(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
அனாதைக் குழந்தையாக வந்த தேவிக்கு இப்போது நாற்பது வயது. திருமணம் இன்னும் கூடி வரவில்லை. வளர்ப்புத் தாய் தந்தைக்கு பெருங்கவலை. தேவியின் பேரழகு பார்க்க வரும் மாப்பிள்ளைகளுக் கெல்லாம் பிடித்து விடுகிறது; ஆனால் உடன் வருபவர்களால் கல்யாணம் முடிவாகாமல் தடைப்படுகிறது.
தேவியின் உற்ற தோழமை அவள் வீட்டு கொல்லையில் இவளைப் போலவே தானாகவே முளைத்து வளர்ந்து நிற்கும் குல் மொகர் என்ற வெளிநாட்டு மரம் வகை.அதற்கும் நாற்பது வயது ஆகிறது.
அந்த மரத்தில் இலைகளே இல்லை. ஆனால் கிளை முழுவதும் பூக்களால் நிரம்பியிருந்தது
எல்லாம் செந்நிறப்பூ.
“என்னைப் போலத்தான் நீயும். என்ன பூத்து என்ன பலன் , பூக்களைப் பறித்து சூடிக் கொள்வாருமில்லை; சாமிக்கு சாற்றுவாருமில்லை.”
மாயாஜாலக் கதைகளில் வருவது போல கேட்டதைக் கொடுக்கும் மரமாக இருந்தால் எப்படி இருக்கும்.
” ஏ.. செம்பூ மரமே, புராணக் கதைகளில் வரும் பேசும் மரமாக நீ இருக்கக் கூடாதா? அப்படி இருந்தால் உன்னோடு மனம் விட்டு பேசிக் கொண்டிருப்பேனே”
“இப்போது மட்டும் என்னவாம் தேவி, நீங்கள் பேசலாம்”
துணுக்குற்ற தேவி மரத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
“இந்த மரமா பேசியது”
“ஆமாம் நான்தான் பேசினேன்”
இப்போது எழுந்து போய் மரத்தை சுற்றி வந்து நோட்டம் பார்த்தாள் . ‘யாராவது மறைந்திருந்து விளையாட்டுக் காட்டுகிரார்களோ’தன்னைத்தவிர யாருமே இல்லை என்பதை உறுதி செய்து கொண்டாள்.
“செம்பூ மரமே, நான் ஒரு அனாதையாக வந்தவள்; நீ கூட யாரும் விதை போட்டு வளர்க்காமல் தானாகத்தான் வளர்ந்தாய். இந்த அபலைக்கு நீயே துணை. கேலி செய்யலாமா “
” அப்படி அபலை என்று சொல்லாதீர்கள் தேவி. உங்களுக்கு துணையாகத்தான் நான் அனுப்பி வைக்கப்பட்டேன்.”
“உண்மையிலேயே நீ தான் பேசுகிறாயா”
“இன்னுமென்ன சந்தேகம் தேவி”
” இத்தனை நாளாக நீ ஏன் பேச வில்லை” தேவிக்கு என்ன கேட்பதென்று புரியவில்லை.
“உங்களுக்கு விதிக்கப்பட்ட நாற்பதாண்டு சாபம் இன்றோடு முடிந்து விட்டது; அதனால் பேசுகிறேன். உங்களின் சுய உருவமும் வெளிப்படும்”
இந்நேரத்தில் தேவியின் உருவம் ஒரு தேவதையின் உருவமாக மாறியது; தேவிக்கு ஆச்சரியம்.
” செம்பூ மரமே! நீ சொல்வதெல்லாம் உண்மைதானோ”
“ஆமாம் தேவி. கந்தர்வக் கன்னியான நீங்கள் வானில் வலம் வந்து கொண்டிருக்கையில் மணமின்னும் ஆகாத ஒரு முதிர் கன்னியைப் பார்த்து ‘இதற்கு மேல் இப்பெண்ணுக்கு கல்யாணம் ஆனாலென்ன ஆகாவிட்டாலென்ன’ என்று ஏளனம் பேசியதால் வந்த சாபம்; அந்த முதிர் கன்னி பட்ட மனவேதனை நீங்கள் படவேண்டிய தாயிற்று”
கந்தர்வக் கன்னிக்கு எல்லாம் புரிந்துவிட்டது. இந்த நேரம் அவள் வளர்ப்புத் தாயும் தந்தையும் வந்தார்கள்.” நான் வளர்ந்த உங்கள் வீடு இனி மாளிகையாகும்” என்றாள். திரும்பியவர்கள் மாளிகையைக் கண்டு வியந்தார்கள்.
“தேவி என் மீது தாவி ஏறிக் கொள்ளுங்கள். நான் அப்படியே பறந்து போய் உங்கள் பழைய உலகத்தில் விட்டிடுவேன்”
தேவி தாவி ஏறிக் கொள்ள செம்பூ மரம் எழும்பி விண்ணில் பறந்தது.
Leave a Reply