(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
(அன்பு நட்புக்களே, தமிழர் வாழ்வியலில் ‘வரைவிடை வைத்து பொருள் வயிற் பிரிதல்’ என்பது தலைவன் திருமணத்திற்கு முன் பொருள் தேடிச் செல்வது. அதன் உள்ளடக்கம் ஒரு கதையாகப் புனைந்திருக்கிறேன்)
சிற்றோடை சிலுசிலுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் கரை மருங்கே எண்ணற்ற மரங்களும்,செடி கொடிகளும் மக்களின் மனம் போல செழிப்பாக வளர்ந்து கிடந்தன. எங்கு நோக்கினும் விண்முட்டும் விருட்சங்கள், அவற்றில் வாழும் பல்வேறு பறவைகளின் நானாவித ஓசைகளின் இசைக் கச்சேரியால் அப்பகுதியே ரம்மியமாக மாறி இருந்தது.
அந்த மயக்கும் சூழலில் ஒரு இணை மாந்தர்கள் கள்ளுண்டவர் போல் கண்மூடிக் கிடந்தனர். அவ்வாரணங்கோ அக்காளையின் மார்பில் முகம் புதைத்துக் கிடந்தாள். சற்று நேரத்தில் சிறு விசும்பல், அதைத் தொடர்ந்து சூடான கண்ணீர்த்துளிகள் இரண்டு உருண்டு அவன் மார்பில் விழுந்தன. துணுக்குற்ற அவன்-பொன்னன் எனப் பெயர் கொண்டவன்,
“பொன்னான பூங்குழலி, ஏனிந்த விசனம்” என்றான். சிறிய அமைதிக்குப்பின்,
“எல்லாம் உங்களால்தான்”
“நானென்ன செய்தேன்”
“ஏதுமறியாதவர் போல் பேசாதீர்கள்; என் தோழியிடம் என்ன கூறினீர்கள்; அவள் உங்களுக்காக என்னிடம் பரிந்து பேசுகிறாள். இனி என்னை நீங்கள் பார்க்க வரவே வேண்டாம்”
“கண்ணே குழலி, உன்னைப் பிரிந்து இருப்பது உயிரைப் பிரிந்திருப்பதற்குச் சமமல்லவா? அது எனக்கு மகிழ்ச்சியைத் தருமா?”
“பிறகு ஏன் பிரிவுச் செய்தியை சொல்லி யனுப்பினீர்களாம்”
“நம் தமிழர் வாழ்வியல் முறையில் ‘வரைவிடை வைத்து பொருள் வயிற் பிரிதல்’ என்பது புதியதல்லவே”
“நம் வாழ்வில் அதெல்லாம் வேண்டாமே”
“கட்டாணிமுத்தே குழலி, நம் திருமணத்திற்கும் பின் மகிழ்வான வாழ்க்கைக்கும் பொருள் தேடிப் போக வேண்டியது என் கடமையன்றோ? அதை நீ தடுக்கலாமா, சொல்லடி என் சித்திரமே”
” ஊக்கும் …பேச்சிலே பழுத்தவர் நீங்கள், என் வாயை எப்படியாவது அடைத்து விடுவீர்கள்.”
“என் செல்லப் பைங்கிளி, சொல்வதைக்கேள், எதிர் வரும் கார் காலம் முடிவதற்குள் பறந்து வந்து உன் கரம் பற்றுவேன், இது உறுதி”
“அன்பரே, நீவிர் என்னவெல்லாம் தந்திரம் செய்திருக்கின்றீர் சொல்லட்டுமா? முதலில் எம் தோழியிடம் பிரிவு அறிவுறுத்தல் செய்திருக்கின்றீர்கள்; அவளின் பிரிவு உடன்படாமைக்கு பெருமுயற்சியால் பிரிவு உடன் படுத்தல் செய்திருக்கின்றீர்கள். நீங்கள் கூறிய காரணங்களால் அவள் பிரிவு உடன்படுதல் செய்திருக்கிறாள்; அதை என்னிடமும் தெரிவித்தாள். என்னே உங்களின் திறமை! இப்போது அதை என்னிடமும் காட்டுகிறீர்கள்”
“என் கண்ணின் மணியே பூங்குழலி, கவலை வேண்டாம் ; கார்காலம் வாராமல் பொய்த்தாலும் நான் வருவது பொய்க்காது; இது உறுதி”
ஒரு வழியாக தலைவன் பொருள் தேடிப் புறப்பட்டுவிட்டான்.
பூங்குழலி பொன்னன் பிரிவுக்காக பெரிதும் வருந்திக்கிடந்தாள். குழலியின் தோழி பொறுமையிழந்து கொஞ்சம் கண்டித்துப் பேசினாள். ‘மழைக்காலம் வந்துவிட்டதே’ என குழலி புலம்பினாள்; தோழியிடம் வாக்குவாதம் செய்தாள். தோழியோ ,”கார்காலம் வந்து விட்டது பொன்னன் வந்திடுவான், பார் கொன்றை பூத்துவிட்டது” என்றாள்.
குழலி மறுத்தாள், “பருவம் பொய்க்கும், எம் தலைவன் பொய்க்க மாட்டான்; அவன் வாராமையால் இது கார்கால மில்லை” என்று எதிர் வாதமிட்டாள்.இந்நிலையில் வந்த செய்திகள் கலக்கமடையச் செய்தன. பாலை நிலத்தைக் கடந்து வந்தவர்களை ஆறலைக் கள்வர்கள் தாக்கிக் கொள்ளை யடித்தார்களாம். அதில் பொருள் தேடிவந்த ஓர் இளைஞன் மாண்டுவிட்டானாம். இச் செய்தி அவ்விருவரையும் சோகக் கடலில் தள்ளியது; தவித்துப் போனார்கள்.
நல்ல கோடையில் எங்கோ பெய்த மழையால் வீசும் குளிர் காற்றைப் போல பொன்னன் வருகிறான் என்பதை வலம்புரிச் சங்கின் ஓசை கேட்டு குழலியிடம் தோழி கூறினாள்.
திரும்பி வந்த பொன்னன் தோளில் சாய்ந்தபடியே குழலி,”பிரிந்திருந்த காலை என்னை நினைத்தது உண்டா”என்றாள்.
“உன்னை மறந்தா லல்லவோ நினைப்பதற்கு” என பொன்னன் கேட்க குழலி அவனை இறுக்கக் கட்டிக் கொண்டாள்.
அழகு தமிழிலில் சங்கப்பாடல்களை நினைவூட்டிய கதை.
LikeLike