புத்தகத்தின் பெயர்:- சட்டி சுட்டது
ஆசிரியர்: – ர. சண்முகசுந்தரம்
பதிப்பகம்:-நற்றிணை
பெரும்பாலான பெண்களுக்கு தன் அப்பாதான் முதல் ஹீரோ. எனக்கு என் அப்பாதான் என்றும் ஹீரோ. சட்டி சுட்டது கதையில் இழையோடியிருப்பது தந்தை மகள் பாசம். சிறுவயதில் படித்த ராணிமுத்துக்களில் பலமுறை படித்தது ஓரளவு நினைவில், சிலமுறை படித்தது சற்றே மனதில், ஒரிருமுறை மட்டுமே படித்த ‘சட்டி சுட்டது’ உணர்வில் கலந்து ஜெயராஜின் படங்களோடு மனதின் ஆழத்தில் அமர்ந்துவிட்டது.
கதாசிரியர் திரு.சண்முகசுந்தரம் பதேர் பாஞ்சாலியை தமிழில் மொழிபெயர்த்தவர். இவரின் படைப்புகளில் வட்டார வழக்கோடு கிராமத்து வாழ்வியலை சித்திரத்திருப்பார்.
சாமிகவுண்டர் வேலாத்தாளின் தந்தை. கதையின் நாயகன்அவரே. பிள்ளைகள் மேல் பாசம் வைத்த, கடிந்தொரு வார்த்தை சொல்லாத தந்தையாக சாமி கவுண்டர். மகன்களின் படிப்பில், திருமணத்தில், வாழ்க்கையில் என பலவகையிலும் அவர்களால் மனம் நோக தன் மகளை “அம்மணி! புறப்படாத்தா போயிரலாம்” என்று சொல்ல மகள் “செரி” என கிளம்பிவிடுகிறாள். தோட்டத்து வீட்டிற்கு குடிவந்து விடுகிறார்கள். கதையின் ஆரம்பத்தில் வரும் இந்த வார்த்தைகள் கதையின் இறுதியில் மகள் வைக்கும் கோரிக்கைக்கு தந்தை சொல்லும் பதிலாக அமைத்திருப்பது சண்முக சுந்தரத்தின் தனி சிறப்பென்றே சொல்லாம்.
கவுண்டரால் உதவி பெற்ற கந்தப்பனும், பொன்னனும், குடும்ப நண்பரான கணக்கய்யரும் அவர்களுக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருக்கின்றனர். மகன்கள் பாதைமாற, அவர்களின் திருமணம் நிற்க, பள்ளி விடுதியில் வேலை செய்த மீனாட்சி என்பவள் காரணமாகிறாள்.
தோட்ட வீட்டுக்கு கவண்டர் குடிவரும் அதே காலகட்டத்தில், மீனாட்சியும் தன் மகன் அங்கமுத்துவுடன், சாமியாடி குறிசெல்பவளாக ஊருக்கு வெளியில் குடிசை போட்டு தங்குகிறாள். ஒருமுறை கவுண்டருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, டாக்டரின் உதவியாளாக வரும் அங்கமுத்து கவுண்டரின் வீட்டிலேயே தங்கி அவரை கவனித்துக் கொள்கிறான். மகன்களோ எட்டியும் பார்க்கவில்லை.
கணக்கய்யர் வேலாத்தாளுக்கு மாப்பிள்ளை பார்க்க, தன் அப்பாவிடம் “நானு அங்கமுத்துவை கட்டிகிறேனுங்க” என்று துணிவாய் சொல்ல, “செரி ஆத்தா” என்று தந்தை சாந்தமுடன் பதிலளிப்பதுடன் கதை முடியும்.
ரசித்தது:- கதை என்று பார்த்தால் மிகச்சாதாரணமாய் தோன்றும். தன் பொருட்டு தனியே வந்த தந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் அவர் முகத்தில் சிரிப்பு மாறாமல் துக்கத்தின் சாயை படராமல் கவனித்துக் கொள்வதுதான் தன் குடும்பத்தாற்கு கற்பிக்கும் சரியான பாடம் என மகள் நினைக்கிறாள்; தந்தையோ, அடுக்களையே அறியாதவளாய் சந்தோஷமாய் அண்ணன்கள் அண்ணிகள் அவர்களின் குழந்தைகள் என்று இருந்த மகளாயிற்றே, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ திருமணம்செய்து அனுப்ப வேண்டும் என்று யோசிக்கிறார். பரஸ்பரம் வார்த்தைகளால் வெளிப்படுத்தாமலே இருவரின் எண்ண ஓட்டங்களின் வழியாகவே கதை முழுக்க கொண்டு சென்றிருப்பது மிகச் சிறப்பு. தாத்தாவை தேடி வந்த பேரக்குழந்தைகளை மருமகள் அடித்ததை கேள்விப்பட்டு மனம் வருந்தும் தந்தை; அதை புரிந்த மகள் மேலும் கிளராமலிருப்பது, உறவின் புரிதலின் அடையாளம். அப்பா மகளின் பாசம் மடுமல்லாது வீடுகளுக்கு பெயர் காரணம், ஆற்றில் இருக்கும் தண்ணீரை பற்றியும், ஊரில் கோயில் இல்லாதிருப்பதையும் அவர் வித்தியாசமாக சொல்லியிருப்பது ரசிக்க வைக்கிறது. நானே எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் சுவாரசியம் இல்லை. புத்தகத்தை முழுமையாக படித்து நீங்களும் ரசியுங்கள்.
இந்த நாவல் அவரின் மற்ற கதைகளை படிக்க தூண்டுகிறது!
Leave a Reply