ல கதைகள், நல்ல தொகுப்பு. வாழ்த்துக்கள. 👏👏👍👍
LikeLiked by 1 person
நன்றிகள்
LikeLike