(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
“நீ சொல்வது உண்மைதானா சுகுணாக்கா” சங்கர் அதிர்ச்சியில் தலையில் கை வைத்துக் கொண்டான்.
” உண்மை தான்டா சங்கர்”
“அவனுக்கு என்ன தைரியம், திமிர்”
“அவன்ஆசையை சொல்றது திமிரா”
“அவன் நல்லவனா இருந்தா அத யாருகிட்ட வந்து சொல்லனும். இது அவனோட அப்பா ஜோதிடருக்கு தெரியுமான்னு கேட்கனும்.”
“ஏனாம்”
“உன்னோட ஜாதகம் அவர் கையில இருக்கு; உனக்கும் அவனுக்கும் பொருத்தம் பார்த்தாராமா”
“தெரியாது”
“அக்கா, சொல்லுரதக் கேளு; ஜாதகத்துல உனக்கு ராகு கேதுவால தோஷம் இருக்கு; அதனால முப்பது வயசுக்கு முன்னாடி கல்யாணம் பண்ணக்கூடாதுன்னு அப்பாகிட்ட சொல்லி வச்சதே அவர்தான். அது முடிஞ்சி இப்போ ரெண்டு வருசமாச்சு; எந்த ஜாதகம் கொண்டு போனாலும் பொருத்தம் இருக்குன்னு அவர் சொல்லல.”
“அதனால”
“எனக் கென்னமோ உன் கல்யாணம் சொர்கத்துல நிச்சயிக்கப் படுறதுக்கு பதிலா அந்த ஜோதிடர் வீட்டில நிச்சயமாகுதுன்னு தோனுது.”
“அவர்தானடா நம்ப குடும்பஜோதிடர்”
“ஆமாம் அவர்தான் பெரியக்காவுக்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து இந்த ஜோடி ஓகோன்னு இருக்கும்னார்; என்னாச்சு, பெரிய சூப்பர் மாரக்கெட்ல இருந்து இன்னைக்கு சைக்கிள்ல போய் பூண்டு வியாபாரம் செய்யரார். அப்பா என்ன சொன்னாலும் சரி உனக்கு கவர்மென்ட் வேலைபார்க்கிற மாப்பிள்ளைதான்”
“தலையில என்ன எழுதியிருக்கோ அதுதான நடக்கும்”
“அக்கா, நீ பி காம் படிச்சி ஒரு தனியார் கம்பெனியில அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்குறவ மாதிரி பேசு”
“சரி…சரி…உணர்ச்சிவசப்படாத….அப்பாகிட்ட பேசலாம்” சுகுணா, தம்பி சங்கரை சமாதானப் படுத்தினாள்.
பெரியவளுக்கு மாப்பிள்ளை பார்க்கையில் பையன் ஜாதகப்படி பெரிய தொழிலதிபரா வருவான்; பத்து பொருத்தமும் பக்காவா இருக்கு என்றுதான் கணித்தார்கள். பத்து வருடத்துக்கு மேல படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சங்கர் நேரே ஜோதிடர் வீட்டுக்குப் போனான்.” வணக்கம், ஐயா.”
“வணக்கம், வா சங்கர். என்ன விசேடம்”
“ஐயா சுத்தி வளைக்காம நேராவே விசயத்துக்கு வந்திடுரேன். உங்க பையன் சுகுணாக்கா கிட்ட போய் உன்ன கல்யாணம் கட்டிக்க எனக்கு சம்மதம்; உனக்கும் சம்மதமின்னா பெரியவங்கள பேசச் சொல்லவான்னு கேட்டிருக்கான்; உங்களுக்கு இது தெரியுமா”
“என்னது , எந்த தைரியத்துல அவன் அப்படிக் கேட்டான்”
” உங்க பைனை பத்தாவதுவரை படிச்சிட்டு ஓட்டல்ல சர்வர் வேலைன்னு நான் கொறைச்சி சொல்லலை; நாளைக்கே சரவணபவன் மாதிரி பெரிய ஓட்டல்களுக்கு முதலாளியா வரலாம். ஆனா இன்னைய நிலைமை வச்சுப் பார்த்தா இவங்களுக்கு படிப்புலயும் வேலைலயும் பொருத்தம் இருக்கா. வெறும் ஜாதகப் பொருத்தம் மட்டுமே போதுமா”
“சங்கர் அது தப்புத்தான் ; நீ மனசுல எதையும் வச்சுக்காம போ; மத்ததை நான் பார்த்துக்கறேன்”
சங்கர் வீட்டுக்கு வந்தான்; லேப் டாப் எடுத்தான்; இன்டர் நெட்டில் திருமணத் தகவல் பக்கத்தில் நுழைந்து சுகுணாவுக்காக மணமகன் தேடுதலுக்கு பதிவு செய்து மூன்று மாதத்துக்கு பணம் ஆன்லைனில் செலுத்தினான். அக்காவைக் கூப்பிட்டு தகவல்களைக் காட்டினான். அதில் ‘நட்சத்திரம், ராசி, ஜாதகம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவர் மட்டும் தொடர்பு கொள்ளவும்; வரன் கண்டிப்பாக அரசு வேலையி்ல் இருக்க வேண்டும்’ என்று கொட்டை எழுத்தில் குறிப்பிட்டு இருந்தான்.
“அக்கா பயப்படாதே; அப்பவை நான் சமாளிச்சிக்கறேன். உண்மையான பொருத்தம் என சொன்னா ஒரே மாதிரியான சிந்திக்கும் மனப் பொருத்தமே; வேவ் லெங்த் வேற மாதிரின்னா வாழ்க்கை சிக்கல்தான” என்றான்.
நுண்கதையை இன்னும் கொஞ்சம் நீட்டித்து முடித்திருக்கலாம்.
LikeLike
வித்யாசமான கதை.நன்று
LikeLike