(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
செங்கல்பட்டு அருகில் உள்ள பொன் விளைந்த களத்தூர் என்ற ஊரிலிருந்து நானும் அம்மாவும் என் மனைவியும் நேற்றே பல்லாலரம் வந்து விட்டோம். எங்கள் உறவுக்காரப் பையனுக்கு கல்யாணம், பெண் வீடு இங்குதான். காலை ஏழரை ஒன்பது முகூர்த்த நேரம். கல்யாணம் முடிந்து சிற்றுண்டி முடித்துக் கொண்டு நாங்கள் ஒரு முக்கியமான இடத்துக்கு கிளம்பினோம். ஒரு ஆட்டோ அமர்த்திக் கொண்டு அந்த இடத்துக்குப் போனோம்.
அது ஒரு பொதுக் கிணறு. ஆனால் யாரும் வந்து தண்ணீர் இறைக்க வில்லை. நான் சிறுவனாக இருந்த போது பல்லாவரத்தில் நல்ல தண்ணீருக்கு இந்த கிணற்றில்தான் எல்லாரும் தண்ணீர் எடுப்பார்கள். என் அம்மாவும் இங்குதான் எடுப்பார். தினந்தோறும் சராசரியாக நூறு குடமாவது எடுப்பார்; அவ்வளவையும் பல வீடுகளுக்கு விநியோகிப்பார்; குடம் நாலணா. அதில்தான் எங்களின் வாழ்கை ஓடியது. என் அப்பாவுக்கு ஒரு தோல் கம்பெனியில் வேலை. சரியாகவே வேலைக்குப் போகமுடியாது. அநேக நாட்கள் தாம்பரம் டிபி சானடோரியத்தில்தான் இருப்பார்; பிறகு என்னதான் சம்பளமாகக் கிடைக்கும். என் அம்மாவின் இந்த தண்ணீர் வியாபாரத்தில்தான் குடும்ப வண்டி ஓடியது.
அம்மா தண்ணீர் எடுத்து வந்து வீட்டில் உள்ள பெரிய பெரிய பேரல்களில் நிரப்பி வைத்துக் கொள்வார். நான் அவர் கூடவே கிணற்றடிக்கு ஓடுவேன்; பின் திரும்பவும் அவருடன் வீட்டுக்கு ஓடி வருவேன்.
“டேய் தம்பி குணா, செவனேன்னு வூட்ல இருடா” ..அம்மா
“போம்மா நா மாட்டேன்”..நான்.
“உனக்கு ஏன்டா இது தலவிதியா”
‘உனக்கு என்ன விதியோ அதுதான எனக்கும்’ என்று கேட்கத் தெரியாத வயதென்பதால் நான் கேட்டதில்லை.
கிணற்றில் மெல்ல எட்டிப் பார்த்தால் வாளி எங்கிருக்கிறதென்பதே தெரியாது; அவ்வளவு ஆழம்.
இந்த கிணறு எங்களைப் போலவே பலபேருக்கு கஞ்சி ஊற்றிக் கொண்டு இருந்தது. குடிகார, நோயாளி குடும்பத் தலைவர்களைக் கொண்ட குடும்பம் ஒருவேளையாவது சாப்பிட்டது என்றால் இதில் ஊறிய உயிர் நீரால்தான்.
தாம்பரம் சானடோரியத்துக்கு போய் போய் வந்து கொண்டிருந்த அப்பா ஒருநாள் போய்விட்டார் உலகை விட்டே . பிறகுதான் என் தாத்தா பாட்டி எங்களை பொ.வி.களத்தூர் அழைத்து வந்துவிட்டார்கள். என் அம்மா விவசாய வேலை செய்து என்னை வளர்த்தார்; நன்கு படித்து நல்ல வேலை என்று ஆகி என் அம்மாவை கஷ்டப்படாமல் வைத்திருக்கிறேன்.
அந்த கிணற்றை அடைந்ததும் இரண்டு பேருக்குமே பேச்சு வரவில்வை. ஆனால் என் அம்மாவுக்கு வேறு வந்தது; ஆமாம் கண்களில் கண்ணீர் திரண்டது.
எட்டிப்பார்த்தால் கிணறு பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. இப்போது யாரும் இதில் நீர் எடுப்பதில்லை எனத் தெரிகிறது.
பல்லாவரத்தின் ஒரு நினைவுச் சின்னமாக காட்சியளிக்கிறது.
இதுதான் காந்தியடிகள் நூல் நூற்ற ராட்டை.
இதுதான் கப்பலோட்டிய தமிழன் சிறைச்சாலையில் இழுத்த செக்கு.
இந்த வரிசையில் இதுதான் என் அம்மா நீர் இறைத்த கிணறு என்று என் மனைவியிடம் காட்டினேன்.
அவளும் ஒரு புராதனச் சின்னத்தை பார்ப்பது போல பார்த்தாள்.
அந்த கிணற்றில் ஊற்றெடுத்த உயிர்நீீர் ஊற்று வற்றியதால் இன்று வெறும் காட்சிப் பொருளாக இருக்கிறது. கிணற்றை நானும் அம்மாவும் தொட்டு கண்களில் ஒற்றி கும்பிட்டு விட்டு கிளம்பினோம்.
உயிரோட்டமான கதை உன்னத ஓவியம்.
தாத்தா பாட்டிகளையே காட்சிப் பொருளைக்கிக் கொண்டிருக்கும் காலம் கிணறு எம்மாத்திரம்?
LikeLike
பல்லாவரத்தில் நல்ல தண்ணீர் தவிர உப்பு தண்ணீருக்கும் தவித்த காலம் உண்டு; ஆலந்தூர் – பல்லாவரம் கூட்டுக் குடிநீர் திட்டம் வரப்பிரசாதமாக வந்த பின் நிலைமை சிறிது மாறியது.
LikeLike