( சித்திரம்: கிரிஸ் நல்ல ரத்னம், மெர்ல்போர்ன், ஆஸ்திரேலியா )
நான் இன்னைக்கு வாக்கிங் வரலைன்னு ராஜேஷிடம் சொல்லிட்டேன்; காலை எழுந்திருக்கும் போதே தாங்க முடியாத தலைவலி. மனைவியிடம் சூடா காஃபி கேட்டுட்டு காலை பேப்பருடன் வராண்டா நாற்காலியில் வந்து உட்கார்ந்தேன். காஃபி வந்தது; டம்ளரை மூக்கருகே கொண்டு வந்து ஆவியை நல்லா உள்ளுக்கு இழுத்து அந்த அரோமாவை அனுபவிச்சேன் ; என் மனைவி கைவண்ணமே அலாதிதான். சர்..சர் ன்னு இரண்டு உறிஞ்சல்தான் உறிஞ்சியிருப்பேன், அரக்கப் பரக்க ராஜேஷ் ஸ்கூட்டரை கொண்டாந்து நிறுத்தினான். நான் எதுவும் புரியாம அவனை நிமிர்ந்து பார்த்தேன். என் பார்வை ‘ என்னடா இந்த அவசரம்? வாக்கிங் போகலையா’ என கேள்வி கேட்டது. படியேறிவந்த ராஜேஷ் ,
“தலைவலி எப்படியிருக்குடா”ன்னான்.
“இன்னும் குறையல, இந்த காஃபி உள்ளுக்குப் போனாதான் சரியாகும். உனக்கு காஃபி?”
“இல்லை வேண்டாம். ஒரு முக்கிய விஷயம். பதினைஞ்சு வருஷ முந்தி மைதிலியை மாம்பலம் ரயில்வே ஸ்டேஷனில் அவள் இரண்டு பெண்களோடு பார்த்தோமே ஞாபகமிருக்கா”
“நல்லாவே இருக்கு, அதுக்கு இப்ப என்னா”
“அதுல சின்னப் பெண்னா தெரிஞ்சாளே, அவளை வாக்கிங் போறச்சே பார்க்குல இப்போ பார்த்தேன்”
“அவளும் நம்ம ஏரியாவா”
” நாளைக்கு கட்டாயம் அவளை மீட் பண்ணி மைதிலி பத்தி கேக்கனும்”
சிறுவயதில் கல்வி மட்டும் பசுமரத்து ஆணி போல நெஞ்சில் பதிவது இல்லை; சில இனிய நினைவுகளும் பதிந்து. கல்வெட்டு போல அழியாமல் இருப்பதுண்டு..
“சரிடா, கேட்டுட்டா போச்சு. ரொம்ப ஆயாசப்படாத”
“நான் இன்னைக்கே மதுரை, திருச்சி,கோயம்புத்தூர் கிளைஆபீசுக்கு ஆடிட் விசயமாகப் போறேன்; வர நாலுநாள் ஆவும். விசாரிச்சு வை”
ராஜேஷ் ஸ்கூட்டரை கிளப்பிக் கொண்டு போனான். தலைவலியையும் சட்டை செய்யாமல் திறந்து மூனு நாளே ஆன புது பார்க் நோக்கிப் போனேன். அந்தப்பெண் தன் மகன், பன்னெண்டு வயசிருக்கும் அவனுக்கு லாங்ஜம்ப் தாண்டுறதுக்கு பயிற்சி கொடுத்துக் கிட்டிருந்தாள். நல்லாவே பார்த்தேன், அப்படியே அவள் மைதிலியை உரித்து வைத்தாப்ல இருந்தாள். எனக்கே பார்க்க மனதை என்னவோ செஞ்சுதுன்னா ராஜேஷுக்கு என்னவெல்லாம் செய்யும்ன்னு கற்பனை செஞ்சு பார்த்தேன்; அவன் பாவமாத் தெரிஞ்சான். ராஜேஷுக்கு அன்பான மனைவியும் , ஆண் ஒன்று பெண் ஒன்று என இரண்டு வாரிசுகள். இவன் மைதிலியை தேடிப்போனால் இரண்டு குடும்பத்திலும் குழப்பம்தான் வரும். நாள் முழுவதும் எங்களேட இளவயது சம்பவங்கள் ஒவ்வொன்னா நினைவில வந்தபடியே இருந்திச்சு.
நானும் ராஜேஷும் ஒரே ஊர்க்காரச்க; ஒத்த வயது; ஒரே வகுப்பில படிச்சோம். ஆறுமாதமே மூத்த மைதிலி எங்களைவிட ஒரு வகுப்பு கூடுதலாகப் படித்து வந்தா. ஆச்சாரமான ஐயங்கார் குடும்பத்துப் பெண் அவள். ராஜேஷ் ஐயங்காரும் இல்லை, என்போல ஐயரும் இலலைன்னாலும் , அவன் அப்பாவுக்கு ஊரே பிள்ளைவாள்ன்னு மரியாதை கொடுக்கும்; அந்த மரியாதை
‘ பிள்ளைவாள் புள்ளையாண்டான்’ன்னு இவனுக்கும் கிடைக்கும்.
சிறு வயதிலிருந்தே நானும் ராஜேஷும் இணைபிரியா நண்பர்கள். பொழுதெல்லாம் ஒன்னு நான் அவன் வீட்டிலிருப்பேன்; இல்லன்னா அவன் என் வீட்டிலிருப்பான். எங்கள தனித்தனியாப் பார்க்கறது அரிது.. என் வீட்டுக்கு எதிர் வீடுதான் மைதிலி வீடு. நாளெல்லாம் நாங்கள் என்னவெல்லாம் விளையாடு றோமோ எல்லாத்தையும் ஜன்னல் வழியே பார்த்து ரசித்தபடியே இருப்பாள். நாங்கள் அடிக்கும் லூட்டியைப் பார்த்து புன்முருவலுடன் அவ்வப்போது ‘களுக்’ ன்னு சிரிக்கவும் செயவாள். அவள் சிரிக்கிறாள்ங் கறதுக்காகவே நாங்கள் அநேக வித்தைகள செய்வோம்.
நவராத்திரி நாட்கள்ல ராதை, சீதை, ருக்மணி, மோகினி, மகிசாசுரமர்த்தினி என தினம் ஒரு வேஷ அலங்காரம் செஞ்சு வருவா. பெருமாள் கோவிலுக்கு வரும் போதெல்லாம் “நல்லாருக்கா” ங்கறது போல ராஜேஷை நோக்கி தலையை ஆட்டியே கேட்பாள். அவனும்
“அருமையாயிருக்கு” டஎன்பது போல கையால சின்முத்திரை காட்டுவான்.
அந்த கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவில்தான் நாங்கள் கூடும் இடம். சாமிக்கு இரவு பூஜைக்கு கட்டாயம் ஆஜர் ஆகிடுவோம். ஆண்களும் பெண்களும் எதிரெதிர் வரிசையில் நின்னு சாமி கும்பிடுவோம். எதிரே நின்னு சாமி கும்பிடும் மைதிலியின் பாதங்களையே ராஜேஷ் பார்த்தபடியே இருப்பான். தன் பாதத்தையும் விரல்களையும் இவன் பார்ப்பதை உணரும் மைதிலி சற்றே வளைந்து பாதத்தை நகர்த்தி பாவாடையில் பாதத்தை மறைக்க முயலுவாள். அந்த நிலை நீண்டநேரம் நீடிக்காது. நாளடைவில் ‘ அவன் பார்த்தால் என்ன’ ங்கறது போல இருந்துட்டாள்.
“இந்த மாதிரி பாதத்தை பார்க்கிறியே” ன்னு நான் கேட்டதுக்கு அவன் சொன்னான்,” நா.பா வின் பொன்விலங்கு நாவலில் கதாநாயகி இப்படித்தான் கதாநாயகன் பாதத்தை ஆவலுடன் பார்ப்பா.. அதிலென்ன ஈர்ப்பு ன்னு நெனைச்சேன். ஆனால் மைதிலி பாதத்தை பார்ககையில அந்த ஈர்ப்பு எப்படிப பட்டதுன்னு தெரியுது.” தினமும் மைதிலியின் பாத தரிசனத்துக்காகவே இவன் பெருமாள் கோவிலுக்கு இராப்பூஜைக்கு வருகிறான் என்பது உறுதி.
தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காக்கைக்கு சாப்பாடு வைத்தால், அது அதே நேரத்துக்கு தினமும் வந்து ‘காகா’ வென கத்தும். நாம் மறந்தாலும் அது மறக்காமல் வந்து கத்தும்.அவ்வளவு ஏன், திருக்கழுகுன்றம் கழுகு தினமும் அதே நேரத்துக்கு வந்து விடுகிறதல்லவா அதைப்போல இவன் தினமும் அனிச்சைச் செயலாக கோயில் பூஜை நேரத்துக்கு ஆஜர் ஆகிடுவான் பாத தரிசனம் பார்க்க..
மார்கழி மாதம் அதிகாலையில் பஜனை கோஷ்டி ஊர்வலத்தில் கட்டாயம் நாங்கள் இருப்போம். ஐந்து மணிக்கெல்லாம் தலையில் ஒரு பெரிய கைக்குட்டையைக் கட்டிக்கொண்டு அன்பே வா சினிமா சரோஜாதேவி போல மைதிலி கோலம் போட புள்ளி வைச்சுக் கிட்டிருப்பாள். அதற்கு முன்னேயே வாசல் தெளித்து பெருக்கி விட்டிருப்பா.. அந்த நேரம் பாவாடை தாவணியை தூக்கி இடுப்பில் சொருகி இருப்பா.. முழங்காலுக்குக் கீழ் அவள் வலதுகால் மஞ்சள் நிறத்தில் மின்னும். உயரமான தெரு விளக்ககுக் கம்பத்தின் குழல் விளக்கின் அந்த மங்கலான வெளிச்சத்திலும் ராஜேஷ் அவள் பாதங்களை ‘ஜும்’ செய்து பார்க்கறதை நான் கவனிச்சிருக்கேன். திரும்பித் திரும்பி முகத்தைத்தான் எல்லோரும் பார்ப்பாங்க.. இவன்தான் புதுசா பாதத்தை பார்க்கிறான். கூட்டல்குறி போல இரண்டு தெருக்கள் சந்திக்கும் நாற்சந்தியில் மூலைவீடு அவளோடது. அங்க நின்னு பாடிவர்ர பஜனைப் பாடலை முடிப்போம்.
“சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்”
“கோவிந்தா….கோ….விந்தா….” மீண்டும் அடுத்த பாடலை தொடங்கி நடையைத் தொடருவோம்.
“விட்டல..விட்டல..ஜெய் ஜெய் விட்டல”
“விட்டல..விட்டல..ஜெய் ஜெய் விட்டல”
அங்கு நிற்கறது சொற்ப நோரமேன்னாலும் ராஜேஷுக்கு அவள் பாத தரிசனத்தால் அது ஒரு யுகமாத் தெரிஞ்சிருக்கும். மெதுவாக அவள் வீட்டுத் தெருவை கடக்கும் வரை மைதிலி கையில கோலமாவு கிண்ணத்தோட வீட்டின் கடைசி படியில தலையைக் குனிஞ்சபடி நிற்பா. எனக் கென்னவோ அவள் தலை கவிழ்நதிருந்தாலும் ஓரவிழிப் பார்வை ராஜேஷ் மேலயே இருக்கறதா தோனும்.
கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்சம் பிரசித்தம். அதுக்காக மொத நாளே சுவாமிமலையிலிருந்து கோவில் யானை வரவழைச் சிருப்பாங்க.. யானையை சத்திரத்தில ஒரு வாதாமரத்தில கடடி வைச்சிருப்பாங்க. தென்னை ஓலை, வாழை இலையெல்லாம் அதுக்கு சாப்பிடப் போட்டிருப்பாங்க. நாங்கள் சாப்பாடு நேரம் போக மீதி நேரமெல்லாம் யானையோடதான் இருப்போம். யானை தலையை ஆட்டுறதால கேட்குற மணியோசையை ரசிப்போம். முறம் மாதிரி உள்ள காதுகளை எப்பவும் ஆட்டிக் கிட்டே இருக்கும். தன் காலால தரை மண்னை செதுக்கி , தும்பிக்கையால வாரி முதுகுல போட்டுக்கும். முதநாள் மாலை ஆறு மணிவரை யானையேடு இருந்துட்டு மறுநாள் காலை டிபன் முடிச்சிக்கிட்டு அங்கு ஆஜர் ஆகிடுவோம். ஏன்னா யானையை காவிரி ஆற்றில படுக்க வைச்செல்லாம் குளிப்பாட்டுவாங்க. வைக்கோல், உருக்காங்கல் எல்லாம் வைத்து தேய்ச்சு குளிப்பாட்டுவாங்க.. அத்தனை பெரிய உருவம் சின்ன குழந்தை போல பாகன் சொல்வதை யெல்லாம் சமத்தா கேட்கும். இதனால்தான் யானைக்கு தன் பலம் தெரியாதும்பாங்களோ. அந்த யானை மீதுதான் திருமஞ்சனம் காவிரியிலிருந்து மேளதாளத்தோட பெருமாளுக்கு எடுத்து வருவாங்க.
சத்திரத்து குளத்தில் கஜேந்திர மோட்சம் வைபவம் நடக்கும். பெருமாள் மேல் படியில் எழுந்தருளியிருப்பார். யானையை படிகளில் பாகன் மெல்ல இறங்க வைப்பார். தண்ணீர் உள்ள படிவரைக்கும் யானை வந்து நிற்கும். மரத்தால் செய்யப்பட்ட , வாயைப் பிளந்தபடி இருக்கும் முதலையை ஒரு வாழை மரத்துண்டை அடியில் வைத்து கட்டியிருப்பார்கள். அதை நாண்கைந்து போராக தண்ணீரில் அழுத்தி மறைத்தபடியே நீந்திவந்து யானை கிட்ட வந்ததும் விட்டுவிடுவாங்க. முதலை தண்ணீரிலிருந்து பாய்ந்து வர்ரது போல இருக்கும். பாகன் கட்டளையை ஏற்று யானையும் தும்பிக்கையை மடிச்சு நெற்றியில வைச்சு மூனு முறை பிளிரும். கேட்கறதுக்கு ‘ரங்கா….ரங்கா’ ங்கறது போல இருக்கும். இதைக்கேட்ட திருமால் தன் சக்கராயுதத்தை விட்டு முதலையின் தலையை துண்டாக்கி அந்த கஜேந்திரனைக் காப்பாத்தவார். இந்த கஜேந்திர மோட்சம் ஒரு மணி நேரம் நடக்கும். பின் எல்லோரும் படித்துறை தண்ணீரில் இறங்கி காலை நனைத்துக் கிட்டு தண்ணீரை எடுத்து தலையில் தெளித்துக் கொள்வாங்க. அந்த நேரம் இவன் மைதிலியின் அந்த பொற்பாதங்களை பார்த்து மோட்சம் அடைவான்.
நானும், ராஜேஷும் ஒன்பதாம் வகுப்பும், மைதிலி பத்தாம் வகுப்பும் படித்துக் கொண்டிருந்தோம். அந்த நாள் டிசம்பர் மாதம் தேதி முப்பத்தொன்று ; அன்றையதினம் வைகுண்ட ஏகாதசி. அதிகாலை நாண்கு மணிக் கெல்லாம் பெருமாள் கோவிலில் சொர்கவாசல் திறப்பு. மொத்த அக்கிரகாரமும், ஊரில் பக்திமான்களும் நிரம்பியிருப்பாங்க. அதில் கலந்து கொண்டுவிட்டு நானும் ராஜேஷும் சில நண்பர்களும் அந்த நாற்சந்தியில் வழக்கம் போல நின்று பேசிக் கொண்டிருந்தோம். லேசாக பாவாடையை தூக்கி சொருகியபடி வீட்டினுள்ளே ஏதோ வேலையாக இருந்த மைதிலி வெளியே வந்தா. கடைசிப்படியில் நின்னு,
“ராஜு, இப்போ கோவிலுக்குப் போவியா” அவள்.
“ஏன்” இவன்.
“போனால் தம்பி அங்கிருப்பான், வரச் சொல்லேன் ” அவள்.
“உம்..சரி” இவன்.
வாய்தான் பேசிச்சே தவிர கண்கள் அவள் பாதத்தைத்தான் மேய்ந்தன.
அவன் சொர்க்க வாயிலில் நுழைந்து விட்டான்.அவள் காலால் இட்டதை இவன் தலையால் நிறைவேத்த.
இளைஞர் சபையிலிருந்து பிரிஞ்சு நாங்க கோவில் நோக்கி போனோம். எதிரே தம்பி (உண்மையில் இரண்டு வயது மூத்த அண்ணன்) வரவே நான்,
“தம்பி, ஒன்ன ஆத்துல வரச் சொன்னாடா” ன்னேன்.அவனும் தலையாட்டிட்டுப் போனான். எதற்காகவோ ராஜேஷ் என் முகத்தை நன்றி சொல்பவனாகப் பார்த்தான். எனக்கென்னமோ அவள் ஹக்கோபா துணியில் தைத்த ரோஸ் நிற பிளவுஸ், இண்டிகோ நிற பட்டுப் பாவாடை, சாம்பல் நிற தாவணியைக் காட்டவே வந்து இவனிடம் பேசியது போலத் தெரிஞ்சது. மொத்தமாகவே மூன்று சந்தர்ப்பங்களில்தான் அவள் அவனிடம் பேசியது.
பத்தாம் வகுப்பில் நாங்கள் அல்ஜீப்ரா கணக்குப் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்திருந்தோம். மைதிலியும் அதே விருபப் பாடம்தான் எடுத்திருந்தா. பதினொன்றாம் வகுப்புக்கு சென்ற அவள் ஒருநாள் நாங்கள் பேசிக் கொண்டிருக்கிறப்ப நேரா என் வீட்டுக்கு வந்தாள்.
“ராஜு, இந்தா என்னோட அல்ஜீப்ரா புத்தகம். உனக்கு இது பயன் படும்” ன்னு ராஜேஷிடம் கொடுத்தாள். வாங்கிக் கொண்ட ராஜேஷ்,
“இதுக்கு எவ்ளோ தரனும் ” ன்னு கேட்டான்.
“ஒன்னும் தர வேணாம்; நல்ல மார்க்கு வாங்கு”
ன்னு சொல்லிட்டு போய்ட்டாள். அவள் அப்படி அவன்ட்ட மட்டும் பரிவு காட்டியதில் எனக்கு உண்மையாவே அதிருப்திதான்.
எஸ.எஸ்.எல்.சி எனப்பட்ட பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிந்சதுதும் ஞாபகமாக அவள் அல்ஜீப்ரா புத்தகத்தை ராஜேஷுக்குக் கொடுத்தா.
“நீ மைதிலியை காதலிக்கிறாயா ” ன்னு ராஜேஷை முகத்தைப் பார்த்து கேட்டுட்டேன். என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம ‘தத்துப் பித்துன்னு’ உளறினான். எனக்கு சநதேகமில்லமல் தெரியும் அவன் காதலிக்கிறான். அதை தைரியமா சொன்னால் எங்கே தன் மேல இருக்குற மதிப்பெல்லாம் போயிடுமோன்னு தயங்கறான்.
இப்படித்தான் இந்த யோக்கிய சிகாமணிகள் தங்களின் இமேஜ் கெட்டுவிடக் கூடாதுன்னு நல்ல காதலை கானல் நீராக்கி விடுகிறார்கள்.
தேர்வுகள் முடிஞ்ச சில நாள்ள மைதிலியின் டெல்லி அண்ணன் குடும்பத்தோடு வந்து சில நாட்கள் தங்கிட்டு டெல்லி திரும்பும் போது மைதிலியையும் டெல்லிக்கு அழைசிட்டுப் போறதாசெய்தி கிடைச்சுது. அங்க போய் காலேஜில் சேர்க்கப் போறாங்களாம். இந்த செய்தி எங்களுக்கு இடியாக வந்து இறங்கிச்சு.அடுத்த இரண்டாவது நாள் மாலை இரட்டை மாட்டு வண்டியில் அண்ணன் குடும்பத்தோட மைதிலி போறதைப் பார்த்தேன். விழுந்தடித்து ஓடிப்போய் ராஜேஷிடம் செய்தியைச் சொன்னதுதான் தாமதம் அவன் பரபரப்பாக சைக்கிளை எடுத்தான்; நான் பின்னால் உட்கார்ந்து கிட்டேன். பாபநாசம் புகைவண்டி நிலையத்தை நோக்கி சைக்கிள் பறந்தது.பாபநாசத்தின் ஆரம்ப எல்லையான குடமுருட்டி ஆற்றுப் பாலத்தில் அவர்கள் சென்ற வண்டியைப் பிடிச்சிட்டோம். வண்டியோட்டியின் பின்னால் அவள் அண்ணன், அப்புறம் மன்னி, அடுத்து மைதிலி என உட்காரந்திருந்தாங்க.. அண்ணனும் மன்னியும் தீவிரமாக எதைப் பற்றியோ பேசிக்கிட்டு வந்தாங்க.. வண்டியின் பின்னால் அமர்ந்திருந்ததால மைதிலி எங்கள சட்டெனப் பார்த்துட்டாள். பார்த்த மாத்திரத்தில் ‘குபுக்’கென கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது தெரிஞ்சிச்சு. வண்டியில் பின்புறம் போட்டிருந்த பாதுகாப்பு கம்பியில் நீட்டி வைத்திருந்த இடது கை தோள் பட்டை தாவணியில் முகத்தைப் புதைத்து துடைச்சிக்கிட்டாள். ராஜேஷ் சைக்கிளை மெதுவாக ஓட்டி பின் தொடர்ந்தான்.
கம்பியிலிருந்து கைகளை எடுத்தவள் தனது இடுப்பருகே கொண்டு வந்து இரு கைகளையும் குவித்து கும்பிட்டாள். வலது கையை லேசாக அசைச்சு ‘ போய் வருகிறேன்’ என்றாள். பொறுமை இழந்த ராஜேஷ் சைக்கிளை வேகமாக மிதித்து முன்னேறினான். நேரே புகைவண்டி நிலையம் வந்து சேர்ந்தோம். சென்னை செல்லும் ரயில் ஆறுமணி முப்பது நிமிடத்துக்குத்தான்; இப்போது மணி ஆறுதான் ஆகிறது.
சிறிது நேரத்தில் அவர்கள் வண்டியும் வந்துட்டது. நேரே எங்களை அடுத்து இருந்த பிளாட்பாரத்து பெஞ்சில் வந்து உட்கார்ந்தாங்க..
இன்னமும் அண்ணனும் மன்னியும் ஆரம்பித்த உரையாடலை முடிச்சபாடில்லை; அது மைதிலிக்கு வசதியாகப் போய்ட்டது. தலையை எங்கள் பக்கம் திருப்பியவள் மீண்டும் வேறு பக்கம் திருப்பாமல், பார்வையையும் மாத்தாமல் சிலை போல உட்காரந்திருந்தா.. இந்த நேரத்திலதான் ராஜேஷுக்கு கண்கள் பனிக்க ஆரம்பித்தன. அதை மறைக்க அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கிட்டான்
புகை வண்டி வந்தது; பெட்டி படுக்கையோடு வண்டியில் ஏறினாங்க. கடைசியாக ஏறிய மைதிலி யாரும் அறியாதபடி கையசைச்சிடடு உள்ளே போனாள்.அவள் கையைக்காட்டிலும் பாதத்தையே அவன் பார்ப்பதாகப் பட்டது.
விழிகளின் பார்வையிலிருந்து மறைந்தாலும் அவளை தன் எண்ணத்திரையில் அழியா ஓவியமாகவல்லவா இவன் வரைந்து வைத்திருக்கிறான்.
எதிலும் ஈடுபாடு காட்டாம இருந்தான். நாங்கள் எஸஎஸ்எல்சி முடிச்சு குடந்தைக் கல்லூரியில் சேர்ந்தோம். ராஜேஷ் அல்ஜீப்ராவில் பத்தாம் வகுப்பு பகுதியை மட்டும்தான் எழுதினான். மைதிலி போனபின்பு படிப்பிலும் பிடிப்பு போனதால் பதினோராம் வகுப்பு பகுதியையே அவன் தொடாததால் வெறும் ஐம்பது மதிப் பெண்ணே வாங்கினான். கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்த முடியாதுன்னு பொருளாதாரம் எடுத்துப் படிச்சான். ஒரு வருடம் ஓடிடுச்சு. ஒருநாள் மைதிலியின் குரல் கேட்டது; பிரமையோ என நெனச்சேன்..உண்மையிலேயே மைதிலி காலையில் வந்த ரயிலில் வந்ததாக அம்மா சொன்னா. உடனே ராஜேஷை பார்த்து விபரம் சொன்னேன்; சந்தோசப்பட்டான்.ஆனால் அந்த சந்தோசம் நிலைக்கல. டெல்லியில் வசிக்கும் ஸ்ரீரங்கத்து ஐயங்கார் குடும்பத்து வரனுக்கு மைதிலியை பேசி முடிச்சிட்டாங்களாம். இரணடு மாதத்தில ஸ்ரீரங்கத்தில் கல்யாணம. அதான் மைதிலி வந்திருக்கிறாளாம்.
காதலிக்கும் பெண்கள் சாதியைப்பற்றி யெல்லாம் அக்கறை காட்டுவதில்லை. ஆனால் அம்மா, அப்பா, ஆச்சாரம் என்றுதான் பின் வாங்கிடறாங்க. உள்ளும் புறமும் நல்லா தெரிஞ்ச ஒருத்தனை கரம் பிடிக்க தவறிடராங்க.
கல்யாணம் முடிந்து மைதிலி டெல்லி போய்ட்டா. ஒரு சிறுபிள்ளை விளையாட்டு அசுபமாக முடிந்து விட்டது.
இந்த எண்ணங்கள் என் மனதில ஓடவே, அப்படியே நிலை குத்தி உட்காந்துட்டேன்.
மறுநாள் காலை பார்க்குக்கு போனேன்; என்ன ஆச்சரியம் மைதிலி பார்க் பென்ஞ்சில் உட்கார்ந்திருக்கிறா. எதிர் மணலில் அவள் மகள் தன் பிள்ளைகளுக்கு லாங் ஜம்ப் பயிற்சி கொடுக்கிறா. என்னைப் போலவே அவளும் என்னை இனம் கண்டுட்டா தொலைவிலிருந்தே உற்றுப் பார்த்தவ நெருங்கி வந்ததும் ஊர்ஜிதம் செய்து.கொண்டதால வாய் திறந்து சிரிச்சாள். நானும் சிரித்சேன்.
” மைதிலி ?”
“நானேதான்.எப்படியிருக்க. ராஜு எங்கிருக்கான்? பார்ப்பியா?”
“இங்க சென்னையிலதான் இருக்கான்.தினமும் பார்ப்பேனே”
“நாளைக்கு சாயங்காலம் கிளம்பி டெல்லி போய்டுவேன். அவனை நாளைக்கு கார்த்தால இங்க வரச் சொல்றியா? அவனைப் பார்க்கனும்”
அவள் குரல் கம்மத் தொடங்கியது.
“அவன் ஆபீஸ் காரியமா வெளியூர் போயிருக்கான்; வர நாலுநாள் ஆவுமே”
“உச்..இப்ப கூட என் ஆசை நிறைவேறல பார்த்தியா”
எனக்குள் சொரேல் என்றானது. ‘அடிப்பாவி அவனைப்போல நீயும் ஊமை கண்ட கனவா’
அவள் கல்யாணத்துக்கு அப்புறமான வாழ்க்கை பற்றி சொன்னாள். ராஜேஷ் குடும்பம் என்குடும்பம் பற்றியெல்லாம் கேட்டாள்.
“சரி. நடந்துகிட்டே பேசுவமா”
“சரி” என சொன்னவள் எழுந்திருக்கும் போதுதான் கவனிச்சேன், வலது கால் செயற்கைக்கால். என் அதிர்ச்சியைப் பார்த்த அவளே சொன்னாள், “நாலு வருஷமுந்தி ஸ்கூட்டர் விபத்துல வலது கால் போயிடுச்சி”
எவ்வளவு சாதாரணமா சொல்லிட்டா. இது தெரிஞ்சா ஒருத்தனோட ரியாக்சன் எப்படியிருக்கும் தெரியுமா.
அவள், ” மகள் குடும்பம் அமெரிக்காவுக்கு ஒரு வாரத்தில் கிளம்புறாங்க; அதான் அதற்குமுன் சில நாள் நானும் என் ஆத்துக்காரரும் மகளுடன் வந்து தங்கி அவளுக்கான பொடி வகைகள், பேரப்பிள்ளைகளுக்கு திண்பண்டங்கள் எல்லாம் செய்து கொடுத்தேன்”.
“அரும்பாக இருப்பது இதழ் விரிந்தால்தான் மலர்ந்து மணம் வீசும். நாமும் இதழ் பிரிந்து பேசினால்தான் மனம் திறந்து காட்டமுடியும். இரண்டு பேருமே அரும்பாகவே இருந்து விட்டோம்.”
எனக்கு என்ன பேசறதுன்னே வார்த்தை வரல.
மகளும் பேரக் குழந்தைகளும் கிளம்புவதாகத் தெரியவே,
“மறுபடியும் ராஜேஷை பார்க்குற பாக்கியம் உண்டான்னு தெரியல. அப்பப்ப சிறுவயசு நெனைப்பு வந்திடுதுன்னு ராஜேஷ் கிட்ட சொல்லுவியா”
“கட்டாயமா”
அவள் கிளம்பிவிட்டாள்.
“தோள் கண்டேன் தோளே கண்டேன்” என்ற சினிமாப் பாட்டை ” தாள் கண்டேன் தாளே கண்டேன்” என்று மாற்றிப் பாடியவன் அந்த தாளை..அதாவது…பாதத்தை இனி பார்க்கவே போவதில்லை
சொல்லில் வெளிப்படாத விடலைப் பிள்ளையின் நேசத்தைக் கருவாக வைத்துக் கதாசிரியர் கதையை நடத்திச் செல்கிறார்.
ராஜேஷ் போன்றோர்களின் நினைவலைகளுக்குள் ஒரு சலனத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
LikeLike
எழுதி முடித்தபின் சில தினங்கள் நானே சலனப்பட்டுக் கொண்டிருந்தேன் என்பதும் உண்மையே.
LikeLiked by 1 person