படைப்பாளி: கிரிஸ்டி நல்லரத்னம், மெல்போன், ஆஸ்திரேலியா
“ஆக்ஷ்ன்” இந்த கம்பீரக் குரலுடன் 1951ல் ஆரம்பமானது ‘இந்திய திரையுலக மேதை’ என அழைக்கப்படும் சத்யஜித் ரேயின் திரையுலக பயணம். அவரது கன்னிப் படைப்பு பூபதி பூஷன் பாந்தோ பாத்யாவின் வங்க குழந்தை இலக்கிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட “பதேர் பாஞ்சாலி ” திரைப்படம். கிராமத்தில் பிறந்து வளர்ந்து முதிரும் அப்பு என்ற சிறுவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் உள்ள உறவை சித்தரிக்கும் கதையின் முதல் பாகம் இது. ஐயாயிரம் அடியுடன் படம் நிதி தட்டுப்பாட்டால் பாம்பாய் பெட்டிக்குள் படுத்துக் கொண்டது. அதை எழுப்புமுன் ரேயின் பூர்வீகத்தை சிறிது பார்ப்போமா?
ரேயின் தந்தை வழி தாத்தா ஒரு எழுத்தாளர், இசையமைப்பாளர் மற்றும் அச்சக உரிமையாளரும் கூட. ‘சந்தோஷ்’ எனும் சிறுவர் இலக்கிய இதழ் வேறு நடத்தி வந்தார். அவர் மகன் சுகுமார் ராய் அனேக சிறுவர் இலக்கியங்கள் படைத்த எழுத்தாளர், விரிவுரையாளர். இந்த கனவுத் தொழிற்சாலையின் மேதை, மே 02, 1921 பிறந்த ரே பல்கலை அறிவையும் இயற்கையாகவே தன்னகத்தே கொண்டிருந்தார். பல்கலை என்று சொன்னேனல்லவா? எண்ணிக் கொள்ளுங்கள்….. எழுத்து, இசை ஈர்ப்பு, ஓவியம், வரைபட வடிவமைப்பு, பதிப்பகத்துறை, விமர்சனம்…..இந்த கலைகள் போதுமா?
இந்த துறைகளில் அவருக்கிருந்த நாட்டமும் திறமையும் அவரை திரைப்படத் துறைக்கு இயல்பாகவே இழுத்து வந்ததில் ஆச்சரியமில்லை!
தனது இரண்டாவது வயதிலேயே தந்தையை இழந்து அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தார்.

கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் கற்ற ரே ஓவியக்கலை மீது கொண்ட நாட்டத்தால் 1940ல் விசுவ பாரதி பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தன் நாட்டத்தை படத்தில் பதித்தார். இங்கு அவருக்கு மாமேதை ரவீந்திரநாத் தாகூரின் நட்பு கிடைத்தது என்பது சிறப்பு.
படிப்பை முடித்து 1943ல் டி.ஜெ. கெய்மர் எனும் பிரித்தானிய விளம்பரக் கம்பெனியில் இணைந்து அங்கு பணியாற்றும் போது ரே அவர்களுக்கு அக்கம்பனியின் இலண்டன் தலைமையகத்தில் மூன்று மாதங்கள் வேலை செய்யும் வாய்ப்பு கிட்டியது. இங்குதான் பல சர்வதேச இயக்குனர்களின் படைப்புக்களை பார்க்கும் சந்தர்ப்பம் அவருக்கு கிட்டிற்று. இதனால் ரே திரையுலகின் ஒரு புதிய பரிமாணத்தை காண முடிந்தது. இவை போன்ற படைப்புகளை தன்னாலும் படைக்கமுடியும் எனும் தன்னம்பிக்கை விதையை அவர் வாலிப நெஞ்சில் விதைத்தது. விற்றோறிஓ டி சீகா (Vittorio De Sica) இயக்கிய ‘சைக்கிள் திருடர்கள்’ – Bicycle Thieves (Ladri di biciclette) எனும் இத்தாலிய படம் இவற்றில் முதன்மையானது என ரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். தியேட்டரை விட்டு வெளியே வரும் போதே ‘இனி நான் ஒரு இயக்குனர்தான்’ என அவர் இதயத்தில் பச்சை குத்தியாயிற்று.
பிரித்தானிய கம்பெனியில் இருந்து பின்னர் டி.கே.குப்தா என்ற இந்திய விளம்பர நிறுவனத்தில் சேர்ந்தார் ரே. இங்கு தான் அவரின் கற்பனைக் குதிரை சுயமாகவும் சுதந்திரமாகவும் உலாவிற்று. பல புத்தகங்களை படித்து அவற்றிற்கு அட்டைப்படங்கள் வடிவமைத்தார். அவரின் முதல் திரைப்படத்தின் கதையான “பதேர் பாஞ்சாலி ” இங்குதான் அவர் நெஞ்சில் ஒட்டிக்கொண்டது. இக்கதையின் சிறுவர் பதிப்பிற்கு ரேதான் பல சித்திங்களை வரைந்திருந்தார். இச் சமயத்தில்தான் இக் கதை மேல் உள்ள ஈர்ப்பு தன்னை ஆட்கெண்டது என்றார் ரே.
அட, பெட்டிக்குள் கிடக்கும் ரேயின் கன்னிப்படைப்பை மறந்துவிட்டோமே?
தன் மனைவியின் நகையும் நண்பர்களின் கடனையும் மூலதனமாக்கி ஆரம்பித்த படத்தை தொடர்வதற்கான முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. எனிலும் சில அரசியல் பிரமுகர்களாலும், ரேயின் விடா முயற்சியாலும் “பதேர் பாஞ்சாலி” 1955ல் திரையில் வந்து விழுந்தாள்.
இந்திய ரசிகப் பெருமக்கள் இப்படத்தை பெரிதாய் கண்டுகொள்ளாத போதிலும் சர்வதேச திரைப்பட ஆளுமைகள் ரேயின் படைப்பை கொண்டாடினர். பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்தாள் இந்த பாஞ்சாலி. படத்தின் வெற்றிக்கு தன் ஓவியத்திறமையும் மனித உணர்வுகளை நுணுக்கமாய் நோக்கி அதிலிருந்து கற்றுக் கொள்ளும் பாடங்களை படமாக்குவதுமே காரணம் என்றார் இந்தத் திரை ஞானி.
இந்திய திரைப்பட துறையை உலக சினிமா முதன் முறையாக கவனத்துடன் திரும்பிப் பார்க்கவைத்த பெருமை ரே அவர்களையே சாரும். பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்ரேபர் நோலன் ‘உலக திரைப்பட வரலாற்றில் ரேயின் முதல் படமான “பாஞ்சாலி” மிகச் சிறந்த படங்களில் ஒன்று’ என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்குப் பின் ரே உருவாக்கிய எல்லா படைப்புகளுமே உலக அளவில் அவருக்கு நல்ல பெயரையும் புகழையும் ஈட்டிக்கொடுத்தன. 1958ல் வெளிவந்த “அபராஜிதோ” மற்றும் 1959ல் உருவான ” அபுர் சன்சார் ” பல சர்வதேச விருதுகளை குவித்தன.
அவருக்கு மிகவும் பெரிய புகழை தேடித்தந்த படம் 1964ல் வெளிவந்த “சாருலதா “. அவரின் முந்தைய படங்களில் இருந்து வேறுபட்ட இப்படத்தில் ரேவுக்கு பிரியமான செளமித்ர சாட்டர்ஜீ மற்றும் மாதபி முகர்ஜீ நடித்திருந்தனர்.

இயற்கை ஒளியில் காமிரா ஓட்டமும் மிக சாதாரணமான மேக்கப்பும் இவர் படங்களின் சிறப்பு. காட்சியின் மூட் வருவதற்கு மங்கிய ஒளியை சிறப்பாக கையாண்டார். காலை இளம் சூரியனும் களைத்த மாலை கதிரவனும்தான் இவருக்கு பிடித்த படப்பிடிப்பு நேரங்கள். என்ன, பாலு மகேந்திரா ஞாபகம் வருகிறதோ?
கதை வசனங்கள் கூட நடிகர்கள் இயல்பாக பேசும் வண்ணம் இலகுவானதாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டுவது தத்துரூவமான வசனம் என்பது அவர் வேதம். “மனேகரா” டைப் வசனங்களுக்கு இவர் படங்களில் இடமில்லை.
ரே தனது ஆரம்பகால படங்களில் டைரக்ஷனை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டு இசை, விளம்பர டிசைன், காமிரா போன்றவற்றை மற்ற கலைஞர்களுடன் பகிர்ந்து கொண்டார். ஆனால் அவருடைய பிந்திய படங்களில் இயக்கத்துடன் இவைகளையும் தன் பொறுப்பின் கீழ் கொண்டு வந்தார். காமிராவைக் கூட ஏன் கையாளத் தொடங்கினீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் ‘ஆரம்ப காலங்களில் எனது காமிராமேனால் இரண்டாவது அல்லது மூன்றாவது டேக் எடுப்பதற்கான காரணங்களை எனக்கு நியாயப்படுத்த முடியவில்லை. நடிகர்களின் உயர்ந்த நடிப்பின் முன்னால் காமிராவில் எதிர்பாராமல் வரும் சிறு நடுக்கங்களை ரசிகர்கள் மன்னித்து விடுவார்கள். I like rough edges once in a while’ (தமிழாக்கம் ப்ளீஸ்!).இயக்குனர் திலகம் கே. பாலச்சந்தரின் கறுப்பு – வெள்ளைப் படங்களிலும் இந்த rough edges வருவது ஞாபகத்தில் வரலாம்.
Story board என இன்று அழைக்கப்படும் காட்சி திட்டமிடலை அவரே வடிவமைத்து ஒவ்வொரு காட்சியையும் தன் கிறுக்கல் சித்திரங்களாக வரைந்து ஒரு தெளிவான தொலை நோக்குடன் தயார்படுத்திக் கொள்வார். கமிரா வைக்கும் இடம், காமிரா கோணம் எல்லாம் இப்பக்கங்களில் வரையறுக்கப்பட்டிருக்கும். ஆனாலும் வரைபடங்களும் திட்டங்களும் என் சிந்தனைகளை சிறைப்படுத்துவதை தவிர்த்தேன் என்கிறார் ரே.
இவரின் ஆரம்ப கால படங்களில் ரவி ஷங்கர் போன்ற இசைஞானிகள் இசையமைத்திருந்தாலும் இதையும் பின்னர் தன் வசமாக்கிக்கொண்டார். எதை விட்டுவைத்தார் என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ரே எனும் இந்த மாமனிதன் 29 திரைப்படங்களையும் 8 ஆவணப் படங்களையும் எடுத்ததுடன் ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களையும் எழுதியுள்ளார். இவர் வாழ்நாளிலேயே இவரைப் பற்றிய பல ஆவணப்படங்கள் உருவாக்கப்பட்டன. அப்படங்களில் பட செட்களில் அவர் கடைப்பிடிக்கும் சாந்தம், சக கலைஞர்களை மதித்து வேலை வாங்கும் கண்ணியம் நன்றாக வெளிப்படும். தன் படங்களை வங்காளத்து வட்டத்துக்குள்ளேயே அடக்கிக் கொண்ட அவர் கல்கத்தாவையும் அதை ஒட்டி விரிந்த கிராமங்களிலுமே தன் காமிராவை ஓடவிட்டார். அந்த மண்வாசனை அவரை முழுவதுமாய் ஆட்கொண்டது. ‘பம்பாய்க்கு கூட சென்று படமாக்கும் துணிவு என்னிடம் இருக்கவில்லை’ என்றார் ஒரு பேட்டியில். (ஒரு பாடல் காட்சிக்கே பாரிசுக்கு ஓடும் நம்மவர்களை இந்த அடைப்புக்குறிக்குள்ளேயே வைத்துக் கொள்வோம்!)
கரிசல் காட்டில் இருந்து கொண்டே கதை சொன்ன அமரர் கி.ரா நினைவுக்கு வருகிறார் அல்லவா?
வங்காளத்தில் பின்னர் தோன்றி பிரகாசித்த அபர்ணா சென், ரிதுபர்னோ கோஷ், கௌதம் கோஸ் போன்றோரும் பம்பாய் இயக்குனர்களான விஷால் பரத்வாஜ், திபக்கர் பானர்ஜி, ஷியாம் பெனகல், சுஜோய் கோஷ் போன்றோரும் ரேயின் நிழல் பட்டு பாதிக்கப்பட்டவர்களே. ரேயின் சினிமா புரட்சி கலை வடிவம் பெற்று எல்லைகளை தாண்டி பங்களாதேஷின் தாரேக் மசூத், தன்வீர் மொக்கம்மெல் ஆகியோரை உருவாக்கி இங்கிலாந்தின் அனீல் அகமதையும் தொட்டது. இப்பட்டியலில் மிருனல் சென்னையும் அடூர் கோபாலகிருஷ்ணனையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
சர்வதேச பிரபல இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கோர்செஸி, பிரான்சிஸ் ஃபோர்டு கொப்போலா, ஜேம்ஸ் ஐவரி, அப்பாஸ் கியோரோல்டாமி, ஐசோ தகாஹாட்டா போன்றோரும் இவர் பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
சத்யஜித் ரேக்கு 64 வது அகாடமி விருதை 1992ல் வழங்கியதன் மூலம் அகாடமி தன்னை கெளரவித்துக் கொண்டது எனலாம். இவ்விருது சினிமாத்துறையில் அவரின் அரிய தேர்ச்சியையும் (rare mastery of the art of motion pictures) உலகெங்கிலும் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே அழியாத தாக்கத்தை ஏற்படுத்திய அவரது ஆழ்ந்த மனிதாபிமான கண்ணோட்டத்தையும் அங்கீகரிப்பதற்காக வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விருதை நேரில் சென்று பெற ரேயின் உடல் நிலை இடங்கொடுக்கவில்லை. படுக்கையில் இருந்த அவரிடம் விருது வழங்கப்பட்ட காட்சி பலர் மனதை நெகிழ வைத்தது. ஏனோ கலைஞர்களுக்கு காலம் தப்பியே கெளரவம் வந்து சேர்கிறது!

இவ்வேளையில் ரேவுக்கும் ஹாலிவுட்டுக்கும் இடையே இருந்த சிறு உரசலையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.1962ல் ரே ‘பொங்குபாபூர் பந்து’ எனும் விஞ்ஞான புனைகதையை எழுதி தனது ‘சந்தேஷ்’ இதழில் வெளியிட்டார். மாற்றுக் கிரகத்தில் இருந்து வந்த ஒரு விண்கலம் வங்கத்தின் ஒரு கிராமத்தில் இறங்கியதும் அக்கிராமத்தில் வசித்த ஹாபா எனும் சிறுவனுடன் அந்த வின்கலத்தில் வந்த ‘ஏலியன்’ நட்பு கொண்டு கிராமத்தில் சில விஷமத்தனங்கள் செய்வதுமாக கதை போகிறது. இக்கதையை படமாக்கினால் என்ன என்ற எண்ணத்தில் திரைக்கதையை தானே எழுதி நண்பரும் விஞ்ஞான எழுத்தாளருமான ஆதர் சி. கிளார்க்கிடம் காண்பித்தார். அவரும் அதை ஆமோதிக்கவே திரைக்கதை ஹாலிவுட்டின் கொலம்பியா பிக்சர்ஸிடம் வந்தடைந்து. இப்படத்தில் பீட்டர் செல்லாசும் மார்லன் பிரண்டோவும் நடிப்பதாய் இருந்தது. அப்போதுதான் ஒரு பெரிய பின்னடைவை ரே எதிர்நோக்கினார்: ரேயின் ஹாலிவுட் பிரதிநிதியாக இருந்த மைக் வில்சன் திரைக்கதைக்கு எந்த ஒரு பங்களிப்பையும் வழங்காத நிலையில் தன்னையும் துணை – திரைக்கதாசிரியராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தார். இந்தனால் சலிப்படைந்த ரே திட்டத்தையே கைவிட்டார். பதினைந்து வருடங்களின் பின் கொலம்பியா பிக்சர்ஸ் கம்பனியின் கூட்டுத்தயாரிப்பில் ஸ்டீபன் ஸ்பில்ஸ்பேர்க்கின் E.T வெளிவந்தது. படத்தைப் பாத்த ரே அதிர்ச்சி அடைந்தார். அவரின் அதே கதையின் கரு…..அவர் திரைக்கதைக்கு வடிவமைத்த படங்களின் அடிப்படையில் அமைந்த காட்சிகள்…..அவர் கதையில் வரும் ஏலியனைப் போலவே சுகமளிக்கும் சக்தியுள்ள E.T…… இரண்டிற்கும் மூன்று கை விரல்கள்….. வாடிய செடிகளுக்கு உயிரூட்டும் ஜாலம்….வேறென்ன வேண்டும்?….. அப்பட்டமான காப்பிதான்! ஆனால் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஸ்டீபன் ஸ்பில்ஸ்பேர்க் இதை மறுதலித்தார். ஸ்டீபன் ஒரு நல்ல இயக்குனர் என்பதாலும் தரமான படங்களை உலகுக்குத் தந்தவர் என்பதாலும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என ரே முடிவு செய்ததுடன் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்தது. ரேக்கு ஆஸ்கார் பரிசு கொடுப்பது பற்றிய பேச்சுக்கள் எழுந்த போது ஸ்டீபன் முழு மனதாய் அதை ஆதரித்தது மட்டுமல்லாமல் அதை ஆஸ்கார் குழுவிற்கு பரிந்துரைத்தார் என்பது செய்தி.

இத்திரைக்கதை பற்றி மேலும் அறிய ரே எழுதிய “Travails with the Alien: The Film that was never made and other adventures with science fiction” புத்தகத்தை அமேசனில் காணலாம்.
1983ல் மாரடைப்பால் தாக்கப்பட்ட ரே தன் திரைப்பயண வேகத்தை குறைத்துக்கொண்டார். தன் மகனின் கையில் காமிராவை கொடுத்து 1990ல் ‘ஷாகா புரெஸ்கா’ திரைப்படத்தை வெளியிட்டார். சத்யஜித் ரே எனும் மாபெரும் படைப்பாளியின் கடைசி திரைப்படம் ‘அகந்துக்’ (அந்நியன்).
ரேயைப் பற்றி பக்கம் பக்கமாக படித்தாலும் அவர் ஆக்கங்களை நம் கண்ணால் பார்க்கும் போதுதான் அவர் கதை சொல்லும் அழகையும் நுணுக்கமான படப்பிடிப்டையும் ருசிக்க முடியும். அதிஷ்டவசமாக அவரின் அனேக ஆக்கங்கள் தற்போது காணொலியில் கொட்டிக் கிடக்கின்றன. ஆற்றங்கரையில் உட்கார்ந்து ‘நீத்துவது எப்படி?’ புத்தகம் படிப்பதை விட நீரில் கால் நனைப்போம்.
உலக திரைப்பட சாம்ராஜிங்களின் பார்வையை இந்தியாவின் பக்கம் திரும்பிய இந்த மகான் தன் 71வது வயதை எட்டுவதற்கு 9 நாட்கள் இருக்கும் முன்னரே 23 ஏப்ரல் 1992ல் காலமானார். நிழலுக்குள் நிஜத்தை நிரப்பிய இந்த கலைஞன் விட்டுச் சென்ற வெற்றிடம் என்று நிரப்பப்படும?
திரையுலக மாமேதை சத்தியஜித் ரேயின் நூறாவது பிறந்த நாளை நினைவு கூரும் இவ்வேளையில் அவர் வாழ்ந்த சமகாலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்ற பெருமையுடன் அவர் படைப்புகளை நுகர்வோம்!
முற்றும்.
இதை படைத்தவர்

எனது கதைகளுக்கு சிறப்பான முறையில் ஓவியம் வரைந்து அனுப்பும் ஆஸ்திரேலிய அன்பு நண்பர் கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் சிறந்த கட்டுரை. கல்கி 20.06.2021 மின்னிதழில் ‘ கவர் ஸ்டோரி’ யாக வெளிவந்தது. அதனை நம் ‘கதை சொல்கிறேன்’ அன்பர்களுக்காக ‘செய்திச் சாரல்’ பகுதியில் பதிவிடுவதில் மகிழ்கிறேன். இனி வரும் நாட்களில் திரு. கிரிஸ் நல்லரத்னம் அவர்களின் படைப்புகளும் கதைசொல்கிறேன்.காம் தளத்தில் இடம் பெறும்.
ரத்தினராஜு
Leave a Reply