(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
நாளை காலை தீபாவளி. பண்டிகையை நினைத்தாலே ஒரே பரபரப்புதான். அம்மா கண்டிப்புடன் சொல்லிவிட்டாள்,” எனக்கு உடம்பு ஒரு மாதிரியா இருக்கு ; தீபாவளி பட்சனம் எதுவும் செஞ்சி தரமுடியாது;ஹேமாதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்”
“சரி மாமி நானே எல்லாத்தையும் பார்த்துக்கறேன்.” ஹேமாவும் சவாலை ஏத்துண்டா;
“எப்படி செய்யப் போறே, ஹேமா” ஆராவமுதனுக்கு அடிவயிற்றில் புளி கரைத்த மேனிக்கு இருந்தது.
ஹேமா கொஞ்சம் கூட அலட்டிக்கவே இல்லை. இன்ஜினியரிங் படிக்கும் நாத்தனார் பாமாவை ” பாமா, உன்னை அப்பரசண்டியாக அப்பாயிண்ட் செஞ்சுட்டேன் “
“மன்னி, நேக்குதான் ஒன்னும் தெரியாதே”
“நேக்கு மட்டும் ஏதாச்சும் தெரியுமா என்ன”
வேண்டாவெறுப்பாக பாமா ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
இதற்கெல்லம் ஹேமா சில நிபந்தனைகளை விதித்தாள் .
” இன்று முழுக்க கிச்சனிலேயே இருப்பேன்; வெளியே வரவே மாட்டேன். சாப்பாடெல்லாம் பார்சலில் வாங்கிக் கொள்ள வேண்டும். அதைவிட முக்கிய நிபந்தனை மகள் ஸ்ரீமதியை என்னிடம் வர விடவே கூடாது; முழு நாளும் நீங்கள் மூவருமே பார்த்துக்க வேண்டும்”
இதை எதிர்பார்க்காத மூவரும் ஆடிப் போய் விட்டார்கள்.
ஹேமாவும் பாமாவும் கிச்சனில் ஐக்கியமாகி விட்டார்கள்.
வெளியில் ஸ்ரீமதி பாட்டியின் மடியில் அமர்ந்து தன் ராஜாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தாள். தாத்தாவோ அன்றைய பேப்பரில் மூழ்கியிருந்தார்.
ஸ்ரீமதி,”அப்பா,நேக்கு இப்போ டிவில பெப்பா பிக் வேணும்” என்றாள்.
தாத்தா கேட்டார், ” அப்படீன்னா என்னாடா ஆராமுதா”.
“அப்பா அது வந்து ஒரு பன்றிக்குடும்பம், சின்னவாளுக்கு இப்போ இதுதான் ரொம்ப இஷ்டம்”
“சிங்கம்,யானை யெல்லாம் வச்சு கதை பன்னினது போக இப்ப இத வச்செல்லாம் கதை பன்னறாளா, கண்ணராவியா இருக்காதோ”
“இல்லப்பா, வேணா நீங்க பார்க்கறேளா”
“அபச்சாரம்..அபச்சாரம்..நேக்கு அதெல்லாம் வேணான்டா”
“அப்பா, பெப்பா பிக் வேணும்பா”
“அது இப்ப கெடையாதுடா”
“ஊம்….அதான் வேணும்”
சமாளிக்க முடியாமல் ஆராவமுதன் கிச்சனில் எட்டிப் பார்த்தான்.
“ஹேமா ஸ்ரீமதியை எப்படி டீ சமாளிப்ப”
“நீங்க என்னை எப்பிடி சமாளிப்பீங்களோ அப்பிடி”
புரிந்து கொண்ட ஆராவமுதன் ஸ்ரீமதியை தூக்கிக் கொண்டான்.
“செல்லக்குட்டி, அப்பா சொன்னாக் கேப்பியாம்” என்று சொல்லி அவள் கன்னத்தில் செல்லமாக ஒரு முத்தம் கொடுத்தான். முதன் முறையாக அப்பாவிடம் இப்படி ஒரு கொஞ்சலை அனுபவித்த ஸ்ரீமதி மந்திரம் போட்டது போல மாறிப் போனாள்.
அவனுக்கு மட்டுமன்றி தாத்தா பாட்டிக்கும் அந்த மந்திரம் செய்த மாயம் ஆச்சரியமாக இருந்தது.
எந்த நேரமும் தன்னிடம் உதவி கேட்டு வந்து ஹேமா கெஞ்சுவாள் என்று பாட்டி எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள். ஆனால் சமையறை யிலிருந்து பட்சண வாடைதான் வந்து கொண்டிருந்தது.
இரவு எட்டு மணிக்கெல்லாம்
“ஆறு ஸ்வீட் ஐந்து காரம் ரெடி.” என்று குரல் கொடுத்தபடியே ஹேமாவும் பாமாவும் ஒரு தட்டில் ஒவ்வொன்று வைத்து எடுத்து வந்ததைப் பார்த்த எல்லாரும் சிலையானார்கள்.
“என்ன சிலையா சமைச்சிட்டீங்க; எல்லாம் யூ டியூப் கைங்கர்யம்” என்று பாமா கூறினாள்.
Leave a Reply