(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்தியாயம் 1,அத்தியாயம் 2,அத்தியாயம் 3
நீண்டநேரமாக நாண்கு வயது குழந்தையுடன் ஒருத்தி ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்த காவலர் ஒருவர் நெருங்கி வந்தார்.
“யாரம்மா நீ; ரொம்ப நேரமா இங்கயே உட்கார்ந்திருக்க; எங்க போவனும்”
பானுமதி முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்; பதிலில்லை.
“பதில் சொல்லாம அழுதா எப்படி? சொல்லும்மா”
பானுமதி சிறிது அமைதி காத்தபின் பேசத்தொடங்கினாள்.”ஐயா, சென்னை வந்துட்டதா நெனைச்சு இங்க இறங்கிட்டேன். இருக்கிற காசு சாப்பிடத்தான் போதும்; சென்னைக்கு போக டிக்கெட் எடுக்க முடியாது”
“டிக்கெட் நானெடுத்து தருகிறேன், அடுத்த ரயிலில் போகிறாயா”
“ஏதோ ஒரு வேகத்தில் சென்னைக்குப் போனால் பாதுகாப்புன்று கெளம்பி வந்துட்டேன்; அங்க எனக்கு யாரும் இல்லை” தன் சோகக் கதையைக் கூறி தான் சென்னை வந்த நெருக்கடியையும் கூறினாள்.
காவலர் யோசித்தார் ; டிபன் வாங்கி வந்து தந்தார்.
” இதை சாப்பிட்டு இங்கேயே இரு; மத்தியானம் வந்து உனக்கு ஒரு நல்ல வழி சொல்கிறேன்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
ஒருமணியளவில் தன்னுடன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை அழைத்து வந்தார்; அந்த பெண் ரயிலில் சீசனுக் கேற்ற பழம் விற்பவர்.
” இவர் கூடப் போ; வீட்டில் இடம் தருவார்; அதுதான் உன் உடனடித் தேவை. அங்கே தங்கிக் கொண்டு உனக்கு தெரிந்த வேலையை செய்து பிழைத்துக் கொள்” என்றபடியே இருநூறு ரூபாயைக் கொடுத்து அனுப்பினார்.
அந்த பெண்ணுடன் பரனூர் வந்து அவள் வீட்டின் ஒரு பகுதியில் தங்கினாள். உண்மை நிலை எதுவும் தெரியாமல் வண்ணநிலா விளையாடிக் கொண்டிருந்தாள்; அதைப் பார்த்த பானுமதி உருகிப் போனாள். வண்ணநிலாவை மடியில் வைத்துக் கொண்டு ,
“பூமாலை நீயேன் புழுதி மண்மேலே…
வந்தேன் பிறந்தாயோ”
என்று மெதுவான குரலில் பாடி தன் சோகத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.
இதைக் கேட்டு அடைக்கலம் கொடுத்தவள்,
” இவ்ளோ நல்லா பாடற, இதையே ரயிலில் பாடிக்கிட்டு போனா ஒருநாளைக் கெல்லாம் ஐநூறு கூட சம்பாதிக்கலாம்” என்றாள்.
இதைக்கேட்ட பானுமதிக்கு இன்னமும் துக்கம் பீறிட்டு முந்தானையால் வாயை மூடிக் கொண்டு அழுதாள்.
அடுத்த இரண்டு நாளில் முடிவெடுத்து விட்டாள். வண்ணநிலாவை அந்த பெண்ணின் பிள்ளைகளோடு விளையாட விட்டு விட்டு தானும் கிளம்பி ரயிலில் பாடப் போனாள். குழந்தை நினைப்பில் மதியமே திரும்பிவிட்டாள், இருநூறு ரூபாய் சம்பாத்யம். ரயிலில் பாடி சம்பாதிப்பதே பிழைப்பு என்றானது.
வண்ணநிலாவை அவ்வூரிலேயே முதல் வகுப்பில் சேர்த்தாள்; எட்டாம் வகுப்புக்குப்பின் செங்கல்பட்டில் மேல் நிலைப்பள்ளியில் சேர்த்தாள்; அங்குதான் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தாள். எதிர் வீட்டு வித்வானிடம் சங்கீதம் படித்தாள். நித்தம் அதிகாலை நாலு மணியிலிருந்து அசுர சாதகம் பண்ணுவா. பள்ளிக்ககூடம் போய் வந்தா ராத்திரி பாடம் படிப்பா; அவ படிப்புல படு சுட்டி. படிப்பு முடியும் வரை பள்ளியின் ஆஸ்தான பாடகி அவள்தான். எல்லா வரலாற்றையும் தங்கராசுவிடம் கொட்டித் தீர்த்தாள். செங்கல்பட்டு வரை போய் மாலையில் வருதாக தங்கராசு கூறிக் கிளம்பிப் போனான். சொன்னபடியே சாயங்காலம் இருட்டுறதுக்கு முன்னாடி வந்தான். பானுமதிக்கு புடவை, வண்ணநிலாவுக்கு சல்வார் கம்மிஸ் வாங்கி வந்திருந்தான்; ஸ்வீட், பூ கூட அதில் இருந்தது. அவன் கொடுத்தவற்றைவாங்கிக் கொண்டே பானுமதி கேட்டாள், “இதற்கெல்லாம் வாங்கிட ஏது பணம்”
“சிறைச்சாலையில் செஞ்ச வேலைக்கு கெடைச்ச சம்பளம்”
“நீங்கள் இப்ப வந்துட்டீங்க என் மகளைப் பாதுகாக்க. மகள் வந்ததும் உன் அப்பா வந்துட்டார்னு சொல்லி உங்ககிட்ட ஒப்படைச்சிடுவேன். எனக்கு கவலை இனிம இல்லை.”
“வேண்டாம் பானு, நான் தள்ளியிருந்து பார்த்துக்கறேன். என்னை அப்பான்னு சொல்லிட வேண்டாம்”
“ஐயய்யோ..இது என்ன கூத்து..ஏன் இப்படி சொல்றீங்க.”
“வண்ணநிலா இப்பதான் வளர்ந்து வருகிறா; இனிம பெரிய பாடகியா வரப் போறா; அவள் தகப்பன் ஒரு கொலை வழக்கில ஜெயிலுக்குப் போனவன்னு சொன்னா அது அவளோட வளர்ச்சிய பாதிக்கும்; அவளுக்கு கவுரவமும் இல்ல; அதனால வேண்டாம்; உன் குங்குமத்துக்கும், மகள் பாதுகாப்புக்கும் நான் தள்ளி இருந்தே காவல் காக்கிறேன். தடை சொல்லாதே”
“என்னால முடியாது; இனிம நீங்கதான் பாத்துக்கனும். சரி இருங்க டீ போட்டு கொண்டாரன்” என்று குடிசைக்குள் போனாள். குடிசை வெளியே கிடந்த பென்ச்சில் யோசனையோடு உட்கார்ந்தான். “பானு, நான் சொல்லுவதைக் கேளு; வண்ணநிலா என்னை அப்பபான்னு கூப்பிடவே பிரியப்படமாட்டா. அதனால இப்ப வேண்டாம்; அதுக்கான காலம் வரட்டும். பானு சீக்கிரம் டீயைக் கொண்டா, வண்ணநிலா வரதுக்குள்ள”
“என் பொண்ணப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும்; இத்தன நாளா தெனமும் உங்களப் பத்தியே கேட்டுகிட்டு இருப்பா. வாரப் பத்திரிகைகள்ள வர்ர கதையில இருக்கிற படங்கள காட்டி ‘ அப்பா இப்பிடி இருப்பாரா’ ன்னு கேட்டபடியே இருப்பா. உங்கள பார்த்தா ஓடி வந்து ‘அப்பா’ ன்னு கட்டிக்குவா பாருங்க. இதோ டீ ரெடியாயிடுச்சு, எடுத்தாறேன்”
பானுமதி அவனை தீர்க்கமாகப் பார்த்தாள்; தான் செய்யவேண்டியது இதுதான் என்று முடிவு செய்ய வேண்டும். மகள் பெரிய பாடகி ஆனபின் அவள் கால்யாணத்துக்கு முன் அவனை அறிமுகப் படுத்துவது நல்லதா அல்லது இப்போதே சொல்லிவிடுவது நல்லதா என்ற குழப்பத்தின் உச்சியில் இருந்தாள்.
அவள் குழப்பத்தை தீர்க்கும் விதமாக தங்கராசு பேசினான், ” பானு , வக்கீல் மூலமா தற்போதைக்கு ஒரு வேலையில சேர்ந்துக்கறேன்; எந்த முடிவுன்னாலும் கொஞ்சம் ஆறப்போட்டு பிற்பாடு பார்த்துக் கலாம். இந்த வக்கீல் போன் நம்பரை எழுதி வச்சுக்க; அவர் பேரு நடராஜ். இப்போதைக்கு அவர் மூலம்தான் என்னை தொடர்பு கொள்ள முடியும்; நான் செல் போன் வாங்கினதும் அந்த நம்பர்ல பேசலாம்.” பானுவின் குழப்பத்துக்கு ஒரு தீர்வு கொடுத்து விட்டு கிளம்பினான். அவன் போன வழியையே பார்த்துக் கொண்டிருந்த பானுமதி விழியோரம் வழிந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
வக்கீல் நடராஜ் சொன்னது போல ராயபுரத்தில் வேலை வாங்கிக் கொடுத்துவிட்டார். அது ஒரு பழைய இரும்பு குடோன். காயலான் கடைகளில் இருந்து லாரியில் சரக்கு ஏற்றி வந்து , அதை பெரிய பவுண்டரிகளுக்கு லாரிகளில் அனுப்பி வைப்பார்கள். இருபத்தைந்து ஆட்களுக்கும் அதிகமாக அங்கு வேலை செய்கிறார்கள். எல்லாருமே ஒரு மார்க்கமான ஆட்கள்தான்; சம்பாதிப்பதில் முக்கால்வாசியை குடித்தே அழித்து விடுவார்கள்.
லாரிகளில் சரக்கு கையாள்வதில் திருட்டுத்தனம் செய்வார்கள். காயலான் கடையில் கொள்முதல் செய்யப் போகும்போது காலியாக உள்ள லாரியை எடை போடுவார்கள்; அப்போது ஜாக்கி, ஸ்டெப்னி, மரக்கட்டை, அள்ளிப் போடும் ஷவல் போன்றவற்றை லாரியிலேயே வைத்து எடைபாடுவார்கள். பின் மேற்படி பொருட்களை வெளியே எங்காவது எடுத்து வைத்துவிட்டு போய் சரக்கை ஏற்றிக் கொண்டு வந்து எடைபோடுவார்கள்; அப்போது இறக்கி வைத்த சாமான்களின் எடையளவுக்கு சரக்கு கூடுதலாக ஏறியிருக்கும்; அந்த சரக்கை வேறு இடத்தில் போட்டுவிட்டு முக்கால் வாசி காசு வாங்கிக் கொள்வார்கள். இறக்கி வைத்த சாமான்களை மீண்டும் லாரியில் ஏற்றிக் கொண்டுபோய் குடோனில் கணக்குக் காட்டி விடுவார்கள். இதே போல குடோனில் இருந்து பவுண்டரிக்கு எடுத்துப் போகும் போதும் கணக்கப்பிள்ளை கண்ணில் மண்ணைத்தூவி ஏமாற்றி விட்டு ஏற்றிக் கொண்டு போகும் சாமர்த்தியசாலிகளும் உண்டு. பிடிபட்டால் வேலை போகும்; ஒருவாரம் வேலையில்லாமல் சுற்றிவிட்டு முதலாளி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு மீண்டும் வேலைக்கு சேர்ந்து விடுவார்கள். இது அங்கு வாடிக்கையாக நடப்பதுதான்.
இதையெல்லாம் கூறி, எதிலும் மாட்டாமல் பக்குவமாக நடந்து கொள்ள புத்திமதி சொல்லி வக்கீல் அனுப்பினார்.
தங்கராசுவும் இரண்டு நாள் தானுண்டு தன் வேலை உண்டு என்றுதான் இருந்தான். மூன்றாம் நாள் அந்த விபரீதம் நடந்தது. திருட்டுத்தனம் செய்த பணத்தில் பங்கு போடுவதில் வந்த வாய்ச்சண்டை கைகலப்பாக மாறியது. பெரிய இரும்புத் தடியால் ஒருவன் தாக்கப் பாய்ந்தான்; அவனை தங்கராசு தடுக்க முனைந்தாலும் பயனில்லாமல் மற்றவன் தலையிலடிபட்டு விழுந்தவன் ஆஸ்பத்திரியில் செத்துப் போனான். மொத்த பேரையும் போலீஸ் அள்ளிப்போட்டுப் போனது.
இந்த செய்தி டிவியிலும் செய்தித்தாளிலும் வெளியானது. அதே செய்தித்தாளில் வண்ணநிலாவின் அடுத்த கச்சேரி பற்றிய விளம்பரமும் வந்திருந்தது. அந்த செய்தித் தாளை வண்ணநிலா வாங்கி வந்திருந்தாள். மகளின் கச்சேரி விளம்பரத்தைப் பாரத்த பானுமதி அதனுடன் இருந்த செய்தியையும் படத்தையும் பார்த்து அதிர்ந்தாள்; அவசரமாக வக்கீல் நடராஜ் போன் நம்பரை எடுத்தாள்; மகளிடம் கோதண்டபாணியார் கொடுத்த செல்போனில் அந்த எண்ணை போட்டுத்தரக் கேட்டாள். ஒன்றும் புரியாமல் குழம்பியபடி அந்த எண்ணை டயல் செய்து கொடுத்தாள்.
“ஐயா, நான் தங்கராசுவோட பொண்டாட்டி பேசரேன்”
இதைக் கேட்ட வண்ணநிலா அதிர்ந்தே போனாள்.
” நீங்கள்லாம் பரனூர்ல இருக்கிற விபரம் தங்கராசு சொல்லித் தெரியும். ஒன்னும் கவலைப் படாதிங்க நான் பார்த்துக்கறேன்”
“ஐயா நான் வந்து அவரைப் பார்க்கனும்” சொல்லும் போதே அழுதாள்..
“நான் ஏற்பாடு செய்து கொண்டு சொல்கிறேன், கொஞ்சம் பொறுமையாக இருங்கள்” என்று வக்கீல் பதில் சொன்னார்.
ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டு இருந்த வண்ணநிலாவிடம் எல்லாவற்றையம் ஆதியோடு அந்தமாகக் கூறினாள். கேட்டுக் கொண்டிருந்த வண்ணநிலா அப்படியே சிலையாக உட்கார்ந்துவிட்டாள்.
முதன்முதலில் அப்பாவைப் பார்க்கும் போது குற்றவாளியாகப் பார்க்க வேண்டியிருக்கிறதே யென்று மனம் குமுறினாள்.
காலம் ஓடியது; வழக்கு நடந்தது. ஒவ்வொரு முறை கோர்டுக்குப் போகும் போதும் எப்படியாவது அப்பாவை பார்க்காமல் தந்திரமாகத் தவிர்த்து விடுவாள்.
இவர்களின் அதிர்ஷ்டமா, வக்கீல் நடராஜ் வாதத் திறமையா தெரியாது ; சம்பவத்தில் தங்கராசுவுக்கு தொடர்பில்லை என்று விடுலையானான்.
கோர்ட்டில் இருந்து வெளி வந்தவனை முதன் முறையாக,
” அப்பா”
என்று தன் கிளி மொழியால் அழைத்தாள்.
திடுக்கிட்டவனாக ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்த தங்கராசு திகைத்து நின்றான். அவன் சிந்தனைகள் எல்லாம் ஆயிரக் கணக்கான பட்டாம் பூச்சிகளாக மாறி சிறகடித்து பறந்து கொண்டிருந்தன.
முற்றும்.
கதை ஆரம்பித்ததிலிருந்து அழகாகப் போனது முடிவு நல்ல முடிவாக இருந்தும் ஏதோ எதிர்பார்த்து சப்பென ஆகி விட்டது போல் தோன்றுகிறது. கதையை இன்னும் கொஞ்சம் பின்னியிருக்கலாம்.
இதை சாதாரண விமர்சனமாக எடுத்துக் கொள்ளவும்.
LikeLike