(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்தியாயம் 1,அத்தியாயம் 2,
“அவர் ‘காரணமிருக்கிறது அம்மா. ஆயிரக்கணக்கில் சன்மானம் வாங்கிக் கொண்டு பாடுபவர் போலவே பாடுகிறாய்; ஒரு பாட்டுக்கு நூறு ரூபாய் என்பது ஒன்றுமேயில்லை; உன் பாடலை கேட்கவே உன்னை தொடர்ந்து வந்தேன் ; பயப்படாதே’ என்று பதில் சொன்னார்.”
“அவரிடம் ‘நீங்கள் என்ன சங்கீத வித்வானா? அப்படின்னா எனக்கு மேலும் சங்கீத நுணுக்கங்களை கற்றுத்தர முடியுமா? ‘ என்று கேட்டேன்” அதற்கு அவர்,
‘வித்வானெல்லம் இல்லை ; இசை சம்பிரதாயம் பற்றி தெரியும் ; இசை விமர்சகன் அவ்வளவுதான். சரி உன்னுடைய குருநாதரை நான் வந்து பாரக்க முடியுமா ‘ ன்னு கேட்டார்.”
” என் குருநாரை வந்து பார்க்கறது போல வந்ததே என் அம்மாவை சந்திக்கத்தான் என்கிறது அப்புறமா தெரிஞ்சுது. என்னை இப்படி யெல்லாம் அழைத்து வர என் அம்மாவிடம் அனுமதி வாங்கினார்.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது கோதண்டபாணியார் வந்து விட்டார்.
“என்ன உங்கள் விசாரணை யெல்லாம் முடிந்ததா? வண்ணநிலா செய்யும் ஆலாபனை, அபிவிருத்தி யெல்லாம் யாருக்கும் வராது; சரியான வாய்ப்பு கொடுத்தால் இன்றைக்கு முன்னனியில் உள்ள பலபேரை பின்னனிக்குத் தள்ளிவிடுவாள்” என்றார்.
அருகிலிருந்த சரவணபவனில் போய் மதிய சாப்பாடு சாப்பிட்டார்கள்.
வண்ணநிலா , நாளை காலையில் தயாரா இரு; அழைக்க வரும் ஆளுடன் கிளம்பி வா; திருப்புகழ் ரெக்கார்டிங் இருக்கு. நாளை ஒருநாள் மட்டும் என்றில்லை, இனி தினமும் ஏதாவது ஒரு ரெக்கார்டிங் இருக்கும். விரைவில் வடபழனிக்கு வீடு மாறிடலாம்; அதற்கு ஏற்பாடு செய்கிறேன்” என்றவர் , உதவியாளரை கூப்பிட்டு வண்ணநிலாவை அழைத்துக் கொண்டு போய் பரனூரில் விட்டு வரச் சொன்னார்.
இதையெலலாம் ஒரு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த தங்கராசு கோட்டை ரயில் நிலையத்துக்கு வந்து பரனூருக்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு காத்திருந்தான். அவர்களறியாமல் பின் தொடர்ந்து பரனூர் சென்று வண்ணநிலாவின் வீட்டைக் கண்டு பிடித்து வைத்துக் கொண்டான்.
மறுநாள் வண்ணநிலா துணையுடன் கிளம்பிப் போனதும் அந்த வீட்டுக்குப் போனான். நோய் வாய்ப் பட்டதால் மெலிந்து போயிருந்தாலும் மனைவி பானுமதி இன்னும் அழகாகத்தான் அவன் கண்ணுக்குத் தெரிந்தாள்.
“பானு” என்று குரல் கொடுத்தான். பானு என்று அவனைத் தவிர வேறு யாரும் அவளைக் கூப்பிட்டதில்லை. பானு என்ற அந்தக் குரல் கேட்டு மந்திரம் போட்டது போலத் திரும்பினாள்; சிலையாகி நின்றாள்.
“நீங்களா, வந்துட்டீங்களா?”
” ஆமாம் பானு. விடுதலையானதும் திருச்சியிலிருந்து கிராமத்துக்கு வந்து பார்த்தேன்; நீங்கள் இல்லை; யாரைக் கேட்டாலும் தகவல் இல்லை. சென்னைக்கு வந்து தன்னைப் பார்த்தால் ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யறதா வக்கீல் சொல்லியிருந்தார். அதனால உயர்நீதி மன்றம் போனேன். அப்போதுதான் வண்ணநிலாவைப் பார்த்தேன்; அவளைப் பின்தொடர்ந்து வந்து வீட்டைக் கண்டு பிடித்தேன்”
“அப்பாடி..இப்பதான் நீங்க வந்துட்டீங்ளே; என் பாரம் இறங்கிடுச்சு.”
“அந்த கொலை கேஸ் மட்டும் எம்மேல விழாம இருந்திருந்தா நம்ம வாழ்க்கையில இந்த பதினாலு வருசம் காணாமப் போயிருக்காதில்ல” என்றவனை நிமிர்ந்து பார்த்த பானுமதி நடந்த சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள்…….
தங்கராசு கிராமத்தில் பால் வியாபாரம் செய்து வந்தான். அழகியான பானுமதியுடன் சந்தோசமாக குடும்பம் நடத்தினான். பிறந்த பெண் குழந்தைக்கு தேர்ந்தெடுத்து வண்ணநிலா என்று பெயர் வைத்தான். பானுமதிக்கு நல்ல குரல் வளம்; சென்னைக்கு சென்று விட்டால் சினிமாவில் பாட எப்படியும் வாய்ப்பு கிடைத்து விடும் என்று கூறிக் கொண்டே இருப்பான். தினமும் பானுவை ஒரு பாட்டாவது பாடச்சொல்லி கேட்காமல் தூங்கவே மாட்டான். விரைவில் சென்னைக்குப் போய்விடவேண்டும் என்பது அவன் எண்ணம். தென்றல் வீசிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் புயல் அடித்துவிட்டது. ஊர்க் கோவில் தகறாறில் நடந்த கொலைகளில் தங்கராசுவையும் இணைத்துவிட்டதால் பதினான்காண்டுகள் திருச்சி மத்திய சிறையில் சிறைவாசம். அழகிய பானுவால் கிராமத்தில் ஒவ்வொரு நாளைப் போக்குவதும் ஒரு பெரும் போராட்டமாகவே இருந்தது. ஒருநாள் வீட்டைப் பூட்டிவிட்டு குழந்தையுடன் சென்னைக்கு ரயிலேறி விட்டாள். நிறைய பேர்கள் இறங்கியதால் அதிகாலை தூக்கக் கலக்கத்தில் இதுதான் சென்னை யென்று எண்ணி செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி வெளியிலும் வந்துவிட்டாள்; வண்டியும் போய் விட்டது. பிறகுதான் தெரிந்தது அது செங்கல்பட்டு என்று.
செய்வதறியாது வெளியில் டிக்கெட் கவுண்டர் அருகிலேயே உட்கார்ந்து விட்டாள். துக்கம் பீறிட்டு வந்தது; கட்டுப்படாமல் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொல வென்று கொட்டியது. வண்ணநிலா பார்க்காதடி முகத்தை மறைக்க பெரிதும் கஷ்டப்பட்டாள்.
நாளை தொடரும்….
Leave a Reply