(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
எங்கள் அபார்ட்மென்ட்ஸ்சில் ஒரு மாதமாக காலியாக இருந்த ‘சி’ ப்ளாக் எஃப்1 இல் இப்போது யாரோ குடி வருகிறார்கள். வண்டியிலிருந்து சாமான்களை இறக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஃப்ளாட்டுக்கு வருபவர் யாரென்று தெரிந்து கொள்ள அத்தனை பேருக்கும் ஆசை. நேரே எதிரே வந்து நின்று பாரத்துக் கொண்டு இருந்தவர்கள் ஒரு பக்கம் என்றால் ஜன்னல் வழியாகவும், பால்கனியில் துணி காயப் போடுவது போலவும் பார்த்தவர்களும் உண்டு. எல்லாவற்றையும் இறக்கிவிட்டு வண்டி கிளம்பும் போது ஒரு முதியவர், அறுபத்தைந்து வயது கடந்தவர் வெளியே வந்து அவர்களுக்கு பணம் கொடுத்து அனுப்பி வைத்தார். உள்ளிருந்து ஐம்பத்தைந்து வயது பெண்மணி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரிய வில்லை. இது தெரியவரவே மற்ற குடியிருப்பு வாசிகளுக்கு சுவாரசியம் போய் விட்டது. அதிலும் ஆண் பெண் இளவட்டங்களுக்கு சுத்தமாக சுருதி இறங்கித்தான் போய்விட்டது. சில நடுவயது ஆண்களும் ஏமாந்து போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
உலகமே காலையில் விழித்து பரபரப்பாக இயங்கும் வேளையில் அவர்களின் கதவு திறக்கவே திறக்காது.
மதியம் ஒரு மணிக்குத்தான் எழுந்து கதவைத் திறப்பார்கள். வயதானதால் அதிக நேரம் தூங்குவார்கள் போலிருக்கிறது. முதியவர் போய் பால் வாங்கி வருவார். மளிகை, காய்கறி, பழங்களெல்லாம் ஆன்லைன் பர்சேசிங்தான். இரவு மொத்த சனங்களும் தூங்கிய பின்னரும் அந்த ஃப்ளாட்டில் உள்ளே விளக்க எரிந்தபடி இருக்கும்; பேச்சுக்குரலும் கேட்ட வண்ணம் இருக்கும்; அடிக்கடி சிரிக்கும் சத்தமும் கேட்கும். ஏறத்தாழ நடு ராத்திரி நாண்கு மணிக்குத்தான் விளக்கணைப்பார்கள்
அங்குள்ள செக்யூரிட்டி இதை சில நாட்கள் கவனித்து அசோசியேசன் செயலரிடம் தெரிவித்தார். அவரும் தானே இதை கவனித்ததாகக் கூறினார்.
அவர்கள் யாரோடும் பேசிப் பழகினாலல்லவா உண்மை யென்ன வென்று விசாரிப்பதற்கு வழி இருக்கும். ஆளாளுக்கு தத்தம் கற்பனையை பறக்கவிட்டார்கள்.
இசுலாமியர்கள் கடைபிடிக்கும் ரம்ஜான் மாத நோன்பு போல இவர்கள் எதையோ கடைப்பிடிக்கிறார்கள். இந்த முடிவுக்கு மொத்த பேரும் வந்துவிட்டார்கள்.
நல்லவிதமாகவன்றி வேறு விதமாக இருந்து விட்டால் என்ன செய்வது என்று அசோசியேசனில் அன்று இரவு காலிங்பெல் அடித்துப் பார்த்து விடுவதென்று ஒரு முடிவுக்கு வந்தார்கள். அதன்படி நடுராத்திரி இரண்டு மணிக்கு காலிங்பெல் அடித்தார்கள். கதவைத் திறந்ததும் அவர்கள் கண்ட காட்சி விநேதமாக இருந்தது. டீபாயில் லேப் டாப் இருந்தது; எதிரே சோபாவில் உட்கார்ந்து அதைப்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அந்த முதியவரே பேசினார்,
“எனக்குத் தெரியும் நீங்கள் எதுக்காக வந்திருக்கீங்கன்னு. வந்து லேப் டாப்பில் பாருங்க; வெளி நாட்டில் இருக்குற மகள் மருமகன் பேத்தியோட பேசிக்கிட்டு இருக்கோம். அவங்களுக்கும் நமக்கும் ஐந்தரை மணி நேரம் வித்தியாசம்; அவங்க நேரத்துக்கு ஏத்தபடி எங்க நேரத்த மாத்தி வைச்சுக்கிடடோம், அவ்வளவே”
அருமை..
LikeLike
நன்றி
LikeLike