(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம்,மெல்போர்ன்,ஆஸ்திரேலியா)
முகநூல் குழு ஒன்றின் போட்டியில் வென்ற கதை
சென்னையிலிருந்து ஓசூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஓசூருக்கு முன் உள்ளது சூளகிரி எனும் ஊர். அங்கு போலீஸ் படை குவிந்திருக்கிறது. நேற்று நடந்த துப்பாக்கி சூடு கொலை பற்றி விசாரணை நடக்கிறது. ஊரின் நல்ல மனிதரை ஒரு கும்பல் வந்து துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டுப் போயிருக்கிறது.
அந்த பகுதியில் நிறைய சட்ட விரோதச் செயல்கள் நடந்த படி இருக்கிறது. யானைத்தந்தம் திருடுவதற்காக யானை வேட்டை நடப்பதாகவும் செய்தி. இதுவரையில் யாரையும் பிடிக்க முடியவில்லை. அந்த கும்பலின் அட்டூழியத்துக்கு பயந்து மக்கள் வாயைத் திறக்கவே பயந்தார்கள்.
போலீஸ் விசாரணையில் கொலையை பார்த்தவர்கள் யாரேனும் இருக்கிறார்களா எனத் தேடினார்கள். அல்லது சந்தேகப்படும்படி யாரேனும் நடமாடினார்களா என விசாரித்தார்கள்.
நேரில் பார்த்தவர்கள் யாருமில்லை. பார்த்திருந்தாலும் சொல்ல துணிவில்லை; அதே போல சந்தேக நபர்கள் பற்றியும் கூற விரும்பவில்லை.
பள்ளியிலிருந்து திரும்பியவன் போல பை மாட்டிய சிறுவன் ஒருவன் வந்தான். கொலைகார்களைத் தெரியும் என்றான். எல்லாரும் காக்கி நிறத்தில் யூனிபாரம் அணிந்திருந்தார்கள் என்றான்.
அந்த சிறுவன் சொல்வது எதுவும் நம்பம்படி இல்லை என்று உயர் போலீஸ் அதிகாரி மறுத்து விட்டார். மீண்டும் காலையில் வந்து மீதமுள்ளவர்களிடம் விசாரிப்பதாகக் கூறி சென்றுவிட்டார்.
காவல் ஆய்வாளர் ஒருவர் அந்த சிறுவனை தனியே அழைத்து கேட்டார்,
“நீ எங்கிருந்து பார்த்தாய்”
“செடிகளுக் கிடையிலிருக்கிற இந்த கட்சிக் கொடிக் கம்பம் கட்டைமேல உட்கார்ந்திருந்தேன்; அந்த அண்ணாவை மூன்று பேர் துரத்திகிட்டு வந்தாங்க; அவர் தடுமாறி கீழே விழுந்துட்டாரு; ஒருத்தன் தன் துப்பாக்கியால் அவரை சுட்டான்”
“எத்தனை தடவை சுட்டான்”
“ரெண்டு முறை சுட்டான், நெற்றியில ஒன்னு, மார்பில ஒன்னு.”
“சுட்டுவிட்டு எந்த வழியாகப் போனார்கள்”
” ஓசூர் போகிற திசையில சாணமாவு நோக்கிப் போனாங்க”
“என்ன சாணமாவுவா ? அது யானைங்க நடமாட்டம் அதிகமுள்ள இடமாச்சே”
” ஆமாம் , யானைங்க சாலையைக் கடக்குற சாணமாவுதான். அங்கிருந்து இடப்புறம் இறங்கி காட்டில் மறைஞ்சுட்டாங்க”
“இங்கே நின்னு கிட்டு நீ இதையெல்லாம் பார்த்தாயாக்கும்; நான் நம்ப வேணுமா?”
“ஆமாம், அதான் உண்மை”
“என்ன உளறுகிறாய்”
இப்போது ஆய்வாளரும் அப்படியே எண்ணினார் ‘அந்த சிறுவன் சொல்வது எதுவும் நம்பும்படி இல்லை’
சிறுவன் பொறுமையாக உட்கார்ந்தான். முதுகில் மாட்டியிருந்த பள்ளிக்கூட பையை கழற்றி முன்னே வைத்துக் கொண்டான். பை உள்ளிருந்து சில பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து வெளியே வைத்தான். ஆய்வாளர் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் எதையோ செய்வது அவருக்கு கோபத்தைக் கிளறியது. தனித்தனியாக இருந்தவற்றை ஒவ்வொன்றாக இணைத்தான். என்ன ஆச்சரியம்! அது ஒரு ட்ரோன். பாட்டரி போட்டு அதை இயக்கத் தொடங்கினான்.
‘பள்ளியில் படிக்கும் சிறு பிள்ளைகள்தானே என்று சாதாரணமாக எண்ணிவிடக் கூடாது; எல்லாரும் ஒரு இளம் விஞ்ஞானிதான்’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டார்.
“சார் , ஜீப்பைக் கிளப்புங்க, நாமளும் தொடரலாம்” என்றான்.
ட்ரோன் மேலெழும்பி பறந்தது. அதை இயக்கியபடியே ஜீப்பில் தொடர்ந்தார்கள்.
‘சாணமாவு யானைகள் சாலையைக் கடக்கும் இடம், கவணம் தேவை’
என்ற அறிவிப்பு பலகை உள்ள இடத்தில் வந்து காரை நிறுத்தினார்கள். ட்ரோன் உயரத்தை அதிகப் படுத்தினான்; காட்டின் மீது அது பறந்தது. இவர்கள் தொடர்ந்தார்கள். அடுத்த ஐந்தாவது நிமிடம் காட்டில் கீழே புகை வருவதைக் காட்டியது. மனிதர்கள் நடமாட்டமும் இருப்பதாகத் தெரிந்தது.
“சார் இதுதான் அவங்க முகாம். உங்க போலீஸ் படையோட போய்ப் பிடிங்க. அவுங்க வெறும் கொலைகாரங்க மட்டும் இல்லை; யானையைக் கொன்று தந்தம் கடத்துறவங்க. அத தெரிஞ்சு கிட்ட அந்த அண்ணன் எங்கே நம்மைக் காட்டிக் கொடுத்திடு வாரோன்னு பயந்துதான் அவரை சுட்டுக் கொன்னுட்டாங்க”
ஆய்வாளர் ஒரு கணம் வாயடைத்து பேச்சற்று நின்று விட்டாலும், சுதாரித்துக் கொண்டு தன் வாக்கி டாக்கியை எடுத்து காவல் கட்டுப் பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டார்.
Leave a Reply