(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
காலை ஆறு மணிக்கெல்லாம் அந்த வெள்ளாளத் தெரு பரபரப்பாயிருந்தது. சினிவாசன் குடும்பத்துடன் வெளியே போவதால் வீட்டைப் பூட்டி சாவியை தன் அம்மாவிடம் கொடுத்து வர மகள் பானுவை அனுப்பினான். போன வேகத்தில் பானு பயந்தபடி ஓடிவந்தாள்; வார்த்தை வரவில்லை. ஏதோ விபரீதம் என உணர்ந்து சீனிவாசன் ஓடிப் பார்த்ததில் அம்மா ராமாமிர்தம் தூக்கத்திலேயே மாரடைப்பால் மரணமடைந்திருந்தாள். செய்தியைக் கேட்ட பூங்காவனம் காபியைக்கூட குடிக்காமல் ஓடினாள். அவளின் ஆருயிர்த் தோழியல்லவா அவள்.
“ஒன்னாத்தான் இருந்தோம்
ஒன்னாத்தான் போவோம்னா
பொண்ண பொலம்பவிட்டு
கண்ண கலங்கவிட்டு
சொல்லாம போய்ட்டியே
பொல்லாத அமிர்தா”
என்று ஒப்பாரி பாடிய படியே இருந்தாள். அன்று மதியம் மூன்று மணிக்கு உடல் மயானத்துக்கு கொண்டு செல்லும் வரை எதுவும் சாப்பிடாமல் உட்கார்ந்திருந்தவள் அதன் பின்தான் வீட்டுக்கு போனாள்..
வீட்டுக்கு வந்து குளித்து விட்டு மருமகள் தந்த சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு வெற்றிலைப் பெட்டியுடன் வீட்டுத் தாழ்வாரத்தில் கால் நீட்டிக் கொண்டு உட்கார்ந்தாள். பாட்டி வந்தவுடன் கண்ணன் ஓடிவந்து பாட்டி தொடை மீது உட்கார்ந்து கொண்டு தன் சோடா மூடி சுற்றும் விளையாட்டை தொடர்ந்தான்.
வெற்றிலை போடாமல் பாட்டி யோசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கண்ணன் கேட்டான்,
” என்ன பாட்டி ஒரே யோசனை”
“ஓசியில வெற்றிலை போட இனிம அவ வரமாட்டா”
“அவங்க நல்லவங்க இல்லையா”
” சேச்சே.. அப்படியெல்லாம் சொல்ல முடியாது கண்ணா. அவளோட கதையக் கேட்டா கல்லும் கண்ணீர் வுடும்”
“பாட்டி…பாட்டி….அந்த கதையச் சொல்லு”
” உனக்கு போர் அடிச்சா சொல்லு நிறுத்திடறேன்” என்று சொல்லி விட்டு ராமாமிர்தத்தின் வரலாற்றை சொல்ல ஆரம்பித்தாள் பூங்காவனம்.
“ராமாமிர்தம் கல்யாணம் ஆகி வந்த போது ஊரே ஒன்றுகூடி நின்று பார்த்தது; உண்மையாகவே இவள் பெயர் ராமாமிர்தம்தானா இல்லை ராஜகுமாரியா? அப்படியே அச்சு அசலாக டி.ஆர்.ராஜகுமாரி என்ற நடிகை போலவே இருந்தாள். ஊரிலுள்ள பெண்கலெல்லாரும் அவளோடு சினேகம் வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார்கள். பெண்களே இப்படி யென்றால் ஆண்களின் நிலையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை. கடைத் தெருவுக்கோ, பஸ் ஸ்டாண்டுக்கோ போக நேர் வழி இருக்கும் போதே இவர்கள் ராமாமிர்தம் விட்டின் தெருப்பக்கமாகவும், கொல்லைப் பக்கமாகவும் சுற்றிக் கொண்டு போவார்கள். ஒரு மின்னல் போலவாவது கண்ணில் பட மாட்டாளா என்று ஏக்கப் பார்வை பார்த்தபடியே போவார்கள்.”
“ராமாமிர்தம் கல்யாணம் ஆகி வந்த அதே நேரத்தில்தான் நானும் கல்யாணம் ஆகி வந்திருந்ததால் ரெண்டு பேரும் ஒத்த வயசு தோழி. பெரும்பாலும் இரண்டு பேரும் ஒன்னாவே இருப்போம். ஆற்றில் குளிக்கப் போகும் போதும் ஒன்றாகத்தான் போவோம்; அந்த நேரம் ஆற்றங்கரையில் அந்த ஊர் ஆம்பிளைங்க போக்குவரத்து கட்டுக்கடங்காம இருக்கும்.
ராமா இனிமே நாம ஆத்துக்கு குளிக்க வர்ரது வேண்டாம்’
‘நானும் அதுதான் நெனைச்சேன் அமிர்தா’
பின்னர் வீட்டிலேயே குளிக்க ஆரம்பிச்சோம்.”
“கிணத்தடியிலியா பாட்டி” பேரன் கேட்டான்.
“ஆமாம் கண்ணா. ராமாமிர்தத்தின் புருசன் கனகராசுவுக்கு ஒரு பெரிய கூறை வீடும், அது பின்னாடிபெரிய தென்னந் தோப்பு, அதுல சுமாரா இருநூறு தென்னை மரம் இருந்திச்சு. . காவிரி ஆத்தோட தென்னன்ட கரையில ஒரு ஏக்கர் படுகை இருந்துச்சு.. அதுல வாழைதான் அதிகம் பயிர் பண்ணுவாங்க”
“பானுவோட அப்பாவும், மாரிமுத்துவேட அம்மாவும் அந்த பாட்டியோட புள்ளைங்களா” பேரன் கேள்வி.
” ஆமாம். ஆணொன்னு பெண்னொன்னு ரெண்டு செப்புச் சிலைங்க பெத்து வளர்த்தா. கனகராசுவுக்கு தென்னந் தோப்பு, வாழைக் கொல்லை வேலையே சரியாயிருக்கும். அதையும் மீறி ஏதாவது வேலைக்குப் போகனுமுன்னா வேலி கட்டுகிற வேலைக்குத்தான் போவும். படுகையில் வாழை கன்னு நட்டு குருத்து கிளம்பி விட்டது . இந்த நேரத்தில பார் வெட்டி அணைக்கனும் . அதாவது ஒவ்வொரு இரண்டு வரிசைக்கும் இடையில நீளமா மூன்றடி ஆழம் குழி வெட்ட வேணும். வாழையை பாதிக்காமல் நீள நீளமான அந்த குழியிலதான் தண்ணீர் நிற்கும் ; வாழைக்கு பாதிப்பு இருக்காது. அப்புடி பார் அணைக்க காலையிலேயே இரண்டு ஆளோடு கனகராசு போயிடுச்சு. திரும்புறப்போ பரிசல்காரர் வீட்டுக்குப் போய்ட்டார். காவிரியில் இடுப்பளவு தண்ணீர்தான , நீந்தியே போயிடலாம்ன்னு மூனு பேரும் வந்தாங்க. காலையில இருந்ததைவிட இப்போ அதிக நீர்; வேகமும் அதிகம். மன்வெட்டியை தோளில மாட்டிகிட்டு நீர்ல நீச்சல் போட்ட கனகராசு எதிர்பாராமல் மல்லாந்து சாய்ஞ்சிச்சு; மண் வெட்டி ஆள அழுத்திச்சு; காப்பாத்த கூப்பிட்டது மத்தவங்களுக்கு கேட்கல; கரையேறின பிறகே கனகராசுவைக் காணாததால கரையோரமாகவே தேடினாங்க. இருட்டிவிட , அதுக்கு மேல தேட முடியாதுங்கறதால நேரே கும்பகோணம் பாலக்கரையில போய் காத்திருந்தாங்க. ஆனால் காலையில பிணம் சாமிமலை பக்கத்தில நாணல் புதர்ல கரை ஒதுங்கி இருக்கறதா தகவல் வந்திச்சு. இருபத்தைஞ்சு வயசில ஐஞ்சு வயசு ஆண், மூனு வயசு பெண் குழந்தைங்களோட ராமாமிர்தம் தனிமரமானா.
அவளோட மச்சினர், ” அண்ணி, என்ன செய்யறதா உத்தேசம்”ன்னு கேட்டான்.
“உன்னோட அண்ணன் இல்லைன்னாலும் புள்ளைங்கள வளர்த்து ஆளாக்கனும்; உன்னால முடிஞ்சா ஒத்தாசை பன்னு” ன்னாள்
” நாங்க என்னதான் செஞ்சாலும் அண்ணன் இருந்து செய்யறது போல இருக்குமா? நல்ல யோசனையா சொல்றேன்; வீடு,தோப்பு, படுகை எல்லாவற்றையும் என்னிடமே வித்து காசாக்கிக் கிட்டு, உன் பிறந்த வீட்டுக்கு போறது நல்லது; இந்தமாதிரி வர்ர பொண்ணுங்கள எந்த தாய் தகப்பனும் விட்டுட மாட்டாங்க.”
அவ ஏத்துக்கல.
“இனிம நான் இந்த ஊரு பொண்ணுதான்” ன்னு மறுத்துட்டா. மறுத்துட்டாளே தவிர வாழ்க்கை அவளுக்கு அத்தனை சுலபமா இல்லை.
“ஐயோ.. தனியாவா இருந்தாங்க” பேரன்
“ரெண்டு புள்ளைங்களக் காப்பாத்த வருமானம் தேவைங்கற கட்டாயத்தில அவ இருந்தா. வெளிவேலைக் கெல்லாம் போவ முடியாது; வீட்டிலிருந்துதான் வருமானம் தேடனும். மாசந் தோறும் தேங்காய் மூலமா ஒரு வருமானம் வந்திச்சு. தென்னை மரங்கள்ல கசடு எடுப்பாங்க; மரத்திலேறி பச்சை தென்னை மட்டைகள்ல அடிப்பாகத்தில் இருக்குற கங்கு ஓலைங்கள கழித்து விடுவாங்க; பன்னாடைகளை பிய்த்து போடுவாங்க; மரத்தில மிஞ்சியிருக்குற பாளைங்க, கூறாஞ்சிகள வெட்டி விடுவாங்க; காய்ஞ்ச தென்னை ஓலை மட்டைகளை பிடுங்கி எறிவாங்க. இது மரத்துக்கும் ஆரோக்கியம்; தோப்புக்காரருக்கும் வருமானம். இது ராமாமிர்தத்துக்கு முழ நேர வேலை வாய்ப்பு.”
“பத்து பத்து பாளைகளா கட்டி குட்டை தண்ணீரில ஊறப் போட்டு கிழிச்சு பாளை முடி முடிச்சாகக் கட்டி விற்பாள். இத வேலி கட்டவும், கூறை வேயும்போது கீற்றைக் கட்டவும் வாங்கிப் போவாங்க.
பச்சை கங்கு ஓலைகளைக் கிழிச்சு தென்னந் துடைப்பம் கட்டி விற்பா. இந்த கங்கோலை விளக்குமாறு சத்தமெழுப்பாம பூப்போல பெருக்கும். வெட்டிப் போட்ட காய்ஞ்ச தென்னை மட்டைகளை குட்டைத் தண்ணீரில அமிழ்த்தி ஊறவைச்சு கிழிச்சு கீற்று பின்னி விற்ப்பாள். ஓலையின் அடி மட்டையும், கூறாஞ்சியும் அவளுக்கு அடுப்பெரிக்க சரியாயிருக்கும்.
இப்படி வயிற்றுப் பாட்டுக்கு உழைக்கவே நேரம் சரியாயிருக்கும்.
ஆண் துணை இல்லைங்கறத சாதகமாக்கிக் கிட்டு யாராவது உதவிக்கு வர்ரதப் போல நெருங்கறதா தெரிஞ்சா அதுக்கு இடம் கொடுக்க மாட்டா. தேள் போலக் கொட்டி விரட்டி விடுவா. ஆண்கள் நெருங்கவே பயப்படுவாங்க.
“அழகாயிருக்கிற திமிர்”
அப்படிம்பாங்க.
ஆண்கள் மட்டுமில்லாம பெண்களையும் தள்ளியே நிற்கும் படி வைச்சிருப்பா. கொஞ்சம் இடம் கொடுத்தாலும் அவுங்க வீட்டுக்குள்ள வந்து போனா கண் காது மூக்கு வைச்சுபேச ஆரம்பிச்சடுவாங்க. ‘ராமாமிர்தமா? அவகிட்ட யார் போய் பேசுவா? சரியான பஜாரி” ன்னு பட்டத்தை அவளுக்கு ஊரே சேர்ந்து கொடுத்திருந்திச்சு”
“பஜாரின்னா என்னா பாட்டி”.
” சண்டக்காரின்னு அர்த்தம். ஆம்பளைங்க அவ அழகுல மயங்கினாலும் அது எல்லாமே மறைஞ்சிருந்து பார்க்கும் மர்மம்தான். எந்த ஆம்பளையும் அவளை நேர் கொண்டு நிமிர்ந்து பார்த்துட முடியாம தவிச்சான்னுதான் சொல்லனும். அவளோட தென்னந் தோப்பிலோ, படுகையிலோ வேலைக்கு வர்ர ஆட்கள் கூட அவகிட்ட தலை குனிஞ்சபடிதான் பேசுவாங்க. அதுக்கு அவ மேல உள்ள பயம் காரணமில்ல; அவங்க மேலேயே உள்ள அவநம்பிக்கையே. எங்க நிமிர்ந்து அவ முகத்தைப் பார்த்து பேசறப்போ மனம் சலனப்பட்டு டுமோ; அத நம்ம கண்ணே காட்டிக் கொடுத்துடுமோங்கிற பயமே காரணம். ராமாமிர்தம் ரொம்பவும் இரக்க சிந்தை உள்ளவ.”
“அவளால யாருக்கும் எந்த உபத்திரவமும் இல்ல; சொல்லப்போனா உபகாரமாகத்தான் இருக்கும். “
“அவ மேலெல்லாம் முள்ளா காட்சியளிக்குற வேர்ப்பலா.
தன்பாட்டுக்கு ஊர்ந்து செல்லுற கம்பளிப்புழு யாரையும் தேடிப்போய் ஒட்டி அரிப்பை கொடுக்கிறதில்லை; அதன் மீது ஒட்டுரவுங்க அவங்களேதான் அரிப்பை தேடிக் கிறாங்க. அத போலத்தான் ராமாமிர்தம் தன் பதுகாப்புக்காக தன்னைச்சுத்தி ஏற்படுத்திக் கிட்டதுதான் இந்த சிடுசிடுப்பு; இந்த தடுப்பு அரணைத் தாண்டி யாரும் உள்ளே வரப் பயந்தாங்க.
கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து தன்னுடைய ஒரு ஏக்கர் படுகைக்கு பக்கத்திலேயே விலைக்கு வந்த ஒரு ஏக்கர் நிலத்தையும் வாங்கினாள்.
மகளை உள்ளூர் பள்ளியின் எட்டாம் வகுப்போடு படிப்பை நிறுத்திட்டா. அதற்கு மேல் படிக்க வேணும்னா ஐஞ்சு கிலோமீட்டர் நடந்து தான் போகனும். ஆனால் மகன் பன்னிரண்டாம் வகுப்பை முடிச்சிட்டான். தேங்காய் வியாபாரத்தில் இறங்கினான். ஆட்களை வைச்சு தோப்பிலிருந்த தென்னை மரங்களோட ஊரிலிருந்த தென்னையி லிருந்தும் தேங்காய் பறிச்சு உரிச்சு சென்னை வியாபாரிக்கு அனுப்பத் தொடங்கினான்.
அந்த பதினெட்டு வருடங்கள் ராப்பகலாக உழைச்ச பலன் நல்ல இடத்தில மகளைக் கட்டிக் குடுத்தா. ரெண்டு ஏக்கர் படுகையையும் மகளுக்கே எழுதிக் குடுத்தாள். அடுத்த வருடமே மகனுக்கும் கல்யாணம் முடிச்சுட்டா.”
“அதுதான் பானுவோட அப்பாவா”
“ஆமாம் கண்ணா, அந்த வீட்டை மகனுக்கே குடுத்துட்டு கொஞ்சம் தள்ளி தனக்காவ ஒரு சின்ன கீத்து வீடு கட்டிக் கிட்டா. தன்னோட வருமானத்துக்கு வலியன் அரிசி வியாபாரம் ஆரம்பிச்சா. வலியன் அரிசின்னா என்னான்னு தெரியுமா…குடிசைத் தொழில் அரிசி வியாபாரம். அப்பப்ப ரெண்டு மூட்டைங்க வீதம் ஐ ஆர் 20 நெல் வாங்கி வருவா. ஒரு தடவைக்கு ஆறு மரக்கால் வீதம் ஊறல் போட்டு வேகவைத்து காயவைத்து மிசினில் கொடுத்து அரைச்சுகிட்டு வருவா. வீட்டு அரிசிங்கறதால , அரிசி வாங்கி சாப்பிடுற சனங்கள் இதை விரும்பி வாங்குவாங்க. இந்த வலியன் அரிசி வியாபாரம் கிராமத்தில பல பேருக்கு சோறு போடுது”
“இப்புடி தன்னோட உழைப்பையே நம்பி வாழறவதான் ராமாமிர்தம். இந்த உலகில தன்னை காப்பாத்திக்க அவ அணிஞ்சுகிட்ட கவசந்தான் சிடுசிடுப்பு. அந்த கம்பளிப் புழுவின் மொசு மொசு தோல்; அது யாரும் அவளை நெருங்க விடாமல் காப்பாத்திச்சு.”
“அவளோட கூறை வீட்லருந்த சிறிய சன்னல் வழியா அடிக்கடி தன்னோட பேத்தியப் பார்ப்பா. அது அவளையே பத்து வயசுல பார்க்கறது போல இருக்கும்; கண் கொட்டாம பேத்தி விளையாடுறதையே நேரம் போறது தெரியாம பார்த்துக் கிட்டிருப்பா. சீனிவான் பலகாரம் வாங்கியாந்தா ‘அப்பா வாங்கி வந்தார்’ன்னு சொல்லி பேத்தி பலகாரங்கள கொண்டாந்து கொடுத்துட்டு ஓடிடுவா”.
“பானு பாட்டி வீட்ல போய் வெளையாடாதா”
“வெளையாடெல்லாம் மாட்டா; ராமாமிர்தமும் மகன் வீட்டுக்கு போக மாட்டா.
ராமாமிர்தம் தேடிவந்து பேசுறான்னா அது நான் மட்டுந்தான்”
“பாட்டி, ஒங்க ரெண்டு பேருக்குமே ஒரே வயசு தான; அப்பறம் ஏன் அந்த பாட்டிக்கு இப்படி ஆச்சு”
“அவ என்னைப் போல இல்ல; நாள் முழுக்க ஓயாம உழைச்சு கிட்டே இருந்தா . அது அவ ஒடம்ப பாதிச்சிடுச்சு. ஒடம்பு உள்ளுக்குள்ளியே வியாதி இருந்திருக்கு; அவ வேணுமின்னே அதுக்கு வைத்தியம் பாத்துக்கல; இப்ப எல்லாரையும் விட்டுட்டு போய் சேர்ந்திட்டா”
இப்படி சொல்லிவிட்டு பூங்காவனம் பாட ஆரம்பித்தாள்.
“ஒன்னாத்தான் இருந்தோம்
ஒன்னாத்தான் போவோம்னா
பொண்ண பொலம்பவிட்டு
கண்ண கலங்கவிட்டு
சொல்லாம போய்ட்டியே
பொல்லாத அமிர்தா”
Leave a Reply