வாசித்தது: கு.அழகிரிசாமி கதைகள்.
ஆசிரியர்: கு.அழகிரிசாமி
தொகுத்தவர்: அழகிரிசாமியின் நண்பரும், பக்கத்து வீட்டு சிறு வயது தோழனும், கரிசல் நாயகனுமான மறைந்த கி.ராஜ்நாராயணன் அவர்கள்.
2020 ஆண்டு புத்தக காட்சியில் “கு.அழகிரிசாமி கதைகள்” புத்தகத்தை பார்த்ததும் தமிழ் இலக்கிய வரலாறு பாடத்தில் எழுத்தாளர்கள் வரிசையில் கு.அழகிரிசாமி என்று படித்த ஞாபகம் வந்தது. உடனே வாங்கிவிட்டேன்; அதுவரையில் இவரது படைப்புகள் ஏதும் படித்ததில்லை. படிக்கத் தொடங்கியதும் இவ்வளவு நாட்கள் இவரின் கதைகளை படிக்க முடியாமல் போனதே! என்று தோன்றியது. இதில் 65 கதைகள் உள்ளன. பெரும்பாலான கதைகள் கிராமத்து பின்ணணியில் அமைந்தவை. கு.அழகிரிசாமியின் “அன்பளிப்பு” என்ற கதை தொகுதிக்கு சாகித்ய அகாடெமி விருது கிடைத்துள்ளது.
ரசித்தது: பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்யும் இளைஞன் ஒருவன், ஒரு குடியிருப்பிற்கு புதிதாக வருகிறான். அவன் கொடுக்கும் புத்தகங்களை வாங்கிக் கொள்ளவும், சொல்லும் கதைகளைக் கேட்கவும், அவனுடன் விளையாடவுமாக அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள் வருகின்றனர். அவனும் அவர்களுடன் விளையாடுகிறான். ஆனால் அவன் கொண்டு வரும் எந்த ஒன்றையும் பணக்காரகளையாக உள்ள இரு குழந்தைகளிடமே முதலில் கொடுக்கிறான். விளையாடவரும் குழந்தைகளில் சாரங்கன் என்ற ஏழைக் குழந்தை சற்று நிதானித்து தன் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடியவனாக இருக்கிறான். அன்பில் பேதமில்லை என்பதை அவன் செய்கை மூலம் நமக்கு உணர்த்தி குழந்தை குழந்தைதான் என்று புரியவைத்திருக்கிறார் ஆசிரியர்.
புத்தகத்தை கண்டுபிடிக்க முடியாமல் குழந்தைகள் காட்டும் பொய்க்கோபம், தன் வீட்டிற்கு வரவில்லை என்றதும் சாரங்கனுக்கு வரும் அழுகை, தேடிய புத்தகம் கிடைத்ததும் குழந்தைகளின் சிரிப்பு, இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்னு சொல்லு என்று பெரியவர்களைப்போல் கண்டிப்பாகபேசுவது என அவர்களின் உணர்வுகளை குழந்தைகளின் வார்த்தைகளின் வாயிலாக அழகாக காட்டியிருக்கிறார்; குழந்தையாகவே மாறி படித்தால் இன்னும் ரசிக்கலாம்.
அந்த இளைஞன் சாரங்கனுக்கு தனிப்பட்ட முறையில் எந்தவொரு பொருளும் கொடுத்ததில்லை; சாரங்கனோ, அவனை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி கொடுத்து, நாற்காலியில் அமரவைத்து, திரும்பி பார்க்க கூடாது என சொல்லிக்கொண்டு குழந்தைத்தனமாக தன் அன்பை வெளிப்படுத்துகிறான்; ‘அட’ என்று சொல்லி நெகிழ்ந்து போகிறோம்.
அன்பு+அளிப்பு=அன்பளிப்பு. சாரங்கன் என்னதான் செய்தான்? படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அழகிரிசாமி குழந்தைசாமியாகவே மாறி எழுதியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த தொகுதியில் உள்ள மற்றோர் கதை “அக்னி கவசம்” யாருக்கு? எதற்கு? கண்ணகியின் கற்புத் தீ? காயசண்டிகையின் பசித்தீ? துர்வாசரின் தவத்தீ? இந்த கதையில் இருப்பது?
கிராமத்தில் பிறந்து வளர்ந்து கிராமத்து திருவிழக்களை, குறிப்பாக அப்போது நடக்கும் ருசிகர நிகழ்ச்சிகளை நேரில் பார்த்தவர்கள் இந்த கதையில் வரிக்கு வரி இழைந்து கிடக்கும் அழகிரிசாமியின் நகைச்சுவையை நன்கு உணரமுடியும்.
அந்த வகையில் இந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது.
ரசித்தது : ரணவீரமுத்துமாரி, சிறிய தவறுக்கும் பெரிய தண்டனை கொடுக்கும், சின்ன கோரிக்கையையும் கூட ஏற்கும் கிராமத்து மக்களின் கடவுளாகவும் நம் கதையின் நாயகியாகவும் இருக்கிறார். 2 வீடுகளுக்கு ஏற்படும் சண்டை, ஊர் சண்டையாக மாற போலீஸ் வர என்று ஊரே களேபரமாகிறது. பூசாரியால் நித்ய பூசையும் செய்யமுடியாமல் போகிறது. 2 தெருக்காரர்களும் பூசாரி யார் பக்கம் என சந்தேகித்து பூசாரியை நன்கு கவனிக்க!!! மறுநாள் வர இருக்கிறார்கள். இதை அறிந்த பூசாரி ஓடிவிடுகிறான். கிராமத்தில் வைசூரியும், பஞ்சமுமாக…ஊர்மக்கள் கஷ்டப்படுகின்றனர். பிரச்சனைகளுக்கு அம்மனுக்கு திருவிழா நடத்தாததுதான் காரணம் என ஊர்கூடிமுடிவு செய்து கோயிலை திறக்கின்றனர். அம்மன் அணிந்திருந்த சிவப்பு சிற்றாடை காணாமல் அதிர்ச்சியாகின்றனர்.
சலவைக்காரி காளிக்கு பூசாரி மணைவி கட்டியிருக்கும் வெளுத்துபோன சிற்றாடை மேல் சந்தேகம்; ஊர்கார்களிடம் நேரடியாக சொன்னால் நம்பமாட்டார்கள், பூசாரி மணைவி திருடியிருந்தால் ரணவீர முத்துமாரி அவளை தண்டித்திருப்பாள் என்பார்கள். எனவே ஊராரிடம் திருவிழாவில் சாமியாடி காட்டிக்கொடுக்க நினைக்கிறாள். அதன்பின் நடந்ததை படித்து ! ரசிக்க!!!
கிராமத்து திருவிழா அனுபவத்தை மறுபடி ரசிக்க வைத்த கு.அழகிரிசாமி, அழகுசாமியே!
Leave a Reply