(சித்திரம்: கிரிஸ் நல்லரத்னம், ஆஸ்திரேலியா.)
முந்தைய அத்யாயங்களின் இணைப்பு: அத்தியாயம் 1,
அந்த குளிரூட்டப்பட்ட அரங்கத்தில் அவர்களைத் தொடர்ந்து சென்று அவர்களின் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டான். முன்புறமாக இருந்த வரிசைகள் மட்டும் நிறம்பியிருந்தன. பின்னால் இருந்த வரிசை இருக்கைகள் எல்லாம் ஆளில்லாமல் இருந்தன. அடுத்த நிகழ்ச்சிதான் கோதண்டபாணியார் அவர்களுடையது.
கோதண்டபாணியார் மார்கதாளம் எப்படிப் போடவேண்டும் என்று கைகளால் போட்டுக் காண்பித்தார். கைகளால் ஒற்றும் வேகம், காலப்பிரமானம், எத்தனை ஒற்றுக்குப் பின் கையை வீசுவது எல்லாம் ஒத்திகை காண்பித்தார். திருப்புகழில் உள்ள பாடல்களைக் குறித்துக் கூறினார். பாடிக்காட்ட வந்திருக்கும் பெண் பற்றி ஓர் அறிமுகம் கொடுத்தார். அந்தப் பெண் வண்ணநிலா வந்தாள்.
தங்கராசு தன்னிலை மறந்து விட்டான் என்றே சொல்ல வேண்டும். அவனுக்கு அவன் மனைவி நினைவும், அதைத் தொடர்ந்து மனைவி மகளைக் கொஞ்சும் காட்சியும் கண்முன் நிழலாடியது.
மார்க தாள வகைகளைக் கூறி கைகளால் தட்டி வீசிக்காட்டியபின் அதற்கான பாடல்களை திருப்புகழ் முதலியவற்றில் இருந்து எடுத்துக்கூறினார்; பின் வண்ணநிலா அந்த பாடலை ராகம் தாளத்துடன் பாடினாள். ஒன்றரை மணிநேரம் அவை மூச்சுக் காற்றின் ஒலி கூட கேட்காதவாறு இழுத்துப் பிடித்து உட்கார்ந்திருந்தது.
நிகழ்ச்சி முடிந்து தமிழறிஞர் கோதண்டபாணியாருடன் பேசிக் கொண்டு வந்தவர் வண்ணநிலாவின் அறிமுகம் பற்றிக் கேட்டதற்கு, அப்பெண்ணிடமே கேட்கச் சொல்லி விட்டு மன்ற அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டார்.
” அம்மா நிலா, என் பெயர் குடவாசல் கோபாலகிருஷ்ணன், கர்னாடக இசை வாக்கேயக்காரர், அதாவது பாடகர்; கேள்விப் பட்டிருக்கிறாயோ”
“ஐயா, வணக்கம்; என் குருநாதர் உங்களைப் பற்றி தனித் தமிழில் மட்டும் பாடுபவர் என்று சொல்லியிருக்கிறார்.”
குடவாசல் காரருக்கு பெருமையாக இருந்தது.
“உன் குரு யாரம்மா”
“சொன்னால் தெரியுமா என்பது சந்தேகமே. ராமாமிர்தம் என்ற அவர் பரனூரில் இருக்கிறார்; அவர் வீட்டுக்கு எதிரில்தான் என் வீடு. எண்பது வயது முதியவர்; இசை வேளாளர் ; வயது முதுமையால வெளியூர் தவிர்த்து உள்ளூர் கோவில் பூசையில் மட்டும் நாதசுரம் வாசிப்பார். அவர் தம்பிகள் ஐந்து பேர் நாதசுரம் தவில் வாசிக்க வெளியூரெல்லாம் போவார்கள். பின்னாளில் படித்து என்னவாக வேண்டுமானாலும் ஆகட்டும், இப்போதைக்கு சங்கீத அடிப்படையாவது தெரிந்து கொள்ளட்டும் என்று தன் தம்பி பிள்ளைகளுக்கு சங்கீத வகுப்பு எடுத்தார். நானும் அவரிடம் ஐந்து வயது முதல் கற்று வருகிறேன். தியாகராஜர்,ஸ்வாதித் திருநாள், முத்துசாமி தீட்சிதர், தஞ்சை நால்வர் பாடல்களை யெல்லாம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்; அத்துடன் தாளக்கட்டுகளையம் விரிவாக போதித்திருக்கிறார்.”
” உனக்கு இப்போ என்னம்மா வயசு ஆகுது”
“பத்தொம்பது”
” அப்ப பதினாலு வருசமாவா கத்துக்கற”
” ஆமாம், நானே திருக்குறள், தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம், திருவருட்பா, குற்றாலக் குறவஞ்சி, அபிராமி அந்தாதியில உள்ள பாட்டுக் கெல்லாம் ராகம் அமைச்சி பாடியிருக்கேன்”
“அப்படியா? கேசட்டா இல்லை ஆல்பமா; நான் கேட்ட ஞாபகமே இல்லையே”
“கேட்டிருக்க முடியாது; நான் பாடுறது ரயில் வண்டியில; என் அம்மாவுக்கு சொல்லிக் குடுத்து அவங்க பாடுவாங்க; ஒரு வருடமா அவங்க ஒடம்பு முடியாததால நான் போய் ரயிலில் பாடி சம்பாதிக்கறேன்.”
“படிப்பு”
“பன்னிரண்டாவது முடிச்சு ரெண்டு வருடமாவுது”
” ஐயாவை எப்படித் தெரியும்”
” ஒரு நாள் அவர் ரயிலில் என்னைத் தொடர்ந்து வந்தார். ஒவ்வொரு பாட்டுக்கும் நூறு ரூபா கொடுத்தார். என் கூடவே இறங்குவார்; அடுத்த பெட்டியிலும் என் கூடவே ஏறிக்குவார்; அங்கும் நூறு ரூபா கொடுப்பார். செங்கல்பட்டிலிருந்து தாம்பரம் வரை பொறுமையாக இருந்தேன்; தாம்பரத்தில் இறங்கியவள் ஒரு பென்ச்சில் உட்கார்ந்துட்டேன்; அவரும் அதே பென்ச்சில் வந்து உட்கார்ந்து கொண்டார். என்னைப்பார்த்து சின்னதா சிரிச்சார்; நான் முகத்தை திருப்பிக்கிட்டேன்; ஏதோ பயத்தில் வியர்த்து விட்டது. துப்பட்டாவால் துடைச்சிக்கிட்டேன். அவரை தைரியமாகவே கேட்டேன் ‘எதற்காக என்னை தொடர்கிறீங்க’ அப்படின்னு”
நாளை தொடரும்….
Leave a Reply