( சித்திரம்: கிரிஸ் ரத்னம், ஆஸ்திரேலியா)
முந்தைய அத்தியாயத்தின் இணைப்பு: அத்தியாயம் 1,அத்தியாயம் 2
சிதம்பரத்தின் மனைவி தாங்கள் வாங்கி வந்த பூ பழம் இனிப்பு வகை உள்ள பையை சமையலறைக்கு எடுத்துப் போய் தேவிகாவிடம் கொடுத்தாள்.
“அண்ணி இதெல்லாம் உங்க தம்பி உங்களுக்காக வாங்கி வந்தது.”
“சிதம்பரம் எப்பவுமே வாசனைப் பூ தான் வாங்கியாருவான். எனக்கு கனகாம்பரம் பிடிக்கும்ங்கறதால அத கொஞ்சமாகவாவாவது வாங்கியாருவான்” என்று சொல்லிக் கொண்டே பைக்குள் பார்த்தாள்; சொன்னது சரியாகவே இருந்தது.
“நீங்க வளைகாப்புக்கு போயிருந்தீங்கள்ல; எல்லாம் நல்லபடியா நடந்து மருமகள அவங்க வீட்டுக்கு அனுப்பியாயிடுச்சா”
“உம்..அனுப்பியாச்சு” என சுருக்கமாக சிதம்பரம் மனைவி பதில் சொன்னாள்.
வெளி ஹாலில் சிதம்பரமும் தேவிகாவின் கணவனும் பேசிக் கொண்டிருந்தார்கள். குடும்ப செய்திகளைத் தவிர்த்து அரசியலைப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
காபி டம்ளருடன் வந்த தேவிகா இருவருக்கும் கொடுத்து விட்டு எதிரே உட்கார்ந்து பேச ஆரம்பித்தாள்.
“முருகன் கல்யாணத்துக்குக் கூட திலகம் என்னை ஒப்புக்குத்தான் கூப்பிட்டா; இப்ப.. அந்த ஒப்புக்கு கூட கூப்பிடல”
“அக்கா நீ வராததே நல்லது “
“என்னடா சொல்ற நீ “
“எதுவும் சொல்லலை. அக்கா நீ எப்பவாவது என்னை நன்றி கெட்டவன்னு நெனைச்சதுண்டா”
“இல்லையே ஏன்டா “
“உனக்கு குழந்தை இல்லைன்னு எல்லாரும் ஒதுக்குன மாதிரி நானும் ஒதுங்கித்தான் இருந்தேன். அதுக்காக என் மேல கோபப்பட்டுடாதக்கா; கூடப் பொறந்த சகோதரி கண்ணீர் விட்டா குடும்பத்துக்கு ஆகாது; நிச்சயம் அமெரிக்காவுல இருக்கிற என் பொன்னு சந்தியாவ அது பாதிக்கும் “
“சேச்சே நான் உன்ன ஒரு கன்னித்தாயா தூக்கி வளத்தவடா; அப்படியெல்லாம் நெனைக்காத”
“உன் வயித்தெரிச்சல கொட்டிக் கிட்டவங்க இன்னைக்கு அனுபவிச்சதப் பார்த்ததும் எனக்கு தாங்கல; உன் மனசு எப்படியெல்லாம் வேதனைப் பட்டிருக்கும்னு இன்னைக்குத்தான் நேரில பார்த்தேன்”
சிதம்பரம் இப்படி சொல்லிக் கொண்டு இருக்கையில் வாசல் பக்கம் கேட்ட அரவத்தில் திரும்பிப் பார்த்தவன் திலகம் வருவதைப் பார்த்து அதிர்ந்தான். அதற்குக் காரணமிருந்தது; தேவிகாவின் மனப்புழுக்கம்தான் தன் மகள் இன்று அவமானப்படக் காரணம் என்று சண்டை போட வந்திருக்கிறாள் என்று திடமாக நம்பினான். இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று விரைவாக சிந்திக்கலானான்.
“வா திலகம்” என்று தேவிகா கூப்பிட்டதுதான் தாமதம், திலகம் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து வந்து அக்காவைக் கட்டிக் கொண்டு அழ ஆம்பித்து விட்டாள்.
இந்த மாற்றம் சிதம்பரத்துக்கு ஆச்சரியமாக இருந்தது.
“டீ..திலகா ..என்ன ஆச்சு உனக்கு இப்ப..ஏன்டி அழற…”
“அக்கா…அக்கா….” என்று மேல் வார்த்தை வராமல் ‘கோ’வென்று அழுதாள்.
அவள் அழட்டும் என்று தேவிகா விட்டுவிட்டாள். ஒருவழியாக அழுது ஓய்ந்தாள் திலகம்.
“அக்கா முருகனை உன்னிடம் ஒட்டவிடாம தள்ளி வச்சே வளர்த்தேன்”
“சரி அதுக்கு இப்ப என்ன”
“நீ சாக்லேட் வாங்கியாந்து கொடுத்தா கூட இருமல் வரும் வேண்டாம்பேன். ஸ்வீட் பலகாரம் ஏதாவது செஞ்சி கொண்டாந்தா வயிறு சரியில்லை வேண்டாம்னு சொல்லியிருக்கேன். எதிரெதிர் வீட்ல இருந்தாலும் அவனை உன் கண்ணிலேயே படாம கதவ சாத்தியே வச்சிருந்தேன். பார்வதி பொறந்தப்புறம் என் புறக்கணிப்ப தாங்கமுடியாம வேற எடம் மாறிப்போன”
“அந்த பழைய கதையெல்லாம் எதுக்குடி இப்ப”
“இல்லக்கா, என்னைத் தடுக்காத; உள்ளாற இருக்கற எல்லாம் கொட்டினாத்தான் மனசு லேசாவும். எங்காவது சொந்தக்காரங்க வீட்டு விசேடம்னாலும் உன்னைப் பார்த்தாலே அங்க இருந்து தூரமாப் போயிடனும், நீ கூப்பிட்டாக்கூட போகக்கூடாதுன்னு முருகன் கிட்ட சொல்லி வச்சிருந்தேன். உன்னை பார்க்கவே தகாத பாவியா நடத்தினேன். அந்த பாவமே பார்வதிய பாதிச்சிடுச்சு”
ஒவ்வொன்றாக நடந்தவற்றை அக்காவிடம் சொல்லி அழுதாள். பொறுமையாக கேட்ட தேவிகா பேச ஆரம்பித்தாள்.
“பார்வதிக்கு அப்படியென்ன வயசாயிடுச்சு; இருபத்தாறு எல்லாம் ஒரு வயசா; இவங்க வாயையெல்லாம் அடைக்கிறா மாதிரி அடுத்த வருசமே ஒரு குழந்தைய பெத்து குடுப்பாடி; நீ கவலைப்படாதே”
“சொந்த தங்கச்சி நானே ஒன்ன எப்படி அவமானப் படுத்திட்டேன் பாரு; அதான் என் பொன்னுக்கு ஊரே வந்து அவமானப் படுத்தும்படி விடிஞ்சிடுச்சோன்னு வேதனையா இருக்கு அக்கா” என்று மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“நானும் ஒரு தாய் மாதிரிதானடி ஒங்கள தூக்கி வளர்த்தேன்; ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு கெட்டது நெனைப்பாளா”
“அக்கா, பிள்ளை பெத்தவங்க எல்லாம் பணக்காரங்க; இல்லாதவங்க ஏழைங்க; இப்படி ஒரு நினைப்பாலதான உன்னை ஒதுக்கினேன்.” திலகம் அழுகையை நிறுத்தவில்லை.
சிதம்பரமும், “அக்கா, நான் கூட குழந்தையில்லாதவங்க பாவம் செய்ஞ்சவங்கன்னு தப்பாத்தான் நினைச்சேன்; அதனால உன்னை தீண்டத்தகாதவளா நடத்துனதுல எனக்கும் பங்குண்டு.” என்றான்.
திலகம் அழுது கொண்டே, ” சரியாச் சொன்னடா தம்பி, பார்த்தாலே தீட்டு ஒட்டிக்கும்னு நான் பிள்ளைங்கள கண்ணுலயே காட்டாமதான வச்சிருந்தேன்” என்றாள்.
“எல்லாத்துக்கும் நான் உங்கள கோவிச்சுக்கலடி; என் விதியத்தான் நொந்துகிட்டேன்.” என்று திலகம் முதுகை வருடிக் கொடுத்தாள்.
ஆனாலும் திலகம் மனம் அமைதியடைய வில்லை; அக்காவின் மடிமீது தலையை வைத்து குப்புறப் படுத்துக் கொண்டு அக்காவின் கையைப் பற்றிக் கொண்டாள்.
இதைப் பார்த்த சிதம்பரம் விருட்டென்று எழுந்து அவனும் அக்காவின் இன்னொரு மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான். தேவிகா இரண்டு கைகளாலும் இருவர் தலையையும் கோதிவிட்டாள்.
யார் சொன்னது தேவிகாவுக்கு குழந்தையில்லை யென்று; இந்த இரண்டு முதிர்ந்த குழந்தைகள் இருக்கும் போது.
முற்றும்.
Leave a Reply