வாசித்த புத்தகம்: மறக்கமுடியுமா? பிரபலமானவர்களின் மனதைத் தொட்டதும்!சுட்டதும்!! (முதல் பாகம்)
தொகுத்தவர்: தங்க .காமராஜ் அவர்கள்
பதிப்பகம்: நவமணி பதிப்பகம்
திரைப்படம் பார்ப்பதற்கு நமக்கு மனநிலை வேண்டும். ஆனால் மனம் சோர்வுற்றி்ற்கும் நேரத்திலும் நாம் நடிகர்களின் நகைச்சுவை காட்சிகளைப்பார்த்தால் உடல் சோர்வும் களைப்பும் நீங்குவதோடு மனமும் இலேசாகி புத்துணர்ச்சி பெறுவது மறுக்க முடியாத உண்மை!
நகைச்சுவை நடிகர் திரு நாகேஷின் மனதை சுட்டது :
நாகேஷ் நடித்த முதல் திரைப்படமான தாமரைக்குளத்தின் முதல் நாள் 70 துணை நடிகர்கள் பங்கு கொண்ட படப்பிடிப்பு. முதல் காட்சியில் துணைநடிகர் ஒருவர் இடம்பெறவில்லை என்றால் அடுத்த காட்சிக்கு அவரைக் கூப்பிட மாட்டார்கள் அன்றைய கூலியான 10 ரூபாயும் கிடைக்காது. அதனால் காலையிலிருந்து தன் முறை எப்போது வருமனெ நகராமல் அனைவரும் காத்திருந்தனர். மதியம் சாப்பாட்டுக்கு பிரேக் சொன்னதும் அனைவரும் திபுதிபுவென ஓடினர். அவர்களில் 75 வயதுநெருங்கிய ஒருவர் ஓடமுடியாமல் ஓடி ஒரு இலையில் அமர்ந்தும் விட்டார். அதன்பின் வந்த வாலிப நடிகர் ஒருவர் , “நான்தான் முதலில் உட்கார்ந்தேன். எழுந்திரப்பா, நீ அடுத்த பந்தியில் சாப்பிட்டா செத்தா போயிடுவ. உனக்கு என்ன குளோசப் வச்சா சூட் பண்ணப்போறாங்க” என்று சொல்லியிருக்கிறார்.
இதற்காக பெரியவர் கோபப்படாமல் இலேசாக சிரித்துக்கொண்டு “உன் வயதை எப்போதோ தாண்டியவன் நான். நான் கற்றுக்கொண்டதெல்லாம் பொறுமைதான். பாவம் நீ அவசரப்படுகிறாய். நிதானமாக சாப்பிடு. வயிராறச் சாப்பிடு” என்று கூறியிருக்கிறார்.
அவர் சிரிப்பின் அர்த்தம் “இதைப்போல ஆயிரம் துக்கங்களைத் தாங்கிக் கொண்டவன். இது ஒன்றும்பெரிதல்ல. நான் சாப்பிட்டுக் கொடுக்கிற 10 ரூபாயை வச்சித்தான் குடும்பத்தில் மத்தவங்க சாப்பிடனும்” என்று சொல்லாமல் சொல்வது தெரிந்தது.
“அய்யோ இந்தப் பொழப்புக்கா நான் வந்தேன்” என்று அரைமணி தனிமையில் அழுதேன் என்ற பதிவோடு அன்று முழுவதும் சாப்பிடாமல் படப்படிப்பில் இருந்தேன் என்றும் குறிப்பிட்டுள்ளார் நாகேஷ்.
இந்த நிகழ்வு நம் கண்ணோரத்தை கரிக்கச் செய்கிறது.
தொட்டது:- அதே தாமரைக்குளம் படப்பிடிப்பு. காட்சிப்படி நாகேஷும் உடன் நடித்தவரும் எம்.ஆர்.ராதா வீட்டு வேலைக்கார்களாக அவரது கட்டிலில் அமர்ந்து காதலிப்பது போல் பேசிக்கொண்டிருக்க அப்போது எம்.ஆர்.ராதா உள்ளே வர இருவரும் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்து கொள்ள வேண்டும். அவர் கையைக் காலை ஆட்டி வசனம் பேசிக் கொண்டிருக்க முதலாளி தங்களை பார்த்துவிடுவாரோ மாட்டிக்கொள்வோமோ என்றெல்லாம் பயந்தாற்போல் நடித்துக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதன்படி நடித்திருக்கிறார்கள்.
காட்சி முடிந்து எம்.ஆர் ராதா பக்கத்தில் ஒரு வேலை இருக்கிறது. திரும்ப வந்து சொல்லிவிட்டுப் போகிறேன் என்று கிளம்பிவிட்டார். அவர் சென்ற பின்பு படத்தின் தயாரிப்பாளரும் கேமராமேனுமாகிய வீரபாகு கோபமாக “நாகேஷ், என்னய்யா பண்றே நீ.. ஸ்டேஜ்ல பிரமாதமா பண்ணின.. இப்ப சொதப்பிறியே. எம்.ஆர்.ராதாவோடு நடிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு. நல்லா நடிக்கவேண்டாமா.? இந்த இடத்துல சந்திர பாபு இருந்தா கொளுத்தியிருப்பான் தெரியுமா.?”
என்றிருக்கிறார்.
உடனே விக் ஐக் கழற்றிக் கையில் பிடித்தபடி “ஹலோ மிஸ்டர் வீரபாகு, சந்திரபாபு மாதிரி நடிக்க வேண்டுமென்றால் நீங்கள் அவரைத்தான் புக் செய்யவேண்டும். என்னை மாதிரி நடிக்க வேண்டுமானால் நாகேஷை புக் பண்ணுங்க, விக் ஐ பிடிங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே எம்.ஆர்.ராதா வந்து விட, என்ன நாகேஷ் ?எனகேட்க யாருக்கும் எதற்கும் பயப்படாமல் நடந்ததை சொல்லிவிட்டார்.
“கரெக்ட் நீதான் கலைஞன்.. எம் .ஆர்.ராதா மாதிரி ஒருத்தன் தான் இருக்க முடியும். நீ உன்னை மாதிரி பண்ணிணாத்தான் நாகேஷ் நடிப்பு” என்றதோடு “வீர பாகு அவர்கள் கட்டிலுக்கு கீழே இருப்பதனால் ஜனங்கள் என்னைத்தான் ரசிப்பார்கள். அவனுக்கு குளோசப் காட்சி எடு, அப்ப பார் அவன் ஆக்டை” என சொல்லி “நீ விக் ஐ வைத்துக் கொள்” என நாகேஷை சாமாதானப்படுத்தி அதேபோல் படமாக்கப்பட்டது. அதனால் தான் அனைவராலும் ரசிக்கப்பட்டதையும் தனக்கு கிடைத்த இந்த மிகப்பெரிய வெற்றிக்கு நடிகவேள்தான் காரணம் என்று நன்றியுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஏழைத்தருமி, மாடிவீட்டுமாது, ஓஹோ புரடெக்ஷன் செல்லப்பா, கைநிறைய காசு படத்தில் (இரட்டைவேடம்) வில்லனாகவும், அன்பேவா – முதலாளியின் வீட்டை முதலாளிக்கே வாடகைக்கு விடுவது, சர்வர் சுந்தரத்தில் (நல்ல நிலையில் இருக்கும் நண்பனைப் பார்த்து ஏங்குவது தன் முதலாளி மகள் தன்னை காதலிப்பதாக நினைத்து வரும் சந்தோஷம் தன் முகத்தை பார்த்து வரும் தாழ்வு மனப்பான்மை நண்பனின் கருத்தை ஏற்று காதலிக்கு இணையாக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ள நடிகனாக மாறுவது காதலைச் சொல்ல காதலிவீட்டுக்கு செல்லும்தோரணை தன் நண்பனைத்தான் காதலிக்கிறாள் என்ற உண்மை தெரிந்ததும் வரும் ஏமாற்றம் நண்பனும் நல்லவன் என்ற சமாளிப்பு) படம் முழுவதும் நவரசத்தையும் கொட்டி நம்மை கட்டிபோட்டிருப்பார். சொல்ல ஆரம்பித்தால் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.
மகளிர் மட்டும் படத்தில் உச்ச பட்சமாக உடல்மொழியே இல்லாத (பிணமாக) உடலால் நடித்திருப்பார்; நம் இதழோரப் புன்னகை சொல்லாமல் சொல்லும் அட…. என்னமாய் நடித்திருக்கிறார் !! என்று.
இன்னொருவரின் நிழலாய்மாறி நடிக்க ஒத்திருந்தால் நாகேஷ் என்ற பெயரை நாம் எல்லோரும் மறந்தே போயிருப்போம்.
தன் திறமையில் நம்பிக்கையும்
தன் நிலையில் உறுதியு ம் உள்ளவர்களுக்கு என்றும் வெற்றி தான்!!!
Leave a Reply