இத்தலைப்பில் கும்மியாட்டம், ஒயிலாட்டம்,பறையாட்டம் பற்றி பேசியுள்ளோம். இப்போது சேவையாட்டம் பற்றி பேசுவோம். ஒன்று மட்டும் உறுதி.; கலைமகளே இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறாளாம்.
தேவராட்டமும், சேவையாட்டமும்
(ஒயிலாட்டம் , தேவராட்டம், சேவையாட்டம் என்பவை பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே பங்குபெறும் ஆட்டமாகும்).
இந்த ஆட்டம் கம்பளத்து நாயக்கர்களால் ஆடப்படுகிறது. தெலுங்கு அல்லது தமிழ் பாடல்கள் பாடப்பெறும்.
தேவராட்டத்தின் இறுதிப்பகுதியாக சேவையாட்டம் ஆடப்படுகிறது. திருமாலை வணங்கி, சேவித்து ஆடப்படுவதால் இது சேவையாட்டம் எனப்பட்டது. தெலுங்கு அல்லது தமிழில் ஒருவர் பாட, கோமாளி உடையுடன் வருபவர் பாடலுக்கு ஏற்ப சுற்றிவந்து ஆடுவார். அவருடன் எழுவர் சேர்ந்து ஆடுவார்கள். பெரும்பாலும் ராமாயணக் அல்லது வீரபாண்டிய கட்ட பொம்மன் கதை பாடப்பெறும்.
பிரம்மன் தலையை சிவன் கொய்த போது, அந்த தலை சிவனின் கையிலேயே ஒட்டிக்கொண்டு விட்டது.இதனால் சிவனுக்கு பிரம்மகத்தி தோசம் பற்றிக்கொண்டது. திருமால் தொப்பை கூத்தடியாக வேடமிட்டு, பாதி ஆணுமாகவும் பாதி பெண்ணுமாகவும் வேடமிட்ட சிலருடன் பிரம்மனின் தலைமுன் வேடிக்கையாக ஆட பிரமன் தலை சிரிப்பு தாங்காமல் சிவன் கையை விட்டு நழுவி கீழே விழுந்து விட்டது .இவ்வாறு சிவனுக்கு சேவை செய்ய திருமாலால் ஆடப்பட்ட வேடிக்கை ஆட்டமே சேவையாட்டம் .
சேவையாட்டம், சேவாட்டலு, உறுமி, கோமாளியாட்டம், தாதராட்டம் என்ற வேறு பெயர்களிலும் குறிக்கப்படுகிறது.
சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள ‘பின்தேரு குருவை’ என்ற ஆட்டத்துக்கு இணையானதாக கருதப்படுகிறது, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு சென்றாயப்பெருமாள் கோவிலில் நடைபெறும் சேவையாட்டம் புகழ் பெற்றது.
ராஜகம்பளம் மக்கள் நடத்தும் சடங்கு,திருவிழா,திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு இந்த ஆட்டம் தவறாமல் இடம்பெறும். வீரபாண்டிய கட்டபொம்மன் குருபூஜையிலும் தேவராட்டம்,சேவையாட்டம் முக்கிய நிகழ்வாகும்.
திண்டுக்கல் பகுதியில் கம்பளத்து நாயக்கர்களின் பழமை மாறாத நாட்டுப்புற கலையாக ‘சேவையாட்டம்’ உள்ளது. மண்ணின் மரபையும், பண்பாட்டையும் அடையாளப்படுத்துவது நாட்டுப்புற கலைகள். இவை பொழுதுபோக்கு, சடங்கியல் நிகழ்வாக ஆடப்படுகின்றன. இவற்றை சிலர் தொழில்முறை ஆட்டமாக ஆடி வருகின்றனர். இந்த வகை ஆட்டங்களுக்கு குறிப்பிட்ட களமோ, அரங்கமோ தேவையில்லை. எந்த இடத்திலும், சூழ்நிலையிலும் சுதந்திரமாக ஆட முடியும். இதில் கம்பளத்து நாயக்கர்கள் தங்களது இனத்திற்கே உரிய “சேவையாட்டம்’ ஆடுகின்றனர்.
இவர்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கோலார்பட்டி, விருதலைப்பட்டி, கொம்பேரிபட்டி, கெஜ்ஜிலியம்பட்டி, புது எட்டமநாயக்கன்பட்டி, விராலிப்பட்டி, புதுப்பட்டி, பாபிநாயக்கன்பட்டி பகுதிகளில் வசிக்கின்றனர். சேவையாட்டத்தை கோயில் திருவிழாக்களில் ஆடுகின்றனர். இந்த ஆட்டத்திற்காக அவர்கள் விரதமிருக்கின்றனர். கோமாளி போல் வேடமணிந்த ஒருவரும், அவருடன் 7 பேரும் சேர்ந்து ஆடுவர். ஏழு பேரும் இடுப்புக்கு கீழே வண்ணப் பாவாடையும், மேல்பகுதியில் சட்டையும் அணிவர்.
தலையில் ஜரிகைபோட்ட “உருமா’ கட்டுகின்றனர். புல்லாங்குழல், சேவைத்தப்பு, ஜெயகண்டி ஆகிய இசைக்கருவிகளை பயன்படுத்துகின்றனர். இந்த இசைக்கருவிகள் இசைத்து கொண்டே கலைஞர்கள் வட்டமாகவும், சுழன்றும் ஆடுகின்றனர். துவக்கத்தில் சிறிது நேரம் உருமி “தேவதுந்துமி’ இசைக்கு ஏற்ப ஆட்டம் ஆடுகின்றனர். இசைக்கருவிகளின் இசைப்பும், அதற்கேற்ற ஆட்டங்களும் காண்போரை தன்வயப்படுத்துகிறது.
இந்த சேவையாட்டம் பழமைமாறாத நாட்டுப்புற கலையாக இன்றும் திகழ்கிறது. சேவையாட்டம் ஆடும்போது முதலில் நேர் கோட்டில் நிற்பார். சிறிது நேரத்தில் வட்ட வடிவத்திற்கு மாறிஆடுவார் . கோமாளி வேடமிட்டு ஆடுபவரை கிருஷ்ணராக மதித்து மக்கள் வழிபடுவர். அவரே பாடல்களை பாடி ஒவ்வொரு ஆட்டத்தையும் துவங்கி வைப்பார். ஏனைய ஆட்டக்காரர்கள் அதனையே பின்பாட்டாக பாடுவர். ராமாயண பாடல்களை அதிகளவில் படுவார் . வழிபாட்டின்போது இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்வர்.

கோமாளி அலங்காரம்
நீண்டும் வளைந்தும் கூம்பு போல் உள்ள தொப்பி அணிந்திருப்பார். தலை முடித்து பூச்சூடி, நெற்றியில் நாமமும் , கண்களுக்கு காவி வெள்ளைநிறக் கோடுகளும் தீட்டி, கற்றாழை நாரில் செய்த தாடி மீசை ஒட்டி சோழிகள் கோர்த்த பல் வரிசையும், கருப்பு அல்லது நீலநிற பெரிய அளவு சட்டையும் ,குஞ்சங்கள் வைத்த நீளமான கால் சட்டையும் அணிந்திருப்பார். தொப்பை வயிறு கொண்டிருப்பார்.
இசைக்கருவிகள்
தேவதுந்துபி, சேமப்பலகை, சேமக்கலம், சலங்கை, ஜால்ரா போன்ற இசைக்கருவிகளுடன் பாடல் பாடப்படும்.
சேவையாட்டம்
சேவையாட்டம் தொடக்கத்தில் அனைத்து கலைஞர்களும் வரிசயில் நிற்க , நாட்டாண்மைக்காரர் கலப்பட நீர் தெளித்து சாம்பிராணி புகை மூட்டி ஆடுபவர் கால்களில் விழுந்து வணங்குவார். இது அடுப்பவர்களை தெய்வ நிலைக்கு உயர்த்துவதாகும்.தெய்வ வழிபாட்டின் பொது நேர் வரிசையில் மதிப்பிடும் சேவையாட்டம் அதன் அடவுகள் வட்டத்திலேயே ஆடப்படும் முறையாகும்.
தேவராட்டத்தில் உள்ள 32 அடைவுகளும் மனிதனின் செயல்பாடுகளை வெளிப்படுத்தவும், தேவையான உடற்பயிற்சியாகவும் உள்ளது. தேவராட்டத்திற்கு பக்கபலமாக இருப்பது உறுமி மேளமும் காலில் கட்டப்படும் சலங்கையுமே ஆகும்.
ஆட்டக்காரர்கள் தலையில் தலைப்பாகை போல் மின்னும் மினுமிப்பான துண்டு கட்டியிருப்பார்கள். உறுமி மூலம் ஆட்டத்தின் அடவுகளுக்கு சுருதி ஏற்றப்படுகிறது. வரிசையாக ஒவ்வொரு ‘விசில்’ சத்தத்துக்கும் இடையே அடவுகள் மாற்றப்படுகின்றன. எல்லோரு ஒரே நேரத்தில் இசைக்கேற்ப சீராக கைகளையும் கால்களையும் உடல் அசைவுகளையும் கொண்டு ஆடுவது கண்கொள்ளா விருந்தாகும்.
தேவராட்டம் பாடல்கள் தெலுங்கில் பாடப்படுகின்றன. ஒயிலாட்டம், தேவராட்டம் ,ஆடும்போது துவக்கத்தில் மெதுவாக தொடங்கும். ‘அடவு’ மாற மாற வேகமும் உறுமி சத்தமும் சலங்கை சத்தமும் கூடி ஒரு வித உச்ச நிலைக்கு செல்கிறது. முதலில் துவங்கும் போது உறுமியை கும்பிட்டும், இறுதியில் கடவுளுக்கு நன்றி சொல்லும் அடவுக்கு வரும் போது மீண்டும் மெதுவாக மாறியும் ஆட்டம் முடிவுறுகிறது. ஒயிலாக பாடலுடன் சேர்ந்து அடிபடுவது ஒயிலாட்டம் எனப்பட்டது இதன் அசைவுகள் மனிதனின் அணைத்து பாகங்களையும் அசைத்து பார்க்கும். ஒயிலாக ஆடப்படுது ஒயிலாட்டம் எனவும், விரைவாக ஆடப்படுவந்து தேவராட்டம் எனவும் கூறப்படுகிறது.
மன்னர்கள் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பும் போது மன்னரை வரவேற்க ஆடப்படும் நடனம் தேவராட்டம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முன்னேற் குருவை , பின்னேர் குருவை என இதற்கு பெயர். மன்னரின் தேருக்கு முன்னும் பின்னும் போர் வீரர்களும் அடல் அணங்குகளும் அணிவகுத்து ஆடி வருவார்கள். சில நேரங்களில் மன்னரும் தளபதிகளும் கூட தேரில் இருந்தபடி ஆடுவார்கள். தமிழகத்தில், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம் முதலான கம்பளத்து நாயக்கர்கள் வாழும் பகுதிகளில் இந்த நிகழ்த்துக்கலை அதிகமாகக் காணப்படுகிறது.
கம்பளத்து நாயக்கர்கள் தங்கள் இனத்தில் விடாமல் வைத்துள்ள கடுமையான கட்டுப்பாடுகள் போல சேவையாட்டத்தையும் அழியாமல் காப்பாற்றி வருகிறார்கள்.
Leave a Reply